(வீடியோ) 2000ம் ஆண்டைய யாப்புத் திருத்தத்தையே தீயிட்டு கொழுத்திய பிரதமர் ரணில் அவர்களிடம், தமிழ் தலைவர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியுமா..?

திரு.நீலன் திருச்செல்வம், எம்.எச்.எம்.அஷ்ரப், லக்ஷ்மன் கதிர்காமர் போன்றவர்களின் கண்காணிப்பில்
1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ந் திகதி புதிய தீர்வுத்திட்டத்துக்கான யாப்பின் முன்மொழிவு வெளியிடப்பட்டிருந்தது. அத்திட்டத்தினை அன்றய எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சியினரும், பௌத்த மதகுருமாரும் கடுமையான முறையில் எதிர்த்திருந்தனர்.

அதன் பின்னர் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி மீண்டும் புதிய அரசியல்யாப்பு வெளியிடப்பட்டது. அதனையும் ஐ.தே.கட்சியும் பௌத்த பிக்குமாரும் கடுமையாக எதிர்த்ததினால், மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,  மீண்டும் 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது, அந்த புதிய யாப்பை மு.காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்கள்  பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து  மூன்று மணித்தியாலங்கள் பேசியிருந்தார் என்பதை நாம் அறிவோம்.
அப்போது தலைவர் அஷ்ரப் அவர்கள் தமிழ் தலைவர்களைப் பார்த்து இவ்வாறு கூறியிருந்தார், இந்த யாப்புத்திருத்தத்தை இன்று  நீங்கள் ஆதரிக்காது விட்டால், இனி ஒரு காலத்திலும் இப்படியான ஒரு தீர்வை உங்களால் பெறமுடியாமல் போகும் என்றும் எச்சரித்திருந்தார்.

ஆனால் இந்த தீர்வு யோசனையை தமிழ் மக்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவதாக குற்றம்சாட்டி ஐ.தே.கட்சி மீண்டும் கடுமையாக எதிர்த்திருந்தார்கள், அத்தோடு அந்த தீர்வு நகலை பாராளுமன்றத்துக்குள் வைத்தே  தீயிட்டும் கொழுத்தியிருந்தனர். அதே நேரம் தமிழர்களுக்கு இந்த தீர்வுகள் திருப்தியளிக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி தமிழ் தலைவர்களும் அதனை எதிர்த்தார்கள். அதனால் அந்த புதிய அரசியல்யாப்பை நிறைவேற்ற முடியாமல் போயிருந்தது.

அந்த தீர்வு பொதியிலே சொல்லப்பட்ட சில விடயங்கள்...
...................................   .............................  ...............
இலங்கை இறைமைகொண்ட ஒரு சுதந்திரக்குடியரசு என்பதுடன், இலங்கைக் குடியரசினால் கலைக்கப்படமுடியாத பிராந்தியங்களின் ஒன்றியமாக அமைக்கப்படவிருக்கும் பிராந்தியங்கள் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசு அல்ல என்பதை தெளிவுபடுத்தியதுடன், பல பிராந்தியங்களின் ஒன்றியம் எனவும் கொள்ளப்பட்டிருந்தது.

அதேபோன்று 1978ம்  ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 16வது திருத்தம் சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளையும் உத்தியோக மொழிகளாகப் பிரகடனப்படுத்திய போதிலும், அது யாப்பில் ஏற்படுத்தப்பட்ட ஒரு திருத்தமாகவே அமைந்திருந்தது. ஆனால் புதிய யாப்பின் 32வது உறுப்புரையின் படி  குடியரசின் தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும், ஆங்கிலமும் இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தேசிய அல்லது பிராந்திய சேவைக்கு ஆட்சேர்ப்பு பரீட்சைக்கு சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இலங்கைப்பிரஜைகள் அனைவரும் தோற்றுவதற்கு உரித்துடையவர்களென குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் நீதிமன்ற மொழிவிடயத்தில் சிங்களம், தமிழ் ஆகியவை நாடுபூராகவும் அமுல் படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மலையக மக்களின் பிரஜாவுரிமை சம்பந்தமாக 1964ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதியிலிருந்து இலங்கையில் நிரந்தரமாக வசிக்கின்றவரும், அவர்களின் சந்ததியினரும், வேறு நாட்டில் பிரஜாவுரிமை பெறாதவர்களும் இந்த அரசியலமைப்பு தொடங்கும் நாளிலிருந்து இலங்கைப் பிரஜை என்ற அந்தஷ்த்தை பெறுவார்கள் எனவும், 1988ம் ஆண்டின் 39வது இலக்க, நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் திட்டத்தின் கீழ் மேற்கூறிய அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிதாக அமைக்கப்படும் அரசியல்யாப்பில் வடகிழக்கு பிராந்தியத்தின் நிரந்த இணைப்பு தொடர்பாக குறிப்பிடப்படும்போது,....
....................    .................   .................
தொடர்ந்து வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமாக இருந்தால் கிழக்கு பிராந்திய மக்களின் கருத்து கணிப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் பெரும்பாலான மக்கள் ஆதரவாக வாக்களிக்கும்பட்சத்தில் இணைப்பை நிரந்தரமாக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் மூலம் முஸ்லிம்களின் விருப்பத்துக்கும் இடமளிக்கப்பட்டிருந்தது எனலாம். தேர்தல் ஒன்று நடந்தால் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படும் என்பதை அறிந்திருந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இந்தச் சட்டத்தை அதற்குள் புகுத்தியிருந்தார் என்பதே உண்மையாகும்.

இப்படி இன்னும்பல தீர்வுகளை தமிழர்களுக்கு வழங்கிய புதிய யாப்பு திருத்தத்தை ஐ.தே.கட்சியினரும், பௌத்த மகா சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததனால் நிறைவேற்ற முடியாமல் போனவிடயத்தை மறந்து,  இன்று தமிழ் தலைவர்கள்  அன்று தீர்வு திட்டத்துக்கு எதிரிகளாக இருந்த ஐ.தே.கட்சியினருடனும், அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் தீர்வை எதிர்பார்த்து நிற்பதானது நகைப்புக்குறிய விடயமாகவே அமைகின்றது எனலாம்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
(வீடியோ) 2000ம் ஆண்டைய யாப்புத் திருத்தத்தையே தீயிட்டு கொழுத்திய பிரதமர் ரணில் அவர்களிடம், தமிழ் தலைவர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியுமா..? (வீடியோ) 2000ம் ஆண்டைய யாப்புத் திருத்தத்தையே தீயிட்டு கொழுத்திய பிரதமர் ரணில் அவர்களிடம்,  தமிழ் தலைவர்கள் தீர்வை எதிர்பார்க்க முடியுமா..? Reviewed by Madawala News on October 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.