வலுக்கும் ஆதாரங்களில் விழிபிதுங்கும் இளவரசர் மொஹம்மத் பின் ஸல்மான் .


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் (மூலம்: அல்ஜஸீரா)
சவூதியை சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்து வந்தவருமான பிரபல ஊடகவியலாளர் ஜமால் கசோகி துருக்கியில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைத்து இம்மாத ஆரம்பத்தில் காணாமல் போயிருந்தபோது அது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என தட்டிக் கழித்து வந்த சவூதி, வலுக்கும் ஆதாரங்களை அடுத்து சவூதி தூதரகத்தில் வைத்தே அவர் கொல்லப்பட்டார் என்பதை அண்மையில் ஒப்புக் கொண்டுள்ளது.    


சவூதியில் இடம்பெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் யெமனில் பாரதூரமான தாக்குதல்களை சவூதி  நிகழ்த்தி வருகின்றமை மற்றும் கட்டாருடனான உறவுகள் தொடர்பில் சவூதி கொண்டுள்ள கொள்கைகள் பற்றி சரமாரியாக விமர்சித்து வந்த சவூதி ஊடகவியலாளர் கசோகி தனக்கு சவூதியில் உயிரச்சுறுத்தல் நிலவுவதாக கூறி கடந்த வருடம் அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தார்.


அங்கே  Washington Post நாளிதழில் விமர்சக பத்தி எழுத்தாளராக கடமையாற்றி வந்த நிலையில் துருக்கிய பெண்மணியை மறுமணம் புரிவதற்காக, சில ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் துருக்கி இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்திற்கு சென்றிருந்தார். எனினும், உள்நுழைந்த அவர் வெளியேறவில்லை.


காணாமல் போய்விட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் சவூதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என துருக்கி பாதுகாப்பு பிரிவு தெரிவித்து வந்தது. இதனை கடந்த சில வாரங்களாக சவூதி மறுத்து வந்த நிலையில் துருக்கி பாதுகாப்பு பிரிவினர் அவர் தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு ஆதாரங்களை திரட்டி சர்வதேசம் முன்னிலையில் சவூதியை குற்றம் சாட்டியது.


ஆதாரங்கள் வலுக்கத் தொடங்கியமையை அடுத்து தூதரகத்தில் சில அதிகாரிகளுடன் ஜமால் கசோகி கைகலப்பில் ஈடுபட்டமையை தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனபதை அண்மையில் சவூதி ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், அவரது சடலம் எங்குள்ளது என்பது தொடர்பில் சவூதி இதுவரை எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

வாய் திறந்தார் சவூதி இளவரசர் பின் சல்மான் 

ஒக்டோபர் 2 ஆம் திகதி ஜமால் காணாமல் போனது முதல் அது தொடர்பில் தமது தூதரகத்திற்கு எவ்வித தொடர்புமில்லை எனவும் தூதரகத்திலிருந்து அவர் வெளியேறி விட்டார் எனவும் கூறி வந்த முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் கடந்த புதன்கிழமை ரியாதில் இடம்பெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில், சவூதி தூதரகத்தில் வைத்து கசோகி கொலை செய்யப்பட்டமை கொடுமையான விடயம் எனவும் உரிய விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், தூதரகத்தில் வைத்து இடம்பெற்ற இக்கொலை தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். இது தொடர்பில் சவூதி, துருக்கியுடன் இணைந்து நீதமான விசாரணைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளது. ஊடகவியலாளர் படுகொலை விடயத்தை முன்னிட்டு துருக்கியுடனான உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நான் அதிசிரத்தை கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

படுகொலையில் மொஹம்மத் பின் சல்மானுக்கு பங்கிருக்கிறது – ட்ரம்ப் அறிவிப்பு 

ஊடகவியலாளர் ஜமால் கசோகி சவூதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுக்கும் பங்குண்டு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்துள்ளார்.


நேர்காணலொன்றில் இக்கொலைக்கும் சவூதி இளவரசருக்கும் தொடர்புகள் உண்டா என கேட்கப்பட்ட போதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொலை தொடர்பில் தமக்கு எவ்வித பங்குமில்லை என பின் சல்மான் தெரிவித்து வந்தமையை தான் நம்புவதாக ட்ரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தாலும் தற்போது பின் சல்மானுக்கு இக்கொலையில் பங்கிருக்கிறது என அதிரடியாக தெரிவித்துள்ளார்.


