தொல் பொருட் சட்டம் (Antiquities Act) அச்சுறுத்தலின் உச்சம்

ஒரு அமளி துமளி அடங்கி முடிவதற்குள்ளாக இன்னொரு அதகளி கதகளி. ஹொரவப்பொத்தான கீரலாகலப்
பகுதயில் அமைந்துள்ள தொல்பொருட் திணைக்களத்துக்குச் சொந்தமான தூபியொன்றில் ஏறி நின்று ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்த்தாக குற்றம் சாட்டப்பட்டு தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட எட்டு மணவர்களின் வழக்கு எப்படியோ கடந்த ஐந்தாம் திகதி ஃபுல்ஸ்டொப்புக்கு வந்து அப்பாடா என்று மூச்சு விடுதற்குள்ளே இதோ நன் ஸ்டொப்பில் மிஹிந்தலயில் நேற்று இரண்டு அரபுக்கல்லூரி டீன் ஏஜர்கள் சேம் ப்ளட் சமாச்சாரத்துக்கு கைது செய்யப்பட்டு எதிர்வரும் இருபத்தோராம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இப்போது நாட்டைப்பார்க்கும் போது முள்ளந்தண்டில் திகில் சில்லிடுகின்றது. நாட்டில் தற்போதிருக்கின்ற இந்த இலேசாக பற்றியெரிகின்ற சூழ்நிலையில் குறிப்பாக முஸ்லிம்கள் அதி கவனத்தோடு இருக்கின்ற அதே நேரம் ஆகக் குறைந்த்து குறிப்பிட்ட சில சட்டங்கள் பற்றி கொஞ்சமேனும் தெரிந்திருத்தல் நமக்க ஆரோக்கியம் அன்பளிப்ப செய்யும் என்று கருதுகின்றேன். அதிலும் குறிப்பாக அண்மைக்காலமாக லைம் லைட்டுக்கு வந்திருக்கின்ற மிகவும் அதி பயங்கரமான தொல்பொருள் சட்டம் பற்றிய அறிவு இந்த சந்ததி மட்டுமல்ல எதிர்கால சந்ததிக்கும் நாம் அதி தீவிர கவனத்தோடு இருக்க வேண்டிய இடங்களை நமக்கு கற்றுத் தரும் என்று நம்புகின்றேன்.


இலங்கையில் இருக்கின்ற அதி ஆபத்தானதும் அதி பயங்கரமானதுமான தனி நபர் சுதந்திரத்தை அப்படியே அலேக்காக அபகரித்து ஆட்டம் போடுகின்ற ஒரு சில கொடும் அடக்குமறை சட்டங்களுல் இந்த தொல் பொருள் சட்டமும் ஒன்று. பயங்கராவதத் தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் தவிர ஏனைய சாதாரண எல்லா சட்டங்களிலும் அந்த சட்டத்துக்கு கீழ் கொண்டு வரப்படுகின்ற சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்படுகின்ற ஏற்பாடுகள் உண்டு. ஆனால் எந்தத் தருணத்திலும் பிணையே வழங்கப்படக் கூடாதென்று அடித்துச் சொல்லுகின்ற இன்னொரு பயங்கரமான சட்டமிது.  

1940ம் ஆண்டின் 09ம் இலக்க தொல் பொருட்கள் கட்டளைச்சட்டத்தின் (1998ம் ஆண்டின் 24ம் இலக்க சட்டத்தாலும், 2005ம் ஆண்டின் 12ம் இலக்க சட்டத்தாலும் திருத்தப்பட்டது) பிரிவு-15C யின் படி

“இந்த கட்டளை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்படக் கூடாது” (Notwithstanding anything to the contrary in the code of Criminal Procedure Act, No: 15 of 1979, or any other written law, no person charge with, or accused of an offence under this ordinance shall be released on bail) என்று ஏற்பாடு செய்கின்றது. கொலை செய்து விட்டு குடு கடத்தி விட்டுக் கூட பிணையில் வந்த விடலாம். ஆகால் தொல்பொருட் சட்டத்துக்கு கீழ் மாட்டுப்பட்டால் அவ்வளவுதான். பிணை பற்றி பேசவே முடியாது.

இதுவே இந்த சட்டத்தின் மிகப் பெரும் ஆபத்தும் அபத்தமும் கூட.. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் அவர்களுக்கெதிராக பொலிசாரால் குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்படுகின்ற போது தமது குற்றமற்ற தன்மையை (Innocence) நிரூபிக்க தமக்கெதிராக உள்ள குற்ற்ச்சாட்டுப் பத்திரத்துக்கு அவர்கள் சுற்றவாளி என்று (tendering no plea to the charge) சொல்லுகின்ற போதும், அந்த வழக்கு விளக்கத்துக்கு (Trial) எடுக்கப்பட்டு அனைத்து சாட்சிகளும் விசாரித்து முடிக்கப்படும் வரை தொடர்ந்து குற்ற்ம் சாட்டப்பட்டவர் விளக்க மறியலிலேயே வைக்கப்படுவார்கள். வழக்கு விசாரணைகள் முடிய எத்தனை வருடங்கள் எடுத்த போதும் கூட.

