தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் முஹம்மட் நூர்தீன் மனம் திறக்கிறார்!




பொறியியல் பீட மாணவர்களான இந்த எட்டு மாணவர்களும் 2018 ஜனவரி மாதம் இவர்களின்
3 ஆவது வருடத்தின் இறுதி பரீட்சையை முடித்துவிட்டு திருகோணமலை  அநுராதபுரம் கல்முனை போன்ற இடம்களுக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள். 

அதன் போது அவர்களால் எடுக்கப்படட புகைப்படங்களை முகப்பு புத்தகத்தில் பதிவேற்றினார்கள். அதன்போது ஹொரோவொபொத்தானை கிரகல தூபிமீது ஏறி இருந்து எடுக்கப்படட புகைப்படமும் இதில் அடங்கும். இது புகைப்படம் எடுக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு பின்னரான காலப்பகுதியில் சில விஷமிகளால் பேஸ்புக்குகளில் பரப்பப்பட்டு அப்புகைப்படமானது தமது பௌத்த மதத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்தியது என கூறி பௌத்த தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரான   அகுலுகல்ல சிறி ஜினானந்த தேரர் அவர்களினால் 2019/01/22 ம் திகதி  பொலிஸ்தலைமை காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடானது 

இப்புகைப்படமானது  பௌத்த மதத்தின் மதிக்கத்தக்க கோபுரத்தில் ஏறியதனால் தங்களுக்கு மனஉளைச்சல்  மற்றும் இனங்களுக்கிடையில் இன முரண்பாட்டை ஏற்படுத்தியது என கூறி முறைப்பட்டை செய்துள்ளார். இம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேலும்  அநுராதபுர தொல்பொருள் பாதுகாப்பு நிலையத்தின் 2ஆம் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியினால் 2019/1/22 இல்   ஹொரோவொபொத்தானை பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டது. 
  
பௌத்த மதத்தின் புராதன மதிக்கத்தக்க தூபி மீது  ஏறியசெயலானது பௌத்த மதத்தை நிந்திக்கின்ற செயற்பாடு எனவும்  இதனால் தாங்கள்  அவமதிக்கப்பட்டுள்ளதுடன்   இனங்களுக்கிடையில் இன முறுகல் நிலையை ஏற்படுத்துகிறது  எனக் கூறியதுடன் இவர்களை தொல்பொருள் கட்டளைச் சட்டம் 1940ன் 9ஆம் இலக்க பிரிவு 31(B) ன் அடிப்படையில் கைது செய்து  தண்டிக்கும்படி முறைப்பாடு செய்துள்ளார்கள்.

மேலே கூறப்படட இரு குறைபாடுகளுக்கு அமைவாக ஹொரொவபொத்தானை பொலிஸினால் இந்த 8 மாணவர்களும் 20191/24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கெப்பித்திகொல்லாவ நீதிமன்றில் வழக்கு இல பி /56/2019 அவர்களுக்கு B அறிக்கையில் தண்டனை சட்ட கோவை பிரிவுகளான  32 , 120, 140  போன்றன அடிப்படையிலும் தொல்பொருள் கட்டளை சட்ட பிரிவுகளான 15(இ) 31(பி)  மேலும் 2005 ம் ஆண்டு 12ம் இலக்க தண்டபணம் அதிகரிப்பு சட்டப்பிரிவு அடிப்படையில் மாணவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். 

இதனையடுத்து தொல்பொருள் கட்டளை சட்ட பிரிவுகளான 15(இ) 31(பி )அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதால் 2019/2/5வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார். ஏனெனில் தொல்பொருள் கட்டளைச் சட்ட பிரிவுகளான 15(இ) அடிப்படையிலான குற்றத்துக்கு நீதிவானால்
எந்த சூழ்நிலையிலும் பிணை வழங்க முடியாது. ஏனெனில் இச் சட்ட ஏற்பாட்டுக்கமைவாக கைது செய்யப்பட்டவர்கள் 2/3 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கபடுகின்றனர் என்பது அனுபவத்தின் அடிப்படையில்  கூறக்கூடியதாக உள்ளது.    

எனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு பிணை பெற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கே செல்ல வேண்டியுள்ளது அதற்கு 3 மாதங்கள் தாண்டலாம் அங்கு கூட பிணை மறுக்கப்படலாம் 

இவ்வாறான நிலைப்பாடுகளுக்கு மத்தியில் மாணவர்களின் பெற்றோர் என்னை அணுகி இப்பிரச்சினையை சமூக பிரச்சினையாக நினைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்கள். நான் இதில் காணப்படும் சட்ட சிக்கல்களையும் நுணுக்கங்களையும் கூறினேன் அவையாவன 

1) பிணை எடுக்க மேன்முறையிட்டு நீதிமன்றம் செல்லவேண்டும். 