தூதரகத்தில் வைத்தே கசோகியை படுகொலை செய்தது மட்டுமல்லாதது அதன் பின்னர் மூடி மறைக்கும் முயற்சிகளில் சவூதி ஈடுபட்டமையானது நகைப்புக்கிடமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமாகும் என ட்ரம்ப் வர்ணித்துள்ளார். அத்துடன் படுகொலையுடன் சந்தேகிக்கப்படும் 21 சவூதி அதிகாரிகளின் அமெரிக்க விசாக்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


கசோகியின் மகனுக்கு ஆறுதல் கூறிய பின் சல்மான்- 
கொதித்தெழுந்த டுவிட்டர்வாசிகள் 

சவூதி மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஆகியோர் ரியாதில் யமாமா மாளிகையில் ஜமால் கசோகியின் மகனான சலாஹ்வை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.


பின் சல்மான் ஜமால் கசோகியின் மகனுடன் கைகுலுக்க ஆறுதல் தெரிவிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ள நிலையில் டுவிட்டரில் பலர் கொந்தளித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.
‘தந்தையைப் படுகொலை செய்தவனின் கைகளையே பற்றிக் கொண்டு ஆறுதல் தேட வேண்டிய நிர்ப்பந்த நிலை மகனுக்கு ஏற்பட்டுள்ளமை மிகவும் பரிதாபமானது.’


‘செய்த கொலையை கைலாகு கொடுப்பதால் மூடி மறைத்து விடலாம் என எண்ணி விடாதீர்கள். பலவந்தமான நிலையில் அவரது மகன் கைலாகு கொடுப்பதை அவரது முகத்தில் கண்டுகொள்ள முடிகிறது. இவ்வாறான போலி நாடகங்கள் மூலம் சர்வதேசத்தையோ நாட்டு மக்களையோ ஏமாற்றி விடலாம் என நினைப்பது இளவரசரின் முட்டாள்தனம்’ என டுவிட்டர்வாசிகள் காட்டம் தெரிவித்துள்ளனர்.


ஜமால் கசோகியின் குடும்பத்தார் மீது பயணத்தடை விதித்துள்ள சவூதி
ஜமால் கசோகியின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு சவூதி அதிகாரிகளினால் விதிக்கப்பட்டுள்ள தடையானது அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் உடனடியாக நீக்கிக் கொள்ளுமாறும் மனித உரிமைகளுக்கான ஜெனீவா சபை வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவா சபை இது தொடர்பில் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிப்பதாவது,


ஜமால் கசோகியின் மகனை பலவந்தப்படுத்தி மன்னர் மாளிகைக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்திருப்பதும் மனித உரிமை மீறலாகும். எந்தவொரு நாட்டுக்கோ பிரதேசதிற்கோ சுதந்திரமாக பயணிக்கும் உரிமையை எவ்வித காரணங்களுமின்றி சுய அச்சங்களின் காரணமாக சவூதி தடை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.


சவூதியின் அரசியல் நடவடிக்கைகளை காத்திரமான முறையில் விமர்சனம் செய்து வந்த ஊடகவியலாளரை படுகொலை செய்ததற்கு பொறுப்புக் கூறாமல் அவரது குடும்பத்தார் மீது பயணத் தடை விதிப்பது சவூதியின் தொடரும் மனித உரிமை மீறலில் சேர்க்கப்பட வேண்டிய செயலாகும்.
கசோகியின் குடும்பத்தார் மீது பயணத் தடையை விதித்துள்ளதன் மூலம் கசோகி படுகொலை விவகாரம் தொடர்பில் பல்வேறு விடயங்களை மூடி மறைக்க சவூதி திட்டமிட்டுள்ளமை அப்பட்டமாக தெரிய வருகிறது.


வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்தால் கசோகியின் குடும்பத்தினர் எவ்வித அச்சுறுத்தல்களும் இன்றி படுகொலை தொடர்பில் பின் சல்மானுக்குள்ள வகிபாகம் பற்றி கருத்துக் கூறி விடுவார்கள் என அஞ்சியே சவூதி இவ்வாறு பயணத் தடையை விதித்துள்ளது. இதன் மூலம் கசோகியின் குடும்பத்தினரை நாட்டுக்குள்ளேயே சிறை வைத்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.

