ஜமால் கஷோகி படுகொலை விவகாரம்.. ( புலனாய்வு கட்டுரை)


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்   (மூலம்: அல்ஜஸீரா)

துருக்கியில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைத்து சவூதி ஊடகவியலாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் வலுத்துள்ள நிலையில் சர்வதேசம் மத்தியில் பொறுப்புக் கூற வேண்டிய கட்டாயத்தில் சவூதி அரசு தள்ளப்பட்டுள்ளது.


சவூதி அரசின் அண்மைய அதிரடி அரசியல் மறுசீரமைப்பு முன்னெடுப்புக்களை நியாயமான முறையில் விமர்சித்து வந்த பிரபல சவூதியை சேர்ந்த ஊடகவியலாளரும் அமெரிக்காவில் வசிப்பவருமான ஜமால் கசோகி இம்மாத ஆரம்பத்தில் துருக்கியின் சவூதி தூதரகத்தில் வைத்து காணாமலாக்கப்பட்ட விவகாரம் பற்றி எரியும் பேசுபொருளாக எழுந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. சவூதி அரசின் கூலிப்படைகளே ஜமாலை தூதரகத்தில் வைத்துக் கொலை செய்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு பிரிவு குற்றம் சாட்டி வருகின்றது.

அப்பிள் கைக்கடிகாரம் வாயிலாக பதிவான ஒலிப்பதிவு

துருக்கிய பாதுகாப்பு அதிகாரி அல்ஜசீராவுக்கு தெரிவிக்கையில், இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைத்தே ஜமால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபிக்கும் ஒலிப்பதிவுகள் தம்வசம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


ஒக்டோபர் 2 ஆம் திகதி சில ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சவூதி தூதரகம் நுழைந்த ஊடகவியலாளர் ஜமால் கசோகி தன் கையில் அப்பிள் கைக்கடிகாரம் அணிந்திருந்ததாகவும் அதன் மூலம் அங்கே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் கைகலப்புகள் தொடர்பான ஒலியலைகள் வேறோர் நபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையே இரு துருக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொயிட்டர் செய்திச் சேவையும் செய்தி வெளியிட்டுள்ளது.


11 நிமிடங்கள் தொடரும் இந்த ஒலிப்பதிவு ஒலியலை நிபுணர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது அதில் ஜமால் கசோகியினதும் ஏனைய மூன்று சவூதி அதிகாரிகளதும் குரல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சவூதி தூதரகத்தினுள் நுழைந்ததுமே ஜமால் கசோகி சவூதி அதிகாரிகளினால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார் என்பதனை குறித்த ஒலிப்பதிவு வெளிக்காட்டுவதாக துருக்கிய புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது.


ஜமால் கசோகி கொலை செய்யப்பட்ட அன்று சவூதி தூதரகத்தின் இதர அதிகாரிகள் அனைவருக்கும் முன்கூட்டிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதால் இதர அதிகாரிகள் அனைவரும் காலை 11.30 மணிக்கே விடுப்பில் வெளியே செல்ல கட்டளையிடப்பட்டுள்ளனர்.


எனினும், மேற்குறித்த விடயங்கள் அனைத்தையும் சவூதி அரசு நிராகரித்தே வருகின்றது. தம் மீது திட்டமிட்ட வகையில் உலகளாவிய ரீதியில் அவதூறான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக சவூதியின் உள்விவகார அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்திற்கு ஜமால் வருகை தந்திருந்தது உண்மை எனவும் பின்னர் அவர் வெளியேறிச் சென்று விட்டார் எனவும் சவூதி தெரிவித்துள்ளது.


இந்நிலையில், ஜமால் கசோகி சவூதி தூதரகத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான முதற்கட்ட ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் அவற்றை அமெரிக்கா, சவூதி உள்ளிட்ட நாடுகளுக்கு சமர்ப்பித்துள்ள்ளதாகவும் துருக்கி புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளார். சவூதி தூதர்கதினுள் மேலும் பல்வேறு வலுவான ஆதாரங்களை திரட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதியை சேர்ந்த விசாரணை குழுவினர் துருக்கி விஜயம்

CNN Turk செய்திச் சேவையின் பிரகாரம் 11 பேர்கள் அடங்கிய சவூதியின் விசாரணைக் குழுவினர் கடந்த புதன்கிழமை இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதுவரின் இருப்பிடம் வந்தடைந்துள்ளனர்.


