முஸ்லிம் தனியார் சட்டம்- பாகம்2


-வை எல் எஸ் ஹமீட்-
இஸ்லாத்தில் திருமணத்திற்கு வயதெல்லை கிடையாது. பொதுவாக பராயமடைதலையே
வயதெல்லையாக கொள்ளப்படுகிறது. எல்லாம் அறிந்த ஏகனின் சட்டத்தில் பிழையிருக்க முடியுமா? அவ்வாறு பிழையிருக்கின்றது; என நினைத்தால் நம் ஈமான் கேள்விக்குறியாகாதா?

அவ்வாறு பிழை இருக்கின்றதென்றால் அது அச்சட்டத்தில் இருக்கமுடியாது. வேறு எங்கோதான் இருக்கவேண்டும்; என்பதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்? தேடலுக்கு தயாரில்லாமல் இருக்கின்றோம்?

நமது தற்போதைய சட்டத்தில் வயதெல்லை 12. ஆயினும் காதியின் அனுமதியுடன் அதற்குமுன்னரும் செய்யலாம். இதனை நமது முன்னோர்கள் காரணமில்லாமலா அறிமுகப்படுத்தி இருப்பார்கள்?

பொதுச்சட்டத்தைத் தழுவி வயதெல்லையை 18 ஆக்கக் கோருகிறார்கள் நமது பெண்ணியவாதிகள். ஒரு பெண்ணிற்கு பராயமடைந்ததும் திருமணமுடிக்க மார்க்கம் அனுமதித்திருந்தும் அதனை நாம் சட்டம் என்ற பெயரில் தடுத்து அதன்காரணமாக அப்பெண் தவறு செய்தால் அதற்குரிய பாவம் அச்சட்டத்தைக் கொண்டுவரக் காரணமாக இருந்தவர்கள், அதை மௌனமாக ஆமோதித்தவர்கள் அனைவரையும் சாராதா?

இலங்கை மற்றும் மேற்கத்தைய நாடுகள் உட்பட பல நாடுகள் திருமண வயதெல்லை 18. அதற்காக அந்நாடுகளில் அவ்வயதிற்குமுன் பெண்கள் எல்லாம் கட்டுப்பாடாக இருக்கிறார்களா? பத்து வயது, பதினொரு வயது, பன்னிரண்டு வயதுப் பெண்பிள்ளைகள் தாய்மையடைந்த வரலாறுகள் மேற்கத்தைய நாடுகளில் இல்லையா? திருமண வயதெல்லை அவர்களைக் கட்டுப்படுத்தி விட்டதா?

திருமண வயதெல்லை தளர்த்தப்பட்ட நம் சமூகத்தில் அவர்களுடன் ஒப்பிடுகையில் எத்தனை வீதம் அவ்வாறான தவறுகள் நடைபெறுகின்றன.

தன் பருவமடைந்த பாடசாலை செல்லும் பெண்பிள்ளையை பிரித்தானியாவில் விட்டுவிட்டு தொழில் நிமித்தம் இலங்கையில் தங்கியிருந்த ஒரு பெண்ணிடம் அவரது 18 வயதையடையாத மகளை தனியாக விட்டிருப்பதனால் தவறுநடக்க வாய்ப்பிருக்கிறதல்லவா? என்று கேட்கப்பட்டபோது அவர் கூறிய பதில் “ அவளுக்கு early pregnancy “ (இளவயதில் கற்பமடைதல்) தொடர்பாக போதுமான ஆலோசனை வழங்குவதென்பதாகும்.

இந்திய எழுத்தாளர் ஒருவர், ‘ தாம் அமெரிக்கா சென்றபோது அமெரிக்க நண்பர் ஒருவருடைய வீட்டில் தங்கியிருக்கின்றார். அப்பொழுது அந்த அமெரிக்கரின் மனைவி தனது மகளுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றார். அப்பொழுது “ போதுமான அளவு மாத்திரைகள் கொண்டு சென்றாயா? என்று திரும்பத்திரும்ப கேட்டிருக்கின்றார்.”

இதனை அவதானித்த அந்த எழுத்தாளர் “ ஏன், உங்கள் மகளுக்கு சுகமில்லையா?” எனக் கேட்டிருக்கின்றார். அதற்கு அப்பெண், அவர் நன்றாகத்தான் இருக்கின்றார். ஏன் அப்படிக் கேட்டீர்கள்? என வினவியிருக்கின்றார். அதற்கு அவ்விந்தியர், “ இல்லை, போதுமான அளவு மாத்திரை எடுத்துச்சென்றாயா? எனக்கேட்டீர்கள். அதுதான் கேட்டேன்.” எனக்கூறியிருக்கின்றார்.

