தேசமான்ய மர்ஹூம் மர்ஜானின் பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்து அவரின் கல்விப் பணிகளைத் தொடர்வோம்.


-எம்.எம்.எம். ரம்ஸீன்-
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் கல்விக்காக குரலெழுப்பி வந்த ஒரு ஆளுமை
கடந்த சனிக்கிழமை நிரந்தர ஓய்வு பெற்றுக் கொண்டது. மத்திய மாகாணத்தில் கல்விப்புலத்தில் மட்டுமன்றி அதற்கு வெளியிலும் தேசமான்ய எஸ்.எஸ்.எம். மர்ஜான் என்றால் யாரென்று  தெரியாதவர்கள் இருக்க முடியாது. 


நம்மத்தியில் சிலரின் மரணங்கள் நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விடுவது மட்டுமன்றி அதிர்வலைகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு. இதற்கு காரணம்


அம்மனிதர்களின் ஆளுமை சமூகத்தில் ஏற்படுத்தி விட்டுச் செல்லும் தாக்கமும் செல்வாக்குகளுமாகும். இந்த அடிப்படையில் சமூகத்தில் இடைவெளியையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய இழப்புக்களில் ஒன்று தான் முன்னாள் மத்திய  மாகாண சபை உறுப்பினர் தேசமான்ய எஸ்.எஸ்.எம். மர்ஜானின் இழப்பு என்றால் பிழையாகாது. 


இந்நாட்டு சுதந்திர தவைர்களுள் ஒருவரான டீ.பி. ஜாயாவுக்கு அல்லஹ்தஆலா புனித மதீனாவில் மரணிக்கும் பாக்கியத்தையும் ஜன்னதுல் பகீயில் நல்லடக்கம் செய்யப்படும் பாக்கியத்தையும் வழங்கினான். அவருக்குப் பின்பு இப்பாக்கியத்தை பெற்ற ஒரு தலைவர்  எஸ்.எஸ்.எம். மர்ஜான் ஆவார்.

மாகாண சபை உறுப்பினர் எஸ்.எஸ்.எம். மர்ஜான் தனது வாழ்வில் அதிகளவு காலத்தை கல்விக்காக செலவிட்டவர். கல்வித்துறையில் ஆசிரியர், அதிபர், கல்விப்பணிப்பாளர் என்று அவரின் பணிகள் தொடர்ந்தன. அதனைத் தொடர்ந்து, அரசியலிலும் அவரின் பணிகள் கல்வித்துறையை மையப்படுத்தி அமைந்திருந்தன.


இவர் சமூகத்தைப் பற்றி சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் அதிகளவு நேரத்தை  செலவிட்;டவர். இவரின் இரத்தத்தில் சமூகப் பணி என்பது இரண்டறக் கலந்ததாகும்.


கண்டி மாவட்டத்தில் அக்குறனைக்கு அடுத்ததாக முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் பகுதி உடுநுவர ஆகும். உடுநுவர எலிகொடையில் பிறந்த இவர் பேராதெனிய தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை கற்று விட்டு ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய கல்லூரியில் உயர்கல்வி பயின்றார். பேராதனை பல்கலைக்கழகத்தற்கு  தெரிவு செய்யப்பட்டு கலைத்துறையில் பட்டம் பெற்றார். அத்துடன், அதே பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவிலும் சித்தியடைந்தார்.  பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் காலத்தில் பல்கலைக்கழக மாணவர் சங்கம் , சிங்கள இலக்கிய மன்றம் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் என்பவற்றில் முக்கிய பதவிகளை வகித்தார்.


மாகாண சபை உறுப்பினர் எஸ்.எஸ்.எம். மர்ஜான் 1964 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக ஆசிரிய சேவையில் இணைந்து கல்விப் பணியை ஆரம்பித்தார். இவர் கட்டுகஸ்தோட்டை ஸாஹிரா ஆண்கள் கல்லூரி,  நாவலப்பிட்டி சென் மேரிஸ் மத்திய கல்லூரி என்பவற்றில் அதிபராகவும் கண்டி சில்வெஸ்டர் கல்லூரி, பேராதனை தமிழ் வித்தியாலயம்,  கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி, தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரி, உடுதெனிய முஸ்லிம் வித்தியாலயம், உடதலவின்னை ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரி என்பவற்றில் ஆசிரியராகவும் பல வருடங்கள் சேவையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இக்காலப்பகுதியில் மத்திய மாகாண ஆசிரிய சம்மேளனம் மற்றும் கல்வி கடன் சபை என்பவற்றின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


மத்திய இலங்கை முஸ்லிம் பேரவையின்  தலைவராக செயற்பட்டு மத்திய மாகாண முஸ்லிம்களின் கல்வி, சமய, அரசியல் உரிமைகளுக்காக குரலெழுப்பி வந்தார். மத்திய மாகாண முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்காகப் பல போராட்டங்கள் நடாத்தினார். அத்துடன், உடுநுவர முஸ்லிம் பேரவையின் அரசியல் குழுவின் தலைவராக இருந்து ஆசிரியர்களின் நலனுக்காக உழைத்தார்.


கல்விப் பின்புலத்தைக் கொண்டிருந்த தேசமான்ய எஸ்.எஸ்.எம். மர்ஜான் முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் குறித்து பெரிதும் அக்கறையுடன் செயற்பட்டார். மாகாண சபையில் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் கணிசமானளவு நிதியை பாடசாலைகளின் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஒதுக்கீடு செய்வதில் அக்கறை காட்டி வந்துள்ளார். இதனால் இவரின் நிதியொதுக்கீட்டை பெற்றுக் கொள்ளாத முஸ்லிம் பாடசாலைகள் கண்டி மாவட்டத்தில் இல்லை எனலாம். 



