பெரும்பான்மை இன சமூகத்தின் மத்தியில் இலங்கை முஸ்லீங்களின் எதிர்காலம்.



அந்த சரித்திரம் ஒரு ரயில் பயணத்திலிருந்துதான் ஆரம்பமாகியது. ஆயிரக் கணக்கான மக்கள் வரிசைப் படுத்தப்பட்டு
ரயில் நிலையத்தில் காத்துக் கிடக்கின்றனர். ஒரு ரயில் பயணம். எங்கே போகிறோம், எத்தனை மணித்தியாலப் பயணம், எத்தனை நாட்கள்? பயணிகள் யாருக்கும் விடை தெரியாது.


சிலருக்கு இறப்பர் தோட்டங்களில் வேலை வாங்கித் தருவதாக கூட்டி வந்திருந்தனர். மறுத்தோரைக் கட்டாயப் படுத்தி அழைத்து வந்திருந்தனர். ரயிலும் வருகிறது. வழக்கத்துக்கு மாற்றமான ரயில் அது. உள்ளே ஆசனங்கள் இல்லை, கழிவரைகள் இல்லை, ஜன்னல்கள் கூட இல்லை, ஏன் மூச்சுக்காற்று உள்ளே புக துளைகள் கூட ஒருசிலவைதான் இருந்தன.


பயணிகள் ஏற்றப்படுகின்றனர். 50 பேர் ஏற்றப்பட வேண்டிய பெட்டியினுல் 150, 200 பேர். எல்லோரும் ஆடு மாடு போல் நின்று கொண்டு. ஒரு சில ரொட்டித் துண்டுகளும் சிறிதளவு நீரும் வழங்கப்பட்டு பயணம் ஆரம்பிக்கிறது. ஒரு சில மணித்தியாளங்கள் என நினைத்த பயணம் நாட்கள் கணக்கில் செல்கிறது.
ரொட்டிகள் தீர்ந்து விடுகின்றன, நீர் முடிந்து விட்டது. குழந்தைகள், சிறுவர்கள் அழ ஆரம்பிக்கின்றனர். மூச்சுக் கூட விட முடியாத அளவுக்கு இட நெருக்கடியான பெட்டிகள். கழிப்பறை வசதி இன்மையால் இயற்கைக் கடன்களை நின்ற இடத்திலேயே கழித்து விட வேண்டிய நிலமை. பெட்டிகளுக்குள் ஒரு பக்கம் வியர்வை நாற்றம். மற்றொரு பக்கம் மனிதக் கழிவுகளின் நாற்றம்.


பல நாட்கள் பயணத்தின் பின்னர் ஒரு மாதிரியாக ரயில் ஓரிடத்தை வந்தடைகிறது. ரயில் பெட்டிகளின் கதவுகளைத் திறக்கின்றனர். சாப்பாட்டுத் தட்டுப்பாட்டால், மூச்சு விட முடியாமல், தொடர்ந்து நின்று கொண்டு வந்ததால் என்று பல்வேறு காரணங்களால் சிலர் மரணித்தும் இருந்தனர்.
ரயிலிலிருந்து உயிரோடு இறங்கியவர்களை அதிகாரிகள் வந்து இரண்டு வகையாக வகைப்படுத்துகின்றனர். இவர்கள் சாக வேண்டியவர்கள். இவர்கள் வாழ வேண்டியவர்கள் என.


இறக்க வேண்டியோரைக் கொலை செய்வதற்காக கொலைகள் நடைபெரும் இடத்துக்கு அழைத்துச் சென்று நஞ்சூட்டிக் கொலை செய்கின்றனர். வாழ வேண்டும் எனத் தேர்வு செய்தோரை சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவற்றை சிறைச்சாலைகள் என அழைப்பதை விட "வதை முகாம்கள்" என்று அழைப்பது பொறுத்தமாக இருக்கும்.
ஒரே குடும்பத்தாரை வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்து வைப்பர். வதை முகாம்களுக்குச் சென்றவர்களுக்கு மொட்டை அடித்து அவர்களுக்குக் "கைதி எண்கள்" வழங்கப்பட்டு ஒரு வித சிறைச்சாலை ஆடையும் வழங்கப் படுகிறது. நடுங்கும் குளிரில் சாதாரண உடையுடன் கடுமையான வேலைகள் செய்ய வேண்டும். ஊதியமோ, ஓய்வோ இல்லை. வேலை செய்ய மறுப்போரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவர்.



