நோன்பு கால பாடசாலை விடுமுறை : சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.


இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நாம் பல சலுகைகளோடும், வரப்பிரசாதத்தோடும்
வாழ்ந்து வருகிறோம். எமது முன்னோர்கள் தூரநோக்காக சிந்தித்து பல சலுகைகளை எமக்கு பெற்றுத் தந்துள்ளனர்.
வெறும் குறுகிய வட்டத்துக்குள் சிந்தித்து அவற்றை தாரைவார்க்க போகின்றோமா?

முஸ்லிம் தனியார் சட்டம், Ghazi நீதிமன்றங்கள், ஜும்மா தினங்களில் இரண்டு மணிநேர விடுகை, கணவனை இழந்த முஸ்லிம் பெண்கள் இத்தா இருப்பதற்காக அரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை, பெருநாள் தினங்களில் Galle Face ல் தொழுகை என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நோன்பு காலங்களில் பாடசாலைகளை நடத்த வேண்டும் என வாதிடுவோர் சொல்லும் சில காரணங்கள்.
01. மாணவர்களின் பாடசாலை நாட்கள் குறைந்து கல்விநிலை குறைவடைதல்.

02. ஏனைய தமிழ், சிங்கள, கிறிஸ்தவ பாடசாலைகளில் பயிலும் முஸ்லீம் ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு செல்கின்றார்கள் தானே.

03. நோன்பு காலம் என்று விடுமுறை வழங்கினாலும் மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்கு காலை முதல் மாலை வரை செல்கின்றார்கள் தானே.

04. அரபு நாடுகளில் கூட இல்லையே.

பதில்கள்:-
01. இலங்கையில் மொழி மற்றும் இன அடிப்படையிலேயே பல பாடசாலைகள் உள்ளன. (அது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.)
ஒவ்வொரு பாடசாலைகளும் தமது கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் விடுமுறைகளை அமைத்துக் கொள்கின்றன.
பொதுவாக டிசம்பர் மாத விடுமுறை எல்லாப் பாடசாலைகளுக்கும் ஒரே மாதிரி அமையும்.
முதலாம் ,2ஆம் தவணை விடுமுறைகள் தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு அவர்களின் புத்தாண்டை ஒட்டி அதிகமாகவும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு காலங்களில் விடுமுறை வழங்குவதால் குறைவாகவும் இருக்கும். ( அவர்களுக்கு சித்திரை புத்தாண்டு மாதவிடுமுறை, எமக்கு நோன்பு மாத விடுமுறை)
அதாவது ஒவ்வொரு பாடசாலையும் வருடம் ஒன்றுக்கு 195 முதல் 200 நாட்கள் கட்டாயம் பாடசாலை நாட்களை கொண்டிருக்க வேண்டும். இவ்வருடம் 2019 அது 197 நாட்கள். (படம் 01 ஐ பார்க்க)

எனவே முஸ்லிம் பாடசாலைகளுக்கு அதிக விடுமுறை என்பது ஒரு கற்பனையே. ( ரமலான் மாத விடுமுறையை முதலாம், 2 ஆம் தவணை விடுமுறைகளை குறைப்பதன் மூலம் சீராக்கப்படுகிறது.)
அதேநேரம் OL & AL விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளும் சனிக்கிழமைகளில் அதனை நடத்தி நாட்களை சரிசெய்து கொள்கின்றன.

