சட்டென மாறும் ஆடுகளம்


இரண்டு நடிகர்கள் தோன்றும் திரைப்படத்தில், ஒரு கூட்டுக் குடும்பக் கதைபோல ஆரம்பித்த காட்சிகள்
இன்று வேறு திருப்பமொன்றை சந்தித்திருக்கின்றன. யாரும் நினைத்திராத தருணமொன்றில் நடிகர்கள் தமக்கிடையே பிளவுபட்டு முன்கதையில் வில்லனாக சித்திரிக்கப்பட்ட நடிகர் திடீரென நடிகனாக கதைக்குள் பிரவேசிப்பது போல ஆகிப் போயிருக்கின்றது இலங்கையில் அரசியல் பெருவெளி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுத்த அதே அதிர்ச்சி வைத்தியத்தை இப்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொடுத்திருக்கின்றார். எப்படி 'அப்பம்' சாப்பிட்டுவிட்டு வந்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் மஹிந்தவுக்கு எதிராக தைரியமாக களத்தில் குதித்தாரோ, அதுபோலவே ரணிலை வெளியே போட்டு விட்டு மஹிந்தவை பிரதமராக்கும் அதிரடி முடிவையும் ஜனாதிபதி எந்தவித சலனமும் இல்லாமல் திடீரென எடுத்திருக்கின்றார். மைத்திரி பல மாதங்களுக்கு முன்னர் கையில் எடுத்திருப்பதாகச் சொன்ன 'கத்தி' என்றும் இதனைச் சொல்லலாம்.

உலக அரங்கில் அரசியல் பல புரட்சிகளை ஆட்சிக் கவிழப்பைக் கண்டிருக்கின்றோம். ஆனால், சரி பிழைகளுக்கு அப்பால் நின்று பார்த்தால், புதுமாதிரியாக அரசியலமைப்பை பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரி எடுத்த அதிரடி நடவடிக்கை உள்நாட்டின் அரசியல் ஆடுகளத்தை சட்டென மாற்றியிருப்பது மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும்; அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கையில் நடக்கின்ற காட்சிகளுக்கு உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலும் இருந்தோ யாரோ தனித்து அல்லது கூட்டாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது. இலங்கையின் அரசியல் களத்தில். இந்தக் கதை எங்கே தொடங்கியது என்றும் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது என்றும் நாமறிவோம். ஆனால் இன்னும் எத்தனை திருப்பங்களோடு, எங்கே சென்று முடியப் போகின்றது என்றுதான் தெரியவில்லை.

நல்லாட்சியின் போக்கு
முன்னொருபோதும் இல்லாத எதிர்பார்ப்புக்களோடு 2015ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தைப் பற்றி பெரும்பான்மை சமூகத்தை விடவும் சிறுபான்மை மக்களிடையே அதீத எதிர்பார்ப்புக்கள் இருந்தன. இலங்கையில் எல்லாப் பரப்புக்களிலும் ஒரு மாற்றம் ஏற்படும் என்று நாட்டு மக்கள் நம்பினர். குறிப்பாக, மைத்திரி – ரணில் கூட்டாட்சியை தமது மீட்பர்கள் போலவே முஸ்லிம்கள் கருதினார்கள்.

ஆனால், இன்று ஜனாதிபதியே ஒப்புக்கொண்டிருப்பதைப் போல நல்லாட்சியின் இலட்சணங்களை இந்த அரசாங்கம் 3 வருடங்களுக்கு முன்பிருந்தே இழக்கத் தொடங்கிவிட்டது. ஊழல் பற்றி விமாச்சித்தவர்களின் ஆட்சியில் முக்கியஸ்தர்கள் ஊழல் மோசடிகளை மேற்கொண்டார்கள். இனவாதத்தை முதலீடாக்கியவர்கள் திகணவிலும் அம்பாறையிலும் கலவரங்கள் அடங்கும் வரை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஆக மொத்தத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை மாற்றுவதற்கு அடித்தளமிட்ட காரணங்களுள் இரு காரணங்களை குறுகிய காலப் பகுதிக்குள்ளேயே நல்லாட்சியாளர்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்பது சாதரண விடயமல்ல.
நல்லாட்சி மென்போக்குள்ள சிங்கள மக்களையும் மேற்தட்டு வர்க்கத்தையும் ஒரு சில வர்த்தகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கின்றது எனலாம். கடும்போக்கு சிங்கள வாக்காளர்களை கணிசமாக திருப்திப்படுத்தவில்லை. தமிழர்களுக்கும் சாதகமான சமிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் காட்டியது. முஸ்லிம்கள் ஓரளவுக்கு நிம்மதியான ஒரு உணர்வைப் பெற்றாலும் இனவாதத்திற்கு எதிரான மெத்தனப் போக்கு முஸ்லிம்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.

