நிறைவேற்றுத்துறைத் தலைவர் Vs சட்டவாக்கத்துறைத் தலைவர். வெல்லப்போவது யார்?


நிறைவேற்றுத்துறைத் தலைவர் இவ்வாறு செய்யும்போது சட்டவாக்கத்துறைத் தலைவர்
அதனை ஒரு புரட்சிகர முறையில் முகம் கொடுக்கின்றார். தைரியமான போராட்டம். வெல்லப்போவது யார்?

சபாநாயகரின் புதிய பிரதமர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை  பிரதமராக ரணிலையே ஏற்றுக்கொள்வது என்ற சபாநாயகரின் புதிய அறிவிப்புப் புரட்சி தொடர்பாக அரசியல் ஆய்வாளரும் சட்ட முதுமானியுமான வை. எல்.எஸ்.ஹமீட் வழங்கிய அறிக்கை.

(எஸ்.அஷ்ரப்கான்)

சபாநாயகரின் நேற்றைய  (05/11/2018) அறிவிப்பில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று பாராளுமன்றம் கூடுகின்றபோது புதிய பிரதமர் நியமனத்திற்கு முன்பிருந்த சூழ்நிலையைக் கடைப்பிடித்தல் புதிய பிரதமர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை. அதாவது பிரதமராக ரணிலையே ஏற்றுக்கொள்வது என்பதாகும். அடுத்தது ஏழாம் திகதி தான் பாராளுமன்றத்தைக் கூட்டலாம்; என்ற சமிக்ஞை. ஆனால் இதனை அவர் உறுதியாக கூறவில்லை. இந்த இரண்டு சூழ்நிலைகள் தொடர்பாகவும் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை எனது முன்னைய ஆக்கத்தில் தெரிவித்திருக்கின்றேன். ( முன்னைய பாராளுமன்றத்தைக் கூட்டுதல் என்ற ஆக்கத்தில் “ ரணிலை அங்கீகரித்தல்” என்ற உபதலைப்புப் பகுதியை மீண்டும் வாசிக்கவும்).

அதாவது மஹிந்த அணியினர் விரும்பினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டுவந்தால் ரணிலைப் பிரதமராக ஏற்றுக்கொண்டதாகும். எனவே, பெரும்பாலும் கொண்டுவர வாய்ப்பில்லை. அதையும்தாண்டி, சிலவேளை, பெரும்பான்மை இருந்தால் மக்களுக்குக் காட்டுவதற்காக கொண்டுவந்தாலும் கொண்டுவரலாம். அவ்வாறுகொண்டுவந்து ரணிலைத் தோற்கடித்தால் சபாநாயகர் கூறுவதுபோல் மஹிந்தவைப் பிரதமராக அங்கீகரிக்கலாம். அத்துடன் அரசியல் பிரச்சினை தீரும். ஆனாலும் சட்டப்பிரச்சினை தொடரும்.

ஏனெனில் ரணில் பிரதமர் என்றால் அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்றால் அவரது அமைச்சரவை கலையும். அப்பொழுது பிரதமர் பதவி வெற்றிடமாகும். அந்த இடத்திற்கு புதிய பிரதமர் நியமிக்க வேண்டும். எனவே, மஹிந்தவை மீண்டும் பிரதமராக ஜனாதிபதி நியமிப்பாரா? அவ்வாறாயின் இடைக்காலத்தில் பிரதமரும் அமைச்சர்களும் அமைச்சரவையும் செய்தவற்றின் செல்லுபடியாகும் தன்மை கேள்விக்குறியாகும். அதேநேரம் மைத்திரி தான் பிழையாக மஹிந்தவை நியமித்ததை ஏற்றுக்கொண்டதாகும்.

சபாநாயகர் சட்டத்திற்கு அப்பால் செயல்படுகின்றார்
———————————————-
மஹிந்தவை பிரதமராக நியமித்தது அரசியலமைப்பிற்கு முரணா? இல்லையா? என்பதில் வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. அது அரசியலமைப்பிற்கு முரணல்ல; என ஆங்கிலத்திலும் தமிழிலும் எனது ஆக்கங்களையும் ஒலிப்பதிவுகளையும் வெளியிட்டிருக்கின்றேன்.