ஒரு நாளைக்கு ஒரு ரொட்டித் துண்டு. அதிலும் மரப் பலகை துகள்கள். கிழங்கின் தோலினால் தயாரித்த நாற்றமடிக்கும் சூப். சாப்பாட்டுத் தட்டுப்பாடு. ஆயுள் முழுக்க போட நாற்றமடிக்கும் ஒரேயொரு கந்தலான ஆடை. வருடக் கணக்கில் குளிக்காத மக்கள். உறை பனியில் கூட நிர்வாணமாய் வேலை செய்யும் கட்டாயம், பிரிக்கப்பட்ட குடும்பங்கள், கண்முன்னே கொத்துக் கொத்தாய் கொள்ளப்படும் சக இனத்தவர், தொற்று நோய்கள், சாப்பாடு, பசி காரணமாக கண்முன்னே செத்துப் போகும் மக்கள் எனத் தொடருகிறது வதை முகாம்களின் வதைகள்.


இது எதுவும் கட்டுக் கதைகளோ, சினாமாக் கதைகளோ அல்ல. இரண்டாம் உலக மகா யுத்த காலப்பகுதியில் ஜேர்மனியை ஆண்ட ஹிட்லர் என்ற தனிநபரின் வெறுப்புக்கு உள்ளான யூதர்களுடைய கதை.


கிட்டத்தட்ட 60 லட்சம் யூதர்களைக் கொன்றொழித்த ஹிட்லர் அதற்குச் சொன்ன காரணம் "அவர்கள் இந்த உலகத்துக்குத் தேவையற்றவர்கள் அல்லது கழிவுகள், அவர்களால் உலகுக்கு ஆபத்து."


ஹிட்லர் என்ற தனி மனிதனின் யூதர்களுக்கு எதிரான வெறுப்பு, நாஜிகளின் வெறுப்பாகி, ஜேர்மனியின் வெறுப்பாகி, முழு ஐரோப்பாவும் பரந்தது. ஒரு வேளை இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஹிட்லர் வெற்றி பெற்றிருந்தால் உலகில் யூதர்கள் என்றவொரு இனமே அழிந்து போயிருக்கலாம்.
இந்த இனவழிப்பு ஒரேயடியாக நடக்க ஆரம்பிக்கவில்லை.


ஜேர்மனியை ஆண்ட ஹிட்லரின் யூதர்கள் மீதான வெறுப்பு நாளடைவில், நாஜிகளின் வெறுப்பானது. ஜேர்மனியில் வாழ்ந்த குடிகளில் ஒவ்வொறுவரும், யூதனை வேறொரு குடிமகனாகப் பார்க்க ஆரம்பித்தனர். முதலில் யூதர்களது உரிமைகள் மீது கை வைத்தனர், அவர்களுக்கு வேலை செய்யும் உரிமைகள் மறுக்கப்பட்டு வேலை செய்த இடங்களிலிருந்து துரத்தப் பட்டனர். சாதாரண பாடசாலைகளில் யூதர்கள் படிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. வானொலிகள் கூட யூதர்களுக்கு எதிராகப் பேசத் தொடங்கியது.



அடுத்ததாகப் பொருளாதாரத்தில் கை வைத்தனர். யூதர்களுடைய கடைகளில் ஜெர்மனியர்கள் பொருட்களை வாங்குவது தடை செய்யப்பட்டது. அதற்குப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கடைகளையும், வீடுகளையும் உடைக்க ஆரம்பித்தனர். ஜேர்மனியில் யூதர்கள் வாழ்வதற்கு ஒரு அச்சுறுத்தலான நிலை உருவாக்கப்பட்டது.