இது இவ்வாறிருக்க இனிவரும் பொதுத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற வேட்கை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுதந்திரக் கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இருந்தது. இது ஒரு பனிப்போராக போய்க் கொண்டிருந்த சமயத்தில் இடம்பெற்ற கடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் இது மைத்திரி – ரணில் - மஹிந்த என ஒரு முக்கோண யுத்தமாக பரிமாணம் எடுத்தது எனலாம்.

சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணிக்கும் இடையில் உறவை ஏற்படுத்துவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தனர். அப்படியான ஒரு முயற்சி மைத்திரி – ரணில் இடையில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன, 'ஊழல்வாதிகள்' என்ற தோரணையில் ஐ.தே.க தரப்பினரை சாடைமாடையாக விமர்சிக்கத் தொடங்கியிருந்தார்.

மறுபுறத்தில் ஊழல் போன்ற விடயங்களை மென்போக்கோடு கையாளத் தொடங்கிய ஜென்டில்மேன் அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க, இந்த ஆட்சியை நிறுவியவர் என்ற இறுமாப்பிலோ என்னவோ ஜனாதிபதியின்  இத்தகைய விமர்சனங்களுக்குப் பின்னாலிருந்த பாரதூரத்தை முன்னுணர்ந்து செயற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அதாவது மைத்திரியை குறைத்து எடைபோட்டிருப்பதாக சொல்லலாம்.

அதிரடி நடவடிக்கை
2014 நவம்பர் 21ஆம் திகதி மஹிந்தவைச் சந்தித்துவிட்டு வந்து கூட்டு எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை பிரகடனப்படுத்திய இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி ஒரு மாலைப் பொழுதியில் யாராலும் நம்ப முடியாத ஒரு முடிவை எடுத்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தார். இது ஒரு புத்திசாலித்தனமான தீர்மானமா என்பது தெரியவில்லை ஆனால் இது ஒரு அரசியல் தைரியம் என்று கூறப்படுகின்றது.

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் படி பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல தரப்பினரும் கூறினர். இல்லையில்லை, விஷேட சூழ்நிலைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் அவ்வாறு செய்ய முடியும் என்று மைத்திரி-மஹிந்த கூட்டணி வாதிட்டது. ரணில் விக்கிரமசிங்க 47 ஆசனங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருந்த போது தனக்கிருந்த அதிகாரத்தைக் கொண்டு அவரை பிரதமராக ஜனாதிபதி நியமித்தது சரியென்றால் இது எவ்வாறு பிழையாகும் என்ற ஒரு கேள்வியும் எழுந்தது.

ஆனால் இதனையெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ஜனாதிபதியும் புதிய பிரதமரும் சேர்ந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் 'ஆப்பு சீவும்' வேலைகளை கவனித்தனர். மஹிந்தவை புதிய பிரதமராக நியமித்தும் ரணிலை அப்பதவியில் இருந்து நீக்கும் இருவேறு வர்த்தமானி அறிவித்தல்களை ஜனாதிபதி வெளியிட்;டார். தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐ.ம.சு.மு. ஏற்கனவே விலகியிருந்த நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டது. மிக முக்கியமாக, பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி, நவம்பர் 16 வரை அமர்வுகளை ஒத்திவைத்தார். தமது தரப்பின் பெரும்பான்மையை முழுமையாக உறுதி செய்வதற்காக மைத்திரி எடுத்த காலஅவகாசமாகவே இது பார்க்கப்படுகின்றது.

உண்மையில், யார் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினையில்லை. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறியவர்களே. எனவே யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றதோ அவர்கள் அதனை உடனடியாக பாராளுமன்றத்தில் நிரூபித்து, இப்பிரச்சினைக்கு முடிவு கண்டுவிட வேண்டும். காலம் தாழ்த்துவதால் நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களும் ஸ்தம்பிதமடையும் என்பதால் இன்னும் இழுத்தடிக்கக் கூடாது என்பதே பொதுவாக நாட்டு மக்களின் மனோநிலையாகும்.