அதேநேரம் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன மஹிந்தவின் நியமனம் ஆரம்பத்திலிருந்தே செல்லுபடியற்றது.( ab initio void) என்று தெரிவித்திருக்கின்றார். அவ்வாறெனில் சபாநாயகர் மஹிந்தவை பிரதமராக  ஏற்று நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அதில் மஹிந்த பெரும்பான்மையால் வெற்றிபெற்றாலும் அவரது நியமனம் செல்லாது.

ஏனெனில் ஆரம்பத்திலிருந்தே செல்லுபடியற்றது என்றால் மஹிந்த பிரதமர் இல்லை என்று பொருளாகும். பிரதமராக இல்லாத ஒருவருக்கெதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்துவதே பிழை. அதையும் தாண்டி நடத்தப்பட்டு அதில் அவர் வெற்றிபெற்றாலும் அவர் பிரதமராக முடியாது.

பிரதமராக இல்லாத ஒருவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதனால் பிரதமராகிவிட முடியாது.

யார் தீர்மானிப்பது?
————————
ஜனாதிபதி ( நிறைவேற்றுத்துறைத் தலைவர்) அவரை நியமித்தது சட்டப்படியானது; என்கிறார். சபாநாயகர் ( சட்டவாக்கத்துறைத் தலைவர்) அது சட்டத்திற்கு முரணானது; என்கின்றார். ( ஏனைய சட்டறிஞர்களின் கருத்துக்கள் அபிப்பிராயம் மட்டுமே. அவை நிலைப்பாடுகள் அல்ல. ஆனாலும் இந்த அபிப்பிராயங்களை வைத்துத்தான் இவ்விரு தலைவர்களும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பது வேறுவிடயம்)

இப்பொழுது இந்த இரண்டு நிலைப்பாட்டிற்குமிடையில் தீர்ப்புக்கூறும் அதிகாரம் நீதிமன்றுக்கே இருக்கின்றது. ஆனால் யாரும் நீதிமன்றத்தை நாடவில்லை.

சட்டவாக்கத்துறை v நிறைவேற்றுத்துறை
——————————————————
இன்றைய பிரச்சினையின் அடிப்படை ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்கும் அதிகாரம் உண்டா? என்பதாகும்.

நிறைவேற்றுத்துறைத் தலைவர் சரியென்கிறார். சட்டவாக்கத்துறைத் தலைவர் பிழை என்று கூறுவது வேறுவிடயம். ஆனால் பிழையென்ற நிலைப்பாட்டை எடுத்து அதன்படி செயற்படப்போகின்றேன்; என்று கூறுவது எந்த சட்டத்தின் அடிப்படையில்?

சபாநாயகர் இந்த சட்டத்தின் இத்தனையாவது சரத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்; என்று கூறவில்லை. ஜனாதிபதியின் முடிவு பிழை என்று மட்டும்தான் கூறுகின்றார். பிழையென்ற தீர்ப்பை நீதிமன்றம் மட்டுமே வழங்கலாம். சபாநாயகருக்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இல்லை.

அபிப்பிராயம் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. அதேநேரம் அதை உத்தியோகபூர்வ நிலைப்பாடாக சபாநாயகர் எடுக்கலாம் அவரால் அதற்குரிய சட்டத்தின் சரத்துக்களைக் காட்டமுடியுமாயின். ஆனால் சபாநாயகர் கூறும் காரணம் 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு தெரிவித்திருக்கின்றார்கள்; என்பதாகும். அது அவர்களின் அபிப்பிராயம். அதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அது எவ்வாறு ஒரு சட்டத்தின் அடிப்படையாக இருக்கமுடியும்.

சரி அது ஒருபுறம் இருக்கட்டும். “பெரும்பான்மையை நிரூபிக்கின்றவரைத்தான் நான் பிரதமராக ஏற்பேன்” என்று கூறுவதற்கு சபாநாயகருக்கு எந்த சட்டடிப்படையும் கிடையாது.

அடிப்படையில் நியமனம் பிழையென்றால் தீர்ப்பு நீதிமன்றத்திடம். அதையும்தாண்டி சபாநாயகர் ரணிலை பிரதமராக ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் மஹிந்தவை சபாநாயகர் எவ்வாறு பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியும். எந்த சட்டத்தின் அடிப்படையில். அல்லது மஹிந்தவுக்கு இன்னுமொரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடாத்தி அதில் அவர் வெற்றிபெற்றால் அவரைப்பிரதமராக ஏற்றுக் கொள்ளப்போகின்றாரா?