இந்த சட்டத்தின் கீழ் பிரதானமாக நான்கு வகையான குற்றங்களிருக்கின்றன. பிரவு-15ன் படி தொல்பொருள் பிரதேசமென பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரமின்றி புதையல் தோண்டுதல், பிரவு-15(A) ன் படி “தொல்பொருட்களை களவாடுதல், மற்றும் 15(B) யின் படி தொல்பொருட்களை வேண்டுமென்று அழித்தல், நாசமாக்குதல், உருமாற்றுதல் மற்றும் காயப்படுத்தல் பொன்ற குற்றங்கள் பற்றி பேசுகின்றன. இது தவிர இன்னுமொரு பிரதான பிரிவும் இருக்கின்றது. அது பிரிவு-31..இது பின்வருமாறு ஏற்பாடு செய்கின்றது.

குறித்த பிரிவின் படி

“எவரேனும் ஒரு நபர் ஏதேனும் ஒரு வகுப்பினரால் புனிதமானதாக அல்லது வணக்கத்துக்குரியதாக கொள்ளப்படுகின்ற ஏதேனும் புராதன பாரம்பரிய சின்னங்கள் (Ancient Monument) தொடர்பாகவோ, அவற்றின் மீதோ, அவற்றுக்கு அருகாமையிலோ, அந்த புராதன சின்னங்கள் புனிதமானதாக அல்லது வணக்கத்துக்குரியதாக கொள்ளப்பட்டு வருகின்ற குறித்த வகுப்பினரின் மதக் கொள்கைகளை (Religious susceptibilities of calss of persons) அவற்றிலோ அவற்றை காயப்படுத்துகின்ற அல்லது காயப்படுத்துவது மாதிரி செயலைச் செய்தால் (Any act which wounds or offends or likely to wound or offend) அந்தச் செயலானது ஒரு குற்ற்மென்பதோடு இரண்டு லட்சத்து ஐம்பதினாயிராத்துக்கு கூடாததும், ஐம்பதினாயிரத்துக்கு குறையாததுமான தண்டப் பணத்தினாலோ அல்லது இரண்டு வருடத்துக்கு குறையாததும் ஐந்து வருடத்துக்கு கூடாததுமான சிறைத்தண்டனையாலோ அல்லது தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டணை இரண்டினாலுமோ தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்” என்று இந்தப்பிரிவு எற்பாடு செய்கின்றது.

இந்தப்பிரிவின் கீழ்தான் கடந்த பெப்ரவரி ஐந்தாம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழைக குறித்த எட்டு மணவர்களுக்கும் எதிராக வழக்குத்தொடுனரான பொலிசார் கெப்பித்திக்க்கொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப்பத்திரத்தினை தாக்கல் செய்திருந்தனர்.. அந்தக் குற்ற்ச்சாட்டுக்கு தாம் குற்ற்வாளி என்று மாணவர்கள் ஒத்துக் கொண்டதன் பேரிலேயே அவர்களுக்க அந்நிதிமனற்ம் தலா ரூபா. 50,000 தண்டப் பணம் விதித்திருந்தது.

பெரும்பாலும், நெற்றைய தினம் மிஹிந்தலையில் கைது செய்யப்பட்ட இரண்டு அரபுக் கல்லூரி மாணவர்களுக்கெதிராகவும் இந்தப்பிரிவின் கீழ்தான் பொலிசார் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வருவார்கள் என்று நினைக்கின்றேன்.

தொல்பொருள் சட்டத்தின் கீழ் குற்றமொன்றைப் புரிந்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் அவ்வளவுதான் கதை கந்தலாகி விடும். அவ்வளவு மோசமான (Draconian Law) சட்டமிது. நான் ஏற்கெனவெ சொன்னதன் படி இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்களுக்கு எந்த நீதிமன்றத்திலும் வழக்கு முடியும் வரை பிணையே கிடையாது.

கிண்ணியா சபருள்ளாஹ்
தொல் பொருட் சட்டம் (Antiquities Act) அச்சுறுத்தலின் உச்சம் தொல் பொருட் சட்டம் (Antiquities Act) அச்சுறுத்தலின் உச்சம் Reviewed by Madawala News on February 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.