2)குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு நிரபராதி எனக் கூறினால் வழக்கு தொடர்ச்சியாக நடைபெறும் ஆனால், பிணை வழங்கப்படமாட்டாது. ஏனெனில் நீதிவானுக்கு அதிகாரமில்லை.

3) குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணம் செலுத்தியும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுவிக்கப்படல். 

இவ்வாறான நிலைமைகளுக்கிடையில் எங்களுக்கு கிடைத்த அறிவுரைக்கு அமைவாக எவ்வளவு தண்டப்பணம் செலுத்தியாவது  மாணவர்களை வெளியே எடுக்குமாறு அவர்களுடைய பெற்றோர் தனக்கு அறிவுறுத்தல் வழங்கினார்கள்.

மேலும் துறைசார்ந்த அமைச்சர் ஊடகங்களில் குறிப்பிட்ட கருத்து அதாவது இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என தமது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலை மிகவும் கடுமையான தொனியில் வழங்கியிருந்தமையானது எங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது 

2019/02/05 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட்டபோது நானும் ருஸ்தி ஹபீப், சப்ராஸ் ஹம்சா, ரங்க சுஜீவ, நிலுக்க பிரியதர்சனி போன்ற சட்டத்தரணிகள் மாணவர்கள் சார்பாகவும், வழக்கு தாக்கல் செய்தவர்கள் சார்பாக ஹொரவொபொத்தானை பொலிஸ் பொறுப்பதிகாரியும் தொல்பொருள் திணைக்களம் சார்பாக நிறுவன சட்டத்தரணியும்  முன்னிலையாகினர். 

இதில் மாணவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தண்டனை சட்டக்கோவை பிரிவு  120க்கான தண்டனையாக இரண்டு வருடங்களுக்கு சாதாரண சிறைத்தண்டனை ஆகும். 
பிரிவு 140 க்கான தண்டனையாக 6 மாத சாதாரண சிறைத்தண்டனை மற்றும் 1500 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படலாம். 

மேலும் தொல்பொருள் கட்டளைச் சட்டபிரிவு 31(B) அவமதிப்பை ஏற்படுத்தியதாக குறைந்தபட்ச தண்டப்பணமாக 50,000 ரூபாவும் கூடிய தண்டப்பணமாக 2,50,000 ரூபாவும், குறைந்தபட்ச சிறைத்தண்டனையாக 2 வருடங்களும் கூடிய கால சிறைத்தண்டனையாக 5 வருடங்களும் அல்லது தண்டப்பணம் மற்றும் சிறை இரண்டும் வழங்கலாம்.

இவ்வகையான குற்றங்களுக்கு சாதாரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2 அல்லது 3 மாதம் எடுப்பதுடன், அதுவரை மாணவர்கள் விளக்கமறியலில் இருக்க வேண்டும். 

ஆனால் இக்குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ததற்கு பின்னணியில் பொது அமைப்புகள், சமூக நலன் விரும்பிகள், அரசியல் வாதிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அதனை விரைவாக தாக்கல் செய்த ஹொரவப்பொத்தானை பொலிஸ“ பொறுப்பதிகாரிக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். எனினும் பொலிஸாரினால் முன்வைக்கப்பபட்ட குற்றச்சாட்டு கடுமையானதாகவே காணப்பட்டது. எதுவிதமான  விட்டுக்கொடுப்புகளும் மாணவர் மீது காணப்படவில்லை.

இம்மாணவர்கள் செயற்பாடு இவ்வாறான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. எனினும் இந்த வழக்கை விசாரணை செய்யும்போது  மாணவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க அதிக வாய்ப்புகள் எமக்கு காணப்பட்ட போதும் அதுவரைக்கும் மாணவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருக்க வேண்டி ஏற்படும். 

எனவே, தான் குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் அதன் சட்ட ஏற்பாடுகள் கடுமையானதாக காணப்பட்ட போதிலும் மாணவர்களை குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்து  விரைவாக வழக்கை முடிவுறுத்த நாங்கள் தீர்மானித்தோம். இவ்வாறான சட்டங்கள் அளவுக்கதிகமாக கடுமையாக காணப்படுவதினால் இதனை சீர்திருத்த வேண்டிய தேவை உள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களே கருத்திற்கொள்ள வேண்டும்.