அவ்வாறான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாராளுமன்ற நிலையியற்கட்டளை இடம்கொடுக்குமா? பிரதமராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடாத்தவேண்டிய அவசியம் அரசியல் அமைப்பில் இல்லை. ஆனால் ரணிலை பிரதமராக ஏற்றுக்கொண்டால், மஹிந்த பிரதமர் இல்லையென்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டு அதன்பின் நம்பிக்கை வாக்கெடுப்பை நடாத்தி அவரைப் பிரதமராக ஏற்றுக்கொள்வதற்கு அரசியல் அமைப்பில் என்ன ஏற்பாடு இருக்கின்றது?

நமது நாடு ஒரு Constitutional democracy.  அந்த நாட்டில் அரசியலமைப்பிற்கு அப்பால் ஜனாதிபதி செயற்படுவது பிழையென்றால் சபாநாயகர் செயற்படுவது சரியா?

நாம் புரிந்துகொள்ள வேண்டியது
———————————————-
இந்தவிடயத்தில் பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டம் கூறுவது இவ்வளவுதான்.

பிரதமர் நியமிக்கப்பட்டால் அவரை பாராளுமன்றம் நம்பிக்கையில்லாப் பிரேரணையூடாக நிராகரிக்கலாம். நியமித்தமுறை சரியா? பிழையா? என்று பாராளுமன்றம் தீர்ப்புக்கூற முடியாது. அது நீதிமன்றத்தின் பணி. பாராளுமன்றத்திற்கே முடியாதபோது அதன்தலைவரான சபாநாயகருக்கு எவ்வாறு முடியும்?

அடுத்த கேள்வி
———————
இங்குள்ள அடிப்படைப் பிரச்சினை பிரதமரை நீக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பானதா? அல்லது யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றது என்பதா?

பெரும்பான்மை இருப்பவரை ஏற்றுக்கொள்வேன் என சபாநாயகர் கூறுவதாயின் “ ஜனாதிபதிக்கு அடிப்படையில் பிரதமரை நீக்குகின்ற அதிகாரம்” இருக்கின்றது; என்று சபாநாயகர் ஏற்றுக்கொள்கின்றார்; என்று பொருளாகும். ஆனால் பெரும்பான்மை இல்லாதபோதுதான் அவ்வாறு நீக்கமுடியும். ரணிலுக்கு பெரும்பான்மை இல்லை என்று நீங்கள் தீர்மானித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்றம் யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றது; என்று கூறுகின்றதோ அவரை பிரதமராக ஏற்றுக்கொள்வேன்; என்று சபாநாயகர் கூறுவதாகும்.

இது அரசியலமைப்புச் சட்டத்தில்  இல்லாத ஒரு விடயம். ஒரு பிரதமரை ஜனாதிபதி நியமித்தால் அவரை ஏற்றுக்கொள்ளலாம். நிராகரிக்கலாம். நிராகரித்தால் அடுத்தவரை ஜனாதிபதி நியமிக்கலாம். இருவருக்குமிடையில் சபாநாயகரோ, பாராளுமன்றமோ தீர்ப்புச்சொல்ல முடியாது.

எனவே, இன்று சபாநாயகர் செயற்பட முனைவது அரசியலமைப்பிற்கு அப்பால் ஒரு புரட்சிகர வழியாகும். பொதுவாக புரட்சிகள் வெற்றிபெற்றால் சட்டபூர்வம் தோல்வியடைந்தால் சட்டவிரோதம்; என்பார்கள். இச்செயற்பாடுகளை யாரும் நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தி ஒரு தீர்ப்பைப் பெறாவிட்டால் எதிர்காலத்தில் வருகின்ற சபாநாயகர்களும் இவ்வாறான சூழ்நிலைகளில் இந்த நடைமுறையைப் பின்பற்றலாம்.

