ஒலுவில்: ஒரு கடல் துயரம்.


தொண்ணூறுகளின் நடுப்பகுதி! அஷ்ரப் என்ற அரசியல் ஆளுமை கோலோச்சிக் கொண்டிருந்த காலமது.

ஒலுவிலில் வெளிச்சவீட்டை அவர் திறந்து வைத்தார். வெளிச்சவீட்டின் திறப்பு விழா ஒரு திருவிழாவைப் போல பல நாட்களாக இடம்பெற்றது. அதைப் பார்ப்பதற்கு அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரிலும் இருந்து மக்கள் ஒவ்வொரு நாளும் சென்றனர்.


வெளிச்சவீட்டிற்கு கிழக்குப் புறமாக அகன்றுவிரிந்திருந்த பெரும்நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு எம்.எச்.எம்.அஷ்ரப் தனது மக்களுக்காக உரையாற்றினார். 'இந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான துறைமுகம் அமைக்கப்படும். இப்பிரதேச மக்களின் வாழ்வு வளம்பெறும்' என்ற தொனியில் அவர் உரையாற்றியது இன்னும் காதுகளில் ஒலிக்கின்றது.


ஆனால், அஷ்ரப் போன்ற தலைவர்கள் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்கு கிடைக்காமல் போனதாலா என்னவோ, அன்று அவர் வாக்குறுதி அளிக்கும் போது தென்கிழக்கின் முஸ்லிம் மக்களுக்கு இருந்த சந்தோசமும் அகமகிழ்ச்சியும் இன்று இல்லாது போயிருக்கின்றது. அவர் நின்று பேசிய இடம் இப்போது கடலாக மாறியிருக்கின்றது.


முன்கூட்டியே முறையான சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்படாமல் அரசியல் நலனை முன்னிறுத்தியும் காட்டாப்பு காட்டுவதற்;காகவும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் உரிய பலனைத் தராது என்பதற்கு மிகப் பிந்திய அனுபவத்தை ஒலுவில் துறைமுகம் தந்து கொண்டிருக்கின்றது.


கடலரிப்பினால் ஒலுவில் மற்றும் அதற்கு வடக்கே உள்ள பிரதேசங்களில்; நூற்றுக்கணக்கான காணிகள் கடலில் மூழ்கியுள்ளன. இயற்கை அனர்த்தங்களாலும் யுத்தங்களினாலும்  அழிந்துபோன கிராமங்கள் போல ஒலுவிலும் ஆகிவிடுமோ என்ற அச்சம் தென்கிழக்கு முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. இதேவேளை, பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்ட ஒலுவில துறைமுகத்தின் நுழைவாயிலில் அடிக்கடி மணல் நிரம்புவதால், ஒரு மீன்பிடித் துறைமுகமாகக் கூட இத் துறைமுகத்தை வெற்றிகரமாக நடாத்திச் செல்ல மடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆக மொத்தத்தில் எழுநூறு கோடி ரூபாய் கொடுத்து ஒரு துயரத்தை முஸ்லிம்கள் வாங்கியிருக்கின்றார்கள்.


அஷ்ரபின் கனவு

சந்திரிகா அம்மையாரின் ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் முக்கிய தூணாக இருந்த மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் கனவுகளில் ஒன்றாக ஒலுவில் துறைமுகம் இருந்தது. அதன் முன்னோடியாகவே வெளிச்சவீடு பார்க்கப்பட்டது. அதற்காக 90களின் பிற்பகுதியில் இருந்தே காணிகள் சுவீகரிக்கும் பணிகள் ஆரம்பமானது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியில் துறைமுகத்தை நிர்மாணிக்கும் பணி மஹிந்த ராஜபக்ஷ அரசின் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் 2008ஆம் ஆண்டு ஆரம்பமாகி 2013 இல் நிறைவடைந்தது.இந்த துறைமுகத்தை அமைப்பதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சொல்ல முடியாது. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு ஆய்வுகளை மேற்கொண்ட ஒரு முஸ்லிம் பொறியியலாளரை உள்ளடக்கிய குழுவினர் இவ்விடத்தில் ஒரு துறைமுகத்தை அமைத்தால் நீண்டகாலத்தில்; கடலரிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்ததாக ஒரு ஆச்சரியமான தகவல் அறியக் கிடைக்கின்றது.


