படுகொலை செய்யப்பட்டாரா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி? சவூதியின் மற்றுமொரு திருவிளையாடல் அரங்கேறுகிறதா? - Madawala News Number 1 Tamil website from Srilanka

படுகொலை செய்யப்பட்டாரா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி? சவூதியின் மற்றுமொரு திருவிளையாடல் அரங்கேறுகிறதா?


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்  (மூலம்: அல்ஜஸீரா)
சவூதியைச் சேர்ந்த பிரபல
விமர்சகரும் ஊடகவியலாளருமான ஜமால் கசோகி கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைத்து காணாமல் போயுள்ள விவகாரம் சர்வதேச ரீதியில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சர்வதேச மட்டத்தில் சவூதி அரசை விமர்சிக்கும் முக்கிய ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர் என்பதால் சவூதி அரசு திட்டமிட்டு இவரைப் படுகொலை செய்திருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
சவூதியின் முன்னணி ஆங்கில நாளிதழான Al Arab News இன் முன்னாள் ஆசிரியரான இவர் துருக்கியில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என துருக்கி அச்சம் தெரிவிக்கின்றது.


இதற்கென சவூதியை சேர்ந்த 15 பேர் அடங்கிய கூலிப்படை துருக்கியினுள் நுழைந்துள்ளதாக துருக்கி அரசு தெரிவிக்கின்றது. சவூதியின் திட்டமிட்ட செயலே இது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சவூதி தூதரக அதிகாரிகள், சில ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சவூதி தூதரகத்திற்கு வந்த ஜமால் கசோகி அங்கிருந்து வெளியேறி விட்டார் என தெரிவித்துள்ளனர்.


எனினும், உடன் வந்திருந்த ஜமால் கசோகியின் வருங்கால மனைவி, சவூதி தூதரகத்தினுள் நுழைந்த ஜமால் ஐந்து மணிநேரங்கள் ஆகியும் வெளியே வரவில்லை. அவர் உள்ளேயே படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து ஜமால் கசோகி இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாசகம் ஜமால் கசோகியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் காண்பிக்கப்பட்டது.
சவூதியின் தற்போதைய ஆட்சியாளர் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஆட்சி முறைமை மற்றும் நிர்வாகம் தொடர்பில் பெரிதும் விமர்சனங்களை கடந்த காலங்களில் முன்வைத்து வந்தவர் என்ற காரணத்தினால் ஊடகவியலாளர் ஜமால் கசோகி சவூதி அதிகாரிகளினால் இரகசியமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


ஜமால் துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தினுள் நுழைவதற்கு முன்னரும் தனது நண்பரிடம் தான் தடுத்து வைக்கப்படலாம் என அச்சம் தெரிவித்துமுள்ளார்.


சவூதி அரசினால் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனும் அச்சம் காரணமாக ஜமால் கசோகி கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவில் வசித்து வந்தார். அமெரிக்காவின் Washington post நாளிதழில் கட்டுரையாளராகவும் கடமையாற்றி வந்தார்.


அல்ஜசீராவின் முன்னாள் பணிப்பாளர் குறிப்பிடுகையில், ‘ஊடகவியலாளர் ஜமால் கசோகி காணாமல் போயுள்ள விவகாரம் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பெரிதும் கரிசனை கொண்டுள்ளன. சவூதியின் கீழ்த்தரமான அடக்குமுறைகளை எதிர்த்து சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. தமக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பவர்களை, நியாயமான விமர்சகர்களை கைது செய்து தடுத்து வைத்தல், கடத்துதல், படுகொலை செய்தல் என காட்டு தர்பார் செய்து வரும் சவூதி நிச்சயமாக குண்டர்களின் கலாசாரத்தையே பின்பற்றி வருகிறது’ என தெரிவித்துள்ளார்.  


சர்வதேச நாடுகள் மத்தியில் துருக்கிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பொருட்டே இஸ்தான்புலில் வைத்து ஜமால் கசோகி சவூதி அதிகாரிகளினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என கட்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சவூதி அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் சவூதி ஊடகவியலாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் உலகில் எங்கும் பாதுகாப்பு இல்லை என்பதை மிரட்டும் தொனியில் சவூதி காட்டி வருகிறது என மேலும் தெரிவிக்கின்றது.

யார் இந்த ஜமால் கசோகி?