இந்த புரட்சிவழிக்குப் பின்னால் நியாயம் இருக்கின்றதா?
——————————————————-
நியாயங்கள் தவறும்போதுதான் உலகில் அதிகமான புரட்சிகள் ஏற்படுகின்றன. ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்கும் அதிகாரம் உண்டு. UPFA யின் வெளியேற்றத்துடன் முன்னாள் பிரதமரின் பலம் வெளிப்படையில் 107 ஆகக்குறைந்ததனால் அவரை ஜனாதிபதி நீக்கியது சட்டபூர்வமாகும். ஆனால் 107 பெரும்பான்மை இல்லை என்று அபிப்பிராயம் கொண்ட ஜனாதிபதி 95 ஐப் பெரும்பான்மையாக அபிப்பிராயம் கொண்டது எவ்வாறு சரியாகும்.

மட்டுமல்ல, அவரது பேச்சுக்களிலெல்லாம் ரணிலின் குறைகளினால் நீக்கியதாக பேசுகின்றார். அவர் ஏற்கனவே ரணிலை நீக்கமுயற்சித்ததையும் கூறுகின்றார்; என்றால் அவர் வெளிப்படையாகவே அதிகார துஷ்பிரயோகம் செய்ததை ஏற்றுக்கொள்கின்றார். ஏனெனில் பிரதமரை நீக்குவதற்கான ஒரேயொரு காரணமாக பெரும்பான்மை இன்மையைத்தான் கொள்ளவேண்டும். அவர்களின் பிரச்சினைக்காக பிரதமரை நீக்க முடியாது.

மட்டுமல்லாமல் பெரும்பான்மைக்குறைவில் ரணிலைவிடவும் கீழேயிருந்த ஒருவரை பிரதமராக நியமித்து அவருக்கு குறுக்குவழியில் பெரும்பான்மை பெறுவதற்காக பாராளுமன்றை முடக்கியது அதைவிடவும் அதிகார துஷ்பிரயோகமாகும். ஆனாலும் சட்டப்படியே அனைத்தையும் ஜனாதிபதி செய்திருக்கின்றார்.

அவ்வாறாயின் சட்டப்படி செய்தது எவ்வாறு அதிகார துஷ்பிரயோகமாகும்; என்ற கேள்வி இங்கு எழலாம். இதனைப் புரிந்துகொள்வதற்கு கீழே தரப்படும் கோட்பாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Rule of Law and Rule by Law
——————————————
Rule of Law என்பது சட்டத்தின் ஆட்சியாகும். Rule by Law விற்கு தமிழ் தெரியவில்லை.  இவற்றைப் புரிந்துகொள்வதற்கு முதலில் ‘ Law’ என்ற சொல்லின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அதற்குள் செல்லமுன் அடிப்படைப் புரிதலுக்காக சில உதாரணங்கள்.

சில நேரம் ஒரு சொல் பொதுவான அர்த்தத்திலும் ( general meaning) குறித்த அல்லது விசேட அர்த்தத்திலும் ( specific meaning) பாவிக்கப்படும். சிலநேரம் இரண்டிற்கும் இரண்டு சொற்கள் பாவிக்கப்படும். ஒரு சொல்லின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்வதற்கு அதன் denotation மற்றும் connotation அத்தோடு அதன் use and usage ஐத் தெரிந்திருப்பது உதவியாக இருக்கும்.

உதாரணமாக, accept ( ஏற்றுக்கொள்) என்ற வினைச்சொல்லுக்கான பெயர்ச்சொல் acceptance ( ஏற்றுக்கொள்ளுதல்) ஆகும். ஆனால் கல்வியியல் துறையில், மொழியில் துறையில் சில இடங்களில் accept என்ற சொல்லின் பெயர்ச்சொல்லாக acceptation என்ற சொல் பாவிக்கப்படுவதுண்டு. இது விசேட அர்த்தத்தில் பாவிக்கப்படுகின்றது. இரண்டும் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளல்தான்.

அதேபோன்றுதான் decentralization என்ற சொல் சகலவிதமான ‘அதிகாரப்பரவலாக்கலையும்’ குறிக்கப்பயன்படுத்தப்படும். ( general meaning). சிலநேரம் சில நிர்வாக அதிகாரங்களைப் பகிர்வதற்கு மாத்திரம் பாவிக்கப்படும். ( விசேட பொருள்) இலங்கையில் இந்த விசேடபொருளில்தான் இச்சொல் பாவிக்கப்படுகின்றது.