அதற்கு அப்பெண், “ அது கருத்தடை மாத்திரை” . மகள் பாடசாலை நண்பர், நண்பியருடன் சுற்றுலா சென்றிருக்கிறார். எனப் பதிலளித்திருக்கின்றார். இதுதான் மேற்கத்திய வாழ்க்கை என்று ஒரு சஞ்சிகையில் பதிவிட்டிருந்தார்.

எனவே, மேற்கத்தைய நாட்டில் அவர்கள் கவலைப்படுவது ‘ இளவயது கற்பமே தவிர உறவு அல்ல. அதனையா நமது பெண்ணியவாதிகளும் கோருகிறார்கள்?

அவர்களைப் பொறுத்தவரை திருமண வயதெல்லை 18 ஆக இருந்தாலும் பிரச்சினையில்லை. 50 ஆக இருந்தாலும் பிரச்சினையில்லை. திருமணமே முடிக்கக் கூடாது; என்று சட்டம் கொண்டுவந்தாலும் பிரச்சினையில்லை. ஏனெனில் அவர்களுக்கு திருமணமே ஒரு பிரச்சினையில்லை.

அண்மையில் நடாத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டில் 50% மேற்பட்ட பெண்கள் தற்போது திருமணமே முடிப்பதில்லை; என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களைப் பேட்டிகண்டபோது, பலர், திருமணம் என்பது அது எழுதப்படுகின்ற கடதாசியின் பெறுமதிக்குக்கூட இல்லை; It is not even worth the paper on which it is written. என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

உங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பீர்கள்; என்று கேட்டபோது, “ நாங்கள் சம்பாதிக்கின்றோம்; எங்கள் குழந்தைகளை வளர்ப்போம். We are earning, we can support our children என்று கூறியிருக்கின்றார்கள். இதுதான் திருமணம் பற்றிய அவர்களது பார்வை.

இந்தியா
————-
இந்தியாவில் திருமணவயது 18. அந்த வயதுக்குக் குறைந்த ஒரு பெண்ணுடன் விருப்பத்துடனோ அல்லது சமய ரீதியான திருமணத்தின் பின்னோ இணைந்தாலும் அது கற்பளிப்புக் குற்றமாகும்.

கடந்த ஒருவருடத்திற்கு முன் உறவுக்கு சம்மதம் வழங்குவதற்கான வயதெல்லையை 16 ஆக குறைத்திருக்கிறார்கள். ஆனால் திருமண வயதெல்லை தொடர்ந்தும் 18 ஆகும்.

அதாவது 16 வயதை அடைந்த பெண்ணுடன் அவளது சம்மதத்துடன் சேரலாம், சேர்ந்து வாழலாம்; ஆனால் திருமணம் முடிக்கக் கூடாது. அவ்வாறு சேர்வதன் மூலம் கற்பமடைந்தாலும் அது குற்றமில்லை. ஆனால் அப்பொழுதும் திருமணமுடிக்க முடியாது. 18 வயதுவரை காத்திருக்க வேண்டும். அவன் அவளை கைவிட்டு விட்டு சென்றால் அவளது நிலை அதோ கதிதான்.

எனவே, மேற்கத்திய அல்லது அவர்களைப் பின்பற்றுகின்றவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது “ அந்தக் கடதாசியில் எழுதுவதே தவிர ஒரு ஆணும் பெண்ணும் சேருவதற்கான அங்கீகாரமல்ல.

மாறாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ‘அந்தக் கடதாசியில் எழுதுவதல்ல. மாறாக ஒரு ஆணும் பெண்ணும் சேருவதற்கு “ வலி” கொடுக்கின்ற அங்கீகாரமாகும்.’ இன்றைய உலகில் சில நடைமுறைப் பாதுகாப்பிற்காக “அந்தக் கடதாசியில்” எழுதலாம். எழுதாமல் விடுவதால் அது திருமணம் இல்லை; என்றாகிவிடாது.

எனவே, இங்கு கவனிக்க வேண்டியது அவர்களும் நாமும் ‘ திருமணம்’ என்ற ஒரே சொல்லையே பயன்படுத்துகிறோம். அச்சொல்லுக்கு அவர்களது அர்த்தம் வேறு; நமது அர்த்தம் வேறு. எங்களது ‘ திருமணம்’ என்ற சொல்லின் அர்த்தமே புரியாதவர்கள், அல்லது ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவ்வாறு எங்களது திருமணத்தைப்பற்றி பேசமுடியும். எங்களது, எங்களுடைய மார்க்கத்தினது, அதனைக் கூறும் உலமாக்களது நியாயங்களை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்?

எனவே, இஸ்லாத்திற்கு முரணான அந்நிய சக்திகளின் ஏஜண்டுகளாக உலாவரும் இந்த கலிமாச்சொன்ன பெண்ணியவாதிகளுடன் பேசுவதே தவறல்லவா? பெண்களுடன் பேசுவதென்பது வேறு. இந்த பெண்ணியவாதிகளுடன் பேசுவதென்பது வேறு.