சவூதியை சேர்ந்த அரபு ஊடகவியலாளர்களுள் மிகப் பிரபல்யமானவரும் புகழ்பெற்ற சமகால அரசியல் விமர்சகரும் ஆவார். 30 வருடகால அனுபவத்தை இத்துறையில் கொண்டவர். 1958 இல் மதீனாவில் பிறந்த இவர் அமெரிக்காவின் Indiana University இல் ஊடகவியல் கற்கையில் பட்டம் பெற்றவர். Saudi Gazette நாளிதழின் செய்தித் தொடர்பாளராக தனது பணியை ஆரம்பித்த இவர் 1987-1990 காலப்பகுதியில் லண்டனை தளமாகக் கொண்ட Asharq Al-Awsat நாளிதழில் பணியாற்றினார்.  


1990 காலப்பகுதிகளில் ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் செய்திகளை திரட்டித் தருவதில் வல்லுநராக அறியப்பட்டார். இக்காலப்பகுதிகளில் ஒசாமா பின்லேடன் உடனான நேர்காணல்கள் பலவற்றை இவர் மேற்கொண்டுள்ளமையால் சர்வதேசம் மத்தியில் பெரிதும் புகழ் மிக்கவராக இனங்காணப்படுகிறார்.


1999 தொடக்கம் தொடர்ந்து நான்கு வருடங்களாக சவூதி நாளிதழான Arab News இன் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 2005 இல் அமெரிக்காவுக்கான சவூதியின் தூதுவராக பணியாற்றிய இளவரசர் தர்கி பின் பைசலின் ஊடக ஆலோசகராகவும் ஜமால் கசோகி கடமையாற்றி இருந்தார்.


சவூதி அரசை நேரடியாகவே விமர்சித்து வந்தமையால் பல்வேறு தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டார். இதனால் 2017 இல் சவூதியை விட்டும் வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஜமால் தொடர்ந்தும் சவூதி அரசை விமர்சித்து சர்வதேச ஊடகங்களில் கட்டுரை எழுதி வந்தார். முடிக்குரிய இளவரசர் சல்மானின் அதிரடி நடவடிக்கைகள் பலவற்றின் பின்னாலுள்ள கெடுநோக்கங்களை அப்பட்டமாக வெளிக்காட்டி வந்ததுடன் யேமன் மீதான சவூதியின் அத்துமீறிய தாக்குதலை சரமாரியாக விமர்சித்து வந்தார்.
சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஆட்சி அதிகாரத்தில் அதிரடியாக முன்னேறி ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்ட சமயங்களில் அரசுக்கு எதிராக காட்டமான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் ஜமால் கசோகி முக்கியமானவர்.


சவூதி இளவரசர்கள்,தொழிலதிபர்கள், செயற்பாட்டாளர்கள், மக்கள் தலைவர்கள் பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போதும் இவர் குரல் கொடுத்திருந்தார்.


நாட்டில் கருத்துச் சுதந்திரம் அடக்கப்படுகின்றமை குறித்து சர்வதேச மட்டத்தில் காட்டமாக எழுதி வந்த இவர் 2017 இல் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு சவூதியினால் தீவிரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்தெழுந்தார்.


அத்தருணம் டுவிட்டர் பதிவொன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் ‘மறுசீரமைப்பு, மாற்றம், அரபு வசந்தம் மற்றும் சுதந்திரம் என உச்சரிக்கும் எவரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் என பச்சை குத்தி விடுகின்றனர். தனது மதம் குறித்த பெருமிதம், தனது நாடு குறித்த கரிசனை கொண்டவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதிலிருந்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் நல்லனவற்றை போதிக்கின்றனர் என தெரிகிறது.’

அரசின் நடவடிக்கைகள் குறித்து பகிரங்கமாக விமர்சிப்பதற்கு தடை விதித்து ஜமாலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சவூதியை விட்டும் வெளியேறி அமெரிக்காவில் குடியேற நிர்ப்பந்திக்கப்பட்டது. அமெரிக்காவில் குடியேறிய அதே மாதம் அமெரிக்க நாளிதழான Washington Post இல் ‘சவூதி அரேபியா முன்னர் இவ்வாறு இல்லை... தற்போது அது மக்களை நசுக்கி ஒடுக்குகிறது’ எனும் தலைப்பில் காட்டமான கட்டுரையொன்றை எழுதி, நாட்டை விட்டு தான் வெளியேறினாலும் தன் கொள்கையை விட்டும் வெளியேறவில்லை என்பதை சவூதிக்கு காட்டினார்.


