தனது புத்தம்புதிய கண்டுபிடிப்புடன் ஜெர்மன் செல்கிறார் புத்தாக்குநர் அஜ்மல் அஸீஸ் .ருஹுணு பல்கலையின் பொறியியல் பீடத்தின் இறுதி ஆண்டு மாணவரும், புத்தாக்குநருமான சகோதரர் Ajmal Azees
தனது இன்னுமொரு கண்டுபிடிப்புடன் எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் ப்ரெமென் நகரில் நடைபெறவுள்ள Jacobs Startup Competition 2019இல் கலந்துகொள்வதற்காக ஜெர்மனிக்கு விஜயம் செய்துள்ளார். 


புத்தாக்குநர்கள் தமது கண்டுபிடிப்புகள் மூலமாக முயற்சியாண்மைத்துறையில் தடம் பதித்து, வணிகரீதியாக வெற்றி பெறுவதற்கான களமொன்றை அமைத்துக் கொடுக்கும் இச் சர்வதேச நிகழ்வில் இலங்கை சார்பாக இவரது அணி மட்டுமே கலந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


இப்போட்டிக்காக Hemox எனப் பெயரிடப்பட்டுள்ள தனது புத்தம்புதிய கண்டுபிடிப்பான குருதிச் சோகையைக் கண்டறியும் துளையிடாத் திரையிடற் கருவியை (Non-invasive screening tool used to detect anemia) முன்வைத்துள்ளார் அஜ்மல். 

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற பொறியியல் தொழினுட்பம் மற்றும் சமூக விஞ்ஞானங்களுக்கான  சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு தனது ஆய்வினை சமர்ப்பித்திருந்ததோடு, அதே ஆண்டு ருஹுணு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் புத்துருவாக்கங்களுக்கான கண்காட்சியான RIIE 2017 இல் நுண்மதி பாதுகாப்புத் தொகுதி (Intelligent Security System), மீதிறன் வழங்கி அறைக் கண்காணிப்பு கட்டுப்பாட்டுத் தொகுதி (Smart Server Room Monitoring and Controlling System) ஆகிய கண்டுபிடிப்புகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பரகஹதெனியவை பிறப்பிடமாகக் கொண்ட அஜ்மல் அஸீஸ் பரகஹதெனிய தேசிய பாடசாலை மற்றும் குருநாகல் புனித ஆனா கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் ஆவார். 

பன்முக ஆளுமையாக வளர்ந்து வரும் இந்த 26 வயது இளைஞர் க.பொ.த. (உ/த) இரசாயனவியல் பல்தேர்வு வினாக்களுக்கான விளக்கவுரைகளை இலகு நடையில் எழுதி நூலுருவில் வெளியிட்டு வருவதோடு, பல கல்விப்புலம் சார் சமூப் பணிகளில் தன்னார்வத் தொண்டராக தனது பங்களிப்பை நல்கி வருகிறார்.  

இலைமறைகாயாய் இருந்து வந்த அஜ்மல் இன்று பல சாதனைகளை நிகழ்த்தி தனது ஆளுமையை நிரூபித்து வருகிறார். சர்வதேச அளவில் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, இன் ஷா அல்லாஹ். 

விடாத முயற்சியும், அடாத பயிற்சியும் கொண்டு தனது துறையில் நாளுக்கு நாள் மெருகேறி வரும் இவர் போன்ற துடிப்புள்ள இளைஞர்களே எமது சமூகத்தின் இன்றைய தேவை.

இன்னும் பல வெற்றிகள் பெற்று துறைசார் விற்பன்னராக வளர்ந்து  மென்மேலும் மிளிர அஜ்மல் சகோதரருக்கு எமது உளங்கனிந்த வாழ்த்துகள்!
தகவல் : ரிம்சான் அமானுல்லா
தனது புத்தம்புதிய கண்டுபிடிப்புடன் ஜெர்மன் செல்கிறார் புத்தாக்குநர் அஜ்மல் அஸீஸ் . தனது புத்தம்புதிய கண்டுபிடிப்புடன் ஜெர்மன் செல்கிறார்  புத்தாக்குநர் அஜ்மல் அஸீஸ் . Reviewed by Madawala News on March 14, 2019 Rating: 5