அதன் பின்னரே ஹிட்லர் யூதர்களைக் கொன்றொழிக்க வேண்டுமென முடிவு செய்தார். வேறு இடங்களில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்தார்கள். வர மறுத்தோரை கட்டாயப்படுத்தினர். சிலரைச் சுட்டுக் கொண்டனர். அங்கிருந்தே ரயில் பயணங்கள் ஆரம்பித்தன....
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களது உரிமைகள் மீது கை வைக்க வேண்டும். அடுத்ததாக பொருளாதாரத்தில் கை வைக்க வேண்டும். கடைசியாக உயிர்கள் மீதை வைத்து கொத்துக் கொத்தாக கொன்றொழிக்க வேண்டும்.


உலகில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அனைத்து இனவழிப்புகளினதும் தாரக மந்திரம் இதுதான். அன்று ஹிட்லர் நடாத்திய யூத இனவழிப்புத் தொடங்கி, இந்தியாவில் குஜராத் கலவரங்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனவழிப்புகள், கடைசியாக உலகையே உலுக்கிய ரோஹிங்யா மக்கள் மீதான இனவழிப்பு வரை இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது, வருகிறது. இந்த இனவழிப்புக்களுக்கு உடந்தையாக அந்தந்த நாட்டு அரசாங்கமே துணையும் நின்றது.


ஏதோ ஒரு காரணத்தினால் எனக்கும் வரலாற்றில் நடந்த இனவழிப்பு நிகழ்வுகளையும், இலங்கை முஸ்லீங்கள் மீது அண்மைக் காலங்களில் கட்டவிழ்த்து விடப்படும் இனவாத நடவடிக்கைகளையும் தொடர்புபடுத்திப் பார்க்க யோசிக்கிறது.


"ஹலால்" என்ற பிரச்சினையுடன் எம் உரிமைகள் மீது கைவைக்க ஆரம்பித்த இனவாதிகள், பள்ளிகள் மீது, முஸ்லீம் விவாகச் சட்டம், பாடசாலை சீறுடை, மத்ரசாக்கள் என உரிமைகளைக் கடைந்தெடுத்து விட்டு, அடுத்த படியாக முஸ்லீங்களின் பொருளாதாரத்தைப் புறக்கணிக்கவும், பொருளாதாரத்தைத் தாக்கி அழிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.


அளுத்கமை, பேருவளை தொடங்கி, ஜிந்தோட்டை, அம்பாறை வழியாக வந்து கண்டி வரை வந்து, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் மாவனல்லையில் ஏற்பட்ட் சலசலப்புகள் வரை முஸ்லீங்களின் பொருளாதாரத்தைத் திட்டமிட்டு அழிக்கும் காடையர்கள் ஏதோவொறு காரணியை மையமாக வைத்து பிரச்சினைகளை ஆரம்பித்தாலும் இவர்களிடம் திட்டமிட்ட ஒரு அட்டவணைப் பிரகாரமே செயற்படுகின்றனர் என்பதை யூகிக்கும் போது, அடுத்தபடியாக என் உயிர்கள் மீதே கை வைப்பர் என்பது ஊகமாகின்றது.


காரணம் கடந்தகால தாக்குதல்களில் போது (ஓரிரு உயிரிழப்புகள் நேர்ந்தாலும்) அவர்கள் கொலை செய்வதை நோக்காகக் கொண்டு அல்லாமல், உடமைகளை அழிப்பதை நோக்காகக் கொண்டே செயற்பட்டுள்ளனர் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. எனவே இந்த காடையர்கள் பின்னால் ஒரு கல்வி கற்ற, அறிவுள்ள, வரலாறுகளை நன்கறிந்த ஒரு கற்ற சமூகம்தான் இவர்களைச் செயற்படுத்துகின்றனர் என்பது தெளிவாக விளங்குகிறது.
சிங்களவர்களுக்கு முஸ்லீங்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்குக் காரணம் என்னவென்று யோசித்தால் பின்வருமாறு அதனை வரையறுக்கலாம்.


