கல்முனையில்: அரசியல் அதிர்வு!


-எம்.எம்.ஏ.ஸமட் -
சமூக உறவு, சமூக ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமை, இன நல்லிணக்கம் என்ற சொற்றொடர்கள் அறிக்கைகளிலும்,
மேடை பேச்சுகளிலும் காணப்படுகிறதே தவிர, அவற்றை யதார்த்தமாக்குவதற்கான செயற்பாடுகளை நிஜயத்தில் காண முடியாமல் இருக்கிறது.


அரசியல் நலன்களுக்காக நாட்டையும், பிராந்தியங்களையும், பிரதேசங்களையும், சமூகங்களையும், அமைதி இழக்கச் செய்கின்ற, பிரித்தாள நினைக்கின்ற மனோநிலை இன்னும் சில அரசியல்வாதிகளிடமிருந்து அகலவில்லை.அரசியல் நிகழ்ச்சிநிரல்களின் பலாபலன்ளுக்காகவும், இழந்துபோகும் சமூக ஆதரவை தூக்கி நிறுத்துவதற்காகவும் ஒரு சில அரசியல்வாதிகளினாலும், அமைப்புக்களினாலும் சமூகங்களை பிளவுபடச் செய்ய எடுக்கப்படுகின்ற முயற்சிகள், பிராந்தியத்தினதும், சமூகங்களினதும் ஒற்றுமையை விரும்புகின்ற ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புக்களினால் முறியடிக்கப்படுவதை காண முடிகிறது.


சமூக உறவுகளை உடைத்து அதில் குளிர்காயும் அரசியல் சித்து விளையாட்டுக்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் நெடுங்காலமாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறானதொரு அரசியல் சித்து விளையாட்டு அண்மையில் கல்முனையில் நடந்தேறியுள்ளமை தமிழ்பேசும் சமூக உறவை நேசிக்கின்றவர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.


கல்முனையை தென்கிழக்கின் முகவெற்றிலை என்று கூறுவதிலும் அண்மைக்காலமாக முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாட்டை சாய்ந்தமருது நுழைவாயிலுள்ள வரவேற்றுப் பலகை புடம்போட்டிருக்கிறது. கல்முனை மாநகரின் தென்பகுதி எல்லையாகப் கருதப்படுகின்ற சாய்ந்தமருதூரின் நுழைவாயிலில் 'கல்முனை மகாநகரம் உங்களை வரவேற்கிறது' என்ற வாசகம் அழிக்கப்பட்டு நகரம் உங்களை வரவேற்கிறது என மாற்றப்பட்டிருப்பதானது தென்கிழக்கின் முகவெற்றிலை கல்முனை என்பதில் உள்ள முரண்பாட்டின் வடிவமாகவே அரசியல் பார்வையில் புரிதலுக்குரியதாகவுள்ளது.


கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிடையிலான உறவு நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. இந்த நீண்டகால வரலாற்றில் சிதைவை ஏற்படுத்தியது இப்பிரதேச தமிழ், முஸ்லிம் அரசியல் நகர்வுகள்தான்.  இந்நகர்வுகளுக்கு இப்பிரதேச  அரசியல்வாதிகளின் ஒரு சில ஆதரவாளர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மைகளாகும். கணத்த காயங்களுக்குள்ளாகி ஆற்றப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த வரலாற்றை மீண்டும் காயத்துக்குள்ளாக்க விரும்புகின்ற அரசியல்வாதிகளுக்கு புதிய தலைமுறையினர் துணைபோகக்கூடாது என்பதே கல்முனையின் சமூக உறவை விரும்புகின்றவர்களின் வேண்டுகோளாகவுள்ளது.