இது ஒருபுறம் இருக்க நோன்பு விடுமுறையை நிவர்த்திக்க "ஏனைய பாடசாலைகள் 1.30pm க்கு மூடப்படும்போது முஸ்லிம் பாடசாலைகள் 2.00pm க்கு மூடப்படுவது அதாவது பாடசாலைகளை 30 நிமிடம் அதிகமாக நடத்துவது மாணவர்களுக்கு உளைச்சலை ஏட்படுத்துகிறது." என சில முகநூல் முப்திகள் கிளப்பி விடுகின்றனர்.
முஸ்லிம் பாடசாலைகள் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்காக அரைநாளுடன் மூடப்படுவதால் (11.30am) வழமையான பாடசாலை நேரம் 2 மணித்தியாலம் குறைகிறது. அதனை சமன் செய்ய ஏனைய 4 நாட்களில் 30 நிமிடம் அதிகமாக பாடசாலை நடத்தப்படுகிறது. அதனாலேயே அந்த நேர வித்தியாசம்.
அது கடினம் என்றால் ஜும்மா நாளுக்கான அரைநாள் லீவு தேவை இல்லை என்பதையே கேட்க வேண்டும். அதையா சொல்ல வருகிரார்கள். நமது அறியாமையால் நம் கண்ணையே நாம் குற்றுவதா?
நமக்காக நீலிக்கண்ணீர் வடிக்க பல சேனைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. சும்மா இருந்த சிரங்கை சொறிந்து காயமாக்கி விட வேண்டாம்.

02. நகர்புறங்களை எடுத்துக் கொண்டால் பல அந்நிய மதத்தவர்களுடைய பாடசாலைகளுக்கு எமது பிள்ளைகள் செல்வதால் அவர்களது மத கலாச்சாரத்தை பேண நிரப்பந்திக்கப்படுகிறார்கள்.
(உதாரணமாக Bishop's College செல்லும் பல முஸ்லீம் பெண் பிள்ளைகள் தலையை மறைப்பது இல்லை.)
அதேநேரம் அவ்வாறான பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் மாணவர்களுக்கு நோன்பு கால விடுமுறை கொடுப்பது நடைமுறை சாத்தியம் இல்லை.
(ஆனால் ஜும்மா நேரத்துக்கு சலுகை வழங்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.)
அப்பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்பதற்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு கிடைக்கும் விடுமுறையை ஏன் தடுக்க வேண்டும். முஸ்லிம் பாடசாலையா ஏனைய பாடசாலையா என்பது அவரவர் தெரிவு.

03. நோன்பு விடுமுறை என்றாலும் தனியார் பாடசாலைகள் நடக்குறதுதானே என்ற ஒரு வாதம். பொதுவாக தனியார் வகுப்புகள் AL மாணவர்களுக்கு அதிக அளவில் நடத்தப்படுகிறது.
ஒரு பாடசாலையை எடுத்துக்கொண்டால் அதில் கற்பிக்கும் ஆசிரியர்களின் 20% க்கும் குறைவானவர்களே தனியார் வகுப்புகள் நடத்துகின்றனர்.
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் கதையாய் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை அதன் கலாச்சாரத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு கருத்து சொல்வது தவறானது.
உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மாணவர்கள் பெரும்பான்மையாக இருந்தால் நோன்பு காலங்களில் அவர்களுக்காக காலை மாலை என்று பாராது வகுப்புகள் நடக்கும்.
அதேநேரம் வெளி மாகாணங்களை கருத்தில் கொண்டால் அங்கே தமிழ் முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாக கற்பதால் பொதுவாக நோன்பு காலங்களில் விடுமுறையாக இருந்தாலும் சனி ஞாயிறு மற்றும் மாலை நேரங்களில் வழமை போன்றே வகுப்புகள் நடைபெறுகின்றன.
OL லுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் குறைவு. அவர்கள் இள வயதினராக இருப்பதால் நோன்பின் வாட்டம் அவர்களுக்கு அதிகம் இருக்கும். (பல பிள்ளைகள் பாடசாலைக்கு Service Van களில் சென்றாலும் அப்பயணம் தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது.)
அம்மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இரவு நேரம் நின்று வணங்குதல், நோன்பு காலங்களில் அதிக அமல்கள் செய்தல் என பல நன்மைகளை தேடும் வாய்ப்புகள் உள்ளது. ( ஆசிரியர்கள் மட்டும்தானா நோன்பு அடுத்த அரச அதிகாரிகள் நோன்பு நோற்பது இல்லையா என்று கேட்கலாம். நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு கிடைக்கும் சலுகையை ஏன் தட்டிப் பறிக்க வேண்டும்.)