எனவே, சில சொற்களுக்கு பொதுவான அர்த்தம் மற்றும் விசேட அர்த்தம் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டு ‘Law’ என்ற சொல்லுக்கு வருவோம்.

பொதுவாக சகல சட்டங்களையும் law என்று அழைக்கப்படும். ( ‘law’ , written law அரசியலமைப்பில் வெவ்வேறாக வியாக்கியானப்படுத்தப்பட்டிருப்பதை இங்கு யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். அது இத்தலைப்பிற்குரியதல்ல). ஆனால் Rule of Law பற்றிப்பேசும்போது law என்ற சொல்லும் legislation என்ற சொல்லும் வேறுபடுத்தப்படுகிறது.

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் எல்லாம் legislation ஆகும். பொதுவான கருத்தில் அவைகளை law என்றும் அழைக்கலாம். ஆனால் விசேட கருத்தில் குறிப்பாக Rule of Law பற்றிப்பேசும்போது அவ்வாறு அழைக்கமுடியாது.

அதாவது சகல law வும் legislation ஆகும். ஆனால் சகல legislation உம் law அல்ல. இந்த வித்தியாசத்தைப் புரிந்தால் மேலே கூறப்பட்ட இரண்டு கோட்பாட்டையும் புரிய முடியும். அதனைப்புரிந்தால்தான் இன்றைய பிரச்சினையின் அதிகாரதுஷ்பிரயோகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

பாராளுமன்றத்தால் ஆக்கப்படுகின்ற சட்டம் முதலில் legislation எனும் வடிவத்தைப் பெறுகிறது. அந்த சட்டம் நீதியானதாக இருக்கலாம் ( just law) . அநியாயமானதாக இருக்கலாம் (unjust law). அநீதியான சட்டம் ‘ சட்டமாக இருக்கமுடியாது. எனவே அது law அல்ல.

இந்த சட்டம் நீதியானதா, அநீதியானதா? என்பதை நீதிமன்றம்தான் சொல்லமுடியும். ஒரு இந்திய சட்ட அறிஞர் சொன்னார், ஒரு legislation நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொருள்கோடல் செய்யப்படும்வரை அது வெறும் legislation ஏ தவிர அது ஒரு law அல்ல; என்று. இதற்கு இன்னும் ஒரு காரணம் இந்தியாவில் சட்டம் ஆக்கியதன்பின்னும் சட்டத்தை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தலாம். ( post enactment judicial review). ஆனால் இலங்கையில் அது முடியாது.

அண்மையில் இந்தியாவில் திருமணமுடித்தவர்களின் கள்ளத்தொடர்பு தொடர்பான சட்டத்தை நீதிமன்றம் ரத்துச் செய்தது. ஆனால் அது legislation இல்லை என்று கூறமுடியாது. ஏனெனில் பாராளுமன்றம் உருவாக்கிய சட்டம். ஆனாலும் அது law அல்ல.

இலங்கையில் judicial review of legislation இருந்திருந்தால் சிலவேளை மாகாணசபைத் தேர்தல் சட்டம் ‘ சட்டமல்ல’ என ரத்துச் செய்யப்பட்டிருக்கலாம். இலங்கையில் சட்டங்களை ரத்துச்செய்யத்தான் முடியாது. பொருள்கோடலுக்கூடாக ஓரளவு அர்த்தங்களை வழங்கலாம்.

இப்பொழுது மேற்சொன்ன இருகோட்பாடுகளுக்குள்ளும் வருவோம்.

Rule of Law என்பது பாராளுமன்ற சட்டத்தின் வார்த்தைப்பிரயோகம் எவ்வாறு அமைந்தபோதிலும் அது நியமான, உரிய நோக்கத்திற்காக மாத்திரம் பாவிக்கின்ற அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். அதன்படி ஆட்சிசெய்யப்பட வேண்டும்.

உதாரணமாக பாராளுமன்றத்தை ஒத்திவைக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனால் அவ்வதிகாரம் இன்று ஜனாதிபதி பாவித்திருக்கின்ற
நோக்கங்களுக்காக வழங்கப்பட்டது? அல்லது பிரதமரை நீக்குகின்ற அதிகாரம், நியமிக்கின்ற அதிகாரம் அவருக்கு இருக்கின்றது. ஆனால் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூடுதல் ஆசனங்கள் உள்ளவரை நீக்கிவிட்டு குறைந்த ஆசனங்கள் உள்ளவரை நியமித்து குறுக்குவழியில் பெரும்பான்மை பெறுவதற்கா அவ்வதிகாரம் வழங்கப்பட்டது?

