'19’ மூலம் பிறந்த குழந்தை மீது துஷ்பிரயோகம்! – நாடாளுமன்றில் மைத்திரி ஆவேசம்





"19ஆவது அரசமைப்பு திருத்தத்தால் பிரசவிக்கப்பட்ட குழந்தை இன்று வழிதவறிப் போய்விட்டது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசமைப்பு பேரவைக் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு விளாசித்தள்ளினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நாடாளுமன்றம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். அன்றும் இன்றும் எனது நிலைப்பாடு அதுவே.

19ஆவது திருத்தத்தால் பிரசவிக்கப்பட்ட குழந்தை இன்று வழிதவறிப் போய்விட்டது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

அரசமைப்பு பேரவை  நியமித்த – பதவியுயர்வு வழங்கிய நீதிபதிகள் குறித்து நான் குறை சொல்லவில்லை. அந்த முடிவை விமர்சிக்கவில்லை . அப்படி நான் விமர்சித்ததாகக் கூறி எனக்கும் மேன்முறையீட்டு மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

ஆனால், இதுவரை 14 நீதிபதிகள் நிராகரிக்கப்பட்ட காரணம் என்ன? அவர்கள் என்னிடம் வராமல் எங்கு போய் நீதி கேட்பார்கள்?

நீதி மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பேசும் அரசமைப்பு பேரவை நீதிபதிகளை நிராகரித்த காரணத்தை எனக்குச் சொல்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டாமா? நீதி இருக்க வேண்டாமா? அரசமைப்பு பேரவை அரசமைப்பை மீறி செயற்படக் கூடாது.

நீதிபதிமார் நியமனத்தில் நான் எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை. உலகில் பல தானங்கள் இருந்தாலும் அதிகார தானம் செய்வது மிகவும் குறைவு. ஆனால், நான் செய்திருக்கிறேன். அரசியல் தலைவர்கள் செய்யாத தானத்தை நான் செய்தேன்.

மாகாண சபைகள் அமைக்கப்பட்டு 30 வருடங்களுக்கு மேல். ஆனால், மாகாண சபை முறைமையை பலப்படுத்த நாங்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாகாண சபையை நடத்த 85 வீத நிதியும் அபிவிருத்திக்கு 15 வீத நிதியும் செல்கின்றன. இதுவே உண்மை.

எமது தவறுகளை நாம் திருத்திக்கொள்ள வேண்டும். வாகனத்தை நாம் செலுத்திச் செல்லும்போது அது பாதையை விட்டு விலகினால் நாம் அதனை சரியான பாதைக்கு எடுக்க வேண்டும்.

அரசமைப்பு பேரவைக்கு எதிராக நான் பேசவில்லை. அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழு பாதாள உலகக் கோஷ்டியினரைப் பற்றி பேசுகின்றது. அவர்கள் இந்த நாட்டு மக்கள் பற்றி பேசுவதில்லையா என்று கேட்க விரும்புகின்றேன்.

அரசமைப்பு பேரவை நாடாளுமன்றத்தை – நிறைவேற்று அதிகாரத்தை – நீதித்துறையைக் கட்டுப்படுத்துகின்றது. அதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன” – என்றார்.
'19’ மூலம் பிறந்த குழந்தை மீது துஷ்பிரயோகம்! – நாடாளுமன்றில் மைத்திரி ஆவேசம் '19’ மூலம் பிறந்த குழந்தை மீது துஷ்பிரயோகம்! – நாடாளுமன்றில் மைத்திரி ஆவேசம் Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.