அரசியல் குத்தலுக்காக பதப்படுத்தப்படும் முஸ்லிம் சமூகம்..
காலாவதியான பொதுபல சேனாவும், கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் சிந்தனைகளும்..

களி மண்ணை எடுத்த எடுப்பில் வளைத்து, நெழித்து மட்பாண்டங்கள் செய்து விட முடியாது. அதனை நன்கு பதப்படுத்தி, தேவைக்கு ஏற்ற வடிவத்தை பெறும் வகையில் உருட்டி, பிரட்டி, சூளையிலிட்டு சூடாக்கியே மட்பாண்டங்களை, பாவனைக்கு உகந்த முறையில் உற்பத்தி செய்து கொள்ள முடியும். நாம் ஒரு தனித்துவ தேவையை நிறைவேற்றிக்கொள்ள மட்பாண்டம் செய்ய வேண்டுமாக இருந்தால்,, களி மண்ணோடு சேர்ந்து சில கனிமங்களையும் சேர்த்தல் வேண்டும். அது போன்று தான், மக்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக, ஒவ்வொருவரும் பல வடிவங்களிலும் பதப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி மிகவும் ஆபத்தான திட்டங்களை நடந்தேறிக்கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

*காலாவதியான பொது பல சேனா*

கடந்த கால பல தேர்தல்களில் பொது பல சேனா அமைப்பின் செயற்பாடுகள் முஸ்லிம்களிடையே அதிகம் தாக்கம் செலுத்தி இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவ் அமைப்பின் தாக்கத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்டால் மிக தெளிவாக சொல்வார். அவரை விட, இதனை தெளிவாக அறிந்துகொள்ள பொருத்தமானவர் வேறு யாருமே இருக்க மாட்டார்கள் எனலாம். அந் நேரத்தில் முஸ்லிம்கள் பொது பல சேனாவின் இயக்குனர்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும், அவரது சகோதரர்களையுமே கருதி இருந்தனர். தற்போது இடம்பெறும் பல செயற்பாடுகள் பொது பல சேனா அமைப்பின் இயக்குனர்கள் முன்னாள் ஜனாதிபதி அணியினரா அல்லது இவ் அரசாங்கத்தினாரா அல்லது வேறு யாராவதா என்ற சந்தேக பார்வையை மக்களிடையே தோற்றுவித்துள்ளது. இதனை தொடர்ந்தால் உண்மையான இயக்குனர்களை மக்கள் இலகுவாக அறிந்துகொள்வார்கள். அது இதனை உருவாக்கியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் உருவாக்கி வளர்த்த நோக்கத்தை பூச்சியத்தால் பெருக்கிவிடும்.

அது மாத்திரமின்றி பொது பல சேனா அமைப்பின் செயற்பாடுகளை எதற்கும் அஞ்சாமல் முன் நின்று செய்து வந்தவரான ஞானசார தேரர் முஸ்லிம்களோடு எதிர்த்து மோதிய செயற்பாடுகளுக்கு அப்பால் நீதி மன்றத்தை அவமதித்த செயற்பாடுகள் சர்வதேச ரீதியான அழுத்தங்களுக்கு வழிவகுத்திருந்தது. அது அவரை என்ன செய்தாவது அடக்கியாக வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலையையும் அரசுக்கு தோற்றுவித்துள்ளது. பொது பல சேனாவின் செயற்பாடுகள் முஸ்லிம்களின் இருப்புக்களுக்கு அச்சுறுத்தலை வழங்கியிருந்தாலும், அது அதனை மையப்படுத்திய ஒரு அமைப்பாக, அதன் செயற்பாடுகளில் இருந்து அறிந்துகொள்ள முடியவில்லை. அவ் அமைப்பு செய்த பிரதான செயற்பாடாக முஸ்லிம்களின் வாக்குகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஸவிடமிருந்து பிரித்தெடுத்ததெனலாம். 

