ஒலுவில் துறைமுக விவகாரம்: நிரந்தரத் தீர்வு எப்போது?


நாட்டில் அரசியல் குழப்பம் ஒரு புறம், மக்கள் போராட்டங்கள் மறுபுறம் இதனிடையே கொலை, தற்கொலை,
போதைப் பொருள் வர்த்தகம், பெண்கள், சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்,  ஊழல். மோசடிகள் எனத் தொடரும் சமூக விரோதச் செயற்பாடுகள் அவற்றுடன்  பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு என  நகரும் நாட்டு நடப்புக்கள், மக்களை சுமைக்குள் தள்ளியிருப்பதோடு கவலை கொள்ளவும் செய்திருப்பதை அவதானிக்க முடிகிறது.


இந்நிலையில், கூட்டாட்ச்சியைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணியினர்; படாதபாடுபட்டு வருகின்றனர். இதற்கான வியூகங்களை வகுத்துச் செயற்படுவதும், அறிக்கைகளை விடுவதும் என்ற காட்சிகள் தேசிய அரசியலில் காட்சியளிக்கும் சந்தர்ப்பத்தில்; மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும், உரிமைகளை வேண்டியும், நலன்களைக் கோரியும்  போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.


அந்தவகையில், விடுதலையின்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் தரப்புக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்கள், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்குமாறும், நாள் சம்பளத்தை 1000 ரூபாவால் அதிகரிக்குமாறும் கோரி பெருந்தோட்ட மக்கள் நடாத்தி வரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்,  கொழும்பு நகரிலிருந்து குப்பைகளை ரயில் மூலம் புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்குட்பட்ட அருவாக்காடு பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தள மாவட்ட மக்கள்  நடாத்தி வரும் உண்ணாவிரத மற்றும் சத்தியாகிரகப் போராட்டங்கள் என்று தொடரும் நிலையில,; ஒலுவில் துறைமுக படகு நுழைவாசலில் மூடியுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி மீனவர்களும,; கடலரிப்புக்கு நிரந்தர தீர்வு எட்டிய பின்னரே மணலை அகற்ற வேண்டுமென பிரதேச மக்களும் நடாத்தி வந்த போரட்டங்கள் கடந்த வியாழக்கிழமை முடிவுக்கு வந்துள்ளமையும் காண முடிகிறது.


இப்போரட்டங்களின் பின்னணியில் அரசியல் சித்து விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டு வருகின்ற இவ்வேளையில் ஒலுவில் துறைமுகத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்து அறிய வேண்டிய தேவையுமுள்ளது.

ஒலுவில் துறைமுகமும் வரலாற்றுப் பின்னணியும்

தென்கிழக்கு பெற்றெடுத்த ஆளுமைக்கோர் உதாரணமாக, வாழ்ந்து மறைந்த அஷ்ரப் தென்கிழக்கின் முக வெற்றிலையாய் கல்முனை மாநகரையும் தென்கிழக்கின் கனவு நகரமாய் ஒலுவிலையும் கண்டார்.
தனது அரசியல் அதிகாரம் கொண்ட ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் தனது சமூகத்தின் தசாப்தத் தேவைகளை தான் வாழ்ந்த தசாப்தத்திலேயே நிறைவு செய்ய நினைத்தார்.


அவ்வாறு, அவர் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுத்திய பலவற்றில் மிக முக்கியமான பணிகள் இரண்டு. ஒன்று  தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றையது ஒலுவில் துறைமுகம்.


தேசத்தின் தென்கிழக்குக் கரையோரப் பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமே ஒலுவில். இக்கிராமத்தை நகராகக் கனவு கண்ட அஷ்ரப் இங்கேயே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும,; துறைமுகத்தையும் நிறுவுவதற்கான பணிகளைத் தொடங்கினார்.
1998ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதிய வர்த்தமானி மூலம் அப்போதைய துறைமுக அமைச்சராகவிருந்த அஷ்ரபினால் - குறிப்பிட்ட வர்த்தமானித் திகதியிலிருந்து இலங்கை துறைமுக அதிகாரசபைச் சட்டப் பிரிவு வழங்கும் அதிகாரத்தின் கீழ் ஒலுவில் துறைமுகம் கொண்டுவரப்படுவதாக அரசாங்க அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது.

இதன் மூலம் ஒலுவிலுக்கு ஒரு துறைமுகம் வரும் என்பது மக்களிடையே உறுதியானது.

