அக்கறையில்லாத அரசியல் தலைமைகள்




சஹாப்தீன் -
ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கின்றது.
ஜனநாயகத்தை பேணுமாறு சர்வதேச நாடுகளினாலும், ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக் கொண்ட போதிலும், அவர் ஒரு பொதுத் தேர்தலுக்குரிய நகர்வுகளை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்தராஜபக்ஷவுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றார். ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் என் வாழ் நாளில் மீண்டுமொரு தடவை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிடிவாதமாக இருக்கின்றார். இந்த பிடிவாதத்தின் பின்னணியில் அவரின் அரசியல் தேவை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாராளுமன்றத்தில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிராக பாராளுமன்றத்தை போர்க்களமாக மாற்றிய ஆளுந் தரப்பினர், தற்போது பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். உலகத்தில் பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருக்கும் ஆளுந் தரப்பினர் என்ற பெயரை இலங்கையின் தற்போதையே ஆளுந் தரப்பினர் பெற்றுள்ளார்கள்.

ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும் பிரதமராக அவரை நியமிக்கமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் போது மஹிந்தராஜபக்ஷ பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலும் அவரை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சொல்லிருந்தார். மஹிந்தராஜபக்ஷவின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பேன் என்று சொல்லிக் கொண்டவர் மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக நியமனம் செய்திருக்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளினால் இலங்கை உலக அரங்கலிருந்து தனிமைப்படுத்தப்பட்;டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை சீனாவைத் தவிர வேறு எந்தவொரு நாடும் ஏற்றுக் கொள்ளாத நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இதனிடையே ஆளுந் தரப்பினர் இனவாத கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் எனக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று இப்போது நாட்டைக் காப்பதற்கு வழங்குமாறு மஹிந்தராஜபக்ஷ நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார். மேலும், வடக்கு, கிழக்கு இணைப்புக்கோ, சமஸ்டி முறைக்கோ நான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இச்சங்கிலித் தொடர் நடவடிக்கைகளும், அரசியல் யாப்பை கவனத்திற் கொள்ளாத நிலைமைகளும் இணைந்து இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் ஆட்சி மாற்றம் எற்பட்டுவிட்டால் அல்லது தற்போதுள்ள மஹிந்தராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் நீடிக்குமாயின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்ள முடியாது. இலங்கையில் மேற்கத்தைய நாடுகளின் ஆதிக்கம் இருந்தால் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை கஸ்டப்பட்டாவது ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், நாட்டில் சீனா சார்பு அரசாங்கமொன்று அமையுமாயின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முற்றாக ஓரங்கட்டப்பட்டு விடும் என்பதுதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இதனால்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டுமென்ற மறைமுகத் திட்டத்தின் படி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனால், முஸ்லிம் கட்சிகள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அதன் போது முஸ்லிம்களுக்கும் அரசியல் அதிகாரமும், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வும் வேண்டும் என்றும், அதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டுமென்றும் முஸ்லிம் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவில்லை. 

முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பதில் அக்கறையற்றவைகளாகவே இருக்கின்றன. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம்களின் எதிர் பார்ப்புக்கள் இதுவாகுமென்று சொல்லுவதற்கு எந்தவொரு முஸ்லிம் கட்சியிடமும் முறையான வரைபு கிடையாது. ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் வௌ;வேறுபட்ட கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பதனைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம் கட்சிகள் செய்யவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் கரையோர மாவட்டம் உருவாக்கப்பட்டால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமென்று நினைக்கின்றார்கள். இவ்வாறு மட்டமான அரசியல் சிந்தனைகளைக் கொண்டிருக்கும் அரசியல் பிரதிநிதிகளை புறந்தள்ளாத வரை முஸ்லிம் சமூகத்தின் அரசியலை மேம்படுத்த முடியாது.