இவ் ஆட்சியில் அது, தனது பழைய செயற்பாடுகளை தொடருமாக இருந்தால், அது மீண்டும் முஸ்லிம்களின் வாக்குகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பக்கம் கொண்டு சேர்க்க சாதகமாக அமைந்துவிடும். அதுவே, அவ் அமைப்பு தோற்றம்பெற்றதன் நோக்காக இருந்திருந்தால், இவ்வளவு நாளும் பொது பல சேனா பட்ட பாடு வீணாகிவிடுமல்லவா? யார், என்ன தான் ஆதாரங்களை அடுக்கி, குவித்தாலும் பொது பல சேனா மஹிந்தவின் தாளத்துக்கு ஆடிய அமைப்புத் தான் என்ற சிந்தனையை முஸ்லிம்களின் மனங்களை விட்டு பூரணமாக ஒரு போதும் அகற்றிவிட முடியாது. ஏதோ ஒரு மூலையில் அச் சிந்தனை இருந்தேயாகும். இதன் உண்மை இயக்குனர்களாக மஹிந்த அணியினர் இருந்தாலும், பொது பல சேனாவின் செயற்பாடுகள் அரசுக்கு அழுத்தத்தையும், முஸ்லிம்களின் வாக்குகளை மஹிந்த அணியினர் பெறுவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அவ் அமைப்பின் நாமம் ஒலிக்கும் போதெல்லாம், அது மஹிந்தவின் நாமத்தையும் முஸ்லிம்களிடையே கேள்விக்குட்படுத்தும். 

அதாவது, எந்த கோணத்தில் பொது பல சேனாவின் செயற்பாடுகளை நோக்கினாலும், அவ் அமைப்புக்கு, அதன் இயக்குனரால் ஓய்வை அறிவிப்பதே பொருத்தமானது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இதற்கு மேலும் பொது பல சேனாவை வைத்துக் கொண்டு, அதன் பாம்பாட்டி மகுடி வாசித்தால், அது அவர்கள் அவ் அமைப்பை உருவாக்கிய நோக்கத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும். அது மாத்திரமன்றி பொது பல சேனா அமைப்பு பேரின மக்களிடையே செல்வாக்கிழந்து விட்டதோடு, அதன் கருத்துக்களும் செல்லாக் காசாக மாறிவிட்டது. இவ் அமைப்பை பெரும் சவால்களை எதிர்கொண்டு நீரூற்றி வளர்க்குமளவு பயனை எதிர்பார்க்க முடியாது. இவற்றின் விளைவுகளால் காலாவதியான பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு வீசப்பட்டுள்ளார். இல்லாவிட்டால் இத்தனை இலகுவாக சிறை சென்று தாடி வளர்ப்பாரா? 

*மூன்றாம் திட்டம் செயற்படுத்தப்படுகிறதா?*

பொது பல சேனா என்ற அமைப்பின் மூலம் பாரிய அரசியல் காய் நகர்த்தல்கள் இலங்கையில் இடம்பெற்று வந்தன. அந்த அமைப்பு காலாவதியாகிவிட்டால், அடுத்த திட்டத்தை உடனடியாக செயற்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நேரமே, அவ் அமைப்பை எதனை கொண்டு வீழ்த்துவது, இவ் அமைப்பு செல்லுபடியற்றதாகி விட்டால் என்ன செய்வது என்ற திட்டங்கல்கள் தீட்டப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக இன்று இலங்கை அரசியலில் சர்வதேச அரசியல் மோதல் அதிகரித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் தேர்தல் கேட்பார் என்ற பேச்சுக்கள் சூடாக சென்றுகொண்டிருக்கின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளப்பௌயாது அமெரிக்காவா, சீனாவா, இந்தியாவா என்று கேட்பது மிகப் பொருத்தமாக அமையும். இதன் விளைவுகளால் இலங்கையில் உச்ச திட்டங்கள் தீட்டப்படும். எத்தனை தலைகள் உருண்டாலும் பறவாயில்லை, அவர்கள் தங்களது நோக்கங்களை நிறைவு செய்துகொள்வார்கள். 