ஜமால் கசோகி படுகொலை விவகாரம் தொடர்பில் ஆதாரங்களை திரட்டும் பொருட்டு தூதுவரின் இருப்பிடத்தை பரிசோதிக்க துருக்கிய அதிகாரிகள் முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ள நிலையிலேயே சவூதி விசாரணைக் குழுவினரின் விஜயமும் இடம்பெற்றுள்ளது.


சவூதி விஜயத்தை பிற்போட்டுள்ள ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர்
ஜமால் கசோகி காணாமல் ஆக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் மறைவான தகவல்களை சவூதி வெளிப்படுத்தும் வரையில் அந்நாட்டுக்கு ஏலவே திட்டமிடப்பட்ட உத்தியோகபூர்வ விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் ஹெய்கோ மாஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முறுகல் நிலையில் உள்ள ஜேர்மனிய – சவூதி உறவுகளை ஊடகவியலாளர் ஜமாலின் படுகொலை விவகாரம் மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.  சவூதியின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனங்கள் தொடருமானால் சர்வதேச நாடுகள் மத்தியில் சவூதி அடிமட்ட நிலையை எதிர்கொள்ள நேரிடும்.


சவூதி ஜமால் கசோகி விடயத்தில் வெளிப்படைத் தன்மைகளை கையாள வேண்டும். அவரது படுகொலை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்நிலையில், இம்மாத இறுதியில் சவூதியில் இடம்பெறவிருந்த முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்த பிரான்ஸ் வங்கிகள் சங்கம் தாம் இப்பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கசோகி விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவராமல் சவூதியின் முதலீட்டு மாநாடுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரான்ஸ் அறிவிதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இளவரசர் பின் சல்மானின் நெருங்கிய தோழர்களா கொலைக் குழுவினர்?
நியூயோர்க் டைம்ஸ் செய்திச் சேவையின் பிரகாரம் கசோகி விவகாரம் குறித்த சந்தேக நபர்களில் நால்வர் சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக துருக்கிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஒருவர் பின் சல்மானின் நெருங்கிய தோழர் எனவும் ஏனைய மூவர் பாதுகாப்பு பிரிவுக்கு நெருங்கியவர் என தெரிவிக்கப்படுகிறது.


ஜமாலின் படுகொலைக்கென சிறப்புத் தேர்ச்சி பெற்ற 15 பேர்கள் அடங்கிய கூலிப்படையை இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்திற்கு சவூதி அரசாங்கம் அனுப்பியிருந்தது என துருக்கிய புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது. அன்றைய தினம் சவூதி தூதரகத்திற்கு வருகை தந்திருந்த 15 பேர் அடங்கிய சிறப்புக் குழுவினர்களில் 9 பேர் சவூதி பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குழுவினர்களின் முகங்களை அடையாளம் வைத்து பல்வேறு தகவல்களை தாம் திரட்டியுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இச்சந்தேக நபர்களில் ஒருவரான மாஹிர் அப்துல் அஸீஸ் என்பவர் 2007 இல் லண்டனில் அமைந்துள்ள சவூதி தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் என அடையாளம் கூறியுள்ளது.பொருளாதார தடை விதித்தால் பாடம் புகட்டுவோம்- பின் சல்மானின் வாய்ச் சவடால் 

ஜமால் கசோகி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தால் பலத்த எதிர் நடவடிக்கைகளில் தாம் ஈடுபடவுள்ளதாக சவூதி அரசு அறிவித்துள்ளது.


கசோகி விவகாரத்தில் சவூதி தவறிழைத்திருந்தால் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள சவூதி தயாராக இருக்க வேண்டும் என அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததை அடுத்தே சவூதியின் மேற்குறித்த வாய்ச் சவடால் வெளியாகியுள்ளது.


