மைத்திரி – மஹிந்த கூட்டணி நிலைக்குமா?


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் 
(மூலம் : Daily Mirror)


முன்னாள் பிரித்தானிய பிரதமரும் அரசியல் மேதையுமான சேர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் 1939 இல் பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலொன்றின்போது ரஷ்யாவை வர்ணித்த விதம் பெரிதும் பேசப்பட்டது.


“புதிர்களால் மூடப்பட்ட மர்மங்கள் நிரம்பிய சடுதி மாற்றங்களின் தொகுப்பே ரஷ்யா எனும் நாடு” என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் மேற்குறித்த வர்ணிப்புக்கு மிகப் பொருத்தமானவரான எமது நாட்டின் ஜனாதிபதியும் மர்மங்களால் நிறைந்த புதிரானவராகவே அண்மைக் காலமாக அரசியல் தளங்களில் அறியப்படுகிறார்.


குழப்பங்கள் நிறைந்த அரசியல் அணுகுமுறைகளும் மரபார்ந்த விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட முன்னெடுப்புக்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணக் கூடியதாக உள்ளது. அவரது திடீர் முடிவுகளும் சடுதி பின்னகர்வுகளும் எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சிக்கல் மிகுந்தவையாக காணப்படுகிறது.


இதன் வரிசையில் அமைந்ததாக, ரணில் விக்கிரமசிங்கவை ஓரங்கட்டும் வகையில் ராஜபக்சாக்களுடனான உறவை செப்பனிட்டுக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரியின் பூர்வாங்க முயற்சிகள் காணப்பட்டன..

2018 பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பிற்பாடே ஜனாதிபதி மைத்திரிபால இவ்வகையான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கு அவரது ஆதரவாளர்களே அழுத்தம் கொடுத்துள்ளனர்.


குறித்த தேர்தலில் மஹிந்த தலைமை தாங்கும் பொதுஜன பெரமுன கட்சி பெருவாரியான வெற்றிகளை பெற மைத்திரியின் சுதந்திரக் கட்சியின் நிலை பரிதாபகரமாகிப் போனமையை அனைவரும் அறிவர்.
ஒன்றிணைக்கும் பூர்வாங்க முயற்சிகள் மைத்திரிபாலவின் சார்பில் செல்வாக்கு மிகுந்த பௌத்த தேரர் மெதகொட அபயதிஸ்ஸவினால் முன்னெடுக்கப்பட்டது. அதன் பிறகு அம்முயற்சிகளை எம்.பி. திசாநாயக்க முன்கொண்டு செல்கிறார்.


பகீரத பிரயத்தனங்களுக்கு அப்பால் ஒக்டோபர் 3 இல்  மஹிந்த – மைத்திரி இடையிலான பூர்வாங்க சந்திப்பு நிகழ்வை பத்தரமுல்லையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் ஏற்பாடு செய்வதில் வெற்றியும் கண்டார்.


ஒன்றிணைவு தொடர்பான முயற்சிகள் எப்போதோ தொடங்கப்பட்டிருந்தாலும் இது குறித்து மஹிந்த சற்று தயங்கியவராகவே காணப்பட்டார். இதற்கு முதன்மைக் காரணம் , ஒன்றிணைவு தொடர்பில் ராஜபக்ஷ சகோதரர்களிடையே காணப்பட்ட இரு வேறான கருத்துக்களே ஆகும்.
சந்திரிக்கா குமாரதுங்கவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தும் கூட 2004 இல் பிரதமர் பதவிக்கு மஹிந்த வர வேண்டும் என்பதில் மைத்திரி குறியாக இருந்தார். அத்துடன் 2005 இல் மஹிந்த, ஜனாதிபதி வேட்பாளராக வேண்டுமென்பதிலும் மைத்திரி வெகுவாக கரிசனை கொண்டிருந்தார்.
இதனால் சந்திரிக்காவின் அதிருப்திக்கும் மைத்திரி ஆளாகியிருந்தார். முன்னர் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த மைத்திரி, மஹிந்தவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கினார். அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த தான் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சமயங்களில் எல்லாம் பிரதி பாதுகாப்பு அமைச்சராக மைதிரியையே நியமித்துச் சென்றார்.


இவ்விடயம் அண்மையில் இடம்பெற்ற நியூயோர்க் பொதுக் கூட்டத்தின்போது நினைவுகூரப்பட்டது. 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இறுதி இருவாரங்களில் பிரதி பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றி இருந்தவர் மைத்திரிபால சிறிசேன ஆவார்.


இவ்வாறாக பிரதி பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய காலங்களில் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவுடன் பலமான உறவுகளை கட்டியெழுப்பிக் கொண்டார். இவ்வகையான இணக்கமான உறவுப் பாலமானது அரசியல் முரண்பாடுகளை தாண்டி இன்றும் அவர்களுக்கு மத்தியில் நிலவுகின்றது.


