அமெரிக்க இடைத் தேர்தல்: ட்ரம்பின் வீழ்ச்சியும் மத்திய கிழக்கு மீதான கொள்கை மாற்றங்களும்.


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் (மூலம்: அல்ஜஸீரா)

அமெரிக்க இடைத் தேர்தலானது இம்முறை வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை அதிகரித்துச் செல்வதாகவே அமைந்து போயுள்ளது.

 இதனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது வெளியுறவுக் கொள்கைகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். 


2016 ஜனாதிபதி தேர்தலில் கருத்துக் கணிப்புக்கள் முற்றிலும் பொய்த்துப் போன நிலையில் இம்முறை இடைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் கூர்ந்து அவதானிக்கப்பட்டன. 

எனினும், கருத்துக் கணிப்புகள் துல்லியமானதாகவே எதிர்வுகூறியிருந்தன. அமெரிக்காவில் கடந்த 50 வருட காலங்களில் அதிகூடிய வாக்காளர்கள் சமுகமளித்த இடைத் தேர்தலாக இது அமைந்துள்ளது. 


அமெரிக்காவின் 36 மாநிலங்கள், பிரதேசங்களின் ஆளுநர் பதவிகளுக்கான முடிவுகளும் ஜனநாயகக் கட்சிக்கே அதிகம் சாதகமாக வந்திருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடிய புளோரிடா, அயோவா, ஒஹையோ மாநிலங்களில் குடியரசுக் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் விஸ்கான்சின், மிச்சிகன் மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து ஏழு மாநிலங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. சிறு நகரங்களிலும் கிராமப்புறப் பகுதிகளிலும் குடியரசுக் கட்சிக்கும் நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் ஜனநாயகக் கட்சிக்கும் ஆதரவு கிடைத்திருக்கிறது.


2016 இல் டிரம்ப் செய்த இன அடிப்படையிலான பிரசாரம் அமெரிக்க சமூகத்தில் ஊறிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தறிகெட்டு ஓடிவிடாமல் தடுக்கும் ஏற்பாடு 2019 ஜனவரியிலிருந்து செயல்படத் தொடங்கிவிடும். வரிகளை மேலும் குறைப்பது, வர்த்தகக் கொள்கைகளில் முக்கிய முடிவு என்று பல விஷயங்களில் ட்ரம்ப் அரசால் முன்பைப் போலத் தன் விருப்பம்போல் செயல்பட்டுவிட முடியாது.


பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கவிருக்கும் நான்சி பலோசி, ட்ரம்ப் அரசு கொண்டுவந்த சில சந்தேகத்துக்குரிய முடிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தத் தொடங்கவிருக்கிறார். 2016 தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட ராபர்ட் முல்லர் குழுவின் செயல்களை நான்சி ஆய்வுசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் மீது நம்பிக்கையில்லை என்று கூறி அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் நடவடிக்கை எதையும் ஜனநாயகக் கட்சி இப்போதைக்கு எடுக்காது என்றே தெரிகிறது.


அமெரிக்க பிரஜைகள் தற்போது எதிர்கொண்டிருக்கும் வேலையில்லா பிரச்சினை, மருத்துவ நலன், குடியேற்றம் ஆகியவை குறித்து அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இரு கட்சிகளும் அரசியல்ரீதியாக மோதிக்கொள்ளாமல், நாட்டின் முக்கிய பிரச்சினைகளை அமைதியாக அமர்ந்து பேசி கருத்தொற்றுமை காண வேண்டும் என்பது அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பு. அமெரிக்கர்கள் தங்கள் வாக்குரிமை மூலம் ட்ரம்பின் எதேச்சதிகாரப் போக்குக்கு வேகத்தடை போட்டிருப்பது இந்தத் தேர்தலின் முக்கிய அம்சம் என அவதானிகள் கருதுகின்றனர். 

அமெரிக்க ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் வெளியுறவுக் கொள்கைகளே கடந்த காலங்களில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் அதிகாரத்தை கைமாற்றும் பாரிய தடைக்கற்களாக அமைந்து போனமையை இங்கு சுட்டிக்காட்ட முடியும். 


2006 இல் இடம்பெற்ற அமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெருவாரியான ஆசனங்களை நாடாளுமன்றத்தில் சுவீகரித்துக் கொண்டதன் பிற்பாடே அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான குடியரசுக் கட்சியை சேர்ந்த ஜோர்ஜ் புஷ், ஈராக் மீதான தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவும் ஈரானை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் முயற்சிகளை மேற்கொண்டார்.  


அவ்வாறே 2010 இடைத் தேர்தலில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றிக் கொண்டதன் பின்னர் லிபியா மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா தயாரானார். 2014 இடைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மீளவும் தோல்வியைத் தழுவ ஒபாமா நிர்வாகம் ஈரானுடனான அணுவாயுத ஒப்பந்தங்கள் தொடர்பில் துரித முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் தொடங்கியது. 