முஸ்லிம் காங்கிரஸ் 30 வருட கால அரசியல் அனுபவத்தைக் கொண்டது. முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி. வடக்கும், கிழக்கும் இணைவதாக இருந்தாலும், பிரிவதாக இருந்தாலும் நிபந்தனையின் அடிப்படையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று சொல்லிய மர்ஹும் அஸ்ரப்பை ஸ்தாபகத் தலைவராகக் கொணடது. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தான பல கருத்தரங்களையும், செயலமர்வுகளையும் செய்த ஒரேயொரு முஸ்லிம் கட்சியாகவுள்ள முஸ்லிம் காங்கிரஸிடம் கூட இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் சொல்லக் கூடிய எந்தவொரு ஆவணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களின் குரலாக தோற்றம் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் அதன் தனித்துவத்தை இழந்துள்ளது. அக்கட்சி உள்ளுராட்சி சபைகளின் தேர்தலில் கூட மரச் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. இக்கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் சங்கமமானதொரு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டங்களில் ரவூப் ஹக்கீம் உரையாற்றியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பொதுக் கூட்டங்களில் பங்குபற்றும் போது மஞ்சலும், பச்சையும் ஆகிய நிறங்களையுடையே தொப்பியையும், ஆடைகளையும் அணிவது வழக்கமாகும். இதற்கு மாற்றமாக ஐக்கிய தேசிய கட்சியை அடையாளப்படுத்தக் கூடிய பச்சை நிற ஆடைகளையே அணிந்திருந்தார். இதனால்தான் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் சங்கமித்துப் போயுள்ளதென்று தெரிவிக்கப்படுகின்றன.

இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்காக செயற்படவில்லை என்று கட்சியை விட்டு வெளியேறியவர்கள் புதிய கட்சியை உருவாக்கினார்கள். முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இக்கட்சிகளினால் கூட முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் அதிகாரத்திற்குரிய தீர்வினை முன் வைக்க முடியவில்லை. முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸைப் போன்று பேரினவாத கட்சிகளின் பச்சைக்குள்ளும், நீலத்திற்குள்ளும் அமிழ்ந்து போயுள்ளன.

அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள்தான் இப்படி இருக்கின்றதென்று வருத்தப்பட்டு முஸ்லிம்களின் அபிலாசைகளைக் கொண்ட தீர்வு யோசனை ஒன்றினை முஸ்லிம் புத்திஜீவிகளினாலும் முன் வைக்க முடியவில்லை. 

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சகல இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை முன் வைப்பேன் என்று மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதி அளித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் ஒழிப்பேன் என்றும் கூறினார். இந்த வாக்குறுதிகளை நம்பித்தான் சிறுபான்மையின மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். இதே போன்று 2015 ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் கீறியும், பாம்புமாக அரசியல் செய்து கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி எனும் பேரில் தேசிய அரசாங்கத்தை உருவாக்கியது.

இவ்விரு கட்சிகளின் இணைவு நாட்டின் மீது பற்றும், சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் எல்லா இன மக்களும் நிம்மதியுடன் வாழும் அரசியல் சூழல் உருவாக்கப்படும் என்று நம்பினார்கள். மக்களிடையே காணப்பட்ட இந்த நம்பிக்கையை மேலும் வலுவூட்டக் கூடிய வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் கருத்துக்களும், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களும் அமைந்திருந்தன. புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவதற்குரிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அரசியல் யாப்புக்குரிய இடைக்கால அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அதிலுள்ள குறைகளை சுட்டிக் காட்டிய போது இறுதி அறிக்கையில் அக்குறைகள் இல்லாமல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டன. 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் குறித்து அதிக அக்கறைகள் காட்டப்பட்டன. ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் அடிக்கடி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு ஆற்றிய உரைகள் தமிழ், முஸ்லிம்களின் மனங்களில் ஏற்பட்டிருந்த ரணங்களுக்கு சிகிச்சை அளிப்பதாக இருந்தன. இவைகளுக்கு மத்தியில் தேர்தல் திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயங்கள் ஆகியவற்றில் சிறுபான்மையினருக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இவை குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெறும் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தனவே அன்றி உருப்படியான காரியங்களைச் செய்யவில்லை. 

ஆயினும், நல்லாட்சி அரசாங்கம் கடந்த அரசாங்கங்களை விடவும் மோசமான தீங்குகளைச் செய்யாது என்று சிறுபான்மையினர் நம்பினார்கள். ஆனால், இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் அவதானிக்கும் போது அரசியல் தீர்வு என்பதும், அமைதி, சமாதானம் என்பதும் கடந்த காலங்களைப் போன்று வெறும் பேச்சே என்றாகிவிட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னர் அரசியல் அரங்கில் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இனவாதக் கருத்துக்கள் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்கு இட்டுச் சென்றுவிடுமோ என்று எண்ண வேண்டியேற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பௌத்த இனவாத  சிந்தனைகளுடன் அரசியல் அதிகாரத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக இனவாத குழுக்களுக்கு ஊக்கமும், ஒத்தாசைகளையும் வழங்கிக் கொண்டவர்களின் கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரங்களை வழங்கியுள்ளார். 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது மஹிந்தராஜபக்ஷ பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலும் பிரதம மந்திரியாக நியமிக்கமாட்டேன் என்று சூளுரைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத மஹிந்தராஜபக்ஷவை தன்னுடைய காலடிக்கு அழைத்து நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமர் பதவியை வழங்கியுள்ளார். அதே வேளை, பெரும்பான்மை ஆதரவுடன்  இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமனம் செய்யமாட்டேன் என்றும் சிறுபிள்ளைத்தனமாக சொல்லிக் கொண்டிருக்கின்றார். 