துறைமுகம் என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கிச் செல்வதற்குரிய இடமாகும். துறைமுகங்களை இயற்கைத் துறைமுகங்கள், செயற்கைத் துறைமுகங்கள் என இருவகைப்படுத்தலாம். இயற்கைத் துறைமுகங்கள் இராணுவ பொருளாதாரக் காரணங்களால் முக்கியத்துவமுடையவையாக இருந்து வருகின்றன. துறைமுகங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பறைசாற்றும் முக்கிய அம்சமாகவும் உள்ளன.

இத்தகைதொரு முக்கியத்துவமிக்க, ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின்  முதுகெலும்பாகக் கருதப்படக் கூடியதொரு துறைமுகத்தை ஒலுவிலில் நிறுவி அதில் கப்பல்களை வரக் கனவு கண்ட மறைந்த அஷ்ரபின் கனவு முன்னாள்; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகிந்தச் சிந்தனையினூடாக நிஜமாகிது.


நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஆகக் குறைந்த பௌதிக வளங்களைக் கொண்ட தென்கிழக்கின் கரையோரப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார நிலைகளை உயர்வடையச் செய்யும் நோக்குடன் ஒலுவில் துறைமுக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
மீன்பிடி மற்றும் வணிகத் துறைமகமாக நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு டென்மார்க் அரசாங்கத்தின் 46.9 மில்லியன் யூரோ கடனுதவித் திட்டத்தின் கீpழ் இத்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் 2008 ஜுலையில் 56 ஹெக்டர் நிலப்பரப்பில்; ஆரம்பமானது.


இரு கட்டங்களாக நிர்மாணிப்பதற்கான திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இத்துறைமுகத்தின் முதற் கட்டப் பணிகள் நிறைவடைந்து 2013;  செப்டம்பர் மாதம் முதலாம் திகதி  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால்; திறந்து வைக்கப்பட்டது.


மீன்பிடித் துறைமுகமானது ஐஸ் உற்பத்திச்சாலை, களஞ்சிய வசதி, மீன் ஏல விற்பனைத் தளங்கள், மீன் பொதி செய்தல், மீன் வலை பழுதுபார்த்தல் நிர்வாகக் கட்டடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு வசதிகளைக்; கொண்;டு நிர்மாணிக்கப்பட்டது.


அதேபோன்று, வணிகத் துறைமுகமானது 5000 தொண் நிறைகொண்ட கப்பல்கள் வந்து செல்லக் கூடியதாகவும் எதிர்காலத்தில் இரண்டாம் கட்ட நிர்மாண நடவடிக்கைகளின்போது, 16 ஆயிரம் தொண் நிறைகொண்ட கப்பல்கள் வந்து செல்லக் கூயடி வசதியைக் கொண்டதாகவும் அமையுமென இத்துறைமுகம் திறந்து வைக்கப்பட்ட தினத்தில்;; கூறப்பட்டது.
இத்துறைமுகத் திறப்பின் ஊடாக மறைந்த தலைவர் அஷ்ரபின் தென்கிழக்கின் கனவு நகரம் வளம்கொண்டதாக ஒளி பெறும்.; அங்குள்ள வளங்கள் மேலும் வளம்பெறும். நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புக்களைக் பெறக் கூடிய வாய்ப்புக்களும் ஏற்படும். பாதைகள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் போக்குவரத்துக்களும் சிரமமின்றி சீராக இடம்பெறுவற்கான வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படும் என பல்வேறு பலன்கள் கிட்டும் என அன்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தவிடுபோடியாகி இன்று இத்துறைமுகத்தையே மூடுங்கள் என்று அறிக்கை விடும் அளவிற்கு துறைமுகத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது.

அறிக்கையும் போராட்டங்களும்.

ஒரு பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது அல்லது அந்தப் பிரதேசத்தில் ஒரு துறை அபிவிருத்தி செய்யப்படுகின்ற நிலையில,; அபிவிருத்தியினால் பயன்களும் இருக்கும் பயன்களின் பக்க விளைவுகளும் காணப்படும். பயன்களின் பக்கவிளைவுகளை மாத்திரம் கருத்திற்கொண்டு, பயன்கள் கிடைப்பதைத் தடுப்பதில் நியாயமில்லை. அது யதார்த்தமுமாகாது.
தென்கிழக்கு பலலைக்கழகத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு அப்போது பல எதிர்பலைகள் உருவானது.