"முஸ்லீங்கள் என்போர் இந்த நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள். அவர்கள் எமது சிங்கள அரசாங்கத்தால் வழங்கப்படும் உரிமைகளை, இலவசங்களை நன்றாகப் பயன்படுத்தி விட்டு, நாட்டுப்பற்று இல்லாமல், சமூகத்துக்கு ஒரு நலனையும் செய்யாமல், நாட்டுக்கு எந்த நலனையும் ஏற்படுத்தாமல், தான், தனது முஸ்லீம் சமூகம் என்று வாழ்ந்து விட்டுச் செல்கின்றனர். எனவே அவர்கள் இந்த நாட்டுக்குத் தேவையற்றவர்கள், இந்த நாட்டிலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள், நாட்டிற்கு இவர்கள் ஒரு கழிவு" என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர் அல்லது அவ்வாறான கண்ணோட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.


இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அவர்களது கருத்துக்களில் பல உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.


முஸ்லீங்கள் மீது வெறுப்புணர்வு வளர அடிப்படைக் காரணங்கள் இரண்டு.

1. நாம் இந்த நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை, ஒரு தேவையற்ற சமூக்கமாக வாழுகிறோம்.

2. நமது முஸ்லீங்கள் சிங்களவர்களது முன்னிலையில், முக்கியமாக பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறைகள்


ஒரு சாதாரண இலங்கை முஸ்லீம்களின் வாழ்க்கை முறையை உதாரணமாக எடுத்துப் பார்த்தோமேயானால் அவர்களது கல்வி வாழ்க்கை இவ்வாறு ஆரம்பித்திருக்கும். பாதிப்பேருடைய பாடசாலைப் படிப்பு O/L உடன் முடிந்து போயிருக்கும்.


மிகுதியில் உயர்தரம் படித்து பெறுபேறுகள் வரும் போது, அதில் பாதி முஸ்லீம் பெண்கள் திருமணம் செய்திருப்பர். ஆண்களில் பாதிப்பேர் Fail ஆகி இருப்பர். மீதியில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப் படுவோரில் அனேகர் பெண்பிள்ளைகள். விரல் விட்டு எண்ணி விடலாம் ஆண்களை.
பெண் பிள்ளைகள் உயர்தரம் படிக்கக் கூடாது, பல்கலைக்கழகம் சென்றால் கெட்டு விடுவார்கள், திருமணம் போன்ற காரணங்களால் அவர்களது பல்கலைக்கழக வாழ்வு ஆரம்பிக்க முன்னறே சலவாத் ஓதி முடிக்கப் பட்டு விடும்.


ஆண்களில் தெரிவு செய்யப்பட்ட விரல் விட்டு எண்ணுவதில் சிலரும் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடம் செலவழிப்பதை விட தனியார் கல்லூரிகளில் Course கள் செய்து அவசரமாக வெளிநாடு பறக்கவே எத்தனிப்பர். மிகுதி கொஞ்சப்பேர்தான் பட்டப் படிப்புக்களைத் தேர்வு செய்வர்.
இதே நேரம் O/L, A/L சித்தியடையத் தவறியவர்கள் வியாபாரிகளாக, அல்லது ஏதோ ஒரு course முடித்து விட்டு வெளிநாடு சென்றவர்களாக இருப்பர்.
படித்தவர்கள் ஒருபக்கம் வெளிநாடுகளில் குடியேறவோ அல்லது உழைக்கவென்றோ சென்றால் அடுத்த புறம் கல்வியை இழந்தவர்களும் சாரதிகள், வேலையாட்கள் என பல்வேறு பணிகளுக்கு வெளிநாடு சென்றிருப்பர். இன்று எமது முஸ்லீம் சமூகத்தை எடுத்தால் ஒவ்வொறு வீட்டிலும் குறைந்தது ஒரு இளைஞராவது வெளிநாட்டில் இருப்பார்.