கூலிப்படை தலைவருக்கும் இளவரசர் பின் சல்மானுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் 

துருக்கியில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தினுள் வைத்து கசோகியை படுகொலை செய்வதற்காக துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படும் 15 பேர் கொண்ட சவூதியின் கூலிப் படை தலைவர், கசோகி படுகொலை செய்யப்பட்ட அன்று முடிக்குரிய இளவரசர் பின் சல்மானுக்கு 4 முறை தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உரையாடியுள்ளதாக துருக்கி புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.முக்கிய சந்தேக நபரான மாஹிர் அல்முர்தப்  தூதரகத்தினுள் வைத்து பின் சல்மானுடன் தனது தனிப்பட்ட கைத்தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்தி உரையாடியுள்ளார். அத்துடன் அமெரிக்க தொலைபேசி இலக்கமொன்றுக்கும் தூதரகத்தில் வைத்து அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த அமெரிக்க இலக்கம் அமெரிக்காவிலுள்ள சவூதி தூதுவருடையது என தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் சவூதி தூதுவராக கடமையாற்றுபவர் இளவரசர் பின் சல்மானின் சகோதரர் காலித் பின் சல்மான் என்பதும் முனைப்பான விடயமாகும்.


மாஹிர் அல்முர்தப் தலைமை தாங்கிய 15 பேர் கொண்ட குழுவினரால் கசோகி படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வெளியகற்றப்பட்டுள்ளது என துருக்கிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.


சவூதி வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல்ஜுபைர் தெரிவிக்கையில், தனிப்பட்ட நபர்களே இப்படுகொலையை புரிந்துள்ளனர். இதற்கும் சவூதி அரசுக்கும் எவ்வித தொடர்புமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

படுகொலையில் இளவரசர் பின் சல்மானின் வகிபாகம் பற்றிய விசாரணைகளுக்கு CIA துருக்கி விஜயம் 

ஊடகவியலாளர் ஜமால் கசோகி படுகொலையில் இளவரசர் பின் சல்மானின் வகிபாகம் தொடர்பில் கண்டறிவதற்கு CIA வின் பணிப்பாளர் கினா ஹஸ்பல் உள்ளடங்கிய குழுவொன்று கடந்த புதன்கிழமை துருக்கி சென்றுள்ளதாக ரொயிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியின் விசாரணைகளுக்கு CIA பக்கபலமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.தூதரகத்தில் வைத்து கசோகி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற சித்திரவதை தொடர்பிலான ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருப்பதாக துருக்கிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாக CIA தெரிவித்துள்ளது.
கசோகி அணிந்திருந்த அப்பிள் கைக்கடிகாரம் வாயிலாக குறித்த ஒலிப்பதிவுகள் வேறோர் நபருக்கு அனுப்பபட்டிருந்ததாக துருக்கி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


சவூதியில் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பான கட்டமைப்புக்களை தன்வசம் வைத்திருக்கும் இளவரசர் பின் சல்மான் கசோகி படுகொலை விவகாரத்தில் முழுப் பொறுப்பை சுமக்க வேண்டும்.


எனினும், கசோகி படுகொலை விவகாரத்தில் இளவரசர் பின் சல்மான் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் என நிறுவுவதற்கான போதிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என ரொயிட்டர் செய்திச் சேவை குறிப்பிடுகிறது.


18 சந்தேக நபர்களின்  விசாரணைகள் துருக்கியிலேயே இடம்பெற வேண்டும் – 
அர்துகான் சவூதியிடம் வலியுறுத்தல் .


ஜமால் கசோகி படுகொலை விவகாரம் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான விசாரணையை முன்னெடுத்து வருவதாக துருக்கி ஜனாதிபதி அர்துகான் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற, பலரும் எதிர்பார்த்த பாராளுமன்ற உரையின்போதே அர்துகான் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,


‘இப்படுகொலையானது முன்னரே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தனது விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் முதன் முதலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்திற்கு ஜமால் கசோகி வருகை தந்திருந்த அன்று முதல் படுகொலை சதியாலோசனை தீட்டப்பட்டுள்ளது.


ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முதன் முதலில் தூதரகம் நுழைந்தபோது அங்கிருக்கும் அதிகாரிகளினால் ஒக்டோபர் 2 ஆம் திகதி மீளவும் வருமாறு கசோகி பணிக்கப்பட்டுள்ளார். இடைப்பட்ட நாட்களில் படுகொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.