தற்போது இலங்கை நாட்டில் ஒரு தமிழ் – முஸ்லிம் இனக்கலவரத்தை தூண்டும் வகையாக செயற்பாடுகளை அவதானிக்க முடிகிறது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இன்பராசாவின் கூற்று, சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கட்டாய மாத மாற்ற புரளி, புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விவகார அணுகுமுறை ஆகியன ஒரு இனக்கலவரத்தை நோக்கியும், அதற்கான ஒரு அடித்தளத்தை இட்டிருந்தன. அந் நேரத்தில், இவைகள் எவற்றை நோக்கி நகர்த்தப்படுகின்றன என்பதில் முஸ்லிம் சமூகம் முறையான விழிப்புணர்வை பெற தவறி இருந்தது. அண்மையில் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்த கருத்துக்களை இவ்வாறான சம்பவங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கின்ற போது ஒரு தமிழ் – முஸ்லிம் இனக்கலவரத்தை நோக்கி ஒரு அணியினர் மிகத் திட்டமிட்டு நகர்த்துவதை அறிந்துகொள்ள முடிகிறது. இதனை பராமுகமாக இருந்துவிட முடியாது.

*ஏன் தமிழ் – முஸ்லிம் கலவர முயற்சி?*

ஒருவரிடத்தில் ஒரு விடயத்தை சாதிக்க வேண்டுமாக இருந்தால், தலையை தடவியும் சாதிக்கலாம், தலையில் குட்டியும் சாதிக்கலாம். பொதுவாக முஸ்லிம்களை நோக்கிய சர்வதேச எதிராகளின் அணுகு முறைகள் எப்போதும் வன்மையாகவே அமைந்திருக்கும். இதனை நாம் இலங்கையில் பல விதமாக கண்ணுற்றிருப்பதோடு, பல முஸ்லிம் நாடுகளில் நாளாந்தம் அவதானித்து கொண்டுமிருக்கின்றோம். அவர்களின் அந்த வன்மையான போக்கின் பின்னணியை சரியாக புரிந்துகொள்ள முடியாது, அவர்கள் விரித்த வலையில், எம்மை அடித்தவர்களுக்கு எது சாதகமானதோ, அவர்களுக்கே அடிவாங்கியவர்கள் ஆதரவு வழங்குவார்கள். அந்தளவு மிக நுட்பமான காய் நகர்த்தல்கள் இடம்பெறும். அந்த வகையில் தான், ஒரு தமிழ் – முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, ஏதோ ஒன்றை சாதிக்க முயல்கின்றார்கள்.

பொது பல சேனா அமைப்பானது வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள முஸ்லிம்களுக்கு பிரச்சினையை வழங்கியிருந்தாலும், வடக்கு, கிழக்குக்கு உள்ளே வாழ்கின்ற முஸ்லிம்களை சிறிதும் அசைத்து பார்க்க முடியவில்லை. முஸ்லிம்களை துன்பத்துக்குள்ளாக்கி, இன்புறும் பொது பல சேனா போன்ற அமைப்புக்களை இயக்குபவர்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களின் இருப்புக்களையும் சவாலுக்குட்படுத்த வேண்டும் என்ற சிந்தனையும், ஆசையும் நிச்சயம் எழுந்திருக்கும். வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுடன் நேரடியாக மோதுகின்ற  பலம் பேரின மக்களிடம் இல்லை எனலாம். அவர்கள் நினைப்பதை மிகவும் இலகுவாகவும், திறம்படவும் செய்து முடிக்க தமிழ் மக்களே மிகப் பொருத்தமானவர்கள் என கணக்கிட்டிருக்கலாம். 