ஏன் பெண் உலமாக்கள் இல்லையா? அவர்களுடன் பேசுங்கள். பெண்களின் உரிமையில், நலனில் அக்கறைகொண்ட தாயீக்கள் இருக்கின்றனர்; சமூக சேவையாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் பேசுங்கள்.

அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக, சரீஆ வையே மாற்றியமைக்கத் துடிக்கும், குர்ஆன் ஹதீசிற்குப் பதிலாக சர்வதேச மனித உரிமையை அடிப்படையாக வைத்து சரிஆ சட்டத்தை மாற்றியமைக்கக் கோருகின்ற இந்த பெண்ணியவாதிகளுடன் பேசி சரிஆ வை அழிக்கப்போகிறீர்களா?

“வலி” தேவையில்லை
——————————-
இன்று இந்த பெண்ணியவாதிகள் “ வலி” தேவையில்லை; என்று வாதாடுமளவு சென்றிருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் சமம். ஆணுக்கு ‘ வலி’ தேவையில்லை எனும்போது பெண்ணுக்கு எதற்காக ‘ வலி’ எனக் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை இறைவனிடம்தான் கேட்கவேண்டும். ஏனெனில் நபிமார்களும் வரமாட்டார்கள் கேட்டுச்சொல்வதற்கு.

, வலி’ இல்லையேல் இஸ்லாத்தில் திருமணமே இல்லை. இக்கட்டான சமயத்தில் காதி ‘வலி’ யாகிறார். இவர்கள் ‘வலி’ தேவையில்லை என்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா? இவர்கள் கூறும் திருமணம் வேறு! நமது திருமணம் வேறு என்று. பேசுவது இவர்கள் அல்ல. இவர்களது எஜமானர்கள் பேசவைக்கிறார்கள்.

இலங்கையில் இதுவரை ஓரினத்திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை. அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டால் ஆணும் பெண்ணும் சமம். எனவே, மனித உரிமை அடிப்படையில் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் முடிக்கலாம். முஸ்லிம் சட்டத்தை மாற்றுங்கள் என்று இவர்கள் கொடிபிடிப்பார்கள். அதற்கு யார் ‘ வலி’ சொல்லுவது. எனவே, இப்பொழுதே ‘ வலி’ யை எடுத்துவிடப்பார்க்கிறார்கள்.

இவர்களது குற்றச்சாட்டு
———————————-
இளவயதுத் திருமணத்தால் பெண்பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது, உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள், உடலியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். உலகத்தைப் புரிந்துகொள்ளும், தெரிவை மேற்கொள்ளும் பக்குவம் வருவதற்குமுன் திருமணம் அவர்கள்மேல் திணிக்கப்படுவதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை, மகிழ்ச்சியான எதிர்காலத்தை இழக்கிறார்கள். சிறுவயதிலேயே குழந்தை வளர்ப்பு எனும் சுமை அவர்கள்மேல் சுமத்தப்படுகிறது; என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

இவர்களிடம் கேட்கவிரும்புகின்ற முதல் கேள்வி: ஒரு வருடத்திற்கு சராசரி எத்தனை திருமணங்கள் நடைபெறுகின்றன? அவற்றுள் எத்தனை வீதம் இளவயதுத் திருமணம்? அவற்றுள் எந்தெந்த வயதில் எத்தனை வீதம்? (Breakdown) இவைதொடர்பான தரவுகள் உங்களிடம் இருக்கின்றதா? இதுவரை அவ்வாறான ஒரு தரவைக் காட்டியிருக்கின்றீர்களா? எதுவுமே உங்களிடம் இல்லாமல் எதைவைத்து ஆர்ப்பரிக்கிறீர்கள்? அத்திபூர்த்தாற்ப்போல் எங்காவது ஒன்று இரண்டு நடைபெறுவதை வைத்து அல்லாஹ்வின் சட்டத்தையே மாற்றவேண்டுமா?

கல்வியில் பாதிப்பு
————————-
இளவயதுத் திருமணத்தால் கல்வி பாதிக்கப்படுகின்றதா? கல்வி பாதிக்கப்படுவதால் இளவயதுத் திருமணம் இடம்பெறுகின்றதா? இவை தொடர்பான ஏதாவது ஆய்வு உங்களிடம் உள்ளதா?