இவர்களது அனேக இலக்கு தமது வீட்டையும், செல்வத்தையும் பெருக்கி அடுத்தவனுக்கு காட்டுவதற்காக வாழ்வதேயாகும். மாறாக அடுத்த வீட்டுக்காரன் சாப்பிட்டானா? அவனது நிலை எவ்வாறு இருக்கிறது? என்றெல்லாம் எட்டியும் பார்க்க மாட்டான். சிலவேளை ஒரே குடும்பத்தில் ஒரு சாரார் வருடாவருடம் உம்ரா செல்ல, அடுத்தவர் சாப்பாட்டுக்கும் கஷ்டப் படுபவர்களாக இருப்பர். ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.


இந்தக் கூத்துக்கள் அனைத்தையும் ஒரு 80% பெருமாபாண்மைச் சமூகத்துக்கு மத்தியில் வெறும் 10% ஆக இருக்கும் சிறுபாண்மைச் சமூகம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரும்பாண்மைச் சமூகம், இவ்வாறு சிந்திக்கத் தொடங்கும்.


நமக்குக் கிடைக்கும் நலன்கள் அனைத்தும் இவர்களும் அனுபவிக்கின்றனர். ஆனால் இவர்களால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை, மாறாக அவர்களின் சொத்து செல்வம் என அதிகரித்துச் செல்கிறது. அவர்கள் அவர்களது சமூகத்தை மாத்திரம் பார்க்கும் ஒரு சுயநலவாத சமூகம் என்ற எண்ணம் பெரும்பாண்மை சமூகத்தினரிடம் வருகிறது. அது கோபமாக, பொறாமையாக பின்னாட்களில் வெடிக்கிறது.


பொறாமையின் உச்சகட்டம் வெடிக்கும் போது அது கலவரமாக மாறி அவர்கள் முஸ்லீங்களது சொத்துக்கள் மீது கை வைக்கின்றனர். கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்து முஸ்லீங்களை நடுத்தெருவில் நிற்கச் செய்கிறது. இந்தத் தாக்குதல்கள் செய்யும் போது அவர்கள் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார்கள். முஸ்லீங்கள் கல்வியில் பெயர் சொல்லுமளவு முன்னேறியவர்கள் இல்லை. படித்தவர்கள் என்று சொல்லுமளவு இல்லை. எனவே அதில் கை வைத்துப் பிரயோசனம் இல்லை. முஸ்லீங்களை அழிக்க வேண்டுமா? அவர்களது பொருளாதாரத்தில் கை வைக்க வேண்டும். வைத்தார்கள். எம்மவர்கள் நிலைகுலைந்து போனார்கள்.



இரண்டாவதாக நமது முஸ்லீங்கள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறைகள். வைத்தியசாலைகளில் வரிசையில் நிற்க மாட்டார்கள். பொது இடங்களில் முறைகேடாக நடந்து கொள்வார்கள். பஸ்ஸில் உட்கார்ந்து இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்ணொருவர் வந்தாலும் இடம் கொடுக்க மாட்டார்கள், ஆனால் அபாயா அணிந்த சாதாரண பெண்ணொருவர் வந்தாலும் இடம் கொடுத்து விடுவார்கள். பொது இடங்களில் கதிரைகளில் முஸ்லீங்களுக்கு மாத்திரமே இடம் கொடுப்பார்கள்.


நாட்டுப்பற்று இல்லை. இலங்கை- பாகிஸ்தான் எனப் போட்டி வரும் போது முஸ்லீங்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். தனது சமூகத்துக்கு ஏதும் என்றால் அரவணைத்துக் கொள்வார்கள். ஏனையோருக்கு ஏதும் நடந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். இவற்றையெல்லாம் உன்னிப்பாக அவதானிக்கும் பெரும்பாண்மை சமூகத்தினர் சிந்திப்பது இவர்கள் இந்த நாட்டுக்குத் தேவையற்றவர்கள்.

