காத்தான்குடியின் உணவகப் பாரம்பரியம் தொடருமா? தொலையுமா?


காத்தான்குடி முஸ்லிம்களை பொறுத்தவரைக்கும் ஹோட்டல் தொழிலில் பெயர் போனவர்கள் என்பது நாடறிந்த உண்மை.
ஆனாலும் அண்மைக் காலமாக இப்பிரதேசத்தில் ஹோட்டல் உணவுகளில் ஏற்பட்டு வருகின்ற சுகாதாரரீதியான முறைகேடுகளும் குறைபாடுகளும் ஒட்டுமொத்த ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மீதும் ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தியுள்ளன.

இனவாதக் குரல்வளைகள் இதைவைத்து எட்டுத்திக்கும் கண்டமேனிக்குக் கதைகளை கட்டிவிட்டு ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன.

ஹோட்டல் சமையலறைகளில் உணவுகள் சுத்திகரிக்கப்படுகின்ற, சமைக்கப்படுகின்ற முறையை பார்த்துவிட்டு வந்து யாரும் உணவுகளை விலைகொடுத்து வாங்குவதில்லை. மாறாக ஹோட்டல் உரிமையாளர்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவை கொள்வனவு செய்யப்படுகின்றன.

மேலும் அவ்வுணவுகள் குழந்தைகள், வயோதிபர்கள், நோயாளிகள், வெளியூர் பயணிகள் போன்றவர்களாலும் கூட அதிகமாக உட்கொள்ளப்படுகின்றன. காத்தான்குடியை பொறுத்தவரைக்கும் அங்கே உள்ளூர்வாசிகளை விடவும் வெளியூர்வாசிகளே அதிகமான வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றனர். 'காத்தான்குடி என்பது ஒரு முஸ்லிம் வர்த்தகப் பிரதேசம், அங்கே தொழில் செய்கின்ற வியாபாரிகள் மோசடி செய்யமாட்டார்கள்' என்ற நம்பிக்கை இன்னும் பலரிடம் காணப்படவே செய்கின்றது.

அந்த நம்பிக்கையை காப்பாற்றி வருகின்ற நாணயமான ஹோட்டல் உரிமையாளர்களும் காத்தான்குடியில் இல்லாமல் இல்லை. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ ஒரு சிலர் செய்கின்ற தவறுகளால் பிரதேசத்தின் அனைத்து துறைசார் வியாபாரிகள் மீதும் நம்பிக்கையீனம் ஏற்படுவதையும் அதனால் பிரதேசத்தின் வர்த்தகம் பாதிப்படைவதையும் தவிர்க்க முடியாமல் போய்விடுகின்றது.

காத்தான்குடி உணவகங்களில் இதுவரைக்கும் ஏற்பட்டுள்ள சுகாதாரக்கேடான சம்பவங்களை பட்டியலிட்டுக்கொண்டே செல்லமுடியும். அந்தளவுக்கு உணவுப்பொருட்களில் பிறபொருட் கலப்புகள் மற்றும் பழுதடைந்த உணவுகளால் சுகயீனமுற்ற வாடிக்கையாளர்கள் என்று பட்டியல் நீள்கின்றது. ஏனைய வர்த்தகப் பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனால் ஏற்படுகின்ற இழப்புக்களை சரி செய்துவிடலாம்.

ஆனால் உணவுப்பொருட்களில் ஏற்படுகின்ற சுகாதாரரீதியான குறைபாடுகள் அவ்வாறில்லை. அவை உட்கொள்கின்ற நபர்களை நிரந்தர நோயாளிகளாக மாற்றிவிடலாம், மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடலாம். கர்ப்பப்பை கோளாறு, புற்றுநோய், தோல் வியாதிகள் என்று உணவுப்பொருட்களின் சுகாதாரக் குறைபாட்டினால் பல கொடூரமான நிரந்தர நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

எனவே ஹோட்டல் உரிமையாளர்கள் பொருளீட்டுவதை மட்டுமே நோக்காகக்கொண்டு வாடிக்கையளர்களின் விடயத்தில் பாராமுகமாக இருப்பது உகந்ததல்ல. இந்த தொழிலில் பெறப்படுகின்ற இலாபத்தின் மூலமாகவே அவர்களுடைய குடும்பங்களும் வாழ்கின்றன. மோசடிகள் மூலமாகப் பெறப்படுகின்ற பொருளாதாரம் ஒருபோதும் பயனளிப்பதில்லை. இந்த விடயத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் அழ்ழாஹ்வின் கோபப்பார்வையை பயந்துகொள்ளவேண்டும்.

அத்தோடு தமது உணவகங்களின் சமையலறைகளில் உணவுகள் சுத்திகரிக்கப்படுகின்ற, சமைக்கப்படுகின்ற விதத்தினை அவர்கள் தங்களுடைய நேரடிக்கண்காணிப்பின் மூலமாக உறுதி செய்துகொள்வது கட்டாயமானது. சட்டத்தின் பிடியில் சிக்கி உணவகம் இழுத்து மூடப்பட்டால் அதன் நஷ்டத்தை அனுபவிக்கப்போவதும் தம்மீதான மக்களின் நம்பிகையை இழக்கப்போவதும் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்கள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

-முஹம்மது நியாஸ்-
காத்தான்குடி 
காத்தான்குடியின் உணவகப் பாரம்பரியம் தொடருமா? தொலையுமா? காத்தான்குடியின் உணவகப் பாரம்பரியம் தொடருமா? தொலையுமா? Reviewed by Madawala News on December 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.