கல்முனையும் தமிழ் பேசும் சமூகமும்
பல்லாண்டு காலமாக கல்முனைப் பிரதேசத்தில் வாழும் இரு பிரதான சமூங்களான முஸ்லிம்களும், தமிழர்களும் மிக ஐக்கியமாக வாழ்ந்து வந்த காலங்களுக்கான வரலாற்றுச் சான்றுகள் இப்போதும் வரலாறாகவுள்ளன. கல்வி, கலாசார விழாக்கள் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் என பொதுவான பல விடயங்களில் ஒன்றிணைந்து செயற்பட்ட அந்த பொற்காலங்கள் காலத்தால் மறக்கப்பட முடியாதவை என கல்முனைப் பிரதேசத்தின் முதியோர் கூறுவதைக் கேட்க முடிகிறது.


ஐந்து அல்லது ஆறு தசாப்த காலங்களுக்கு முற்பட்ட காலங்களில் தமிழ் வாத்தியார்களே முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி போதித்துள்ளனர். முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அதிபர்கள் சேவையாற்றியுள்ளனர். முஸ்லிம்களின் வைத்தியத் தேவையும் தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வைத்தியர்களினாலேயே அக்காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  அதேபோன்று, இப்பிரதேச தமிழ் மக்களின் தொழில் மற்றும் வர்த்தகத் தேவைகள் இப்பிரதேச முஸ்லிம்களினால் நிறைவேற்றப்பட்டுள்ளன.


இவ்வாறு இப்பிரதேசத்தில் இரு சமூகங்களும் பயனடையத்தக்க வகையில் சேவை செய்யதவர்களை நினைவு கூறும் முகமாக கல்முனையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்த டாக்டர் முருகேசுப்பிள்ளையின் பெயரை கல்முனையின் வடக்கேவுள்ள வீதியொன்றுக்கு சூட்ட வேண்டும் என்ற பிரரேரனை கடந்த மாநகர ஆட்சியில் கொண்டுவரப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையை சுட்டிக்காட்ட வேண்டும்.


இதேவேளை, கல்முனை நகரிலுள்ள சந்தாங்கேணி மைதானத்திற்குச் செல்லும் வீதிக்கு கல்முனை பட்டின சபையின் முதல் தவிசாளர் இஸ்மாயில் காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு அது திறக்கப்பட்ட வேளை இவ்வீதிப் பெயர்பலகை உடைத்து சிதைக்கப்பட்டதையும், கல்முனையின் அபிவிருத்தித் தந்தை என வர்ணிக்கப்படும் மறைந்த அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பெயர் கல்முனை பொது நூலகத்திற்கு சூட்டப்;பட்டு இப்பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்ட பின்னர் அதுவும் அடித்து நொருக்கப்பட்டதையும் நினைவுபடுத்துவதும் அவசியமாகவுள்ளது.
இருந்தபோதிலும், இவற்றிற்குப் பெயர் வைப்பதில் இப்பிரதேச தமிழ முஸ்லிம் சமூக அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புக்களுக்கிடையில் கலந்தாலோசிக்கப்பட்டு ஒரு பொதுவான முடிவின் பிரகாரம் இப்பெயர் வைத்தல் நடைபெற்றிருந்தால் இப்பெயர் தொடர்பான பிரச்சினையினால், இப்பிரதேசத்தின் கௌரவத்துக்குரியவர்களின் கௌரத்திற்கு கலங்கம் ஏற்பட்டிருக்காது என்பதை பலர் தற்போது உணர்ந்திருக்கிறார்கள்.


இப்பிரதேசத்தில் தமிழர்களின் உறவு இல்லாமல் முஸ்லிம்களும் முஸ்லிம்களின் உறவு ஒத்தாசை இல்லாமல் தமிழர்களும் வாழ முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கல்வி, மருத்துவம், வியாபாரம், சமூக மேம்பாடு பிரதேச அபிவிருத்தி என அன்றாட வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளில் இரு சமூகங்களும் பிண்ணிப்பிணைந்து காணப்படுவதை நிராகரிக்க முடியாது.