அன்று ஜேர்மனியர்கள் யூதர்களை எவ்வாறு ஒதுக்கினார்களோ,குஜராத்தியர்கள் முஸ்லீங்களை ஒதுக்கினார்களோ அவ்வாறே சிங்களவர்களும் "இலங்கை சிங்கள நாடு, அது எமக்குச் சொந்தம், இங்கு முஸ்லீங்கள் வாழத் தகுதியற்றவர்கள்" என்று ஒதுக்க ஆரம்பிக்கின்றனர்.


முஸ்லீங்களுக்கும், இந்த நாட்டுக்குமான தொடர்பென்பது இன்று நேற்று ஆரம்பித்த விடயமல்ல. கிட்டத்தட்ட 1500 வருடங்களுக்கும் மேற்பட்ட தொடர்பு. இஸ்லாம் அறிமுகமாக முன்னரே அரேபியர் இலங்கையில் வர்த்தகம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.


நபியவர்கள் வாழ்ந்த அல்லது அதற்கு அடுத்த காலப்பகுதியிலேயே இலங்கையிலும் இஸ்லாம் அறிமுகப் படுத்தப் படுகிறது. வியாபாரம் செய்ய வந்த அரேபியர்களும் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்து அவர்களும் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். அரேபியர்கள் அந்தக்கால மன்னர்களோடு நெருங்கிய தொடர்பிலிருந்தார்கள். முஸ்லீம் சமூகமும் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் பெருகுகின்றனர். பல இடங்களை மன்னரே அன்பளிப்பாக கொடுத்துக் குடியேற்றுகிறார்.


சில, பல அரச பதவிகள், பாதுகாப்பு, நம்பிக்கை, வைத்தியம் போன்ற பிரதான பணிகளில் "நம்பிக்கைக்குறியவர்கள்" என்று முஸ்லீங்களை வேலைக்கும் அமர்த்துகின்றனர். சமையல், வைத்தியம், பாதுகாப்புப் பணிகள் போன்ற நம்பிக்கை சார்ந்த வேலைகளில் முஸ்லீங்களே அமர்த்தப்பட்டனர்.
கண்டி மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் உயிருக்காக தன் உயிரையே தியாகம் செய்த முஸ்லீம் பெண்மணி, குருநாகலையை ஆண்ட மன்னர் கலேபன்டார விருப்பப்பட்டார் என்பதற்காக தனது மகளான பொடி ஹாமினேவை திருமணம் செய்து கொடுத்த முஸ்லீம் குடும்பம் என முஸ்லீங்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையிலான உறவு வலுப்பெறுகிறது.


போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற அந்நியர்களின் படையெடுப்பின் போதெல்லாம் சிங்கள மன்னர்களோடும், மக்களோடும் சேர்ந்து போராடியிருக்கிறது இந்த முஸ்லீம் சமூகம்.


முஸ்லீங்களுக்கென்றே சிங்கள மன்னர்களால் பல ஊர்கள் நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளது. குருநாகலில் "விசினவ" என்ற 29 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியும் சிங்கள மன்னர்களால் முஸ்லீங்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. கண்டி தளதா மாளிகை உள்ள அவர்களது புனித பூமிப் பிரதேசத்தில் லைன் பள்ளிவாயில் வருவதற்குக் காரணமும் சிங்கள மன்னர்களின் அன்பளிப்பே. இன்னும் பல பொறுப்பான நம்பிக்கையான பதவிகளில் அக்கால மன்னர்கள் முஸ்லீங்களையே நியமித்திருந்தனர்.



சுதந்திரத்துக்காகவும் இலங்கை முஸ்லீங்கள் பெயர் சொல்லுமளவு பாடு பட்டிருக்கிறார்கள். அறிஞர் சித்தி லெப்பை, டீ.பீ. ஜாயா, சேர். ராஸிக் பரீத் போன்ற முஸ்லீங்களும் முஸ்லீங்கள் சார்பில் பாடுபட்டனர். இவ்வாறு சிங்கள சமூகத்துடன் ஒன்றாயிருந்த முஸ்லீம் சமூகம் காலப்போக்கில் தனது போக்கை மாற்றிக் கொண்டது. கல்வியில் வீழ்ச்சி கண்டது. சமூக அக்கறையுடன் செயற்படும் நபர்கள் குறைந்தனர்.


