அநீதிகளை தட்டி கேட்கும் என்னை, குழப்பவாதி என பிரச்சாரம் செய்கின்றனர் .


யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பின்னர் மக்கள் தங்களது வாழ்வியலை கொண்டு செல்வதற்காக
சில முன்னெடுப்புகளை செய்துவரும் நிலையில் அவர்களுக்கு அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறுகின்ற சலுகைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் அவை கட்சி சார்ந்து அல்லது ஒரு இனம் சார்ந்து அல்லது தமக்கு சார்பாக இருக்கக்கூடியவர்கள் சார்ந்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் பொழுது அவற்றை தயக்கமின்றி தட்டி கேட்பதால் என்னை குழப்பவாதி என சிலர் பிரச்சாரம் செய்து வருவதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சிலிருந்து மீள்குடியேற்ற செயலணி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டம் தன்னால் தடை படுவதாகவும் மக்கள் மத்தியில் சிலர் தவறான முறையில் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவித்து விளக்கமளிக்கும் வகையில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மீள்குடியேற்ற செயலணி தொடர்பாக மக்கள் மத்தியில் பலரும் தவறான முறையில்  பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் மீள்குடியேற்ற செயலணி ஊடாக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் என்னால் தடை படுவதாகவும் அதற்கெதிராக நான் செயற்பட்டு வருவதாகவும் சில அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்களால் மக்களை திசை திருப்பும் வகையில் வதந்திகளை கூறித் திரிகின்றனர்.

ஆனாலும் இப்பொழுது மக்கள் சரியாக விழித்துக் கொண்டுள்ளனர் ஏமாற்று அரசியலை மக்கள் மத்தியில் முன்னெடுக்கும் நபர்கள் பற்றியும் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.

மீள்குடியேற்ற செயலணியானது கடந்த காலங்களில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சிலேயே இருந்தது.அது தற்பொழுது பிறிதொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இதில் 4 இணை தலைவர்கள் இருக்கிறார்கள் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்த இரு  இனைத்தலைவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு தலைவர்களும் காணப்படுகின்றனர்.

மீள்குடியேற்றம் விவகாரம் தொடர்பான அனைத்து விடயங்களும் எமது அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

ஏனெனில் வன்னி மாவட்ட மக்களை மீள்குடியேற்றம் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்து சிலர் நீண்ட கால அரசியலை மேற்கொண்டு வருகின்றனர் என்றாலும் இப்பொழுது நான் அரசியலுக்குள் பிரவேசித்ததன் பின்னர் மீள்குடியேற்றம் தாண்டிய சில செயற்பாடுகள் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவை பாரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தாங்கிக்கொள்ள முடியாத கட்சி சார் அரசியலை மேற்கொள்வோர் இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

என்றாலும் நான் இவ்வாறான சலசலப்புகளுக்கு அஞ்சப்போவதில்லை என்பதுடன் எந்த இடத்தில் அரசினால் கிடைக்கப்பெறுகின்ற வேலைத்திட்டங்களில் ஊழல் மோசடிகள் அல்லது பாதிக்கப்பட்ட மக்களை உரிய முறையில் சென்றடையாமல் இருக்கின்றதோ அந்த இடத்தில் காதர் மஸ்தான் எனப்படும் நபர் இருப்பார் என்பதை என்னை நம்பி பாராளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதுமாத்திரமல்லாமல் எனக்கு பிரதியமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றதன் பின்னர் என்னுடன் இருந்த சிலர் தமக்கு மிக முக்கிய பதவிகளை வழங்குமாறு கோரி முரண்பட்டனர் ஆனாலும் அவ்வாறான பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நியமிக்கப்படவேண்டுமென நான் தெரிவித்ததை அடுத்து என்னிடம் இருந்து விலகிச் சென்று வேறொரு அரசியல் வாதியுடன் இணைந்து தற்பொழுது என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் என்னுடன் இருந்த காலங்களில் அவ்வாறான நபர்களுக்கு தெரியும் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் மக்களுக்கு சரியாக சென்றடைய வேண்டும் என்பதில் நான் எவ்வளவு உறுதியாக இருந்தேன் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள்.

ஏனெனில் அரசியல் மூலமாக எனக்கு பொருளாதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கவில்லை அதனாலேயே அரசியலுக்குள் பிரவேசித்ததன்பின்னர் அரசினால் கிடைக்கப் பெறுகின்ற செயற்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் என நான் என்னுடைய செயற்பாடுகளை ஆரம்பித்தேன்.

அதுமாத்திரமல்லாமல் தன்னை ஆதரித்தால் மாத்திரமே அல்லது தன்னுடைய கட்சி சார்ந்தவர்களை ஆதரித்தால் மாத்திரமே அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து வாக்குகளை சூறையாடும் அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை நான் அறிந்தேன்.

இதனை தடுக்கும் முகமாக பல இடங்களிலும் பிரச்சாரங்களை முன்னெடுத்ததுடன் இதில் பலரையும் இணைத்துக் கொண்டு இப்பொழுதும் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.

மிக விரைவில் மக்களே அவர்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும் என்பதை நான் உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் எனது அரசியல் ஒருபொழுதும் ஒரு இனம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ எக்காலத்திலும் இருக்காது.

அந்த வகையில் தான் மிக நீண்ட நாட்களாக முல்லைத்தீவில் நிலவிவந்த ஆலயம் ஒன்றினது காணி விவகாரத்தை தீர்த்து வைத்தேன்.

எனினும் அங்கிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் சமாதானமாக வாழும் மக்கள் மத்தியில் நான் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவும் தெரிவித்து ஊடகங்களில் கூக்குரலிட்டு இருந்தார்.

எனினும் நான் இது தொடர்பில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை ஏனெனில் குறித்த பகுதி மக்களே அது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்திருந்தனர்.

அத்துடன் நான் அவரிடம் விடயமாக கேட்டுக்கொள்கின்றேன் தயவு செய்து மக்களை ஏமாற்றாமல் முடியுமாக இருந்தால் ஏதேனும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அம்மக்களது வாழ்வில் ஒளியேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அதை விடுத்து மக்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்று அவர்களை விறகு கட்டைகளாக்கி அதில் நீங்கள் குளிர் காய்வதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனவே தயவு செய்து கட்சி சார் அரசியலை முன்னெடுக்காமல் அல்லது எதிர்கால தமது இருப்பை தக்க வைக்கும் அரசியலை முன்னெடுக்காமல் மனிதாபிமான அரசியலை முன்னெடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

மேலும் மீள்குடியேற்ற செயலணியில் நானும் ஒரு உறுப்பினராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளேன்.

அந்த வகையில் நான் மீள்குடியேற்ற செயலணி ஊடாக இடம்பெறுகின்ற செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு மேலதிக விளக்கங்கள் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் உங்கள் மனசாட்சியின் அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் நிலையிலிருந்து சிந்தித்தால் இவ்வாறான விமர்சனங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்பதையும் நான் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒவ்வொரு தேர்தல் நெருங்குகின்ற பொழுதும் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவது வழமை என்றாலும் நீதியை எப்பொழுதும் பாதிக்கப்பட்டவன் பக்கத்திலிருந்து பார்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என அவரால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகப்பிரிவு
அநீதிகளை தட்டி கேட்கும் என்னை, குழப்பவாதி என பிரச்சாரம் செய்கின்றனர் . அநீதிகளை தட்டி கேட்கும் என்னை, குழப்பவாதி என பிரச்சாரம் செய்கின்றனர் . Reviewed by Madawala News on October 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.