இன்று இப்பல்கலைக்கழகத்தினால் பயன்பெறுவர்கள் அதிகம். அன்று இப்பல்கலைக்கழகம் உருவாகாது தடுக்கப்பட்டிருந்தால் தென்கிழக்கு பேசப்பட்டிருக்காது என்பதை நினைவில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
மறைந்த அஷ்ரபின் சிந்தனையில் உதித்து உருவாக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் பெறப்பட்டுள்ள பயன்மிக்க அடைவுகள் போன்று அவரின் மற்றுமொரு சிந்தனையில் உதித்த ஒலுவில் துறைமுகத்தினால் பயன்மிக்க அடைவுகளை குறித்த பிரதேச மக்கள் அடையவில்லை என்பது நிதர்சனம்.


இத்துறைமுக நிர்மாணத்தின் பின்னர் எத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படும், இப்பிரதேச மக்களும், மீனவர்களும் எத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்குவர் என்ற ஆய்வுகளை மேற்கொள்ளாது தற்போது எதிர்நோக்கும்  துறறைமுக நிர்மாணத்தின் பக்கவிளைகளை ஆராய்ந்து அவற்றைச் சாதகமாக்கத் தேவையான அவசியமான நடவடிக்கைக்களை எடுப்பதில் தவறு செய்தது யார் என்ற கேள்விக்கு அஷ்ரபினால் உருவாகி பதவி ஆசனங்களில் அமர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என்று மக்களே கூறுவதில் தவறிருக்காது.


ஏனெனில் அஷ்ரப் மரணித்து 18 வருடங்கள் கடந்து விட்டது. இந்தப் 18 வருடங்களில் ஐந்து பாராளுமன்ற தேர்தல்கள நடைபெற்று இருக்கின்றன. இந்த ஐந்து பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சரவை அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை வகித்த, இன்றும் வகித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதி நிதிகளினாலும,; ஏன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளினாலும் ஒன்றிணைந்து தங்களுக்குள்ள அரசியல் அதிகாரங்களினால் துறைமுகத்தின் பக்க விளைவுகளத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டிருந்திருந்தால் இன்று இத்துறைத்தினால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகளைத் தடுத்திருக்க முடியும். இத்துறைமுகத்தை மூடுங்கள் என்ற கோஷங்களையும, கோரிக்கைகளையும், போராட்டங்களையும் நடாத்தியிருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.


கட்சி அரசியலை வளர்ப்பதற்கும், எதிரும் புதிருமாக அறிக்கைகளை விடுவதற்கும் செவிடப்படும் நேரங்களும், கலந்துரையாடல்களும், திட்டங்களும், ஒரு அபிவிருத்தித் திட்டம் எத்தகைய சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிந்திப்பதற்கும், ஆதற்காக கலந்துரையாடுவதற்கும், ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கும் நேரங்களையும், அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்த மக்கள் பிரதிநிதிகளை இன்னும் எத்தனை காலங்களுக்கு இம்மக்கள் நம்பி ஏமாறப் போகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேற்பதை வெறுமனே நிராகரித்திட முடியாது.


இந்நிலையில், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மாற்றுவழிகளை ஆரோக்கியப்படுத்தாது எழும் பிரச்சினைகளை மாத்திரம் மக்கள் மயப்படுத்தி அரசியலில் குளிர்காய்வதற்காகவும், மக்கள் நலன்களில் என்றும் அக்கரையோடு செயற்படுகின்றோம் என மக்களிடையே தங்களை புடம்போடுவதற்காகவும் மக்கள் பிரதிநிதிகளினால் விடப்படும் அறிக்கைகள்; அரசியல் சாயம் கொண்டதாகவும,; தேர்தல் வெற்றிகளுக்கான முதலீடாகவுமே சமூகப் பார்வையில் நோக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.


