மௌனிக்கும் மனிதாபிமானம்: ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தில் மக்களுடன் ஒன்றாகாத அரசியல்வாதிகள்!!!-சுஐப் எம்.காசிம்-
புத்தளத்தில் அறுவாக்காடு, மன்னாரில் வில்பத்து, அம்பாறையில் மாணிக்க மடு, வட்டமடு ஆகியவற்றில்
எழுந்துள்ள பிரச்சினைகளை அரசாங்கம் அணுகும் முறைகள், மக்களின் கவனத்தை திருப்பியுள்ளன.


இப்பிரச்சினைகள் மனிதாபிமானத்துடன் கட்டிவிடப்பட்ட முடிச்சுக்கள். இது பற்றித் தீர்மானம் எடுத்தாலும் பலரது முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் என்பதே இதிலுள்ள ஆச்சர்யம். இப்பிரச்சினைகளில் எந்தக் கட்சியினரும் முன்னுக்கு நின்று மூக்கை நுழைக்காது, மௌனம் காப்பதும் இதிலுள்ள ஒருவகை விசித்திரமே. அம்பாறை மாவட்டத்தில் உள்ள வட்டமடுவை எடுத்துக்கொண்டால், கால்நடை பண்ணையாளர்கள், விவசாயிகள் ஆகிய இருதரப்பினரின் வாழ்வாதாரம் இதில் முரண்படுகின்றன. மேய்ச்சல்தரை இல்லாது கால்நடைகளைப் பராமரிக்க முடியாதுள்ளதாக பண்ணையாளர்களும், அதிகளவு நிலங்களை மேய்ச்சலுக்கு ஒதுக்குவதால் விவசாயத்திற்கு நிலமில்லை என விவசாயிகளும் தமது நியாயங்களுக்காக முரண்படுகின்றனர்.இதற்கும் மேலாக வனஇலாகாவும், சில பிரதேசங்களை இருதரப்புக்கும் வழங்க முடியாதென ஜீவகாருண்யம் காட்டுகின்றது. வட்டமடு விவசாயக் காணியில் தமிழருக்கும் பங்குண்டு, முஸ்லிம்களுக்கும் உரித்துண்டு. இதேபோன்று பண்ணையாளர்களிலும் இரு இனத்தவர்களும் உள்ளனர். இதனால் இப்பிரச்சினைக்கு எந்தச் சாயமும் பூச முடியாதுள்ளனர் சில சந்தர்ப்பவாதிகள். பிரதேசவாதத்தைக் கிளறிவிட்டாலும், பல ஊர்களில் உள்ளோரும் இதிலுள்ளனர். எனவே இப்பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் நோக்குவதே சிறந்தது.


வட்டமடு பிரச்சினையைப் பொறுத்தவரை, அரிசியா? அல்லது இறைச்சியா? எதற்கு முன்னுரிமை. விவசாயம் செய்தால் அரிசி, கால்நடை வளர்த்தால் இறைச்சி இன்னும் தேவையானால் கொஞ்சம் பால். இறைச்சியில்லாதும் வாழலாம், பால் அருந்தாமலும் பிழைக்கலாம். ஆனால், அரிசிச் சோறு இன்றி மனிதன் எவ்வளவு காலம் உயிர் வாழ முடியும்? இவ்விடயத்தில் மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்கி, வாழ்வியல் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். மனிதனில்லாது பாலிருந்து என்ன? கால்நடைகள் சீவித்து என்ன?


வில்பத்தை எடுத்து நோக்கினால், வனங்கள் அழிக்கப்படக் கூடாது எனக்கூறி மனிதனின் வாழ்வியல் உரிமை மறுக்கப்படுகிறது. காட்டில் வாழும் ஜந்துக்களுக்கு வழங்கப்படும் உரிமைகூட, முசலி அகதி மக்களின் வாழ்வியலுக்கு வழங்கப்படவில்லை. இதுவே இம்மக்களின் வேதனை.
பொத்துவில் கனகபுர மக்களுக்கும் இதே நிலைதான். 1990 இல் வெளியேறிய மக்கள், முப்பது வருடங்களுக்குப் பின்னர் மீளத்திரும்பிய போது, வாழ்விடம் வனாந்தரமாகி இருந்தது. பின்னர் என்ன? வனஇலாகா அதிகாரிகளின் பார்வையில், இம்மக்கள் வனங்களை அழித்துக் குடியேறுவதாக முத்திரை குத்தப்பட்டனர். இப்போது வீடுகளின்றி வீதிகளில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.