அக்கட்டுரையை எழுதிய அவர் டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டார், ‘The Washington Post இல் சவூதியை விமர்சித்து கட்டுரை வரைவதில் எனக்கு விருப்பமில்லைதான். எனினும், மௌனியாக இருந்து சவூதியினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அறிஞர்களுக்கு துரோகம் இழைப்பதை நான் வெறுக்கிறேன்.’


இதற்கு பதிலளிக்கும் முகமாக சவூதி ஆளுநர் தனது பதிவில், ‘சவூதியை வழிநடத்த உங்களதும் உங்களைப் போன்றவர்களதும் ஆலோசனைகள் எங்களுக்கு தேவையில்லை’ என பதிவிட்டிருந்தார். அத்துடன் சவூதி அரசுக்கு கேடு விளைவிக்கின்றார் என்ற குற்றச்சாட்டில் Al-Hayat பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் குடியேறிய பின்னர் ஜமால் கசோகி அங்கு சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். The Washington Post பத்திரிகையின் பத்தி எழுத்துப் பகுதியின் பொறுப்பாளராக பதவியேற்ற பின்னர் மேலும் வீரியமாக இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் நியாயமற்ற அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார்.


கடந்த வருடம் லெபனானிய பிரதமர் சாத் ஹரிரியை வற்புறுத்தி பதவி விலகுமாறு அறிவிக்கச் செய்தமை தொடர்பில் இளவரசர் சல்மானை கொடுங்கோலன் என ஜமால் கசோகி பகிரங்கமாக வர்ணித்தார். கடந்த மாதம் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், யேமனில் மக்களை கொன்று குவித்து சவூதியின் கௌரவத்தை இளவரசர் சல்மான் சீரழித்து விட்டார் என குறிப்பிட்டிருந்தார்.


அண்மையில் கனடா – சவூதி உறவுகள் முறுகல் நிலையில் இருந்த சமயம் கனடாவுடன் போர் தொடுக்க சவூதிக்கு அருகதையில்லை என விமர்சித்திருந்தார்.


இவ்வாறாக சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஒட்டுமொத்த கோபத்தையும் கவனத்தையும் அவர் தன் பக்கம் கொண்டிருந்தார். ஜமால் கசோகி மீது சவூதி உச்சக்கட்ட சீற்றத்தில் கொந்தளித்துப் போயிருந்தது என்றால் மிகையாகாது.

ஜமாலுக்கு என்ன நடந்தது?

கடந்த வாரம் 2 ஆம் திகதி துருக்கிய பெண்மணியை திருமணம் செய்து கொள்வதற்காக சட்ட ரீதியான சில ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இஸ்தான்புலில் அமைந்து சவூதி தூதரகத்துக்கு சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். சவூதி தூதரகத்தில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என துருக்கிய பொலிஸ் அதிகாரிகள் நம்புகின்றனர்.


ரொயிட்டர் செய்திச் சேவைக்கு துருக்கிய பொலிசார் தெரிவித்துள்ளதாவது, ‘சவூதி தூதரகத்தினுள் ஜமால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு பின்னர் இறந்த உடல் துண்டம் துண்டமாக்கப்பட்டு சிறிது சிறிதாக வெளியகற்றப்பட்டிருக்கலாம் என நாம் நம்புகிறோம்.’


இதேவேளை இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரக உயர் அதிகாரி மொஹம்மத் அல்-உதைபி கூறுகையில், ‘ஜமால் கசோகி சவூதியிலும் இல்லை...சவூதி தூதரகத்தில் இல்லை... அவரை நாம் கைது செய்யவுமில்லை... அவரை தேடும் பணிகளில் தூதரகம் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது. இது தொடர்பில் நாமும் மிக்க கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம்’ என குறிப்பிட்டுள்ளார்.


ஊடகவியலாளர் ஜமால் துருக்கி இஸ்தான்புலில் வைத்து காணாமல் போன விவகாரம் குறித்து துருக்கி ஜனாதிபதி அர்துகான் குறிப்பிடுகையில்,
‘ஜமால் காணாமல் போனது முதல் சவூதி தூதரகத்தின் உள்ளக, வெளியக செயற்பாடுகள் உற்று நோக்கப்பட்டு வருகின்றது... கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள வீடியோக்கள் ஆராயப்பட்டு வருகின்றன... விமானப் போக்குவரத்து தொடர்பில் கண்காணித்து வருகின்றோம்... தூதரகத்தை விட்டு ஜமால் வெளியேறி விட்டார் என கூறுவதன் மூலம் சவூதி அதிகாரிகள் விலகிக் கொள்ள முடியாது...