தமக்கான தனிவழிப்போக்கை அமைத்துக் கொண்டனர். இதனால் அனேக பேரினவாதிகளுக்கு முஸ்லீங்களின் தனிப்போக்கின் மீது கோபம் வந்தது.
அதன் விளைவுகளே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே நாம் முதலில் எம்மிலிருந்து மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். "முஸ்லீங்கள் இந்த நாட்டுக்குத் தேவையற்றவர்கள், அவர்கள் வந்த இடத்துக்கே திரும்பிச் செல்லட்டும்" என்ற கருத்தை நாம் மாற்ற வேண்டும்.
எமது சமூகத்தில் தலைவர்கள் அல்லது தலைமைத்துவத்தை தானாக ஏற்றவர்கள் மூன்று வகைப்படுவர்.


முதலாமவர்கள் மார்க்கத்தைக் கற்ற உலமாக்கள். இரண்டாவது கல்வி கற்ற கல்விமான்கள். மூன்றாவது தனவந்தர்கள். ஆனால் தூரதிஷ்டம் என்னவென்றால் மூன்று பேருக்கும் இடையிலான தொடர்பானது பாரிய இடைவெளிகளாகக் காணப்படுகின்றது. கல்வியியலாளர்கள் மார்க்க அறிவு குறைந்தவர்களாக உள்ளனர். மார்க்க அறாஞர்கள் உலகக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது குறைவாக இருக்கிறது. தனவந்தர்கள் எந்தவொறு மார்க்க அல்லது கல்வி நடவடிக்கைகளிலும் முதலீடு செய்வதனைத் தவிர்க்கின்றனர்..


இவர்கள் மூன்று தரப்பினரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். முஸ்லீம் சமூகத்தின் அறிவுசார் எழுச்சியானது அவர்களது கல்வி வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. எனினும் அவை மார்க்க அறிவுடன் ஒன்றிணைந்த கல்வி வளர்ச்சியாக இருக்க வேண்டும்.


சமூகத்தின் கல்வி எழுச்சி பெரும் போது சமூகத்தின் மீதான அக்கறைகள் எழும். அந்த அக்கறை நல்லிணக்கத்துக்கான வழியை வகுக்கும். கல்வி எழுச்சியானது சகோதரத்துவம், நம்பிக்கை, ஒற்றுமையாக வாழுதல், சமூக நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். பொது இடங்களில் எவ்வாறு நடத்தல் தொடங்கி சமூகம், நாடு பற்றிய சிந்தனை வரைக்கும் வித்திடும். சமூகத்துக்காக, நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற மனோபாவத்தை அது ஏற்படுத்தும். நாட்டிற்கு ஒரு இன்றியமையாத, தேவைகளுள்ள பிரஜைகளாக முஸ்லீங்கள் மாறுவர்.


நாம் அவற்றுக்கான அடித்தளங்களையே ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான ஒரு மாற்றம் முஸ்லீம் சமூகத்தில் ஏற்பட்டு முஸ்லீங்கள் இந்த நாட்டின் முக்கிய பிரஜைகள், அவர்களால் நாட்டுக்கு மிகப்பெரிய சேவை, நன்மை உண்டு என பெரும்பாண்மையினர் சிந்திக்கும் தருணமே அவர்களுக்கு எம்மீது உள்ள தவறான என்னம் நீங்கும்.


எனவே நாமும் நான், எனது குடும்பம் என்பதைத் தாண்டி, எமது சமூகம், பிற சமூகங்கள், எமது நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணங்கள் மாற்றப்பட வேண்டும்.

Sabith Thaha
16/01/2019

பெரும்பான்மை இன சமூகத்தின் மத்தியில் இலங்கை முஸ்லீங்களின் எதிர்காலம். பெரும்பான்மை இன சமூகத்தின் மத்தியில் இலங்கை முஸ்லீங்களின் எதிர்காலம். Reviewed by Madawala News on January 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.