நன்றிக்குரிய ரணில்
2015ஆம் ஆண்டில் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவை களத்தில் இறக்கி வெற்றிபெறச் செய்து, ஜனாதிபதி கதிரையில் அமர்த்துவதற்கும் ரணில் விக்கிரமசிங்க மிக முக்கியமானவர். சுந்திரிகா குமாரதுங்க, ராஜித சேனாரத்ன போன்ற இன்னும் பலரது பங்களிப்பும் மறக்க முடியாதது. சுதந்திரக் கட்சியில் மைத்திரி இருந்திருந்தார் என்றால் இந்நேரம் நிறைவேற்று அதிகாரத்தை சுகித்திருக்க முடியாது.

அந்த வகையில், ஜனாதிபதியே அண்மைய உரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல ரணில் விக்கிரமசிங்க நன்றிக்குரியவர். அந்தக் கோணத்தில் நோக்கினால் அவரது பதவிக்கு ஆப்பு வைக்கப்பட்டது என்பது ஜீரணிக்க முடியாத விடயமாகவே கருதப்படுகின்றது. அத்துடன், தன்னை ஜனாதிபதியாக்கிய ஒருவர் விடயத்தில் ஜனாதிபதி நன்றி மறந்தவராக நடந்து கொண்டுள்ளார் என்ற விமர்சனங்களும் ஐ.தே.க. சார்பாளர்களால் முன்வைக்கப்படுவதைக் காண முடிகின்றது.

அதுவும், தன்னால் விமர்சிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக அரியாசனம் ஏற்றும் முடிவை ஏன் ஜனாதிபதி சிறிசேனா எடுத்தார்?  அதற்கான காரணம் என்ன என்ற கேள்வி ஒவ்வொரு பொதுமகனிடமும் இருக்கின்றது. ரணிலைக் காப்பாற்றுவதற்கு பல காரணங்கள் இருக்கத்தக்கதாக அவரை மைத்திரி வெட்டி வீழ்த்தியிருக்கின்றார் என்றால் அதற்கான காரணங்கள் அதைவிட வலுவானவையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் திண்ணம்.
மேலே கட்டுரையில் நாம் குறிப்பிட்டது போல ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தத்தமது கட்சிசார் அதிகாரப் போட்டி இருந்தது போல் வேறு பல கருத்து வேற்றுமைகளும் இருந்தன. இந்நிலையில் இவ்வாறான முடிவை எடுப்பதற்கான சில காரணங்களை ஜனாதிபதி தனதுரையில் நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டிருக்கின்றார்.

மைத்திரியின் நியாயம்
அந்த உரையில், மத்திய வங்கி பிணைமுறி மோசடியை முதன்மைக் காரணமாக மைத்திரி குறிப்பிட்டிருக்கின்றார். அடுத்ததாக, தன்னைக் கொலை செய்வதாக வெளியான தகவல்கள் மற்றும் அதில் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வகிபாகம் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். இதுதவிர தனது அதிகாரங்களை மேவி, ரணில் செயற்பட்டமை, தனித்து தீர்மானங்களை எடுத்தமை, பொருளாதார முகாமைத்துவ சபையின் செயற்பாடுகள், நல்லாட்சியின் கோட்பாடுகளை நாசமாக்கியமை உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.

குறிப்பாக அர்ஜூன் மகேந்திரனால் மேற்கொள்ளப்பட்ட பெருமளவு மோசடியின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க போன்றோர் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட விடயங்களை ஜனாதிபதி உறுதி செய்திருப்பது போன்று இவ்வுரை தெரிகின்றது.
அதேபோல் ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்புச் செயலரையும் கொல்லத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு செயலணியைச் சேர்ந்த நாமல் குமார கூறிவருகின்றார். அத்துடன் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாளக்க சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களில் இரண்டாமவர் முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. எனவே இவர்களது வாக்குமூலங்களும் ஜனாதிபதியின் முடிவில் செல்வாக்கு செலுத்தியிருக்க  வாய்ப்புள்ளது. ஜனாதிபதி ஆற்றிய உரையில் அழுத்தம் கொடுக்கப்படுகின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது அதை இலகுவாகவே உய்த்தறிந்து கொள்ளலாம்.

ஆனால் அரசியலுக்காக எதையும் செய்வார்கள் என்ற எடுகோளின்படி, மேற்குறிப்பிட்ட இருவரின் ஊடாகவும் இவ்விவகாரம் வெளியுலகுக்கு அத்தாட்சியாக அம்பலப்படுத்தச் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவோரும் உள்ளனர். அதேபோல் கடும்போக்கு வாக்குகளை தம்வசப்படுத்த வேண்டிய தேவை சுதந்திரக்கட்சிக்கு இருந்தது என்பதை மறப்பதற்கில்லை.