அது மாத்திரமன்றி மியான்மார் பௌத்தர்கள் ரோகிங்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள், இன்று அவர்களுக்கு எதிரான பல தாக்கங்களை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியுள்ளது. மீண்டும், மீண்டும் முஸ்லிம்களை மையப்படுத்திய பேரின மக்களின் செயற்பாடுகள் இலங்கை நாட்டில் நடைபெறுமாக இருந்தால், அது, இன்று மியான்மார் அரசு சர்வதேசத்தில் எதிர்கொண்டிருக்கும் சவாலைப் போன்றதொரு சவாலை இலங்கை அரசும் எதிர்கொள்ள வழி வகுத்து விடும். எந்த அமைப்பாக இருந்தாலும் சரி, ஒரு அரசை சாவாலுக்குட்படுத்தி, தங்களது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள விரும்பாது. இவற்றை தவிர்ப்பதாக இருந்தால், தொடர்ந்து பேரின மக்களையும் முஸ்லிம்களையும் சண்டை பிடிக்க வைக்காமல், சிங்கள மக்களுக்கு ஓய்வை கொடுத்து, தமிழ் மக்கள் கையில் முஸ்லிம்களை அடிப்பதற்கான பொல்லை கொடுக்க வேண்டும். இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரங்களில் முஸ்லிம், தமிழ் மக்களிடையே முரண்பாடுகள் நிலவுகின்றமை போன்ற ஒரு சில காரணிகள் இனக்கலவரத்துக்கான தூண்டுதல்களாக எதிர்காலத்தில் அமையலாம். இவ்வாறானா சிந்தனைகளின் விளைவுகளால் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என சிந்திக்க தோன்றுகிறது.

*சாதிக்கப் முனைவதென்ன?*

இப்போது இலங்கை முஸ்லிம் கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சார்பு அரசியலை நோக்கி பயணிப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அதிலும் குறிப்பாக மு.காவினுடைய தலைவர் அமைச்சர் ஹக்கீம் மிக வெளிப்படையாகவே தனது மஹிந்த சார்பு அரசியலை வெளிப்படுத்தி வருகிறார். இன்று இலங்கை முஸ்லிம் சமூகம், தங்களது எதிர்கால அரசியல் குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் தளம்பிக் கொண்டிருக்கும் நிலையில், முஸ்லிம் கட்சித் தலைவர்களின் ஆதரவு மிக அவசியமாகும். இன்று முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் விடயங்கள், இரு விடயங்களில் ஒன்றை நோக்காக கொண்டிருக்க வேண்டும். ஒன்று முஸ்லிம் தலைவர்கள் இவ்வாட்சியை விட்டு விலக வேண்டும் என்ற கோசம் எழுவதற்கான வழி வகைகளை செய்தல். 

அதாவது அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் பின்னிப் பிணைந்திருந்த அமைச்சர் றிஷாத் வெளியேறுவார் என யாருமே சிந்தித்திருக்கவில்லை. அன்றைய சூழ் நிலை, அவர் கட்சி மாறியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அவருக்கு வழங்கி இருந்தது. அது மாத்திரமின்றி, காரண காரியங்கள் எதுவுமின்றி கட்சி மாறுவது பெரும் தாக்கத்தை செலுத்துவதில்லை. இன்று அரசில் உள்ளவர்கள் கட்சி மாறுவதற்கான தகுந்த வழி வகைகளை செய்தல் இவற்றின் நோக்காக இருக்கலாம். அதற்கு முஸ்லிம் மக்களால் முன் வைக்கப்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் ஏற்பட்டதை விட பாரதூரமான ஒரு நிகழ்வு இவ்வரசாங்கத்தில் இடம்பெற வேண்டும். எது, எவ்வாறு மாறும், மாற்றப்படும் என்பதை யாராலும் கூற முடியாது. ஒரு வேளை இவ்வாறானவற்றை செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலையில் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மீண்டும் இக் கட்சியோடு பூட்டுப் போடப்படுவார்கள். என்ன நடக்கும் என்பதை அந் நேரத்தில் இடம்பெறும் சம்பவங்களை கொண்டு தான் உறுதிபட குறிப்பிட முடியும்.