அதற்கு அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்தாக வேண்டும்... எமது நாட்டில் வைத்து இவ்வாறான அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளமை உண்மையில் வருத்தமளிக்கின்றது... எமது உத்தியோகபூர்வ விசாரணைகளின் தெளிவான இறுதி முடிவுகள் குறித்து பகிரங்கமாக உலகுக்கு விரைவில் அறிவிப்போம்’ என தெரிவித்துள்ளார்.  

இளவரசர் பின் சல்மானின் மறுப்பு 

ஊடகவியலாளர் ஜமால் இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் துருக்கியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான், தமது தூதரகத்தினுள் தாராளமாக நுழைந்து ஆதாரங்களை வெளிக்காட்டுமாறு துருக்கிக்கு அனுமதி வழங்கியுள்ளார்.


Bloomberg ஊடகத்திற்கு பின் சல்மான் வழங்கியுள்ள நேர்காணலில்,
‘ஊடகவியலாளர் ஜமால் கசோகி எங்கே இருக்கிறார்? அவருக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பில் அறிவதற்கு நாமும் மிகவும் ஆவலோடு இருக்கிறோம். இது தொடர்பில் எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையும் சாத்தியமற்றவையுமாகும். மறைப்பதற்கு எம்மிடம் எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘எமது தூதரகத்தில் உள்நுழைந்து சகல விதமான தேடுதல்களையும் புரிவதற்கு துருக்கிய பொலிசாருக்கு நாம் அனுமதியளிக்கிறோம். ஒரு நாட்டில் அமைந்துள்ள இன்னொரு நாட்டின் தூதரகம் என்பது இறையாண்மைக்குரிய பகுதியாகும்.


இருப்பினும், இச்சர்ச்சை குறித்து நிரந்தர தீர்வு காணும் நோக்கில் துருக்கிக்கு நாம் சிறப்பு சலுகை அளிக்கிறோம். அவர்கள் விருபியவாறு தேடுதல்களை எமது தூதரகத்தில் நிகழ்த்திக் கொள்ளலாம். துருக்கியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்த தயாராகவுள்ளோம். ’ என சவூதி இளவரசர் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.


விசாரணைகளை துரிதப்படுத்துமாறு The Washington Post கேட்டுக் கொண்டுள்ளது. தனது மதிப்புக்குரிய கட்டுரையாளரான ஜமாலை நினைவுகூரும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை பதிப்பில் ஒரு பக்கத்தை வெறுமையாக வெளியிட்டிருந்தது. அப்பக்கம் ஊடகவியலாளர் ஜமாலுக்குரிய பக்கம் என The Washington Post தெரிவித்தது.
The Washington Post ஊடகம் தெரிவிக்கையில் ‘ஜமால் கசோகி சவூதி தூதரகத்தினுள் வைத்து கொலை செய்யப்பட்டிருப்பின் இளவரசர் பின் சல்மான் அதற்குரிய விலையை கொடுக்கத் தயாராக வேண்டும். அத்துடன் சவூதி – அமெரிக்க உறவுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்’ என தெரிவித்துள்ளது.


எது எவ்வாறிருப்பினும், தமது கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் அறிஞர்கள், விமர்சகர்களின் குரல்வளையை நசுக்கி வரும் அண்மைய சவூதியின் முன்னெடுப்புக்களை நோக்கும் போது சவூதியின் கொள்கைகளை காத்திரமாகவும் ஆதாரபூர்வமாகவும் சர்வதேச மட்டத்தில் விமர்சித்து வந்தவர் எனும் வகையில் ஊடகவியலாளர் ஜமால் கசோகியை சவூதி திட்டமிட்டு படுகொலை செய்திருக்கலாம் எனும் சந்தேகம் பெரும்பாலும் உண்மையாக இருக்கக் கூடும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

நன்றி: நவமணி

படுகொலை செய்யப்பட்டாரா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி? சவூதியின் மற்றுமொரு திருவிளையாடல் அரங்கேறுகிறதா? படுகொலை செய்யப்பட்டாரா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி? சவூதியின் மற்றுமொரு திருவிளையாடல் அரங்கேறுகிறதா? Reviewed by Madawala News on October 12, 2018 Rating: 5