இருந்தபோதிலும், கல்முனையின் இரு சமூகத்தினதும் ஒற்றுமைப்பட்ட வரலாறு ஒரு சில காலங்கள் சிதைவடைந்தும் காணப்பட்டது. இருப்பினும், 1990களின் பின்னர் இவ்விரு சமூகங்களிடையேயும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு இன ரீதியான சமூகக் காயங்கள் ஏற்படவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் இன ரீதியாக, இப்பிராந்திய சமூகங்களை சிந்திக்கச் செய்தது. இதற்கு பிராந்திய அதிகாரத் தரப்பினரும், ஆயுதம் ஏந்திய இளைஞர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.


கல்முனைப் பிராந்தியத்தில் வாழும் தமிழ,; முஸ்லிம் சமூகங்களை பிரித்தாளுவதற்கும் அவர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் இப்பிராந்தியத்தில் பேரினவாதம் எடுத்த பல முயற்சிகள் தோற்றுப் போன போதிலும், ஒரு சில முயற்சிகளில் வெற்றி கண்டது. அவற்றில் ஒன்றுதான் இப்பிராந்தியத்தில் இன ரீதியாக பாடசாலைகள் உருவாக்கப்பட்டதும் பிரதேச செயலகம் இன ரீதியாகத் தோற்றுவிக்கப்பட்டதுமான கசப்பான நிகழ்வுகளாகும்.


இப்பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் இனவுறவில் விரிசலை உருவாக்க பிரதேச செயலகப் பிரிப்பை கருவியாக, ஆயுதமாக  பேரினவாதம் பயன்படுத்த முனைந்துள்ளது. இன்றும் அது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவற்றை ஊக்குவிக்கும் குரல்;  ஆங்கங்கே எதிரொலிக்கப்படுகின்றபோது அவற்றிற்கு எதிராக அல்லது அக்குரல்களுக்கு சமாந்திரமாக கருத்துக்களும் வாதப் பிரதி வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.


 இவ்வாறான கருத்துக்களும் வாதப் பிரதிவாதங்களுக்கும் மத்தியில் கல்முனை தமிழ் உப பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கோவில் மற்றுமொரு வாதப்பிரதிவாதங்களுக்கும் ஊடக செய்திகளுக்கும், அறிக்கைகளுக்கும் இடமளித்திருப்பதைக் காண முடிகிறது.
கோவில் நிhமாணமும் அரசியல் அதிர்வுகளும்
1993ஆம் ஆண்டு முதல் கல்முனை பிரதேச உப அலுவலகமாக இயங்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இந்துக் கோவில் நிர்மாணம் கல்முனை அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கோவில் நிர்மாணம் சட்டவிரோதமானது எனவும் இதை அகற்றக்கோரியும் கல்முனை மாநகர முதல்வரினால் கல்முனை நீதிவான் நீதி மன்றில் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.


இவ்விடத்தில் நியாயமான கேள்விகளும் எழுகின்றன. அதாவது, இக்கோவில் கட்டுமாணப் பணியின் ஆரம்பத்தின்போது அல்லது இக்கோவில் கட்டட நிர்மாணத்திற்கான அத்திவாரம் இடப்படும் போது அதற்கான சட்டபூர்வ அனுமதி பெறப்படாமல் இருந்திருந்தால், ஏன் கல்முனை மாநகர சபையினால் அப்போது தடுக்க முடியாமல்போனது? ஏன் அதற்காக அப்போது நீதிமன்றம் செல்ல முடியாமல் போனது? அல்லது இக்கோவில் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பிற்பாடு தற்போது இது தொடர்பில்  நீதிமன்றம் சென்றதன் பின்னணி என்ன?  என்ற கேள்விகளுக்கும்;, ஒரு அரச நிறுவன எல்லைக்குள் புதிய கட்டடமொன்று அது வணக்கஸ்தளமாகவே அல்லது வேறு கட்டடமாகவோ இருந்தாலும், அக்கட்டட நிர்மாணத்தை மேற்கொள்வதற்குத் தேவையான அனுமதிகள் எத்தகைய அதிகார நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டும் எனத் தெரியாமல்  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் இருந்தாரா?