வெளிநாட்டு செல்வாக்கு
மேலே குறிப்பிட்டவை உள்நாட்டுக்  காரண காரியங்களாகும். இதற்குப் பின்னால் நமக்குத் தெரியாத ஒரு அரசியலும் இருக்கின்றது. அதுதான் வெளிநாடுகளின் நலன்சார் காய்நகர்த்தல்கள் ஆகும். இந்தியாவினதும், சீனாவினதும் ஆடுகளமாக இலங்கை மாறியிருக்கின்றது. எப்போதும் இதில் மேற்குலகின் குறிப்பாக அமெரிக்காவின் பாத்திரம் இருந்து வருகின்றது. அந்த வகையில் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த திடீர் அரசியல் மாற்றத்தின் பின்னணியில் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நலன்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்கனவே பிராந்திய அதிகாரப் போட்டி நிலவிய வருகின்ற நிலையில், சீனா-ஜப்பான் இடையிலான கப்பற் போக்குவரத்துக்கள் புதுப்பொலிவு பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இது இந்தியாவை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளதுடன் ஆசியாவில் கண்வைத்துள்ள அமெரிக்காவின் கழுகுப் பார்வையும் இதில் விழுந்துள்ளது.

அந்த நேரத்தில்தான் ஆட்சியைப் பிடிக்கும் கனவோடிருந்த மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்றிருந்தார். அங்கு  சுப்பிரமணிய சுவாமி மஹிந்தவை எவ்வாறு விளித்துப் பேசினார் என்பது பலருக்கும் நினைவிருக்கலாம். அதன்பிறகே கட்சித் தலைவர்கள் இந்தியாவுக்கு சென்றனர்.

இந்தப் பின்புலத்தோடு, சீனாவுக்கு எதிராக இந்தியாவை பலப்படுத்தி கப்பற் போக்குவரத்தில் கேந்திரமான இலங்கையை கைக்குள் வைத்திருக்க நினைத்த அமெரிக்காவினதும், சீனாவை எதிர்கொள்வதற்காக பிராந்தியத்தை பலப்படுத்த நினைத்த மோடி அரசாங்கத்தினதும் இராஜதந்திரங்கள் இதற்குப் பின்னால் இருந்திருக்கலாம் என்று அரசியல் உற்றுநோக்குனர்கள் கூறுகின்றனர்.

மேற்சொன்ன மற்றும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத உள்நாட்டு, வெளிநாட்டு காரணங்களின் பின்புலத்தோடே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருப்பதாக உள்மனது சொல்கின்றது. வெளிநாடுகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் களச்சூழல், உள்நாட்டில்  இருந்திருக்கின்றது என்பது கவனிப்பிற்குரியது. ஆரம்பத்திலிருந்து முரண்பட்டு, தக்க சமயம் பார்த்துக் கார்த்திருந்த ஜனாதிபதிக்கு, அந்த சந்தர்ப்பத்தை ஆட்சியின் தூண்களே ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

ஜனாதிபதி எடுத்த இந்த அதிரடி தீர்மானம் நல்லதா கெட்டதா என்பது ஒருபுறமிருக்க, இந்த நகர்வினால் நாட்டின் அரசியல் களம் ஆட்டம் கண்டுள்ளது. என்னதான் நாடு ஸ்திரத்தன்மையுடன் இருக்கின்றது என்று பரப்புரை செய்தாலும் நிஜத்தில் நாட்டில் ஒருவித ஸ்தம்பித நிலையையே மக்கள் உணர்கின்றனர். எனவேதான் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து இவ்விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்குமாறும் சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரியை வேண்டியுள்ளார்.

சர்வதேச நாடுகள் பலவும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அழுத்தம் கொடுத்துள்ள ஒரு சூழலில், நவம்பர் 16 இற்கு முன்னர் அதாவது 7ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் பெரும்பான்மையை உறுதிசெய்தாக வேண்டும்.