04. பல அரபு நாடுகளில் நோன்பு கால விடுமுறை என்று நேரடியாக வழங்கப்படாமல் கோடைகால விடுமுறை (Summer Vacation) என்று வழங்கப்படுகிறது.
அது பொதுவாக நோன்பு காலத்திலேயே அமைகிறது. சமீப ஆண்டுகளாக அதில் சிறிய வேறுபாடு தோன்றி இருப்பதால் பொதுவாக பாடசாலைகள் நோன்பின் சில நாட்கள் நடத்த வேண்டி வந்தாலும் அரை நேரமே நடத்தப்படுகிறது.
அரபு நாடுகளுடன் ஒப்பிட்டு இலங்கையில் நாம் பெறும் பாக்கியங்களை காட்டிக் கொடுக்க வேண்டாம். ஒரு பெண்ணின் கணவன் இறந்தாலோ அல்லது விவாகரத்து பெற்றாலும் "இத்தா" இருக்க வேண்டிய காலம் நான்கு மாதம் பத்து நாட்கள் அரைச்சபள Leave ஆக தாபன கோவை விதிப்படி (Page 148) இலகுவாகவே கிடைத்துவிடுகிறது. அது அரைச்சபள Leave என்று கூறப்பட்டாலும் ஏற்கனவே முழு சேவைக்காலத்திலும் மீதமுள்ள விடுமுறைகளை ஒன்றாகச் சேர்த்து அது சம்பளத்துடன் கூடிய Leave ஆகவே அமைந்துவிடுகிறது.
(படம் 2 ஐ பார்க்க.)

ஏனைய பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் நோன்புகாலங்களில்  செல்லும்போது முஸ்லீம் பாடசாலைகளுக்கு விடுமுறை தேவைதானா என்ற சிலரது Logical வாதங்கள் சகிக்க முடியாமல் உள்ளன. "Speaker ல பாங்கு சொல்லாத பள்ளிகளில் வேளைக்கு தொழலையா? நீங்க மட்டும் எதுக்கு Sound Pollution பண்ணிக்கிட்டு? என்று அடுத்த வாதம் வைத்தால் அவர்களின் பதில் என்ன.?" முஸ்லிம்கள் மிகச் சொற்பமாக வாழும் சில பகுதிகளில் குடும்ப பிணக்கை தீர்க்கும் Gazi நீதிமன்றங்கள் இல்லை ஆனாலும் அவர்கள் வேறு வழிகளில் தீர்வு பெறுகிறார்கள். இதையும் உதாரணமாகக் கொண்டு ஏனைய சலுகைகளையும் அழித்துவிடுவார்களோ.

இங்கே நோன்பு காலங்களில் பாடசாலை அவசியம் என்று சொல்வோர் நன்கு விளங்க வேண்டிய ஒரு விடயம்:-
நாம் இல்லாத ஒன்றை கோரவில்லை இருக்கும் சலுகையை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்பதையே சொல்கிறோம். ஏற்கனவே அப்படி ஒரு விடுமுறை இல்லாமலிருந்து புதிதாக கேட்கிறோம் என்றால் இந்த நியாயப்படுத்தல்களை முன்வைக்கலாம். அதை விட்டுவிட்டு இருக்கும் சலுகைகளை அதுவும் பாடசாலை நாட்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்கும் இச்சலுகையை விட்டுவிட நினைப்பது சொந்த செலவில் சூனியம் செய்வதற்கு ஒப்பானது.

நோன்பு கால விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் குழப்படி என்றால் அதே விடுமுறை சித்திரை புத்தாண்டில் கிடைக்கத்தான் போகிறது. அப்போது குழப்படி செய்ய மாட்டார்களா? நோன்பு கால விடுமுறையை எப்படி பிரயோசனமாக கழிப்பது என்று எமது சிறார்களுக்கு வழி காட்டுவோம். எனவே குறுகிய வட்டத்துக்குள் சிந்தித்து எமக்கு கிடைத்த சலுகைகளை தாரை வார்த்து விடாமல் பாதுகாப்போம்.

" நுணலும் தன் வாயால் கெடும்"
கட்டுரை : Dr Ziyad AIA

நோன்பு கால பாடசாலை விடுமுறை : சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. நோன்பு கால பாடசாலை விடுமுறை :   சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. Reviewed by Madawala News on January 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.