அல்லது தனக்குரிய அதிகாரத்திற்குபட்ட நிறுவன எல்லைக்குள்  இக்கோவில் கட்ட  எந்த அரச அதிகார நிறுவனங்களிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என்ற முடிவுக்;கு பிரதேச செயலாளர் வந்தாரா?
கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட ஒரு அரச நிறுவன எல்லைக்குள் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை கல்முனை மாநகர சபையிடம் பெற வேண்டும் என்ற நியதி இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் அனுமதி பெறப்படாமல் இக்கோவில் கட்ட நிர்மாணத்திற்கான அனுமதிpனை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் வழங்கியதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கும் உரியவர்கள் பதிலளிக்க வேண்டியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.இந்நிலையில், இவ்வழக்குத்தாக்கல் இப்பிரதேச தமிழ் அரசியல் அரங்கிலும், சில சிவில் அமைப்புக்களிலும், தமிழ் மக்கள் மத்தியிலும்; அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது உண்மை. இவ்வதிர்வுகளின் ஓர் அங்கமாக கடந்த செவ்வாய்கிழமை  நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வினை அமளி துமளிக்கும் கூச்சல் குழப்பதிற்குமாளாக்கியிருக்கிறது.
இவ்வமர்வின்போது கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்  அமைக்கப்பட்டு  வரும் கோவில் நிர்மாணத்திற்கு  எதிராக கல்முனை நீதிமன்றத்தில் கல்முனை மாநகர சபையினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஏன?; என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ராஜன் கேள்வி எழுப்பிபோது அக்கேள்விக்கு பதிலளித்த மாநகர முதல் இவ்விடயம் நீதிமன்றத்தில்  உள்ள விவகாரமென்பதால் இது குறித்து இச்சபையில் பிரஸ்தாபிக்க முடியாது, அவ்வாறு பிரஸ்தாபித்தால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும். அதனால், இவ்விடயம் குறித்து இச்சபையின் பிரஸ்தாபிக்க அனுமதிக்க மாட்டடேன் எனவும், அமர்வு நிறைவுற்ற பின்னர் கலந்துரையாடலாம் என்றும் கூறியதன் பிற்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்ப உறுப்பினர்களுக்கும் மாநகர முதல்வருக்குமிடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதாகவும் இதைத்தோடர்ந்து ஏற்பட்ட அமளிதுமளியினால் அன்றைய மதாந்த சபை அமர்வு நிறைவுக்கு வந்ததாக அறிய முடிகிறது.கோவில் நிர்மாணமானது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்படுகின்ற சட்டவிரோத கட்டடம் என்றும், உள்ளுராட்சி சபைகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கையளித்துள்ள அதிகாரத்தின்படி இக்கோவிலை அகற்றக் கோருகின்ற உரிமை முதல்வருக்கு உண்டு என்று நீதிமன்றில் செய்யப்பட்டுள்ள வழக்குத்தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இக்கட்டட நிர்மாணத்தை ஆட்சேபித்து கல்முனை மாநகர முதல்வரினால் கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கடிதங்களுக்குரிய பதில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரினால் அனுப்பி வைக்கப்படாததனால் நீதி மன்றத்தை நாடியுள்ளதாகவும் அந்த மனுத்தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.
இக்கோவில் குறித்த வழக்கு  விசாரணை கடந்த செவ்வாய்கிழழை நடந்துள்ள நிலையில்  இவ்வழக்கை விசாரித்த கல்முனை மேலதிக நீதிவான் இது தொடர்பான ஆவணங்களை 14 நாட்களுக்குள் கல்முனை வடக்கு செயலக செயலாளர் சமர்ப்பிக்க  வேண்டுமெனவும் அத்துடன், இக்கட்டடம் ஏன் அகற்றப்படக்கூடாது என்ற ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க இரு வார கால அவகாசம் வழங்குவதாகவும், எதிர்வரும் 30ஆம் திகதி கல்முனை வடக்கு பிரதேச செயலயாளர் ஆஜராக வேண்டுமெனவும் அழைப்பான நீதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இதுவரை காலமும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டு வந்த பதவி நிலைப் பெயர் தற்போது உதவி பிரதேச செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டு இது குறித்த அறிவிப்பு அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகவுள்ளது. இவ்வாறான சூழலில்தான் செயலக வளாகத்திலுள்ள கோவில் மறைப்பை பிரிந்தெறிந்த சம்பவம் கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.