இன்று பல்கலைக்கழக நுழைவில், உத்தியோகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இருக்கின்றார்கள். முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்றால் ஆசிரியர்களைவிட ஆசிரியைகளே அதிகம் இருக்கிறார்கள். பாரிய அளவில் இளவயதுத் திருமணம் நடந்தால் இவை எப்படி சாத்தியமாகின்றன. அல்லது இளவயதுத் திருமணத்திற்கு மத்தியில் இவை நடைபெறுகின்றன; என்றால் இளவயதுத் திருமணம் அவர்களைப் பாதிக்கவில்லை; என்பது பொருளாகும். உலகில் விதிவிலக்கில்லாத விதியே கிடையாது. ஒரு சிறிய விகிதத்தில் விதிவிலக்காக நடைபெறுபவற்றிற்காக விதியையே மாற்றவேண்டுமா?

அரிதான இளவயதுத் திருமணம் பெரும்பாலும் குக்கிராமங்களில், சேரிகளில்தான் நடைபெறுகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம் வறுமை. வறுமையின் காரணமாக கல்வியைத் தொடரமுடியாமை.

ஒன்றில் தாயும் தந்தையும் வெளிநாடு செல்ல பிள்ளை பாட்டியின், உறவினர்களின் தயவில் வளரும். அல்லது ஒருவர் வெளிநாடு, ஒருவர் அதிகாலையிலே தொழிலுக்குச் செல்லல். அல்லது இருவரும் தொழிலுக்கு செல்லல், அல்லது பெற்றோரின்மை. இவ்வாறு பலகாரணங்களால் அப்பிள்ளை கல்வியைத் தொடரமுடியாத, அல்லது பாதுகாப்பற்ற நிலைமையில் வாழுகின்றது. பாதுகாப்பான வீடும் இல்லை.

இவ்வாறு பாடசாலைக்கும் செல்லமுடியாத, பாதுகாப்புமற்ற ஒரு சூழலில் அப்பிள்ளை தாமாக வழிதவறிச் சென்றாலோ அல்லது சீரழிக்கப்பட்டாலோ இந்த NGO க்களும் பெண்ணியவாதிகளும் அந்தப்பிள்ளையின் எதிர்காலத்திற்கு வழிசொல்வார்களா? அதனால் அப்பிள்ளைக்கு ஏற்படப்போகும் உடலியல், உளவியல் பாதிப்புக்கு தீர்வு தருவார்களா?

இழக்கப்போகும் மகிழ்ச்சியை மீட்டுத்தருவார்களா? கர்ப்பம் தரித்துவிட்டால் அதனால் ஏற்படும் கறை; அதனால் சீரழிக்கப்படும் அப்பிள்ளையின் எதிர்காலத்திற்கு பதில்தருவார்களா?

திருமணம் என்பது அது எழுதப்படுகின்ற காகிதத்தின் பெறுமதிக்குகூட இல்லை; என்ற கலாச்சாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட மனித உரிமைக் கோட்பாட்டைச் சொல்லி வாழ்க்கையின் அத்திவாரமே திருமணம்தான் என்கின்ற ஒரு சமூகத்தின் கட்டமைப்பைச் சீர்குலைக்க முனையலாமா?

தீர்வு
———
இந்த ஏழைகளின் வறுமையைப் போக்குவது; அவர்களுக்குத் தெளிவூட்டுவதுதான் தீர்வு. எத்தனை ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை இந்த பெண்ணியவாதிகள் உயர்த்தியிருக்கிறார்கள்? எத்தனை ஏழைச் சிறுமிகளின் கல்விச் செலவைப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்? இவ்வாறு இஸ்லாத்தைச் சிதைப்பதற்குNGOக்களிடம் கூலி பெற்று தங்கள் வாழ்வை உயர்த்தியிருக்கிறார்கள்.

எனவே, புரிந்துகொள்ளுங்கள். விதிவிலக்கான சிலசூழ்நிலைகளில் அப்பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக, எதிர்காலத்திற்காக அப்பெற்றோருக்கு இருக்கும் சலுகையை இல்லாமலாக்கி அவர்களின் எதிர்காலத்தை சிதைத்துவிடாதீர்கள்.

முடிந்தால் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள். அப்பிள்ளைகளின் கல்விச் செலவைப் பொறுப்பெடுங்கள். அவர்களுக்கு தெளிவூட்டுங்கள். இளவயதுத் திருமணம் தானாகவே மறைந்துவிடும்.

சட்டம் எங்கும் நூறுவீதம் வெற்றியளிப்பதில்லை. சட்டம் கொண்டுவந்தாலும் இவற்றை நூறுவீதம் கட்டுப்படுத்த முடியாது. மாறாக அவர்களது வாழ்வு சீரழிக்கப்படும்.

இறுதியாக அல்லாஹ், எல்லாம் அறிந்தவன். அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை ஹறாமாக்குகின்றஉரிமை யாருக்குமில்லை; என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
முஸ்லிம் தனியார் சட்டம்- பாகம்2 முஸ்லிம் தனியார் சட்டம்- பாகம்2 Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.