ஒலுவில் கடலரிப்பால் அப்பகுதி மக்கள் பாரிய சேதம் ஏற்பட்டிருப்பதால் ஒலுவில் துறைமுகத்தை அகற்றுவதற்கு அல்லது அததை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதர பிரதி அமைச்சர் பைசல் காசிம் அறிக்கை விட்டிருந்தார்.
அவரது அறிக்கையில், அம்பாறை மாவட்ட கரையோர கிரமாங்களும், மீனவர்களும் கடலரிப்புக் காரணமாக பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதற்கு ஒலுவில் துறைமுகமே காரணம். இத்துறைமுகத்தின் நிர்மாணத்தின் பக்கவிளைவுகள்; ஒலுவில் பிரதேசத்தை அண்டியுள்ள பிரதேசங்களை தொடர் கடலரிப்புள்ளாக்கி வருவதுடன், பல்வேறு பாதிப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. பத்து வருடங்களாக இது தொடர்பில் பேசி வருகின்றோம். ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து ஒரு கப்பல் கூட வரவில்லை. வருமானம் எதுவும் இல்லாமல் செலவை அரசு செய்துகொண்டு இருக்கின்றது. மக்களின் பணம் இவ்வாறு வீண் விரயம் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது, இத்துறைமுகத்தை மூட வேண்டும் அல்லது அததை மீன துறைமுகமாக மாற்ற வேண்டும் இன்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரதி அமைச்சர் இத்துறைமுகத்தால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி சிந்தித்காமல் அரசியல் காரணங்களுக்காக சில அரசியல்வாதிகள் இதை நிர்மாணித்ததால் இன்று மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.


துறைமுகத்தை மூட வேண்டும் என்று குறிப்பிட்டு பிரதி அமைச்சர் மூடுவதால் ஏற்படும் இழப்புக்கள் குறித்தும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அத்தோடு மூடிவிடுவதற்குப் பதிலாக குறிப்பிட்டுள்ள மாற்றுக் யோசனையை முன்நகர்த்தினால் அதுவும் மீனவர்களுக்கும். மக்களுக்கு நன்மைபயக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


ஒலுவில் துறைமுக நிர்மாணத் ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் போது காணிகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் தங்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் துறைமுக படகு நுழைவாயிலில் மூடியுள்ள மண்ணை அகற்றக்கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்ற வியாழக்கிழமை வரை அம்பாறை மாவட்ட அனைத்து மீனவர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடாத்திய வேளை, ஒலுவில் கடற்கரைப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்புக்கு நிரந்தத் தீர்வை ஏற்படுத்திய பின்னரோ மணலை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும், தற்போது மனணலை அகற்ற எடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமெனவும் கோரி பிரதேச மக்கள் போராட்டங்களை மேற்கொண்டனர் .


இரு தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக மேற்கொண்ட இப்பேராட்டங்களின் பின்னணியில் அரசியல் சித்த விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஏனெனில் அமைச்சர்களை அழைத்து வந்து கூட்டங்களை நடாத்தியதும், துறைமுகத்தை மூடுங்கள் அல்லது மீனவத்துறைமுகமக மாற்றுங்கள்; என்று அறிக்கை விட்டதும்;; முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதிகளே என மக்கள் சுட்டிகாட்டுவதையும் பதிவிட்டாக வேண்டும்.

அமைச்சர்கள் வருகையும் நம்பிக்கையும்.


ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால், ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினை மற்றும் மீனவர் ஆகியவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில்  அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின்பேரில் கடந்த 3ஆம் திகதி ஒலுவில் பிரதேசத்திற்கு வருகை தந்த துறைமுகம், கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயற்றிட்டங்கள் குறித்த விபரங்களை பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், பிரதேச மக்கள் உள்ளிட்டவர்களுடனான சந்திப்பின்போது வெளிப்படுத்தினார். இதில் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த கப்பல்துறை அமைச்சர் ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக மாத்திரமல்லாமல், வர்த்தகத் துறைமுகமகா மாற்றியமைப்பதன் மூலம் இப்பிரதேசத்தின் பொருளாதாரத்தையும்,மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும் என்று தெரிவிந்திருந்தார்.


அமைச்சரின் கருத்துக்களின் பிரகாரம், ஒலுவில் துறைமுகத்தை மூடும் நிலைப்பாடு தற்போது அரசாங்கத்திற்கு இல்லை என்பது புலப்படுவதுடன் இத்துறைமுகத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக மாற்று வழிகள் வினைத்திறன்மிக்கதாக முன்னெடுக்கப்பட்டு துறைமுக நிர்மாணத்தின் பக்கவிளைவுகள் எந்த மக்களுக்கோ, பிரதேசங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் இந்நடவடிக்கைகள் இத்துறைமுகத்தினால் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் கப்பல்துறை அமைச்சரின் ஒலுவில்  விஜயத்தின் போது மணலை அகற்றுவதற்காக பாரிய அகல்வுக் கப்பலை கொள்வனவு செய்வதற்கு நான்கு மாதங்கள் வரை செல்லும் என்று கூறிய விடயங்களில் மீனவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.