மாகாண சபை உறுப்பினர் எஸ்.எஸ்.எம். மர்ஜான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த போது ஜனாதிபதியை சந்தித்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முஸ்லிம்களின் கல்வி நிலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்குக் கொண்டு வந்த நிகழ்வு இன்றும் எனது மனதில் பசுமையாக நிழலாடுகின்றது. 


மேலும், 2005 ஆம் ஆண்டு மாகாண முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை உடுநுவர முஸ்லிம் பேரவையின் தூதுக்குழுவுடன் ஜனாதிபதியை சந்தித்து அவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்கிய சீடா நிறுவனம் போன்ற நிறுவனம் மூலம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஈரான் நாட்டு தூதுவர் ஊடாக பல முயற்சிகளை மேற்கொண்டார். 


கண்டி சவுலதிய்யா பாடசாலை மூடப்படும் நிலை ஏற்பட்ட போது அதனை கண்டி பதியுந்தீன் மகளிர் கல்லூரியுடன் இணைக்க வேண்டும் என்று மாகாண சபையிலும் சபைக்கு வெளியிலும் குரலெழுப்பிப் போராடினார். இப்போராட்;டத்தில் பல அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரும்பிகளின் ஒத்துழைப்புடன் வெற்றியும் கண்டார்.


கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் அதிபர் ,ஆசிரியர்களை சந்தித்து சுகதுக்கங்களை விசாரிப்பதிலும் அநுபவங்களை பகிர்ந்து கொள்வதிலும் பெரிதும் மகிழ்ச்சியடைவார்.  இவர் சாதாரண மக்களுடன் நெருக்கமான பிணைப்பை பேணி வந்தார். 
பேராதனை எலிகொடையை சேர்ந்த  காலஞ்சென்ற ஏ.எல்.எம்.ரசீத் அவர்களுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார். இக்காலப்பகுதியில் உடுநுவர தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான டீ.பி விஜேதுங்கவுடன் அரசியல் நடவடிக்கைகளில் களமிறங்கினார்.


இவர் 2002 ஆம் ஆண்டு உடுநுவர பிரதேச சபையின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டதன்  மூலம்  நேரடி அரசியலில் பிரவேசம் செய்தார். இதன் பின்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக  2004 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபை உறுப்பிராக தெரிவு செய்யப்பட்டதுடன் மீண்டும் 2009 இல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டு  2014 ஆம் ஆண்டு வரை மாகாண சபை உறுப்பினராகப் பதவி வகித்தார். இதன் பின்பு அரசியல் நிலைப்பாட்டில் மாற்றத்தை மேற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தனது ஆதரவளித்தார்.


இவர் அரசியல் நெளிவு சுளைவுகளை நன்கு அறிந்து செயற்பட்டார். மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய வடமத்திய மாகாண ஆளுநருமான  சரத் ஏக்கநாயக்கவுடன் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எஸ்.எம். மர்ஜானுக்கு நெருங்கி தொடர்பு காணப்பட்டது இத்தொடர்பை அவர் சமூகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. இதன் அடிப்படையில் பல முஸ்லிம் பாடசாலைகளின் தேவைகளை  முதலமைச்சர் ஊடாக நிறைவேற்றிக் கொடுத்தார்.


இவரின் சேவைகளை கௌரவித்து ஸ்ரீலங்கா விஷவ சமாதி அமைப்பு தேசமான்ய விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
உடுநுவரை பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்துடன் கலந்து வாழ்கின்றனர். இங்கு முஸ்லிம் கிராமங்கள் ஒவ்வொன்றும் பெரும்பான்மை கிராமங்களால் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. இதனால், இப்பகுதி மக்கள் பெரும்பான்மை சமூகத்துடன் அதிகளவு தொடர்புகளைக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எஸ்.எம். மர்ஜான் பெரும்பான்மை மக்களுடனும் பௌத்த தேரர்களுடனும் தொடர்புகளைப் பேணி வந்தார். பௌத்த விகாரைகளின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார். இதனால், பெரும்பான்மை மக்களும் பௌத்த தேரர்களும் அவரை நேசித்தனர்.



இவர் பெரும்பான்மை சமூகத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் இப்பகுதியில் சிங்கள – முஸ்லிம் இனங்களுக்கிடையில் நல்லுறவுக்கு சிறந்த பாலமாக அமைந்திருந்தது. 


மாகாண சபை உறுப்பினர் எஸ்.எஸ்.எம். மர்ஜானின் பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்து அவர் முன்னெடுத்த கல்விப் பணிகளைத் தொடர்வது காலத்தின் கட்டாயமாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா அன்னாரின் பிழைகளைப் பொறுத்து அன்னாரை சுவனப் பூங்காவில் நுழைவிப்பானாக. ஆமீன்
தேசமான்ய மர்ஹூம் மர்ஜானின் பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்து அவரின் கல்விப் பணிகளைத் தொடர்வோம். தேசமான்ய மர்ஹூம்  மர்ஜானின் பெயரில் நிதியமொன்றை ஆரம்பித்து   அவரின்  கல்விப் பணிகளைத் தொடர்வோம். Reviewed by Madawala News on March 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.