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பேன் என்று தெரிவித்தது மட்டுமல்லாது அதற்காக விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு விசாரணைகளுக்கு உட்பட்டுக் கொண்டிருப்பவர்களையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் பொறுப்புதாரிகளாக நியமித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வின்றி இவ்வாரே நாடு சென்று கொண்டிருக்குமாயின் இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியேற்படும். இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார தடைகளை எற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை எடுக்கமாட்டோம் என்று ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துக் கொண்டாலும், அந்நாடுகள் இலங்கையை எச்சரித்துள்ளன. மட்டுமல்லாது மறைமுகமான வழிகளில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, நடுநிலைமையாக சிந்திக்கக் கூடிய சிங்கள மக்களிடையே நாட்டின் இன்றைய நிலை குறித்து அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர்கள் தமது அரசியல்வாதிகளின் மீது அதிக கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த 30 வருடங்களுக்கு மேல் அரசியிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர்களினால் நாடு எந்த நன்மைகளையும் அடைந்து கொள்ளவில்லை. பிரிவினை வாதத்தையும், மனிதக் கொலைகளையும், பொருளாதார நெருக்கடிகளையும், ஊழல் மோசடிகளையும், குற்றவாளிகளையும், இனவாதத்தையுமே ஏற்படுத்த முடிந்துள்ளதென்று ஊடகங்களின் மூலமாக துணிச்சலுடன் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இத்தகையதொரு எண்ணம் முஸ்லிம் அரசியலிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் மீது அளுத்கம, பேருவளை, தர்காநகர், ஜிந்தோட்டை, அம்பாரை, கண்டி, திகன ஆகிய இடங்களில் பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட போதும், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதும் அதற்கு எதிராக நடவடிக்கைகளையோ, போராட்டங்களையோ, பொதுக் கூட்டங்களையோ எடுக்காத முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று தங்களின் நிறங்களையும் மாற்றிக் கொண்டு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், இவர்களுக்கு பதிலாக புதியவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டுமென்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இதே வேளை, மேற்படி  நடவடிக்கைகள் முஸ்லிம்களின் மீது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்காக போராட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சொல்லுவதற்கும், ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயங்களும் இருந்தாலும், அத்தகைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்தமை எதற்காக என்ற கேள்விக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் பதில் சொல்ல முடியாது. 

பொது நலம் எனும் முஸ்லிம் அரசியலின் அத்திவாரத்தில் சுயநலத்திற்கான கட்டுமானங்களே மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த சுயநலப் போக்கில் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. முஸ்லிம்களின் அரசியலுக்கு கொள்கையின் அடிப்படையில் பலமான அத்திவாரத்தில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு பிரதான காரணம் அக்கட்சி சமூக கடமைகளில் சிறியளவிலும், சுயநலப் போக்கில் பெரியளவிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதேயாகும். முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏற்பட்டுள்ள இன்றைய நிலை ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. எந்தக் கட்சியும் தனி நபர்களின் வெற்றி வாய்ப்புக்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கக் கூடாது. ஆனால், முஸ்லிம் கட்சிகளின் அரசியல் போக்கு தனிநபர்களை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. இதனால்தான், முஸ்லிம் கட்சிகளினால் அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் காணி விவகாரம் போன்ற சமூகத்தின் பிரச்சினைகளின் மீது ஈடுபாட்டைக் காட்ட முடியாதுள்ளன. சுயநலன்களினால் சூழப்பட்டுள்ள தனிநபர்களின் வெற்றி முஸ்லிம் சமூகத்தை வாழ வைக்காது. மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் போன்றவர்களின் வெற்றி சமூகத்தை வாழ வைக்கப் போதுமானது. ஆதலால், மர்ஹும் அஸ்ரப் போன்ற இன்னுமொரு அரசியல் தலைமையை தேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். 

நன்றி  - வீரகேசாி 02.12.2018


அக்கறையில்லாத அரசியல் தலைமைகள் அக்கறையில்லாத அரசியல் தலைமைகள் Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.