இந்தியாவின் எதிரிநாடக கருதப்படும் பாகிஸ்தானை விட இலங்கை மோசமானது.. சிங்கள அரசப்பயங்கரவாதம் கோரத்தாண்டவம் ஆடுகிறது.


இந்தியாவின் எதிரிநாடக கருதப்படும் பாகிஸ்தான் கூட, தமிழக மீனவர்கள் விடயத்தில் இலங்கை
போன்று செயற்பட்டதில்லை என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நேற்று அவரால் விடுக்கப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைத்தாண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டு, பெருமளவான அபராதங்கள் அவர்களுக்கு விதிக்கப்படுகின்றன.

இவ்வாறான ஒரு செயலை பாகிஸ்தான் கூட தமிழக மீனவர்கள் மீது தொடுப்பதில்லை.

ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும்.

இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டெடுப்பதற்குரிய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று  (21-10-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  கூறியிருப்பதாவது,

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தூத்துக்குடி மீனவர்கள் எட்டு பேருக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனையும், 60 இலட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளச் செய்தியானது பெரும் அதிர்ச்சியினையும், மனவேதனையினையும் தருகிறது. தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், முனியன், இசக்கி முத்து ஆகிய மீனவர்கள் 18-08-18 அன்று திரேஸ்புரத்திலிருந்து 70 கடல் மைலுக்கு அப்பால் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லைத்தாண்டியதாகக் கூறிக் கைதுசெய்து, இலங்கையிலுள்ளப் புத்தளம் சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவர்களுக்கு தலா 60 இலட்சம் அபராதமும், 3 மாதங்கள் சிறையும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது இலங்கையின் கல்பிட்டி நீதிமன்றம். தமிழக மீனவர்களுக்கு மறைமுக மிரட்டலையும், பெரும் அச்சுறுத்தலையும் வழங்கியிருக்கும் இத்தீர்ப்பு வன்மையானக் கண்டனத்திற்குரியது.

சிங்கள அரசப்பயங்கரவாத அரசு தமிழர்கள் மீதான வன்மத்திற்குப் பழிதீர்க்கும் பொருட்டு கொண்டு வந்த அடக்குமுறைச் சட்டமானப் புதிய கடல் தொழில் சட்டத்தின்படியே, தூத்துக்குடி மீனவர்களுக்கு இக்கொடுந்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

இச்சட்டம் கொண்டு வரப்பட்டபோதே இது தமிழக மீனவர்களுக்குப் பேராபத்தினை விளைவிக்கும் எனக் கூறிக் கடுமையாக நாங்கள் எதிர்த்தோம். அன்றைக்கு ஒலித்த எங்களது குரல்களை இந்தியா தனது செவிக்குள் உள்வாங்காது கள்ள மௌனம் சாதித்ததன் விளைவாக இன்றைக்குத் தமிழக மீனவர்களுக்கு இத்தகைய இழிநிலை வந்திருக்கிறது.


இதுவரை எத்தனையோ இலங்கை மீனவர்கள் எல்லைத்தாண்டி இந்திய எல்லைக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களின் ஒருவரைக்கூட இந்நாடு தாக்கியதோ, தண்டித்ததோ, இழிவாக நடத்தியதோ இல்லை. அவர்களை விருந்தினரை உபசரிப்பது போல மிக மரியாதையுடனும், மாண்புடனும் நடத்தி இலங்கைக்கே பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பி வைக்கிறோம். ஆனால், சிங்களப் பேரினவாதக் கொள்கையுடைய இலங்கை அரசு ஈவிரக்கமற்று தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவதும், சொல்லொணாத் துயரங்களுக்கு அவர்களை ஆட்படுத்துவதும், நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதும், அவர்களின் உடைமைகளைப் பறித்து மீன்களைக் கொள்ளையடித்துச் செல்வதுமென மிகப்பெரும் அத்துமீறல்களிலும், அட்டூழியங்களிலும் ஈடுபட்டு வருகிறது. இலங்கைக் கடற்படைத் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரம் மீனவர்கள் தாக்கப்பட்டு உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து நிற்கிறார்கள்.

 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலிலே கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.


தமிழக மீனவர்களின் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றி எச்சரித்ததுமில்லை. இதன்விளைவாக, சிங்கள இராணுவம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பது என்பது தொடர்கதையாகி மாறி நிற்கிறது.

பகை நாடு எனச் சொல்லப்படுகிற பாகிஸ்தான் நாடுகூட இந்திய நாட்டு மீனவர்களிடம் இத்தகையக் கடும்போக்கினையும், கோரத்தாக்குதல்களையும் மேற்கொள்வதில்லை.


ஆனால், நட்பு நாடு எனச் சொல்லப்படுகிற இலங்கை நாடு, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்தாலே அவர்களைச் சிறைப்படுத்தி வதைசெய்து கோரத்தாண்டவம் ஆடுகிறது. இது எதனையும் தட்டிக் கேட்காது கைகட்டி வாய்பொத்தி தமிழக மீனவர்கள் மீதான இத்தாக்குதல்களுக்கு மறைமுக ஆதரவளிக்கும் இந்திய அரசின் செயலானது அதன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. ஆண்டுக்கு 60,000 கோடி அந்நியச் செலாவணியை இந்நாட்டிற்கு ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் மீதான இத்தாக்குதலை இந்தியா வெட்கமின்றி வேடிக்கைப் பார்ப்பது எட்டு கோடித்தமிழர்களுக்கும் செய்யப்படும் பச்சைத்துரோகம். இத்தகையக் கொடுமைகளை வெகுநாட்கள் தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தமிழர்களின் உள்ளங்களில் எரிகிற கோபநெருப்பு கனலாய் வெடிக்கிறபோது இந்தியக் கட்டமைக்கே அது பேராபத்தாய் முடியும் என்பதனை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.

அத்துடன், இலங்கை அரசங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கடல் தொழில் சட்டத்தை விலக்கி கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் எதிரிநாடக கருதப்படும் பாகிஸ்தானை விட இலங்கை மோசமானது.. சிங்கள அரசப்பயங்கரவாதம் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இந்தியாவின் எதிரிநாடக கருதப்படும் பாகிஸ்தானை விட இலங்கை மோசமானது..  சிங்கள அரசப்பயங்கரவாதம் கோரத்தாண்டவம் ஆடுகிறது. Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.