இன்று சுதந்திரதின கொண்டாட்டமாம். யாருக்கு ? சோனி காக்காமாருக்குமா ?




இரண்டாவது உலகமகா யுத்தத்தினால் ஏற்பட்ட உலக அரசியல் மாற்றத்தினாலும்,
இந்தியாவில் நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகவும் முதலில் இந்தியாவுக்கும், பின்பு இலங்கைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.

ஆங்கிலேயர்களின் வெளியேற்றத்தினால் சிறுபான்மை இனங்களாகிய எங்களுக்கும் சுதந்திரம் கிடைத்ததாக கொண்டாடுகிறோம். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை கைப்பேற்றி ஆட்சி செய்யாது விட்டிருந்தால் இந்நாட்டின் உட்கட்டமைப்பு இன்றுள்ள நிலையிலும் பார்க்க எவ்வளவோ பின்னோக்கி இருந்திருக்கும். 

சிங்களவர்கள் கூறுவது போன்று நாங்களும் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம் என்று பெருமைப்படுகின்றோமே தவிர, சுதந்திரத்தினால் சிங்களவர்கள் அடைந்த அதே உரிமையை நாங்கள் அடைந்துள்ளோமா ?  

சுதந்திரம் என்றபோர்வையில் இந்நாட்டின் முழு அதிகாரத்தினையும் பெற்றுக்கொள்ளும் வரைக்கும், சிங்கள தலைவர்களினால் தமிழ்,முஸ்லிம் தலைவர்கள் அன்று திருப்திப்படுத்தப் பட்டார்கள்.

அத்துடன் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள், சிங்கள பிரதேசங்களையும் விட கூடுதலாக அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனால் சிங்கள தலைவர்களை சிறுபான்மையினர்கள் நம்பினார்கள். ஆனால் இந்நாட்டின் ஏகபோக முழு அதிகாரங்களும் சிங்களவர்களின் கைகளுக்கு கிடைத்தபின்பு அனைத்தும் தலைகீழாக மாறியது.  

வடக்கு கிழக்கு மாகாணங்களில் செறிவாக வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் இனப்பரம்பலை குறைத்து அவர்களது அரசியல் சக்தியை அழிப்பதற்காக அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் மணலாறு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் திட்டமிட்ட பாரிய சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டது. 

இன்று யுத்தம் முடிவுற்றதன் பின்பு புனித பிரதேசம் என்ற போர்வையிலும், வேறு காரணங்கள் கூறியும் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் இருபது ஆயிரம் ஏக்கர் முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. அதனை விடுவிக்கும் நோக்கம் எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களிடம் காணப்படவில்லை.  

இன்று இரண்டு சிங்கள தேசிய கட்சிகளுக்கிடையில் உள்ள அதிகாரப்போட்டியின் காரணமாகவே முஸ்லிம்களை ஓரளவுக்கு அரவணைத்து செல்லவேண்டிய தேவை சிங்கள ஆட்சியாளர்களுக்கு உள்ளது. 

இன்றிருக்கின்ற விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றங்கள் செய்யப்பட்டால் மலையாக மக்களையும்விட மோசமான நிலைமைக்கே முஸ்லிம் மக்கள் செல்லவேண்டிய நிலை ஏற்படும். 

சிறுபான்மை மக்களான நாங்கள் ஆங்கிலயர்களது ஆட்சியியையும், சிங்களவர்களது ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆங்கிலயர்களது ஆட்சி பருவாயில்லை என்ற நிலையே காணப்பட்டது. 

எனவே அரசியல் உரிமைகளுடன் கூடிய அதிகாரங்களும், சுவீகரிக்கப்பட்ட காணிகளும் எப்போது வளங்கப்படுகின்றதோ, அன்றிலிருந்துதான் உண்மையான சுதந்திரத்தினை நாங்கள் கொண்டாட முடியும். இது சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரமே அன்றி எங்களுக்கல்ல. 

அன்று ஆங்கிலயர்களுக்கு அடிமையாக இருந்ததுபோன்று, இன்று சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கின்றோம். இதில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதனை போட்டி போட்டுக்கொண்டு சுதந்திரதின கொண்டாட்டம் நடத்துபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.        

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

இன்று சுதந்திரதின கொண்டாட்டமாம். யாருக்கு ? சோனி காக்காமாருக்குமா ? இன்று சுதந்திரதின கொண்டாட்டமாம். யாருக்கு ? சோனி காக்காமாருக்குமா ? Reviewed by Madawala News on February 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.