இனந்தெரியாத கூட்டமொன்று கோவில் மறைப்பைப் பிரித்தெடுத்த சம்பவம்  கல்முனையின் அரசியலிலும் மக்களிடமும், குறிப்பாக தமிழ் மக்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது. இம்மறைப்பு பிரித்தெடுக்கப்பட்ட சம்பவத்தை  இப்பிரதேச முஸ்லிம்கள் மீது சுமத்த எடுக்கப்பட்ட முயற்சியானது இப்பிரதேச இப்பிரதச தமிழ்,  மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் கருத்துக்களினூடதக தடுக்கபபட்டிருப்பதன் மூலம் இப்பிரதேச தமிழ்பேசும் சமூக உறவு தப்பிப்பிழைத்திருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்..இச்சம்பவம் தொடர்பில கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் 'இந்துக் கோவிலுக்கு அநியாயம் செய்தார்கள் என முஸ்லிம்களை நாம் சொல்லவில்லை.  புதன்கிழமை நடைபெற்ற வாணி விழாவை சிறப்பிக்குமுகமாக கோவில் மறைப்பை எங்கள் ஊரவர்கள்தான் நீக்கினார்கள். இதனை முஸ்லிம்கள் செய்யவில்லை. ஆனால், மாநகர மேயர் இக்கோவிலை அகற்றுவதற்கு வழக்குத்தாக்கல் செய்தமையை எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, பிரதேச செயலகம் என்பது அரச நிறுவனமாகும், அதற்குள் அனுமதியின்றி வணக்கஸ்தலங்கள் கட்டுவது எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்குள்ளும் அனுமதியின்றி வணக்கஸ்தலங்கள் நிர்மாணிக்க வழி ஏற்படும். இவ்வாறான நடவடிக்கைகள் இப்பிரதேசத்தில் இன முரண்பாட்டை உருவாக்கும் என்றும், கடந்த காலங்களில் இப்பிரதேச சமூகங்களின் ஒற்றுமையை சிதைக் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்று, தற்போதும் இந்தகோவில் நிர்மாண விடயத்தை வைத்து இப்பிரதேச தமிழ்பேசும் சமூகங்களின் உறவில் விரிசல் ஏற்பட சதிசெய்யப்படுவதாகவும் இதற்கு இப்பிரதேச ஒரு சில ஊடகவியலாளர்கள் துணைபோவதாகவும், இவ்வூடகவியலாளர்கள் உண்மையை மறைத்து செய்தி வெளியிடுவதாகவும் இப்பிரதேச முஸ்லிம் அரசியல், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.


நீதி மன்றத்திலுள்ள இவ்விடயம் குறித்து அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில், இவ்விடயத்தை பூதாகரமாக்கி பிரதேசத்தின் சமூக ஒற்றுமைய சீர்குழைக்க எடுக்கும் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட முடியாதவை.  குறிப்பாக சமூக உறவைப் பாதிக்கும் வகையிலான செய்திகளும், அறிக்கைகளும் அவற்றுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்களும் சமூக ஒற்றுமைக்கு மதிப்பளிக்க வேண்டுமெனவும், சமூக உறவைப் பலப்படுத்த உழைக்க வேண்டுமெனவும்; இப்பிரதேசத்தின் அமைதியையும், சமூக உறவையும் நேசிக்கின்றவர்கள் சுட்டிக்காட்டுவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