அதனடிப்படையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு அதில் காணப்பட்ட 3 குற்றங்களையும்  மாணவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனடிப்படையில் தண்டனைகளை குறைக்க தங்களால் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றங்கள் மாணவர்களுடைய செயற்பாடுகளுக்கு சம்பந்தமற்றவையாக இருந்த போதிலும் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு பிணை வழங்குகின்ற அதிகாரமோ தற்றுணிவோ நீதவானுக்கு இல்லை என்பதால் தாங்கள் குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 306(1) இன் அடிப்படையில் செயற்படுமாறு நாங்கள் நீதிவானை வேண்டிக்கொண்டோம். 

அந்த ஏற்பாடானது ஏதாவது ஒரு நபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் போது அவரது நற்பெயர், வயது, அவரது முன்னரான செயற்பாடுகள், குற்றம் செய்யும் போது காணப்பட்ட மனநிலை, குற்றம் நடந்த சூழ்நிலை, குற்றத்தின் பாரதூரமற்ற தன்மை போன்ற நிலைமைகளை நீதிமன்றம் கருத்திற்கொண்டு எச்சரிக்கையுடன் விடுவிப்பு செய்ய முடியும். அல்லது நீதிமன்ற ஒப்பந்த பத்திரத்தின் மூலம் (Bond) அடிப்படையில் வெளியனுப்ப முடியும். அல்லது 306(3) இழப்பீடு அல்லது அரச கட்டணம் ஒன்றினைச் செலுத்துமாறு பணிப்பதற்கு நீதவானுக்கு தற்றுணிவு அதிகாரம் உண்டு.

இதுபோன்ற ஒத்த  வழக்குகளில் தீர்ப்பு பற்றியும் நீதவானுக்கு நாங்கள் எடுத்து காட்டுவதற்காக முன்னரான தீர்ப்புகள் பற்றியும்  நாங்கள் நீதவானுக்கு எடுத்துகாட்டினோம். மேலும் தீர்ப்பை வழங்கும் முன்பு நீதிவானால் பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளுமாறு நீதிமன்றினை வேண்டிக்கொண்டோம்
1) இதற்கு முன்னர் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமை.
   
2)வழக்குகட காரணி தோன்றியதாக கூறப்படும் குறிப்பிட்ட இடம் அல்லது புராதன சின்னத்துக்கு எவ்வித சேதமும் விளைவிக்காமை.

3) குறிப்பிட்ட புராதனவஸ்து நாட்டுக்கு எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோன்று இந்த பெறுமதிமிக்க மாணவர்களும் இந்த நாட்டினுடைய சொத்து என்பதை எடுத்துக்காட்டினேன்.

4) நீதிமன்றத்தினுடைய காலத்தை வீணடிக்காது முன்கூட்டியே ஒப்புதல் அளிப்பது ஆகக்கூடிய சலுகைகளை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பெற்றுத்தரும் என்பதை கருத்திற்கொண்டு செயற்பட்டோம்.

5) குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் இருவர் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் என்பதுடன் இவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் கிடைக்கப்பெற்றிருப்பதனையும் தெளிவுபடுத்தினோம். 

மேலும்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  பீடாதிபதியும் மற்றும் அப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இவர்களது நன்னடத்தை பற்றிய சான்றிதழ் ஒன்றை அனுப்பியிருந்ததானது இந்த வழக்கில் எனக்குச் சாதகமாக இருந்தது. அத்தோடு சந்தேக நபர்கள் ஏற்கனவே தடுப்புக்காவலில் 12 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார் என்பதனையும் தீர்ப்பின் போது  கருத்திற்கொள்ளுமாறு நீதவானுக்கு எடுத்து கூறினேன்.

மேலும் தண்டனைகள் என்பது குற்றவாளிகளை திருத்தி புனர்வாழ்வளித்து ஜனநாயக நீரோட்டத்தில் கலக்க செய்வதேயன்றி ஒருவரது எதிர்காலத்தையும் அபிலாஷைகளையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒன்றாக அமையக்கூடாது என்பதை முற்றீப்பு அடிப்படையில் ஆணித்தரமாக மன்றுக்கு எடுத்துரைத்தேன். 

குறித்த சம்பவமானது தாம் திட்டமிட்டோ அல்லது உளக்கருத்துடனோ செய்யவில்லை என்றும் மேலும் சமயத்தையோ அல்லது ஒரு சாராரையோ காயப்படுத்தும் நோக்கோடு தாம் செய்யவில்லை என்றும் தங்களுடைய செயற்பாடு குறித்த மக்களுடைய உள்ளத்தை பாதிப்படைய செய்வதையிட்டு தாம் வருந்துவதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்பாடுகளில் தாம் ஈடுபடாது நற்பிரஜைகளாக வாழ்வோம் என கூறினோம். 