*இரு முஸ்லிம் அமைச்சர்களை கொலை செய்தல்*

இரு முஸ்லிம் அமைச்சர்களை கொலை செய்யப்போவதன் பின்னனியில் பல காரணங்கள் நிறைந்துள்ளன. இவ்விரு அமைச்சர்களாக அமைச்சர் றிஷாதும், ஹிஸ்புல்லாஹ்வுமே கருதப்படுகின்றனர். சட்ட ஒழுங்கு அமைச்சர், குறித்த அமைச்சர்களில் ஒருவராக அமைச்சர் றிஷாதின் பெயரை வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார். பேரினவாதிகளுக்கும், தமிழ் அரசியல் சக்திகளுக்கும், ஒரு சில குழுக்களுக்கும் இவர்கள் இருவரும் பெரும் சவாலை வழங்கு வருபவர்கள். அண்மையில் முஸ்லிம்களிடம் ஆயுதம் உண்டு என்ற சர்ச்சையை கிளப்பிய இன்பராசா கூட இவ்விருவரையுமே குறி வைத்திருந்தார். அது மாத்திரமன்றி பொது பல சேனாவின் விமர்சனங்களும் இவர்களையே மையப்படுத்தி இருந்தன. பேரினவாதிகள் சின்ன அரேபியாவாக காத்தான்குடியையே கூறி வருகின்றனர். இப்படி இவர்களை நோக்கி பலரும் குறி வைத்துள்ளமையும், இவர்களை நோக்கி இவ்வாறான சதிகள் இடம்பெறலாம் என்ற செய்தியையும் உறுதி செய்வதாக அமைகிறது.

குறித்த கொலை செய்யும் திட்டம் தொடர்பான செய்தி கிடைக்கப்பெற்ற போது, அமைச்சர் றிஷாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் இருந்துள்ளதோடு, உடனடியாக பாதுகாப்பு காரணத்தை மையப்படுத்தி அங்கிருந்து வெளியேறி உள்ளார். நிச்சயம் இவ்விருவரின் மீதும் கை வைத்தால், அது பாரிய பிரச்சினைகளை விளைவாக்கும். அதனை தமிழ் மக்கள் மீது போட்டால், அது பாரிய இனக்கலவரத்துக்கே வழி வகுக்கலாம். இவ்விருவரும் தமிழ் மக்களை அண்டிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்ற விடயம் அதற்கு  சாதகமாகவும் அமையும்.

ஒரு சிலர் வேறு அமைச்சர்களை நோக்கியும் விரல்களை நீட்டுகின்றனர். அது யாராக இருந்தாலும் இரு முஸ்லிம் அமைச்சர்கள் என்ற விடயம் துல்லியமானது. இங்கு தான் முஸ்லிம்கள் நன்றாக கண் விழித்து, தங்களை நோக்கி வரும் ஆபத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். இரு அமைச்சர்களை கொலை செய்து, தங்களது திட்டத்தை செயற்படுத்த போகிறார்கள் என்றால், முஸ்லிம்களின் எதிரிகள் எவ்வாறான பாரதூரமான சிந்தனைகளிலும், திட்டங்களிலும் இருப்பார்கள் என சிந்தித்து பார்க்க வேண்டும். இதனை சிந்திக்கும் ஒருவர் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் பாரிய ஆபத்தில் உள்ளதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். குறித்த செய்தியை வெளியிட்ட நபர் இஸ் செய்தியோடு மாத்திரமன்றி, ஜனாதிபதி மைத்திரி, கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரைக் கூட கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக கூறியுள்ளார். இவர்கள் எம்மவர்கள் அல்ல என ஒரு சில முஸ்லீம்கள் சிந்திக்கலாம். இலங்கை ஜனாதிபதியையே கொலை செய்து, தங்களது தேவைகளை ஒரு குழு அல்லது அமைப்பு செயற்படுத்த முனைகின்றதென்றால், அது சாதாரணமாக நோக்கக் கூடிய ஒரு விடயமல்ல என்பதையே எடுத்துக் கூறுகிறது. குறிப்பாக இவர்களின் கூறி முஸ்லிம்களையும் நோக்கி இருப்பதால், முஸ்லிம் சமூகம் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை மனதில் பதித்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று புதன் கிழமை 17-10-2018ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இது நவமணி பத்திரிகையில் வெளியிடப்படும் எனது 85வது கட்டுரையாகும்.

*துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்* 
*சம்மாந்துறை.*


அரசியல் குத்தலுக்காக பதப்படுத்தப்படும் முஸ்லிம் சமூகம்.. அரசியல் குத்தலுக்காக பதப்படுத்தப்படும் முஸ்லிம் சமூகம்.. Reviewed by Madawala News on October 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.