இது அதிகார துஷ்பிரயோகமில்லையா? சட்டம் நியாயமில்லாமல் பிழையான நோக்கத்திற்காக பாவிக்கப்படுவது சட்டத்தின் ஆட்சியா? எனவே, இங்கு Rule of Law நசுக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் சட்டத்தில் எழுதிவைத்தபடிதான் அனைத்தும் நடக்கிறது. இதனைத்தான் Rule by Law என்கிறார்கள்.

Rule by Law என்பது சட்டத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றதோ அதன்படி நடப்பது. அது நியாயமா, இல்லையா? ஜனநாயகமா, இல்லையா? உரிமை மீறலா, இல்லையா? எதைப்பற்றியும் கவலையில்லை. எழுத்தில் உள்ளபடி நடந்திருக்கின்றோம்; என்பது. இது Rule of Law விற்கு எதிரானது.

இரண்டாம் உலகமகா யுத்தத்தில் நாசி ஜேர்மனியில் பலர் gas chamber இல் தள்ளப்பட்டெல்லாம் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்கள் சட்டப்படிதான் கொல்லப்பட்டார் கள். ஏனெனில் அவ்வாறு கொல்வதற்கு அனுமதியளிக்கின்ற சட்டம் அன்று இருந்தது.

யுத்தத்தின் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். நாங்கள் சட்டப்படிதான் கொன்றோம் என்று அவர்கள் வாதாடினார்கள்.
ஆம், சட்டம் உங்களுக்கு அனுமதியளித்ததுதான். ஆனாலும் அது சட்டமுமல்ல, சட்டத்தின் ஆட்சியுமல்ல. அது Rule by Law. அதை ஏற்றுக்கொள்ள முடியாது; என்று Nuremberg trial இல் முடிவுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.

அதேபோன்றுதான், இன்னுமொரு ஐரோப்பிய நாடு, பிரித்தானியா என்று நினைக்கின்றேன், கைதிகள் ஒரு முகாமில் அடைத்துவைக்கப்பட்டார்கள். ஒரு நாள் தற்செயலாக முகாம் தீப்பிடித்துவிட்டது. உள்ளே கைதிகள் கதறினார்கள்; கதவைத் திறந்துவிடும்படி. அதற்குப்பொறுப்பானவர் திறக்க இல்லை. சட்டப்படி உயர்அதிகாரியின் உத்தரவில்லாமல் கதவைத்திறக்க எனக்கு அதிகாரமில்லை; என்று மறுத்துவிட்டார். அனைவரும் தீயில் கருகி மாண்டுவிட்டார்கள்.

சட்டப்படி அவருக்கு திறக்க அதிகாரமில்லைதான். ஆனாலும் அந்த இடத்தில் அந்தச்சட்டம் அந்தப்பொருளில் பார்க்கப்பட முடியாது. அது Rule of Law அல்ல. அது Rule by Law என்று சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்பட்டார்.

இன்று இலங்கையிலும் வெளிப்படையில் எழுத்தில் எல்லாம் இருக்கிறது. ஆனால் பொருள் அதுவல்ல. எனவே இங்கும் இவ்விடயங்களில் சட்டத்தின் ஆட்சிக்குப்( Rule of Law) பதிலாக Rule by Law நடக்கிறது.

நிறைவேற்றுத்துறைத் தலைவர் இவ்வாறு செய்யும்போது சட்டவாக்கத்துறைத் தலைவர் அதனை ஒரு புரட்சிகர முறையில் முகம் கொடுக்கின்றார். தைரியமான போராட்டம்.

வெல்லப்போவது யார்?
நிறைவேற்றுத்துறைத் தலைவர் Vs சட்டவாக்கத்துறைத் தலைவர். வெல்லப்போவது யார்? நிறைவேற்றுத்துறைத் தலைவர் Vs சட்டவாக்கத்துறைத் தலைவர். வெல்லப்போவது யார்? Reviewed by Madawala News on November 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.