இதுபோன்றொரு செயற்பாடு 2018 ஒக்டோபர் மாதத்தில் பிதுரங்கல எனும் இடத்தில இடம்பெற்றது. இச்சம்பவத்தின்போது அக்குற்றவாளிகளுக்கு அந்த வழக்கில் அவர்களுக்கு சிறைத்தண்டனையோ பாரிய தண்டப்பணமோ அறவிடப்படவில்லை. 

பிதுரங்கல சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அரைநிர்வாண புகைப்படம் எடுத்து மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் நீதவானுக்கு காண்பிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் சந்தேக நபர்கள் இவ்வாறான துர்நடத்தைகளில் ஈடுபடவில்லை என்பதை ஒப்பிட்டு காட்டினேன். அதற்கான ஆவணங்களையும், புகைப்படங்களையும் தாம் பாரப்படுத்தினோம். 

இந்த வழக்குக்குரிய கிருளாகல எனும் இடத்துக்கு வழமையாகவே மணமக்கள் தம்பதியினராக வந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். மேலும் சிங்கள சகோதரர்கள் சாதாரணமாக இதன் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுப்பார்கள். அவ்வாறு எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்திலிருந்து பெற்று இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன என்பதை எடுத்துக்காட்டி இச்செயலை செய்தவர்களுக்கு ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேட்டு நீதவானும் அப்புகைப்படத்தை பொலிஸாரிடம் காட்டி, இது சம்பந்தமாக ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என பொலிஸாரை நீதவான் வினவிய போது பொலிஸார் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையோ அல்லது கைவிரல் அடையாளங்களோ பெறப்பட்டால் இம்மாணவர்கள் முழு எதிர்காலமும் பாதிப்படையும் என்பதை கருத்திற்கொண்டு இம்மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் தீர்ப்பொன்றை இந்நீதிமன்றம் வழங்க வேண்டுமென்ற   நோக்கிலேயே இந்த ஒப்புதலை செய்கின்றேன் என குறிப்பிட்டேன். 

மேலும், இச்செயலில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் இவ்விடயத்தின் மகிமை பற்றியோ கலாசாரம் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் பெரும்பாலானோர் கிழக்கை சேர்ந்தவர்கள். மேலும் தாங்கள் செய்கின்ற இச்செயல் சட்டத்தால் தடுக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள கூடியதாக அந்த இடத்தில் சிலைகளையோ சுலோகங்களோ ஏனைய அறிவுறுத்தல் பலகைகளையோ அல்லது வேறு ஏதேனும் இடத்தில் இவ்விடத்தில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தும் விதத்தில் எதுவும் இருக்கவில்லை. அங்கு வந்து சென்ற மக்கள் எதனை செய்தார்களோ அதனையே இவர்களும் செய்தார்கள் என்பதை நான் கூறி முடிக்கின்ற போது, பொலிஸார் மௌனமாக இருக்க தொல்பொருள் திணைக்களம் சார்பாக மன்றில் தோன்றிய சட்டத்தரணி மிக ஆக்ரோஷமாக எதிர்த்து வாதிட்டார்.

இங்கு எதிராளிகளுக்குரிய கூண்டிலிருக்கும் இவர்கள் சாதாரணமானவர்களல்லர்.. அவர்கள் பல்கலைக்கழகம் சென்று பொறியியல் துறையில் கற்றுத்தேறியவர்கள். சாதாரண மக்களை விட அனைத்து கலை, கலாசாரங்கள் பற்றியும் பூரண அறிவுள்ளவர்கள். எனவே இவர்களது செயல் கருத்துடன் தான் செய்யப்பட்டது. மேலும் இக்குறிப்பிட்ட இடத்தின் கண்ணியத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர்களுடைய செயல் அமைந்தது. எனவே 2 வருடக் கடூழியச் சிறைத்தண்டனைக்கு குறைந்த எதனையும் தண்டனையாக கொடுக்கப்படலாகாது என மன்றாடியதுடன் 5 வருட கடூழிய சிறையும் 250,000 ரூபா தண்டப்பணம் விதிப்பதற்கு தத்துவம் உண்டு என்றும் அதனையே தண்டனையாக வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். 