முஸ்லிம்களின் நிலை
தங்களுக்கு 113இற்கும் அதிகமான எம்.பி.களின் ஆதரவு இருப்பதாக மஹிந்த மற்றும் ரணில் ஆகிய இரு தரப்புக்களும் சொல்கின்றன. எதைக் கொடுத்தாவது பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்தெடுக்க மஹிந்த தரப்பும், காலைப் பிடித்தாவது தம்மோடு தக்கவைத்துக் கொள்ள ரணில் தரப்பும் பகீரத பிரயத்தனங்களை எடுக்கின்றன. அரசியல்வாதியின் முடிவு எந்த நேரத்திலும் மாறலாம் என்ற பட்டறிவின்படி, பாராளுமன்றம் கூடுகின்ற தருணம் வரை யார் வெற்றி பெறுவார் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என்பதே யதார்த்தம்.

இவ்வாறான அரசியல் சுழிக்குள் அகப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு என்ன என்றும்? எதிர்கால நிலைமை என்னவாக இருக்கப் போகின்றது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

ரணில் விக்கிரமசி;ங்கவை வெளியேற்றிவிட்டு அரசாங்கத்தை நிறுவுவோம் என்று ஜனாதிபதிக்கு சொன்னவர்களுள் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா இருப்பதால் தனது கட்சிக்கு எம்.பி.பதவி இல்லையென்றாலும் அவரது ஆதரவு என்றும் பிரதமர் மஹிந்தவுக்கே இருக்கும். அதேபோல் சு.க. மற்றும் ஐ.தே.க. கட்சிகளில் நேரடியாக அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் தங்களது பிரதேச நலன்சார்ந்த முடிவையே எடுக்கும் வாய்ப்புள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளிடம் இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஆனால் இந்த நிமிடம் வரை மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் முடிவை இரு கட்சிகளும் எடுக்கவில்லை என்றே அறிய முடிகின்றது. எவ்வாறிருப்பினும், ஆட்சியை நிறுவும் தரப்புடன் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் கடைசி மணித்தியாலத்திலோ அல்லது ஆட்சி நிறுவப்பட்டு ஓரிரு நாட்களிலோh இரு முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்து கொள்ளும் என்பதே நமது அனுபவத்தின் அனுமானமாகும்.
இந்த இடத்தில் ஒரு வினா எழுகின்றது. அதாவது, தமது கொள்கைக்காக முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் அதிகாரம் எதுவும் இல்லாமல் எதிர்க்கட்சியில் அமர்ந்தால் (தமிழ் மக்களைப் போல) அவர்களுக்குப் பின்னால் செல்லும் அரசியல் கலாசாரம் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

 அத்துடன், முஸ்லிம் அரசியல்வாதிகளில் 99 வீதமானோருக்கு அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளில் எப்போதும் மோகம் இருக்கின்றது. எனவே சமுகமும் தலைவர்களும் இவ்வாறான தன்மையுடன் இருப்பதால், ஆட்சி அமைக்கின்ற பக்கத்திற்கு இவர்கள் செல்வார்கள், அது மஹிந்தவின் பக்கம் என்றாலும் சரி.

சிறுபான்மை மக்களைப் பொறுத்தமட்டில் குறிப்பாக முஸ்லிம்களுக்கு மைத்திரி, மஹிந்த, ரணில் எல்லோரும் ஒன்றுதான். முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எந்த ஆட்சியாளரும் தங்கத் தட்டில் வைத்து வழங்கப் போவதில்லை. எனவே, முஸ்லிம் கட்சிகளுக்கு பேரம் பேசக் கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பையாவது சரியாக பயன்படுத்த வேண்டும்.

முஸ்லிம் கட்சிகள் நடுநிலை வகிக்காமல், யாருக்காவது ஆதரவளிக்கும் நிலைப்பாட்டுக்கு வந்தால், வெறுமனே நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்பதற்காகவோ பழிவாங்குவாரோ என்ற அச்சத்திலோ அல்லது அமைச்சுப் பதவியை, பணத்தை பெற்றுக் கொண்டோ தமது ஆதரவை வழங்காமல்... முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்து எழுத்துமூலம் உடன்படிக்கை செய்து அதனை மக்களுக்கு பகிரங்கப்படுத்தி ஆதரவளிப்பது குறித்து சாதகமாக சிந்திக்கலாம்.

இந்தக் கதையை யார் எழுதினார்கள், யார் இயக்குகின்றார்கள் என்பதை விட... இக்கதையின் முடிவு 'சுபமாக' இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பும் வேண்டுதலுமாகும்.

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 04.11.2018)


சட்டென மாறும் ஆடுகளம் சட்டென மாறும் ஆடுகளம் Reviewed by Madawala News on November 04, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.