இது இவ்வாறிருக்க மஹிந்தவின் இன்னொரு சகோதரரான பசிலுடனான மைத்திரியின் கடந்த கால உறவுகள் உவப்பானதாக இருந்திருக்கவில்லை. சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பாளராக இருவரும் கடமையாற்றிய காலப் பகுதி தொடக்கமே இருவருக்கும் இடையிலான முறுகல் நிலை தொடர்ந்தே வந்தது.


பசில் பொதுச் செயலாளராகவும் மைத்திரி பொருளாளராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். பின்னர் 1982 ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற கால கட்டத்தில் பசில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவினார். இதன்போது அவரது வெற்றிடத்தை நிரப்பியவர் மைதிரிபாலவே. அத்துடன் மஹிந்தவின் மூத்த சகோதரரான சாமலுடனான மைத்திரியின் உறவுகள் பட்டும் படாமலே அமைந்து வந்திருக்கின்றது.


2010 ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் பிற்பாடு அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியின் கீழ் தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்பதில் மைத்திரி அசராத நம்பிக்கை கொண்டிருந்தார். எனினும், அவரது ஆசைக்கு பசில் குந்தகம் விளைவித்தார் என நம்பப்படுகிறது.


இது தொடர்பில் மைத்திரிபால, கோத்தாபயவிடம் முறையிட்டதும் அவர் மைதிரிக்கு ஆதரவாக திகழ்ந்தார் எனவும் பசில் தொடர்ந்தும் மறுதலித்தே வந்தார் எனவும் கூறப்படுகிறது. பசில் ராஜபக்சவை பிரதமராக்க மஹிந்த விரும்பியபோது அதற்கு கோத்தாபய பலத்த எதிர்ப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் இக்கட்டான நிலைக்கு மஹிந்த தள்ளப்பட்டார். இறுதியில் பசிலையும் மைத்திரியையும் விடுத்து கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஜயரத்னவை, மஹிந்த பிரதமராக்கினார். இது தொடர்பில் மஹிந்த மற்றும் பசில் மீது கசப்புணர்வை மைத்திரிபால மனதினுள் வளர்த்துக் கொண்டார். சந்தர்ப்பம் தேடி நின்றவருக்கு 2014 பொது வேட்பாளர் வாய்ப்பு தீனி போட்டது.


இரவில் மஹிந்தவுடன் விருந்துபசாரத்தில் ஈடுபட்டு மறுநாளே கட்சி தாவினார். 2015 ஜனவரி 8 தேர்தலில் மஹிந்தவுக்கு நேரடிப் போட்டியாக சவால் விடுத்து வெற்றி வாகை சூடிக் கொண்டார். அதன் பிறகு நடந்தவை நாடறியும்.


நம்பிக்கை துரோகங்களின் ஒட்டுமொத்த கூடாரமாக விளங்குபவரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று கூறுமளவுக்கு அவரது அண்மைய நடவடிக்கைகள் கட்டியம் கூறி நிற்கின்றன. அவரது முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவுக்கு முதலில் துரோகமிழைத்தார்.


அந்நிகழ்வு இடம்பெற்ற அன்று காலை மஹிந்தவுடன் இணைந்து அப்பம் சாப்பிட்டு விட்டு அதே நாள் சிறிகொத்தாவில் ‘நாட்டு மக்களின் நலன்களுக்காக தியாகம் செய்கிறேன்’ என பிரகடனம் செய்தார். எனினும், மேம்பட்ட ஓர் அடைவை எதிர்நோக்கியிருந்த மக்கள் அப்போது அதனை சட்டை செய்யவில்லை.


அடுத்து, அவரது முதன்மை கூட்டணி பங்காளரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு துரோகம் இழைத்தார். உள்ளூராட்சி தேர்தல் இடம்பெற்ற காலத்திலேயே மைத்திரி ஐக்கிய தேசிய கட்சியையும் ரணில் விக்கிரமசிங்கவையும் தாக்கி பொதுமேடைகளில் பேசி வந்தார்.


 ஊழலுக்கு எதிரான வாதம் எனும் வாள் வீச்சை கைகளில் எடுத்துக் கொண்டார். ‘ஊழல்கள் அற்ற அரசாங்கத்தையே உருவாக்க விரும்புகிறேன்... அதனை நிறைவேற்றும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகவும் எனது வாளை சுழற்றத் தயங்க மாட்டேன்’ என பகிரங்கமாக தெரிவித்தார்.  இத்தனைக்கும் அடுத்து அவரால் அத்தேர்தல்களில் 4 சதவீத வாக்குகளை மாத்திரமே. அதிலிருந்து அவர் ‘4 சதவீத ஜனாதிபதி’ என அழைக்கப்பட்டார்.


இவ்வாறு அரசியல் சடுதி மாற்றங்களையும் துரோக நடவடிக்கைகளையும் தன்னகத்தே கொண்டவர் என்ற வகையில் மைத்திரியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே திகழும் என அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
நன்றி : எங்கள் தேசம் 

மைத்திரி – மஹிந்த கூட்டணி நிலைக்குமா? மைத்திரி – மஹிந்த கூட்டணி நிலைக்குமா? Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.