அப்போது அவருடைய வாதத்தில் நான் குறுக்கிட்டு இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கோ அல்லது வழக்காளிகளோடு சம்பந்தப்பட்ட தரப்பின் சட்டத்தரணிக்கோ மன்றில் கருத்து தெரிவிக்க இடமில்லை என நான் குறிப்பிட்டேன். 

இங்கு பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துவிட்டனர். எதிராளி சார்பான சட்டத்தரணியாக நான் குற்ற ஒப்புதலை அளித்துவிட்டேன். குற்ற ஒப்புதல் அளித்தபின்னர் தண்டனையை முடிந்தளவு குறைப்பதற்கான  நியாயங்களையும் எடுத்து இயம்புவதற்கு மட்டுமே நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்கும். இந்நேரத்தில் வழக்காளிகள் சார்பான சட்டத்தரணி ஒருவர் கருத்துக்கூற எத்தனிப்பது நீதிமன்றத்தின் நடைமுறைகளுக்கு முரணானது என கூறிய போது நீதவான் அதனை ஏற்றுக்கொண்டு வழக்காளிகளின் பக்க சட்டத்தரணியின் வாதத்தை முடித்துவிட்டு தன்னுடைய தீர்ப்பை கூற ஆயத்தமானார்.

தீர்ப்பு:

தன்னுடைய தீர்ப்பில் நீதிவான் தண்டனை சட்டக்கோவையின் பிரிவுகளான 120 மற்றும் 140 ன் குற்றச்சாட்டுகளுக்கு 6 வருடம் வரையான கடூழிய சிறை மற்றும் தண்டப்பணம் அறவிடத்தக்க செயற்பாட்டுக்காக வெறும் 1000 ரூபா அரசுக்கான செலவு (State Cost) அறவிடுமாறு உத்தரவிட்டதுடன் தொல்பொருள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 31(B) ல் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்காக குறைந்தது 2 வருடத்திலிருந்து 5 வருடம் வரையும் தண்டப்பணமாக 50,000 இலிருந்து 250,000 வரை அறவிடப்பட கூடியதாக இருந்தும் கூட அவரால் தன்னுடைய தற்றுணிவின் அடிப்படையில் மிகக் குறைந்த தண்டப்பணமாக 50,000 ரூபா செலுத்துமாறு உத்தரவிட்டார். 

மேலும் கைவிரல் அடையாளம் எடுக்க வேண்டாம் என பொலிஸாருக்குக் கட்டளையிட்டத்துடன் தன்னுடைய தீர்ப்புக் கூற்றிலே வழங்கப்பட்ட கட்டளையால் உங்களுக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான பாதிப்பும் வராது என உறுதியளித்ததுடன் இத்தீர்ப்பானது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ நீங்கள் அரச தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்தார்.

இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக சமூகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் பல்வேறு விதமான தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தலாம். ஆனால், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் என்னை நாடி வந்து இது தொடர்பாக கலந்து பேசிய போது அவர்கள் பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளானதுடன் பிள்ளைகள் தொடர்பாக மிகவும் கலக்கமடைந்து இருந்தார்கள். 

அவர்களது ஒரே நோக்கமாக எமது பிள்ளைகளை முடிந்த அளவு துரிதமாக எந்த நிபந்தனையுடனாயினும் சரி வெளியெடுத்து தருமாறு அவர்கள் கூறியிருந்தார்கள். இவ்வழக்கை  விசாரணைக்கு நியமித்திருந்ததால் வெல்லமுடியும் என்பதை அவர்களுக்கு கூறினேன். 

ஆனால் அவ்வாறான சூழ்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்று பிணை எடுக்க 3 மாதங்கள் செல்லும் என குறிப்பிட்டேன். இதற்கு என்னை நாடி வந்த எந்தவொரு பெற்றோரும் உடன்பட்டிருக்கவில்லை. 

எனவே தான் காணப்பட்ட சூழ்நிலை எமக்கு இவ்வாறு கிடைக்கப்பெற்ற தீர்ப்பானது ஒரு சட்டத்தரணி என்ற வகையில் எனக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அது திருப்தி அளித்திருக்கின்றது. குறிப்பாக எமக்கிருந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் வேறு எந்த சாணாக்கியமான முடிவுகளையும் எடுப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை. நன்றி.

இப்படிக்கு
சிராஸ் முஹம்மட் நூர்தீன்.
சட்டத்தரணி
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் முஹம்மட் நூர்தீன் மனம் திறக்கிறார்! தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் முஹம்மட் நூர்தீன் மனம் திறக்கிறார்! Reviewed by Madawala News on February 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.