துறைசார் வல்லுனர்களின் கருத்துப்படி துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்கும் விடயத்தில் நீரோட்ட அளவீடு, அலைகளின் உயரம், அலைகளின் போக்கு, காற்றின் வேகம், மண் இடப்பெயர்ச்சி என்பன மிக முக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய காரணிகளாகும். எனவே சுமார் பத்து வருடங்கள் சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்படுவது நல்லதென்;று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் ஏனைய திட்டங்களைப் போல அவசரமாக இதனையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தமையால் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியிலேயே ஒலுவிலில் கடலாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஏட்டிக்குப் போட்டி


இந்த காலப்பகுதியில் அஷ்ரப் விட்டுச் சென்ற பொறுப்பைச் சுமந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமுக்கும், அதேபோல் தேசிய காங்கிரஸின் தலைவரான ஏ.எல்.எம்.அதாவுல்லாவுக்கும் இடையில் கிழக்கில் பலமான போட்டி நிலவியது. இந்த துறைமுகத்தை அமைப்பதற்கு சந்திரிகா அம்மையார் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தமையால் அதன் சாத்தியத்தன்மைகளையும் கடந்து அதனை நிறைவேற்ற வேண்டிய தேவை ஜனாதிபதி மஹிந்தவுக்கு இருந்தது எனலாம்.


மறுபுறத்தில், துறைசார்ந்தோலும் சூழலியல் ஆய்வாளர்களும் இத்திட்டத்தின் பின்விளைவுகள் மற்றும் நிலைபேண்தகு வெற்றி சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டனர். ஒரு தரப்பு மீனவர்களும் பொதுமக்களும் இதனை எதிர்ர்த்தனர். பெரும்பாலானோர் ஆதரவளித்தனர். அதாவுல்லாவையும் ஹக்கீமையும் மாறி மாறிச் சந்தித்து மூட்டிவிட்டு, அரசியல் செய்த மீனவ மற்றும் மக்கள் குழுக்களையும், சம்பந்தமே இல்லாமல் நஷ்டஈடு பெற்ற சிலரையும் அதிலும் கொமிஷன் வாங்கிய பேர்வழிகளையும் பற்றி ஏராளம் கதைகள் உள்ளன.


இப்படியாக ஒவ்வொரு தரப்பினரும் தங்களது அனுகூலங்கள் பற்றியே பெரிதும் சிந்தித்தனர். ஒலுவில் துறைமுகத்தின் நிலைபேண்தகு வெற்றி என்பது இரண்டாம் பட்சமாகவே இருந்தது. ஒலுவில் மற்றும் பாலமுனையைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் கரைவலை மீனவர்களாகவும், பெரிய முதலாளிகளின் தொழிலாளர்களாகவும் இருந்தனர். எனவே அவர்கள் தங்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தனர். பெருமளவானோரை இழப்பீடும் ஆறுதல் படுத்;தியது. ஒலுவிலில் பெரிய படகுகுகளை வைத்துக் கொண்டிருந்தவர்கள் வெளியூர் காரர்களுக்கு ஒலுவிலில் ஏற்படப் போகும் பாதிப்பு பற்றிய அக்கறை இருக்க வாய்ப்பில்லை. தமக்கு வருமானம் வந்தால் போதும் என்று இருந்தனர்.


ஆனால், இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய தரப்பினர் ஒலுவில் மற்றும் பாலமுனை மக்களாவர். அவர்கள்தான் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை இந்த துறைமுகத்திற்காக வழங்கிவிட்டு, தங்களது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்தவர்கள். அவர்களின் விருப்பமோ ஆசையோ இங்கு கேட்டறியப்படவில்லை. ஆனால் மறைந்த தலைவர் சொன்னதுபோல இங்கு ஒரு பெரிய துறைமுகம் வந்தால் தங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும், இளைஞர்களுக்கு தொழில் கிடைக்கும், ஒலுவில் பிரதேசம் வளர்ச்சியடையும் என்ற கனவும் நம்பிக்கையும் அவர்களுக்கிருந்தது.
ஆனால், அரசியல் காரணங்களை முன்னிறுத்தி அரசியல்வாதிகளும் தமக்கு நாலு பணம் வருமானம் கிடைத்தால் போதுமென வேறுசிலரும் நினைத்த நிலையில், முறையான சாத்தியவள ஆய்வின்றியும் - எச்சரிக்கைகளை புறந்தள்ளியும் முன்னெடுக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத் திட்டம் இன்று அஷ்ரபின் கோணத்தில் நின்று கனவு கண்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கியுள்ளது.