முசலி பிரதேசத்திலும் இந்தப் போராட்டமே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வனஇலாகாவின் செயற்பாடுகள், சொந்தநாட்டு மக்களையே உள்நாட்டில் சட்டவிரோத குடியேறிகளாகப் பார்க்கும் நிலமைக்கு ஆளாக்கியுள்ளது. மனிதனின் அடிப்படை உரிமைகள் என, சர்வதேச சட்டங்கள் வகுத்த வாழ்வியல் உரிமைக்கு, இந்த இலாகாவில் இடமில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.


மறுபக்கம் அறுவாக்காட்டை எடுத்துக் கொண்டால், கொழும்புக் குப்பைகைளை இம் மக்களின் தலையில் கொட்டுவதற்கான முயற்சிகளாக இது பார்க்கப்படுகிறது. சுண்ணக்கல் விளையும் பூமி மட்டுமன்றி, ஏற்கனவே நுரைச்சோலை அனல்மின் நிலையம் நிறுவப்பட்டதால், பாரிய கதிர் வீச்சுக்களையும் அதிர் வலைகளையும் நுகர்வதுடன், சூழல் பாதிப்புக்களையும் எதிர்கொள்ளும் இம்மக்களுக்கு, அடுக்கடுக்காகப் பேரிடி. “குப்பைகளை இங்கு கொட்டுவது பிழை” என்பது இம்மக்களின் வாதம். ஆனால், எத்தனையோ வெளிநாட்டு நிறுவனங்கள் இக்குப்பைகளை வாங்கி, மீள்சுழற்சிக்குப் பயன்படுத்த முன்வந்தும், எதற்கும் இணங்கவில்லை இந்த அரசு. இங்கும் மனிதாபிமானம் மரித்துள்ளதாகவே கருத முடிகின்றது.


குப்பைகளின் கழிவுகள் சுண்ணக்கல்லில் படிவதால் குடிநீர் மட்டுமல்லாது, கடல் நீருக்கும் களங்கம் ஏற்பட்டு, பிழைப்புக்களை இழந்து விடுவோமோ! என்ற அச்சத்தின் உச்சியில், புத்தளம் மக்கள் உள்ளனர். மீன்பிடி, இறால் வளர்ப்பு, உப்புச் செய்கை அத்தனைக்கும் பெயர்போன புத்தளம் மாவட்டத்தில், கொழும்புக் குப்பைகளைக் கொட்டுவதால், எத்தனையோ மக்களின் வாழ்வாதாரம் வீழ்த்தப்படுகிறது. இங்குள்ள கட்சிகளும் இப்பிரச்சினையில் “கழுவிய மீனில், நழுவிய மீன்” நிலைப்பாட்டிலுள்ளமை மனிதாபிமானம் மௌனித்துள்ளதற்கான மற்றுமொரு அத்தாட்சியே.


தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனச் சகல இனத்தவரின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும் ஆபத்தை ஒழிப்பதற்கு மக்கள் ஒன்றுபட்டாலும், அரசியல்வாதிகள் ஒன்றுபடாதுள்ளனர். மக்களை ஒற்றுமைப்படுமாறு கூறும் அரசியல்வாதிகள், ஒன்றுபட்டுள்ள மக்களின் போராட்டத்துக்கு ஒன்றுபட்டு ஒத்துழைக்க தயங்குவது, வட்டமடு விடயத்திலுள்ள விசித்திரம் போன்றேயுள்ளது.


இங்கு இன்னுமொரு விடயம் மாத்திரம் இவற்றிலிருந்து வேறுபடுகிறது. இறக்காமம் மாணிக்க மடு விவகாரத்தை நோக்கினால், மத வழிபாட்டுத்தலம் ஒன்றுக்காக பல ஏக்கர் காணிகள் உரிமை கோரப்படுகின்றது. நாட்டின் எந்த மூலையிலும் எவரும், எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கான உரிமைகள் உள்ளன. நல்லதொரு விடயத்துக்காக அடிபட்டுக்கொள்வதை விட, மனிதாபிமானத்துக்கு மதிப்பளித்து உயிரிழப்பு, சொத்துக்கள் இழப்பு என்பவற்றை தவிர்க்க வழிவிடுவதே பெருந்தன்மை.
மௌனிக்கும் மனிதாபிமானம்: ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தில் மக்களுடன் ஒன்றாகாத அரசியல்வாதிகள்!!! மௌனிக்கும் மனிதாபிமானம்:  ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தில் மக்களுடன்  ஒன்றாகாத  அரசியல்வாதிகள்!!! Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.