கூடி செல்லும் மன நோயாளிகள் !வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா! அங்கெல்லாம் உயிர் வாழ உவப்பான சூழல் உண்டா, என்றெல்லாம்
மேற்குலக நாடுகள் தமது நாகரீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்க இங்கே வளர்முக தேசங்கள் தாம் கை கொண்டிருக்கும் ஸ்மார்ட் கைபேசியும், மேலைத்தேய ஆடையும் தமது வளர்ச்சி என எண்ணிக்கொண்டு மனதளவில் இன்னும் 18, 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.


பிற தேசங்கள் தவிர்த்து நான் நன்கறிந்த என் தேசத்தின் ஒரு பக்கத்தினை இங்கே பகிர்கிறேன்.


சிங்கள பேரினவாததிற்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் போராடிய ஆயுத குழுவின் போராட்டங்கள் 30 வருட கால சிவில் யுத்தமாக தேசத்தினை புரட்டி போட அந்த போராட்டங்கள் யுத்தத்தால் வெற்றிகொள்ளபட்டு தசாப்பதங்கள் கடந்த போது இன ஐக்கியம் எய்தப்பட மக்களின் மனங்கள் வெற்றிகொள்ளபடவில்லை.


இந்த தேசத்தில் சிறுபான்மை இனம் என்ற வகுதிக்குள் வரும் இனங்கள் சிங்களவர்களை தமது எதிர்களாகவும், இனவாதிகளாகவும், தம்மை அடக்க நினைப்போராகவும் காட்டிக்கொண்டு திரியும் அதே வேளை தமக்குள் எரிந்துகொண்டு இருக்கும் இனவாத தீயை பற்றி நினைப்பதில்லை.


சில தசாப்தங்களுக்கு முன்னர் சிங்களவர் மத்தியில் கரைநாட்டு சிங்களவர், கண்டிய சிங்களவர் என்ற பாகுபாடு பார்க்கும் முறைமை அதிகம் காணப்பட்டது. உடரட, பஹத்தரட என்ற இந்த பிரதேசவாத பாகுபாடு அதிகமாக இருந்தது. இன்றளவில் மனதளவில் அவர்தம் கொண்ட மாற்றம் இந்த பாகுபாட்டை மிக குறுக்கி இந்த பாகுபாடு பேசும் இறுதி தலைமுறையாக இந்த தலைமுறை செல்லும் அளவு அந்த பழைய பாகுபாடு முறைமைகள் மூட்டை கட்டப்பட வழி செய்யப்பட்டுள்ளது.


ஆனாலும் தமிழ்முஸ்லிம் மக்கள் மத்தியில் தம் இனத்துக்குள்ளேயே இந்த பாகுபாடுகள் பார்க்கும் பழக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது.


இலங்கையை பொறுத்த வரையில் முஸ்லிம்களின் மத்தியில் அதிகம் இருப்பது பிரதேசவாதமாகும். கிழக்கு முஸ்லிம்கள், கிழக்கு அல்லாத பிற முஸ்லிம்கள் என்ற பாகுபாடு மிக அதிகமாக இருக்கின்றது. கிழக்கினுள் சென்றால் கிழக்கின் ஒவ்வொரு ஊருக்குள்ளும் பிரதேசவாதத்தின் கிளையாக ஊர்வாதம் காணப்படுகின்றது. அரசியல் பிரச்சினைகளில் இது நன்கு தெளிவாக தெரியும்.


தமிழர்களை எடுத்துக்கொண்டால் வடக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள் என்ற பாகுபாடு அதிகம் இருக்கின்றது. வடக்கு தமிழர்கள் தம்மை உயர்ந்தவாரகவும் மலையக தமிழரை தம்மிலும் குறைவானோராகவும் பார்க்கும் நிலை இன்றும் இருக்கின்றது. சிங்கள பேரினவாதம் பிழையெனும் இவர்கள் தமது பிரதேசவாத புத்தியை மறந்து விடுவார்கள். சரி வடக்கில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்களே அது போதுமே என்றால் அதுவும் இல்லை. அங்கே தீவக மக்கள் vs ஏனையோர் என்ற ஊர்வாதம் வேரூன்றி கிடக்கின்றது. அதற்குள்ளும் போனால் ஜாதி, மதம் என உடைத்த கண்ணாடி துண்டுகளாக தம்மையும் தமது தலைமுறையையும் இந்த கண்ணாடிகளில் வெட்டி காயப்படுத்தி அதை சீழ் பிடிக்க செய்து தமக்குள்ளேயே பிரிந்து கிடக்கிறார்கள்.


அப்படியே இந்திய வம்சாவளி தமிழர்கள் பக்கம் செல்லின் அங்கே பிரதேசவாதம் இல்லாமை ஒரு சிறப்பான அம்சமாகும். எனினும் நகர் புறத்தோர், தோட்ட புறத்தோர் என்ற பாகுபாடும், ஜாதி ரீதியான பாகுபாடும் இங்கே மலிந்து கிடக்கின்றது.