கடலரிப்பு பிரச்சினை


அம்பாந்தோட்டை துறைமுகம் போல, மத்தள விமானநிலையம் போல எதிர்பாத்த வெற்றியைத் தராத ஒரு செயற்றிட்டமாக ஒலுவில் துறைமுகத் திட்டமும் ஆகியிருப்பது மட்டுமன்றி, கொழும்பு சிற்றி செயற்றிட்டத்திற்காக கடலை நிரப்பியதாலும், அம்பாந்தோட்டை செயற்கை துறைமுகத்திற்காக நிலத்தை தோண்டியதாலும் ஏற்பட்ட எதிர்விளைவுகளை விட கடுமையான சூழலியல், சமூக தாக்கங்களை ஒலுவில் துறைமுக செயற்றிட்டம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.


இங்கு மூன்று வகையான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன:
ஒலுவில் தொடக்கம் நிந்தவூர் வரையான கடற்கரையோரத்தின் சுமார் 250 மீற்றர் அகலமானதும் 4 கிலோமீற்றர் நீளமானதுமான கரையோரம் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளையும் அதி; இருந்த தோட்டந்தொரவுகளையும் கடலிடம் காவு கொடுத்திருக்கின்றனர்.


ஒருபுறம் கடலரிப்பு நிகழ்ந்து கொண்டிருக்க, மறுபுறம் துறைமுகத்திற்குள் கப்பல்கள் (பெரிய படகுகள்) உள்நுழையும் வாயிலில் மண் நிரம்புவதாகும்.
இத்தனை பெரிய முதலீட்டோடும் அமையச் செலவோடும் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டத்திலிருந்தான மீள்பெறுகை மிகக் குறைவாக காணப்படுதல் ஆகும்.


இதில் முதல் இரு பிரச்சினைகளும் முதன்மையானவை என்பதுடன் அவை இரண்டையும் தீர்த்து வைக்குமிடத்து மூன்றாவது பிரச்சினை தானாகவே தீர்க்கப்படுவதற்கான நிகழ்தகவுகள் இருக்கின்றன.


அவ்வாறான தீர்வை வேண்டியே கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஒலுவில் மக்களும் மீனவ சமூகமும் போராடி வருகின்றது. இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒலுவிலுக்கு வந்து இதற்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருவதாக மக்கள் மன்றத்தில் பல தடவை வாக்குறுதி அளித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள், அம்பாறை மாவட்ட எம்.பி.க்கள் என்று சொல்லப்படும் வகையினர், அரச உயரதிகாரிகள் எல்லோருடைய வாக்குறுதிகளும் ஏட்டுச் சுரக்காய்களாகவே போய்க் கொண்டிருக்கின்றது.


இயற்கையிலேயே இலங்கையின் தென்கிழக்கு கரையோரம் அதிக மணல் இடப்பெயர்ச்சிக்கு இலக்காகும் பிரதேசம் எனக் கூறப்படுகின்றது. ஹம்பாந்தோட்டையில் இருந்து திருகோணமலை வரைக்குமான கரையோரத்தில்  துறைமுகம் கட்டுவது சவாலான விடயமாகும். அதை மீறி கட்டுவதானால் அதிக மண்ணரிப்புக்கு இலக்காவதும் துறைமுகத்திற்குள் மண் சேருவதும் தவிர்க்க முடியாதது என்று விடயமறிந்தோர் கூறுகின்றனர். அதுவே இன்று ஒலுவிலில் நமது கண்முன்னே நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கின்றது.


நிலைமை இப்படியிருக்க, இதோ நிரந்தரத் தீர்வு தருகின்றோம், பலகோடி ரூபா செலவில் துறைமுகத் திருதப்பணிகள் வந்து கொண்டிருக்கின்றது என்று வாயால் வடைசுட்டதுததான் மிச்சம் என்று ஆகியிருக்கின்றது. இப்படியாக அரசியல்வாதிகள் அறிக்கை விட்டுக் கொண்டும் அரசாங்கம் கண்டுகொள்ளாமலும் இருந்த காலத்தில் கடலரிப்பின் தாக்கம் மேலும் பன்மடங்காகி இருக்கின்றது. மக்கள் மீண்டும்; போராடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. அந்த வகையில் இந்தப் போராட்டத் தொடரில், ஆகப் பிந்திய போராட்டங்கள் மிக அண்மையில் நடைபெற்று ஓய்ந்திருக்கின்றன.
இரு போராட்டங்கள்


ஒலுவில் துறைமுகத்தின் கப்பல் நுழைவாயிலில் மண் நிரம்பியுள்ளது என்றும் அதனை அகற்றி மீன்பிடிக்க வழியேற்படுத்தித் தரவேண்டும் என்று கூறியும் மீனவர்களும் மீன்பிடி முதலாளிமாரும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அரசியல் பின்னணிக் காரணமும் உள்ளது எனக் கூறப்படுவது உண்மையென்றால், மீனவர்கள் அட்டாளைச்சேனையில் நடாத்திய அந்த போராட்டத்தின் மீதான மதிப்பு கேள்விக்குட்படுத்தப்படுவதாகவே அமையும். எவ்வாறாயினும், நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் தற்காலிகமாக கனரக வாகனங்களால் மண் அகழப்பட்டதும் அவர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.