நம்பிக்கை இழப்பின் காரணமாக கடந்த சனிக்கிழைமை 6ஆம் திகதி முதல்  ஏட்டிக்குப் போட்டியாக போரட்டஙகள் இப்பிரதேசத்தில் நடைபெற்று வந்த நிலையில்தான் மணல் அகழ்வு தொடர்பாக கடற்றொழில், நீரியல் வளத்துறை , கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் காமினி விஜித முனிசொய்சாவுடனான கடந்த 09ஆம் திகதி சந்திப்பில் ஒரு வார காலத்திற்குள் மணலை அகழவதற்கான நடவடிக்கையெடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழியின் பிரகாரம் இப்பேராட்டம் மீனவர் அமைப்புக்களினால் கைவிடப்பட்ட நிலையில் பிரதேச மக்களும் ஏட்டிக்குப் போட்டியாக மேற்கொண்ட போராட்டத்தையும் கைவிட்டுள்ளனர்.
உறுதிமொழியும் எதிர்பார்ப்பும்.


கரையோரப் பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்படுவது என்பது துறைமுக நிர்மாணத்திற்கு முன்னுள்ள பிரச்சினையாகும். அதேபோன்று துறைமுக படகு நுழைவாயிலானது 1998ஆம் ஆண்டின் பின்னரா காலப் பகுதிகளில் பல தடவைகள் மணலால் மூடப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மணல் நுழைவாயிலை மூடுகிறது என்பதற்காக அதற்கான மாற்று நடவடிக்கைகளை ஸ்தீரப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
ஏனெனில், துறைமுக நிர்மாணத்தினால் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக இதனை மூடுமாறு வலியுறுத்தப்பட்டால், மூடுவதனால் ஏற்படுகின்ற விளைவுகள் பல்வேறு கோணங்களில் பாதிப்பை பிரதேசத்திற்கும் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்தும் என சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக இப்பிரதேசங்களில் தற்போது நிலவுகின்ற பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கச் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த இத்துறைமுகத்தை மூடும் நடவடிக்கைகள் வலுவூட்டும் எனவும் சமூக ஆர்வலர்களினால் சுட்டிக்காட்டப்படுகிறது.


அத்துடன், இப்பிரச்சினைக்கு தீர்வைக்கான பல்வேறு ஆலோசனைகள் சமூக ஆர்வலர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாலோசனை குறித்தும் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும்.  இருப்பினும், இத்துறைமுக நிர்மாணத்திற்குரிய ஆய்வு முடிவுகளின் சாதக, பாதகங்கள் தொடர்பில் முழுமையாக தெளிவு பெறப்படாமல் மக்களுக்கு வினைத்திறான விழிப்புணர்வுகளை வழங்காமல் நிர்மாணிக்கப்பட்டதன் விளைவுகளினால் மில்லியன் கணக்கான இழப்பீடுகளை இப்பிரதேசம் இழந்திருக்கிறது.
மீனவர்கள் பலர் பாதிக்;கப்பட்டிருக்கிறார்கள். ஒலுவில் பிரதேசத்தை அண்டிய பிரதேசங்கள் கடலரிப்புக்குள்ளாகி இருக்கின்றன. வயல் காணிகள், தென்னைத் தோட்;டங்கள் என பல்வேறு இழப்புக்களைச் சந்தித்துள்ள மக்களின் உணர்வுகளின் அதிர்வுகளாக இடம்பெறுகின்ற போராட்டங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதோடு, துறைமுக நிர்மாணத்தினால் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை அடைவதற்கான திட்டங்கள் முறையாகவும,; வினைத்திறனுடனும் இடம்பெற வேண்டும்
அத்தோடு, மக்களின் பிரச்சினைகளில் குளிர்காயும் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் ஏற்பட்டுள்ள அத்தனை பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வையே மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த நிரந்தரத் தீர்வு எப்போது என்பதே இன்றைய கேள்வியாகும்.

BY: எம்.எம்.ஏ.ஸமட்

ஒலுவில் துறைமுக விவகாரம்: நிரந்தரத் தீர்வு எப்போது? ஒலுவில் துறைமுக விவகாரம்: நிரந்தரத் தீர்வு எப்போது? Reviewed by Madawala News on October 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.