சமூக உறவும் ஊடகவியலாளர்களும்


ஊடகவியலாளர்கள் கொண்டுள்ள தகவல் தெரிவித்தல், விழிப்புணர்வூட்டல் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஊடகத் தர்மம் காக்கப்படுவது அவசியமாகும். ஊடக ஒழுக்கக் கோவையை மீறி அல்லது ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து இவ்விலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள ஊடக ஊடகவியலாளர்கள் முனைவது  ஊடகத்துறைக்குச் செய்யும் பெரும் துரோகமாகும்.
ஊடகத்தினூடாக விழிப்புணர்வுட்டுகின்றோம் அல்லது தகவல்களைத் தெரிவிக்கின்றோம் என்பதற்காக பிரபல்யங்களைக் கீறிக்கிழிப்பது, ஒரு தனிநபரை பலிதீர்ப்;பது, அல்லது ஒரு சமூகத்தை சந்திசிரிக்கச் செய்வது, சமூக உறவில் விரிசல் ஏற்பட ஊடகங்களைப் பயன்படுத்துவ தென்பதெல்லாம் ஊடக தர்மமாகாது.ஊடகவியலாளர்கள் ஊடகத் தர்மத்தையும், கௌரவத்தையும் மதித்துச் செயற்படுவது ஊடகத்துறைக்கு உள்ள நன்மதிப்பைப் பாதுகாக்கும். ஊடகவியலாளர்கள் ஊடகத்தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும். ஊடகத்துறையை தமது சுய தேவைக்காக அல்லது இனம்சார்ந்ததாகப் பயன்படுத்துவது சிறந்த ஊடகவியலாளர்களுக்கான அழகல்ல. தமது சுய தேவை அல்லது இனம்சார்ந்து  ஊடகவியலாhளர்கள் செயற்படுபவர்களாயின் சக்திமிக்க ஊடகத்துறைக்கும், ஊடகத்தர்மத்துக்கும் பங்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல், சமூகங்களுக்கும,; பிரதேசங்களுக்கும் ஏன் நாட்டுக்கும் பாதிப்பைத் தோற்றுவிக்கும்.


ஊடகங்கள் எதைத் தெரிவிக்கிறதோ அதை மக்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்ற மனப்பாங்கு ஓரிரு ஊடகவியலாளர்களிடம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால,; இந்த மனப்பாங்குகள் அவர்களுக்கு எதிராக மக்கள் சக்தியை திசை திருப்பாதா என்ற கேள்வியும் உள்ளது.


இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தியும் ஒரு தனித்திறமை வாய்ந்த ஊடகவியலாளர்தான். அவர் ஓரே காலத்தில் பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். சமூகங்ளைப் பிரித்தாளாது சமூகங்களை ஒற்றுமைப்படுத்தி ஒரு பெரும் தேசத்திற்கே சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு பெரும் கைகொடுத்தது அவரின் ஊடகப் பணி என்பதை சமூகங்களைப் பிரித்தாளும் மனப்பாங்கு கொண்டு  அதற்காக தாம் பணிபுரியும் அல்லது தமக்கு சகல வகையிலும் உதவும் ஊடகங்களைப் பயன்படுத்துகின்ற சமகால ஊடகவியலாளர்களின் புரிதலுக்காக சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாகவுள்ளது.கடந்த ஆட்சியில் இல்லாத ஊடகச் சுதந்திரத்தை கடந்த மூன்றறை  வருடங்களாக ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அனுபவித்து வருவதாக இந்த அரசாங்கம் கூறிவருகிறது. இந்நிலையில், அவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள ஊடக சுதந்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்த முனைவது ஊடக தர்மமாகாது.தனிநபர்களை பலிதீர்க்கவோ அல்லது ஒரு சமூக்தைக் காட்டிக்கொடுக்கவோ, அச்சமூகத்தைச் சந்திசிரிக்கச் செய்யவோ, சமூகங்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தவோ,  பகைமை உணர்வுகளைத் தூண்டவோ, இனவாதத்திற்கு துணைபோகவோ ஊடகவியலாளர்கள் முனைவது எந்த விதத்திலும் ஊடக நீதியாகாது. ஊடகத் தர்மமும், ஊடக ஒழுக்கக் கோவையும் முறையாகப் பின்பற்றப்படுவதும் ஊடகங்களின் நோக்கங்கள் வெற்றிகொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதும் காலத்தின் தேவையாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.ஊடகவியலாளர்கள்; அரசாங்கத்தை அல்லது ஒரு சமூகத்தை அல்லது ஒரு தனிநபரை தாக்கும் களமாக ஊடகத்தைச் செயற்படுத்தாது தமது ஊடகச் செயற்பாட்டினூடாக நாட்டைக் கட்டியெழுப்பவும், தனிநபர்களிடையேயும், சமூகங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும,; ஒற்றுமையையும் ஏற்படுத்துவதவும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். இந்த எதிர்பார்வையே கல்முனைப் பிரதேச தமிழ் பேசும் சமூகங்கள் பிரதேச ஊடகவியலளர்களிடமிருந்தும், இப்பிரதேசத்தலிருந்து செயற்படுகின்ற சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்தும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடங்களிடமிருந்தும் எதிர்பார்;ப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்..இந்த எதிர்பார்புடன்; ஊடகத்துறையின் சமகால சமூகப் பணி தொடர்பான நடவடிக்கைகள் சமூக நலன்கொண்டவை என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதோடு மாத்திரமின்றி, ஊடகங்களின் நேர்மயச் செயற்பாடுகளை மக்கள் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும.;


இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். சமூக ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒரே தளத்திலிருந்து முன்னெடுக்கும் சக்தி மக்கள் மத்தியில் வியாபித்துள்ள ஊடகங்களுக்கு உண்டு;. சக்தி மிக்க ஊடகங்களும், ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் சார்ப்பு நிலைகளிலிருந்து விடுபட்டு, ஊடகத்தர்மத்தைக் காப்பாற்றி, அதன் பொறுப்பைச் சுமந்து, இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கிடையிலும் சமூக ஒருமைப்பாடு ஏற்படவும், இந்நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவும், சமூகத்தில் வியாபித்து வரும் குற்றச்செயல்களைத் தடுக்கவும் தங்களது தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்ற ஊடகச் செயற்பாடுகளை நடுநிலைத்தன்மையோடு முன்னெடுக்க முன்னுரிமை வழங்கும்போதுதான் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் சமூகப்பணிகள் மக்கள் நலன்சார்ந்ததாக அமையும் என்பதே சமூக நலன்பிரும்பிகளின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இவற்றினடிப்படையில் கல்முனைப் பிரதேசத்தில் வாழும்  தமிழ் முஸ்லிம் சமூகங்களின் உறவுகளில் ஏற்படும் கீறல் பெரிதுபடாமல் காக்கப்பட வேண்டுமாயின் பிரதேச ஊடவியாளர்கள் நடுநிலைத்தன்மை, மற்றும் ஊடகத்தர்மம் என்பவற்றைப் பாதுகாத்து செய்திகளையும், ஆக்கங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதும் பிரதேச மக்களின் கோரிக்கையாவுள்ளது. ஏனெனில், இக்கோவில் கட்டுமான விவகாரம் தொடர்பிலும், கோயில் மறைப்பை அகற்றியது தொடர்பிலும் வெளிவந்த செய்திகள் பக்கச்சார்பானதாக அமைந்துவிட்டதாக பிரதேச முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்நிலையில் கல்முனையில் சமூக உறவை சீர்குழைக்க எடுக்கும் சதித்திட்டங்களுக்கு இரு சமூகங்களும் துணைபோகக் கூடாது என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.