மறுபுறுத்தில், நீண்டகாலமாக மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரான ஒலுவில் பொது மக்கள் கடலரிப்பினால் ஏற்படும் அழிவைத் தடுத்து நிறுத்தி இருப்பை காப்பாற்றுவதற்கான அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். அவதானிகள் எதிர்பார்த்தபடி, அந்த பேரணியும் எந்தவிதமான ஆக்கபூர்வமான நிரந்தரத் தீர்வோ அல்லது தீர்வுக்கான சமிக்கையோ இல்லாமல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.


முஸ்லிம் சமூகத்தின் போராட்டங்கள் ஆளும்வர்க்கத்தினால் கண்டு கொள்ளப்படாமல் இருப்பதற்கு, மாற்றாந்தாய் மனப்பாங்கு மட்டுமன்றி இதுவும் ஒரு காரணம் எனக் கூறமுடியும். அதாவது, தமிழர்கள் தமது நில உரிமைக்காக பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள்  ஒரு தற்காலிகத் தீர்வையோ, வாக்குறுதியையோ நம்பி அல்லது நாட்கள் செல்லச் செல்ல மனம்வெறுத்து தமது போராட்டத்தை நிறுத்திக் கொள்கின்ற போக்கு மாறும் வரை நம்மை நமது தலைமைகளும் அரசாங்கமும் ஏமாற்றுவதற்கு பின்வாங்கப் போவதில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலதிக செலவு

ஒலுவில் துறைமுகத்தை சீரமைப்பதற்கு அரசாங்கம் கணிசமான தொகையை வருடாந்தம் செலவு செய்து கொண்டிருக்கின்றது. கொழும்பு துறைமுகத்தின் தென்புறமாக இதேபோன்ற கடலரிப்பு ஏற்பட்ட போது இருந்து மொறட்டுவை வரை காலத்துக்குக் காலம் கற்கள் போடப்பட்டன. ஆனால் அது முழு வெற்றியளிக்கவில்லை. எனவே கடலரிப்புக்கு கற்கள் போடுவது நிரந்தர தீர்வாகாது. எனவே அதற்குமப்பாலான திட்டங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.


ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்புசார் பிரச்சினைகள் இலகுவாக தீர்க்கக் கூடியதல்ல என்றாலும் கூட, துறைமுக நிர்மாணத்துறையில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற அரபு நாடுகளின் அல்லது சீனாவின் தொழில்நுட்பத்தை இதற்காக பெற்றுக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொண்டாலும், அதனை ஒரு முதற்தெரிவாக அரசாங்கம் எடுக்காது என்றே ஊகிக்க முடிகின்றது.
ஒலுவில் துறைமுகத்திற்காக பெருமளவு காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தாலும், இத்தனை  பிரமாண்டமான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை இன்னும் மீன்பிடி துறைமுகமாகவே அரசாங்கம் வரையறை செய்கின்றது. எனவே மீன்பிடித் துறைமுகம் ஒன்றுக்கு நிச்சயமற்ற ஒரு சீரமைப்புப் பணிக்காக இன்னும் அதிக மேலதிக முதலீடு செய்ய அரசாங்கம் விரும்பாது.


அத்துடன், அம்பாந்;தோட்டை துறைமுகத்திலும் அதற்கு தெற்கிலுள்ள கடற்பரப்பிலும் சீனாவின் ஆதிக்கம் இருக்கின்றது. இதனை இந்தியா உன்னிப்பாக நோக்குவதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் ஒலுவில் துறைமுகத்தையும் ஒரு பெரிய துறைமுகமாக விஸ்தரித்தால் இவற்றில் ஒரு நாடு அதன்மேல் ஒரு கண்வைக்கும் என்றும் அரசாங்கம் சிந்திப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கின்றது.


எது எப்படியிருப்பினும், அரசாங்கமும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்கு கூடிய விரைவில் நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமையாகும். துறைமுகத்தின் நுழைவாயிலில் மண்ணை அகழ்ந்தால், தமக்கு பாதிப்பு என்று அண்மையில் மக்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர். மண்ணை அகழச் சொல்லி மீனவர்கள் வீதிமறியலில் ஈடுபட்டனர்.