ஜமால் விவகாரம் குறித்து அமெரிக்கா பொருளாதாரத் தடைகளையோ அரசியல் அழுத்தங்களையோ சவூதி மீது பிரயோகிக்க எத்தனித்தால் பல மடங்கில் திருப்பிக் கொடுக்கப்படும் என சவூதி எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தலை அடுத்து அதிரடியாக ரியாதின் பெற்றோலிய பங்கு சந்தையில் முன்னணி நிறுவனம் 33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சரிவினை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தடயங்களை மறைக்கும் வகையில் தூதரகத்திற்கு புது நிறப்பூச்சு
இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தினுள் நுழைந்த ஜமால் கசோகி காணாமல் ஆக்கப்பட்டுள்ள தினத்திற்கு பிறகு தூதரகம் முழுதும் உடனடியாக புதிதாக நிறப்பூச்சு பூசப்பட்டுள்ளது. தடவியல் நிபுணர்களின் ஆய்வுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கிலேயே குறித்த செயலை சவூதி தூதரகம் செய்திருக்கக் கூடும் என துருக்கி ஜனாதிபதி அர்துகான் தெரிவித்துள்ளார்.
முதன் முதலாக சவூதி தூதரகத்தினுள் நுழைந்த துருக்கிய புலனாய்வுப் பிரிவினர் அங்கே நச்சு பொருட்கள் மற்றும் தடயங்கள் தொடர்பில் ஒன்பது மணிநேர விசாரணையை முன்னெடுத்தனர்.


தூதரகத்திற்கு புதிதாக நிறப்பூச்சு பூசி தடயங்களை அழிப்பதற்கு சவூதி அதிகாரிகள் முயன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், கைரேகை மற்றும் நச்சுப் பதார்த்தங்களுக்கான தடயங்கள் தவிர்ந்த வேறு பல ஆதாரங்கள் தூதரகத்தில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.


கசோகி காணாமல் ஆக்கப்பட்ட சில மணிநேரங்களில் சந்தேகத்துக்குரிய நீளமான வாகனம் தூதரகத்தை விட்டும் வெளியேறிச் செல்லும் காணொளிகள் துருக்கி ஊடகங்களில் காண்பிக்கப்பட்டுள்ளன.

யார் இந்த ஜமால் கசோகி?


சவூதியை சேர்ந்த அரபு ஊடகவியலாளர்களுள் மிகப் பிரபல்யமானவரும் புகழ்பெற்ற சமகால அரசியல் விமர்சகரும் ஆவார். 30 வருடகால அனுபவத்தை இத்துறையில் கொண்டவர். 1958 இல் மதீனாவில் பிறந்த இவர் அமெரிக்காவின் Indiana University இல் ஊடகவியல் கற்கையில் பட்டம் பெற்றவர். Saudi Gazette நாளிதழின் செய்தித் தொடர்பாளராக தனது பணியை ஆரம்பித்த இவர் 1987-1990 காலப்பகுதியில் லண்டனை தளமாகக் கொண்ட Asharq Al-Awsat நாளிதழில் பணியாற்றினார்.


1990 காலப்பகுதிகளில் ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் செய்திகளை திரட்டித் தருவதில் வல்லுநராக அறியப்பட்டார். இக்காலப்பகுதிகளில் ஒசாமா பின்லேடன் உடனான நேர்காணல்கள் பலவற்றை இவர் மேற்கொண்டுள்ளமையால் சர்வதேசம் மத்தியில் பெரிதும் புகழ் மிக்கவராக இனங்காணப்படுகிறார்.
1999 தொடக்கம் தொடர்ந்து நான்கு வருடங்களாக சவூதி நாளிதழான Arab News இன் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 2005 இல் அமெரிக்காவுக்கான சவூதியின் தூதுவராக பணியாற்றிய இளவரசர் தர்கி பின் பைசலின் ஊடக ஆலோசகராகவும் ஜமால் கசோகி கடமையாற்றி இருந்தார்.சவூதி அரசை நேரடியாகவே விமர்சித்து வந்தமையால் பல்வேறு தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டார். இதனால் 2017 இல் சவூதியை விட்டும் வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஜமால் தொடர்ந்தும் சவூதி அரசை விமர்சித்து சர்வதேச ஊடகங்களில் கட்டுரை எழுதி வந்தார். முடிக்குரிய இளவரசர் சல்மானின் அதிரடி நடவடிக்கைகள் பலவற்றின் பின்னாலுள்ள கெடுநோக்கங்களை அப்பட்டமாக வெளிக்காட்டி வந்ததுடன் யேமன் மீதான சவூதியின் அத்துமீறிய தாக்குதலை சரமாரியாக விமர்சித்து வந்தார்.


சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஆட்சி அதிகாரத்தில் அதிரடியாக முன்னேறி ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்ட சமயங்களில் அரசுக்கு எதிராக காட்டமான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் ஜமால் கசோகி முக்கியமானவர். சவூதி இளவரசர்கள்,தொழிலதிபர்கள், செயற்பாட்டாளர்கள், மக்கள் தலைவர்கள் பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போதும் இவர் குரல் கொடுத்திருந்தார்.


நாட்டில் கருத்துச் சுதந்திரம் அடக்கப்படுகின்றமை குறித்து சர்வதேச மட்டத்தில் காட்டமாக எழுதி வந்த இவர் 2017 இல் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு சவூதியினால் தீவிரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்தெழுந்தார்.


ஜமாலுக்கு என்ன நடந்தது?


இம்மாதம்  2 ஆம் திகதி துருக்கிய பெண்மணியை திருமணம் செய்து கொள்வதற்காக சட்ட ரீதியான சில ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இஸ்தான்புலில் அமைந்து சவூதி தூதரகத்துக்கு சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். சவூதி தூதரகத்தில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என துருக்கிய பொலிஸ் அதிகாரிகள் நம்புகின்றனர்.


ரொயிட்டர் செய்திச் சேவைக்கு துருக்கிய பொலிசார் தெரிவித்துள்ளதாவது, ‘சவூதி தூதரகத்தினுள் ஜமால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு பின்னர் இறந்த உடல் துண்டம் துண்டமாக்கப்பட்டு சிறிது சிறிதாக வெளியகற்றப்பட்டிருக்கலாம் என நாம் நம்புகிறோம்.’


இதேவேளை இஸ்தான்புலில் அமைந்துள்ள சவூதி தூதரக உயர் அதிகாரி மொஹம்மத் அல்-உதைபி கூறுகையில், ‘ஜமால் கசோகி சவூதியிலும் இல்லை...சவூதி தூதரகத்தில் இல்லை... அவரை நாம் கைது செய்யவுமில்லை... அவரை தேடும் பணிகளில் தூதரகம் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது. இது தொடர்பில் நாமும் மிக்க கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம்’ என குறிப்பிட்டுள்ளார்.


ஊடகவியலாளர் ஜமால் துருக்கி இஸ்தான்புலில் வைத்து காணாமல் போன விவகாரம் குறித்து துருக்கி ஜனாதிபதி அர்துகான் குறிப்பிடுகையில்,
‘ஜமால் காணாமல் போனது முதல் சவூதி தூதரகத்தின் உள்ளக, வெளியக செயற்பாடுகள் உற்று நோக்கப்பட்டு வருகின்றது... கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள வீடியோக்கள் ஆராயப்பட்டு வருகின்றன... விமானப் போக்குவரத்து தொடர்பில் கண்காணித்து வருகின்றோம்... தூதரகத்தை விட்டு ஜமால் வெளியேறி விட்டார் என கூறுவதன் மூலம் சவூதி அதிகாரிகள் விலகிக் கொள்ள முடியாது...


அதற்கு அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்தாக வேண்டும்... எமது நாட்டில் வைத்து இவ்வாறான அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளமை உண்மையில் வருத்தமளிக்கின்றது... எமது உத்தியோகபூர்வ விசாரணைகளின் தெளிவான இறுதி முடிவுகள் குறித்து பகிரங்கமாக உலகுக்கு விரைவில் அறிவிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

நன்றி: நவமணி

ஜமால் கஷோகி படுகொலை விவகாரம்.. ( புலனாய்வு கட்டுரை) ஜமால் கஷோகி படுகொலை விவகாரம்.. ( புலனாய்வு கட்டுரை) Reviewed by Madawala News on October 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.