படுகொலைக்கு முன்தினம் சவூதியில் இருந்து வந்த குழுவினர் இஸ்தான்புல் Belgrad காட்டுப் பகுதிகளையும் Yalovaகடலோரப் பகுதிகளையும் ஆராய்ந்து சென்றனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒரு நாட்டில் அமையப் பெற்றுள்ள  மற்ற நாடுகளின் தூதரகங்களுக்கு அந்நாடுகளின் உரிய அனுமதி இன்றி உள்நுழைந்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்பது வியன்னா உடன்படிக்கையின் நியமமாகும்.இதனாலேயே துருக்கிய பாதுகாப்பு பிரிவினரால் உடனடியாக தூதரகம் சென்று தேடுதலை மேற்கொள்ள முடியாதிருந்தது. அனுமதி கோரிய பிரேரணைக்கு சவூதி முதலில் மறுப்புத் தெரிவித்து கால தாமதங்களின் பின்னரே எமக்கு அனுமதி கிடைக்கப் பெற்றது.


ஜமால் கசோகி படுகொலை தமது தூதரகத்தில் வைத்தே இடம்பெற்றுள்ளது என்பதை சவூதி ஒப்புக் கொண்டுள்ளமை பாராட்டத்தக்க முன்னெடுப்பு. இப்படுகொலை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். படுகொலை இடம்பெற்ற அன்று சவூதியிலிருந்து துருக்கியில் அமைந்துள்ள தூதரகத்திற்கு விஜயம் செய்திருந்த 15 பேர் கொண்ட குழு உட்பட 18 பேரை சவூதி கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களின் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நான் பாகுபாடற்ற, தலையீடற்ற விசாரணை குழுவொன்றை நியமித்து நீதியை நிலைநாட்ட அவர் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். யாருடைய கட்டளைகளை நிறைவேற்றும் பொருட்டு குறித்த 15 பேர் கொண்ட குழு துருக்கிக்குள் நுழைந்தது? எனும் கேள்விக்கான மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும்’ என அர்துகான் தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.படுகொலை தொடர்பில் எவர் மீதும் நேரடிக் குற்றச்சாட்டை முன்வைக்காத போதிலும் இளவரசர் பின் சல்மானை விடுத்து நேரடியாக மன்னர் சல்மானிடம் விசாரணை தொடர்பான குழுவை நியமிக்குமாறு அர்துகான் கேட்டுக் கொண்டதன் மூலம் சர்ச்சைக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானை ஓரங்கட்டியுள்ளார் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் இஸ்தான்புலில் இடம்பெற்றிருப்பதால் கைது செய்யப்பட்ட 18 பேருக்கான விசாரணைகள் துருக்கியில் வைத்தே நடைபெற வேண்டும் என்பதே எனது முன்மொழிவு என ஜனாதிபதி அர்துகான் சவூதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கூலிப்படை உறுப்பினர் ஒருவரின் தகவலுக்கமைய Yavlova பண்ணை பகுதிகளில் கசோகியின் சடலம் தேடப்பட்டு வருவதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் கசோகியின் சடலம் இருக்கும் இடம் தொடர்பான தெளிவான தகவல்களை சவூதி வெளியிட வேண்டுமென அர்துகான் கேட்டுக் கொண்டார்.


சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் சவூதி நிலைகுலைந்து போயுள்ளது. சவூதியில் இடம்பெறும் வர்த்தக மாநாடுகளில் பங்கேற்பதில் இருந்து பல்வேறு நாடுகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் தொடர்ந்தும் ஆயுதங்களை சவூதிக்கு விற்கப் போவதில்லை என ஜேர்மன் தெரிவித்துள்ளது. கசோகி படுகொலையுடன் தொடர்புபட்ட 15 பேர் அடங்கிய கூலிப்படையில் 7 பேர் இளவரசர் பின் சல்மானின் மெய்ப்பாதுகாவலர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இளவரசர் பின் சல்மான் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றது.


நன்றி : நவமணிவலுக்கும் ஆதாரங்களில் விழிபிதுங்கும் இளவரசர் மொஹம்மத் பின் ஸல்மான் . வலுக்கும் ஆதாரங்களில்  விழிபிதுங்கும் இளவரசர் மொஹம்மத் பின் ஸல்மான் . Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.