இவ்வாறாக இம்மாதம் இடம்பெற்றுள்ள அமெரிக்க இடைத் தேர்தலின் பிற்பாடு ட்ரம்ப் நிர்வாகமும் சடுதியான வெளிநாட்டுக் கொள்கை மாற்றங்களில் ஈடுபடக் கூடும் என அரசியல் அவதானிகள் எதிர்வுகூறுகின்றனர். இம்முறை இடம்பெற்றுள்ள இடைத் தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியானது பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை அதிகாரத்தை இழந்துள்ள அதேவேளை செனட் சபையில் அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. 


ஆக, கிட்டிய எதிர்காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் பொதுவாகவும் மத்திய கிழக்கு நாடுகள் மீதான கொள்கைகள் குறிப்பாகவும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளப் போகின்றன என அவதானிகள் தெரிவிக்கின்றனர். 
பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியின் நடவடிக்கைகளை, அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை நேரடி விசாரணை செய்யும் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் ஆளும் கட்சியினால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திட்டங்களினதும் இரகசிய ஆவணங்களை சபை முன் சமர்ப்பிக்குமாறு கோரும் அதிகாரங்களையும் ஜனநயாகக் கட்சி பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதியின் வரி விவகாரங்கள், வருமான வழிமூலங்கள் ஆகியவற்றின் விபரங்களைக் கூட கோர முடியும். 2016 ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற ரஷ்ய தலையீடு குறித்த விரிவான விசாரணைகளை கூட ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கக் கூடிய அதிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. ட்ரம்ப்பின் சட்டவாக்க நிகழ்ச்சித் திட்டங்களில் காத்திரமான தலையீடுகளை செய்யும் அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. 


ரஷ்யா மற்றும் ஆசிய நாடுகளுடன் தனிப்பட்ட வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது பற்றியும் ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் பற்றியும் அமெரிக்க ஜனாதிபதியை கேள்வி கேட்பதற்கு பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. ரஷ்யாவுடனான உறவுகளை பலப்படுத்தும் ட்ரம்பின் அனைத்து முயற்சிகளுக்கும் பிரதிநிதிகள் சபை முட்டுக்கட்டையாக விளங்கப் போகிறது என்பது தெளிவு.  ரஷ்யா மற்றும் ரஷ்ய ஆதரவு நாடுகள் மீதான பொருளாதார தடைகள் இன்னும் அதிகரிக்கப்பட பிரதிநிதிகள் சபை முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய பெரும்பான்மையைக் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றம் மத்திய கிழக்கு நாடுகள் மீது இதுவரை காலமும் ட்ரம்ப் நிர்வாகம் கடைப்பிடித்த வெளிநாட்டுக் கொள்கைகளில் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஈரானில் அமைந்திருந்த அமெரிக்க தூதரகத்தை 1979 இல் ஈரானிய புரட்சியின் போது போராளிகள் கைப்பற்றி, முற்றுகையிட்டு மாதக் கணக்கில் 52 அமெரிக்க தூதரக அதிகாரிகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த நிகழ்வு தொடக்கம் அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஈரானிய விவகாரம் மீது வெறுப்புணர்வுடனேயே செற்பட்டு வருகின்றது. ஈரானுடன் அணுசக்தி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணம் பராக் ஒபாமாவின் தனிப்பட்ட விருப்புகள். எனினும், ட்ரம்ப் ஜனாதிபதியாகியதும் அவ்வுடன்படிக்கையை முறித்துக் கொண்டார்.  
ஈரான் மீதான ட்ரம்பின் வெறுப்புடன் கூடிய அணுகுமுறைகளை மாற்றும் விதமான சாத்தியக்கூறுகள் பிரதிநிதிகள் சபையிடம் இல்லை என்றே கூறலாம். ஈரான் மீதான ட்ரம்பின் வெறுப்புப் போக்கு தொடர்ந்தும் அவ்வாறே அமையப் போகிறது. ஈரான் மீது ட்ரம்ப் அண்மையில் விதித்திருந்த பொருளாதார தடைகள் தொடர்பில் குடியரசுக் கட்சியினர் போலவே ஜனநாயகக் கட்சியினரும் பலத்த ஆதரவை தெரிவித்திருந்தமை இதற்கு சான்று பகர்கிறது. 


அத்துடன் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு இடமாற்றியமை மற்றும் இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரித்தமை போன்ற ட்ரம்பின் தீர்மானங்களுக்கு அவ்வேளையில் ஜனநாயக கட்சியினர் சாதாரண எதிர்ப்பை தெரிவித்திருந்த போதிலும் அது தொடர்பில் இப்போதும் காத்திரமான எதிர்ப்புக்களை வெளிக்காட்டி முடிவை மாற்றக் கோரி அழுத்தங்களை பிரயோகிக்க மாட்ட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  


அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் இஸ்ரேலிய வால் பிடிப்புக்கள் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தப் போவதாகவே அமையும். எனினும், ஜனநாயக கட்சி உறுப்பினர்களில் பலர் இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் கொள்கை வகுப்புகளில் ஈடுபட்டால் எதிர்ப்பை தெரிவிப்பர் என எத்ர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஜனநாயக கட்சியினர் எதிர்த்தே வந்திருக்கின்றனர்.