இவ்வாறு பிரதேசவாதம், ஜாதி, ஊர் என தமக்குள் பிரிந்து கிடக்கும் இந்த மனவளர்ச்சி குன்றிய கூட்டம் சிங்கள மக்களை மாத்திரம் இனவாதிகளாகவும் எதிரிகளாகவும் சுட்டிக்காட்டி கொண்டு நிற்பது வேடிக்கையான விடயம்.


பாமரன் மட்டுமின்றி படித்தவர்களின் கூட இவ்வாறான உள்ளக பிரிவினைகள் குறித்து அழட்டிக்கொள்வது கிடையாது. அவர்களும் அவர்களது பிள்ளைகளுக்கு இதை கடத்திக்கொண்டுத்தான் இருக்கின்றார்கள்.


ஒருவன் தான் பிறந்த மண்ணால், தான் பிறந்த மதத்தால், தான் பிறந்த ஜாதியால் இப்படி எதனாலும் உயர்ந்தவன் ஆகிவிட முடியாது. தனது நடத்தை, ஒழுக்கம், சமூகத்தில் ஏனையோரை மதிக்கும் பண்பு என்பவற்றை கொண்டு மாத்திரமே அவன் மேன்மை பெற முடியும். இதை புரியாத ஜென்மங்களே இந்த கேவலமான மட்டமான எண்ணங்கள் பரப்பப்பட காரணமாக அமைகின்றன. 


இல்லை எமக்குள் இப்படி எண்ணங்கள் இல்லை என்போர் இந்த பதிவை மறுப்போர் கிழக்கின் முஸ்லீம் சகோதரன் ஒருவரும் புத்தளத்தின் சகோதரி ஒருவரும் நிக்கா செய்துகொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நினைத்து பார்க்க வேண்டும். யாழ்ப்பாண சகோதரி ஒருவரும், நுவரெலியா சகோதரர் ஒருவரும் திருமணம் செய்துகொள்வதில் உள்ள சிக்கல்களை எதிர்ப்புகளை எண்ணி பார்க்க வேண்டும்.


பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை இந்த கேவலமான மனநோய் பரவித்தான் கிடக்கின்றது.


இந்த கேவலமான புத்திக்கொண்ட யாரும் இந்த நாட்டில் இனவாதம் அதிகம், சிங்களவர்கள் எம்மை அடக்க நினைக்கின்றார்கள், அங்கே விகாரை கட்டுகிறார்கள், இங்கே.குடியற்றம் செய்கின்றார்கள் என சிங்களவர்களை பற்றி பேச அருகதையும் தகுதி இல்லா இழிநிலை மக்களே.


நான் இந்த பதிவில் கூறிய குணங்கள் உங்களுக்கும் இருப்பின், இந்த பதிவு உங்களை காயப்படுத்தி இருப்பின், இதன் உள்ளடக்கம் உங்கள் மனதை உறுத்தின் நீங்களும் இந்த மன நோயில் பாதிக்கப்பட்ட கடைநிலை பிரஜையே.


விஷம் கக்கும் இத்தகைய உங்கள் குணங்களை மாற்றி கொள்ளுங்கள், மாற்ற முடியாத குணம் எனில் உங்கள் பிள்ளைகளுக்காவது இதனை கடத்தாது இருங்கள். மனிதர்களை நேசிக்க கற்று கொடுங்கள், இந்த பிரிவினைகளை உடைத்தெறிய மனிதர்களை நேசிக்கும் பண்பை உங்கள் பிள்ளைகளுக்குள் வளர்த்திட வழி செய்யுங்கள்.  அடுத்த தலைமுறையாவது இந்த கேவலமான மன எண்ணம் இல்லாது வளரட்டும்.


சுருங்க கூறின் பிரிவினைவாத மன எண்ணம் கொண்டோர் எல்லோருமே இந்த சமூகத்தின் விரோதிகளே.


இங்கே நாம் மனிதர்களை இணையும் வரை எமக்குள் ஐக்கியம் பிறக்கும் வரை நாமும் இந்த சமூக விரோத கும்பலின் ஒரு பாகத்தினர் தான்.


மாற்றம் ஒன்றை நோக்கி இந்த சமுதாயத்தை நகர்த்திட, மனதாலும் வளர்ந்த ஒரு பிரிவினராக எம்மை மாற்றிக்கொள்ள முயன்றிடுவோம். முதலில் எங்களுக்குள் ஒன்றுபடுவோம் பிறகு மற்றோரிடம் எதிர்பார்போம்.


இப்படிக்கு
எதிர்பார்ப்புக்கள் பலவற்றுடன் ஒரு ஆழ்மனதின் குரல்
கூடி செல்லும் மன நோயாளிகள் ! கூடி செல்லும் மன நோயாளிகள் ! Reviewed by Madawala News on March 06, 2019 Rating: 5