முதன்மைப் பிரச்சினை


உண்மையில், மேற்படி இரண்டு தரப்பாரின் பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. ஆனால், இங்கே நாட்பட்ட பிரச்சினையும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதும் ஒலுவில் மக்களின் கோரிக்கையாகும். அதற்கு சமாந்திரமாகவோ அல்லது உடனடுத்தாகவோ மீன்பிடிப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதற்குக் காரணங்கள் வெளிப்படையானவை.
ஒலுவில் மக்கள் இழப்பீடுகளைப் பெற்றிருந்தாலும் மாற்றுக் காணிகள் கிடைத்திருந்தாலும், ஒலுவில் துறைமுகத்திற்காக நிறைய இழந்தவர்கள் இவர்களே. வெளிப் பிரதேசங்களில் இருந்து வருவோரோ, பெரும் மீனவ முதலாளிமாரோ இழந்ததை தவிர இது அதிகமாகும். இப்பிரதேசம் அபிவிருத்தி அடையும், பிள்ளைகளுக்கு தொழில் கிடைக்கும் என்ற கனவிலேயே அவர்கள் இதனையெல்லாம் விட்டுக் கொடுத்தார்கள்.


ஆனால் துறைமுகத்தில் அஷ்ரப் சொன்னபடி அதிகமான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும் இல்லை ஒலுவிலின் சாதாரண மக்கள் உழைக்கவும் இல்லை. மறுபுறத்தில் அவர்களது பல நூறு காணிகளும் தென்னந்தோப்புக்களையும் கடலரிப்புக்கு இரையாக்கியுள்ளனர்.


இக் கடலரிப்பின் பாதிப்பு அயல் ஊர்களை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேச கரைவலை மீனவர்கள் தொழில்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தத்தில், அதிக விட்டுக் கொடுப்புக்களைச் செய்த ஒலுவில் மக்களின் கடலரிப்பு பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும்.
சமகாலத்தில், காலத்திற்கு காலம் துறைமுகத்தில் நிரம்புகின்ற மண்ணை அள்ளிக் கொண்டு தற்காலிக தீர்வை தேடாமல், இதற்கு நிரந்தர தீர்வை கண்டு வினைத்திறனான துறைமுகமாக இதனை மாற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. இத்தனை முதலீடுகள் செய்து உருவாக்கப்பட்ட துறைமுகத்தை வெறுமனே மூடிவிட வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுவதோ இதிலும் போட்டாபோட்டி அரசியல் செய்வதோ நல்லதற்கல்ல.

உடனடிக் கடமை


ஒலுவில் துறைமுகம் என்பது இது அஷ்ரபின் கனவாகும். எனவே அஷ்ரபின் கொள்கையை பின்பற்றுவதாக சொல்கின்ற எல்லா அரசியல்வாதிகள் மீதும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. குறிப்பாக, மு.கா.வின் தலைவர் என்ற அடிப்படையிலும் ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தர தீர்வு தருவதாக பல தடவை வாக்குறுதிகளை வழங்கி நம்ப வைத்தவர் என்ற அடிப்படையிலும் றவூப் ஹக்கீமுக்கு கூடிய பொறுப்புள்ளது.இந்த செயற்றிட்டத்தை அமுல்படுத்துவதில் பங்கெடுத்தவர் என்ற வகையில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் இதனை கண்டும் காணாது போல் இருக்க முடியாது. அதேபோல், கிழக்கில் மக்கள் காங்கிரஸ் கட்சியை விஸ்தரித்து, ஒலுவில் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்தவர் என்ற வகையில் றிசாட் பதியுதீனும் தன்மீதான பொறுப்பை நிறைவேற்ற வேண்டியிருக்கின்றது. நிரந்தர தீர்வுக்காக கடைசிமட்டும் குரல் கொடுக்க வேண்டியது கிழக்கின் ஒவ்வொரு எம்.பியினதும் தனிப்பட்ட பொறுப்புமாறும்.
அதேவேளை, இது மஹிந்தவின் திட்டம் என்ற அடிப்படையில் கூட்டு எதிரணி இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், முஸ்லிம்களின் ஆணையைப் பெற்ற அரசாங்கம் கடலரிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கும், மண் நிரம்புவதால் மீனவர்களுக்கு ஏற்படும் சிக்கலுக்கும் நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும்.


இது, கடலினால் ஏற்பட்ட துயர்  மட்டுமல்ல, ஒரு கடலளவு துயரமுமாகும்.
ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 22.10.2018)
ஒலுவில்: ஒரு கடல் துயரம். ஒலுவில்: ஒரு கடல் துயரம். Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.