இஸ்ரேலிய உற்பத்திகளை புறக்கணிக்க வலியுறுத்தும் BDS அமைப்பு தொடர்பில் ஆதரவாக செயற்படுவது தண்டனைக்குரிய குற்றம் என ட்ரம்ப் நிர்வாகம் முன்னர் அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் பலத்த எதிர்ப்புக்களை ஜனநாயக கட்சியினர் அப்போதே வெளியிட்டிருந்தனர். 


இது இவ்வாறிருக்க, அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு முஸ்லிம் பெண்கள் இருவர் தெரிவானமை இதுவே முதற்தடவையாகும். இல்ஹான் ஒமர் எனும் சோமாலிய-அமெரிக்க பெண் மற்றும் ராஷிதா எனும் பலஸ்தீனிய-அமெரிக்க பெண் ஆகியோர் இம்முறை தெரிவான முஸ்லிம் பெண்களாவர். இவர்கள் இருவரும் தமது பிரசாரப் பணிகளின் போது இஸ்ரேலை கடுமையாக விமர்சித்தவர்கள் ஆவர். இரு நாட்டுத் தீர்வுக்கு ஆதரவளிக்க ராஷிதா மறுத்தமையை அடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவான அமைப்புக்கள் அவருக்கு எதிராக பிராசாரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், அது அவரது வெற்றியில் தாக்கம் செலுத்தவில்லை என்பதிலிருந்து அமெரிக்க மக்களின் மனோபாவம் மாறியிருக்கின்றமையை அறியக் கூடியதாக உள்ளது. 


ஒமர், ராஷிதா, ஒகாசியோ போன்ற இளவயது சமூக செயற்பாட்டாளர்கள் தேர்தலில் போட்டியிட்டு பிரதிநிதிகள் சபை ஆசனத்தை பெற்றுக் கொண்டமையானது ஜனநாயகக் கட்சியின் அடித்தளத்தை எதிர்காலத்தில் வலுப்படுத்திக் கொள்ள உதவும் அறிகுறிகளாக இனங்காணப்படுகிறது. இஸ்ரேலுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட குறித்த இளம் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இஸ்ரேலுக்கு பெரும் சாபக்கேடாக விளங்கும். இஸ்ரேலின் பலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்று முழுதான ஆதரவை அமெரிக்க முன்னைய காலங்களில் வழங்கி வந்த நிலையில் இடைத் தேர்தல் முடிவுகள் அதனை சற்று மாற்றியமைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


அண்மைய புள்ளிவிபரங்களின் பிரகாரம் 18- 29 வயதுக்குட்பட்ட அமெரிக்க இளைஞர்களில் 25 சதவீதமானோர் மாத்திரமே இஸ்ரேலை நெருங்கிய நட்பு நாடாக கருதுகின்றனர் என தெரிய வந்துள்ளது. 


AIPAC மற்றும் அமெரிக்க சியோனிஸ சங்கம் போன்ற அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டும் ஒழுங்கமைப்புக்களின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் வயதானவர்கள் கீழிறங்கும் பட்சத்தில் அவ்வெற்றிடத்தை நிரப்ப முன்வரும் இளைய சமுதாயத்தினர் வெகு சொற்பமே. யூதர்கள் உள்ளிட்ட அமெரிக்க இளைய சமுதாயமானது இஸ்ரேல் சார்பு கொள்கைகளை விடுத்து கலை, கலாசாரம், சூழலியல் போன்ற மதச்சார்பற்ற  விடயங்களில் அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருவது அண்மைக் காலப் போக்காக இனங்காணப்படுகிறது. 

2020 இல் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இஸ்ரேல் சார்பு கொள்கைகளை காட்சிப்படுத்துவதை விடுத்து மேற்படியான காரணிகளே முக்கியத்துவம் பெறும் என நம்பப்படுகிறது. 2016 இல் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய Bernie Sanders தனது பிரசார நடவடிக்கையில் பலஸ்தீனுக்கு சார்பான பல்வேறு கருத்துக்களை முன்னிலைப்படுத்தி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
அடுத்து வரும் தேர்தல்களில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான Bernie Sanders போன்று ஏனையோரும் பலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டங்களை நியாயப்படுத்தியும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளை எதிர்த்தும் பிரசாரம் செய்ய பலர் முன்வருவர் என நம்பலாம். New Jersey இன் செனட்டர் Cory Booker போன்ற இஸ்ரேலின் அடிவருடிகளுக்கு மத்தியில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை கொண்டுள்ள பிரதிநிதிகள் சபையில் இத்தகைய வேட்பாளர்கள் எதிர்காலத்தில் அமெரிக்க இளம் சமுதாயத்தினர் மத்தியில் கிளர்ந்தெழ வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 

நன்றி : நவமனி


அமெரிக்க இடைத் தேர்தல்: ட்ரம்பின் வீழ்ச்சியும் மத்திய கிழக்கு மீதான கொள்கை மாற்றங்களும். அமெரிக்க இடைத் தேர்தல்: ட்ரம்பின் வீழ்ச்சியும் மத்திய கிழக்கு மீதான கொள்கை மாற்றங்களும். Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.