கல்முனையின் எதிர்காலம்;


கல்முனைப் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் தமிழ் மக்களும் அவர்களது பிரதிநிதிகளும்; விட்டுக்கொடுப்புடனும், புரிந்தணர்வுடனும் கூடிய மனப்பாங்குடன் ஒரே மேசையில் அமர்ந்து இதயசுத்தியுடன் பேசித் தீர்வைப் பெற வேண்டும் என்பதே சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இச்செயற்பாடுகள் கல்முனைப் பிராந்தியத்தில் சமூகங்களுக்கிடையே காணப்படும் சமூகக் காயங்களைக் குணப்படுத்தி சமூக உறவை ஆரோக்கியமாக்கும்.


கல்முனைப் பிரதேசங்களினதும் இப்பிரதேசத்தில்; வாழும் சமூகங்களினதும் மத, கலை, கலாசாரப் பண்பாடுகள்,  சமூகக் கட்டமைப்புக்கள், சமூக உறவுகள், நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றின்; வரலாற்றுப் பரிணாமம் அல்லது பின்னணி எத்தகையது என்பதை இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் நன்கு அறிவார்கள். இப்பிரதேச மக்கள் இப்பிரதேசத்தின் வரலாற்றுப் பரிணாமங்களை அறிந்துள்ள அளவுக்கு ஏனைய பிரதேச அரசியல்வாதிகளோ, சமூக அமைப்புக்களோ அல்லது மக்களோ, தனிநபர்களோ, ஊடகவியலாளர்களோ அறிந்திருப்பார்களா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

இருப்பினும், இப்பிரதேச மக்களின் ஒவ்வொரு விடயத்திலும் அவ்வப்போது சமூகக் கீறல்களும், சமூகக் காயங்களும் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அக்கீறல்களும் காயங்களும் வரலாற்றில் மறக்க முடியாத பதிவுகளை இப்பிரதேசம் வாழ் சமூகங்களுக்கிடையில் ஏற்படுத்தியிருந்தாலும். அக்கீறல்களும், காயங்களும் யாசகனின் காலிலுள்ள புண்ணாக தொடர்ந்து இருப்பதற்கு அரசியல்வாதிகளும் சமூக அமைப்புக்ளின் பிரதிநிதிகளும் காரணகர்த்தாக்;களாக இருந்து விடக்கூடாது.

பிரச்சினைகள், தவறுகள் இருப்பின் அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது அப்பிரதேசத்தில் வாழும் மக்களே தவிர மாற்றுப் பிரதேச மக்களோ, தனிநபர்களோ அல்ல. கல்முனையின் வரலாற்றோடு ஒட்டியிணைந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் தற்போது ஏற்பட்டுள்ள கோவில் விவகாரத்தால் எழுந்துள்ள அரசியல் அதிர்வுகளுக்கும், பிரச்சினைக்கும் சட்டத்தின் தீர்ப்பு எவ்வாறு வந்தாலும், எழுகின்ற பிரச்சினைகளை இப்பிரதேச இரு சமூக பிரதிநிதிகளும்; ஒரே மேசையில் ஒன்று கூடி, இதய சுத்தியுடனும், பரந்த மனப்பாங்குடனும், விட்டுக்கொடுப்புடன், புரிந்துணர்வுடனும் பேசித் தீர்த்துக்கொள்ளும்போதுதான் கல்முனையில் ஏற்படும் அரசியல் அதிர்வுகளுக்குள் சிக்கிக்கொள்ளும் இரு சமூகங்களின் எதிர்கால சமூக உறவு சதிவலைக்குள் சிக்காது பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

-எம்.எம்.ஏ.ஸமட் -
 வீரகேசரி – 20.10.2018

கல்முனையில்: அரசியல் அதிர்வு! கல்முனையில்: அரசியல் அதிர்வு! Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.