சமூகவலைத்தளங்களும் இளைஞர்களினூடான சகவாழ்வும்.


ஒரு ஜனநாயக நாட்டில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதை நம்மில் அதிகமானவர்கள்
அறிந்து வைத்துள்ளோம்.அதே உரிமையில்  மற்றவர்கள் மீதான சில கடமைகளும் உள்ளன என்பதை நம்மில் எத்தனைபேர்தான் மிகச்சரியாகத் தெரிந்து வைத்துள்ளோம்??சமூக வலைத்தளங்களை நமது சுதந்திரத்தின் படி பயன்டுத்தும் அதே வேளை மற்றவர்கள் மீதான சில கடமைகளும் உள்ளன என்பதை மறந்து செயற்படக்கூடாது.

சமூக வலைத்தளங்களின் 
சில நன்மைகள்.....,??என்று வினவினால்,

நமக்கு அவசியமான தகவல்களை விரைவாகப் பகிரலாம்,சிறந்த நண்பர் வட்டத்தை ஏற்படுத்தலாம்,தகவல் பரிமாற்றத்திற்கான செலவு, நேர வீண்விரயம் குறைவு,தேவையான போது ஏனையவர்களுக்கு உதவுவதற்கான களம்...,,,இப்படி கேட்பதற்கு இனிமையாக விடைகளைச் சொல்லிவிட்டு, சமூக வலைத்தளங்களை உண்மையிலேயே இதற்காகவா நம் இளைஞர் யுவதிகள் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்ற வினாவையும் ஏற்படுத்துகின்றனர்.

இன்றைய சில இளைஞர்கள் இவற்றிற்கெல்லாம் மறுபக்கமாக பொறுப்புணர்வின்றியும் மற்றவர்களின் மனது புண்படும்படியும் தகவல்களைப் பகிர்கின்றனர்.வன்முறைக்கு மூலகட்டமாக வெறுப்புணர்வூட்டும் பேச்சு அமைகிறது.அதனால் உண்மைக்குப் புறம்பான செய்திகள் மின்னல் வேகத்தில் கடத்தப்படுகின்றன.அதன் உண்மைத் தன்மை பற்றி  ஆராய்பவர்களை விட ஆக்ரோஷம் கொண்டு  அதனை பகிர்பவர்களே அதிகம்.இதன் விளைவு மிகப் பாரதூரமானது என்பதை இவர்கள் யாரும் சிந்திப்பதில்லை.அண்மையில் ஏற்பட்ட திகண வன்முறைக்கு முகநூல்,வட்ஸ் அப் என்பன உறுதுணையாக அமைந்தன என்பது ஆராய்வின் முடிவாகும்.நாம் சிந்திக்காமல் எடுக்கும் சிறு முடிவுதான்.ஆனாலும் இறுதியில் பெரும் கலவரத்தையே ஏற்படுத்தும் பாரிய சக்தி இதற்குண்டு.

நாம் பதிவிடும் ஒரு எழுத்துக்கூட சமூகத்தில் ஏனைய சகோதரர்களைப் பாதிக்குமாயின் அதனைப் புறக்கணிப்பதே நன்று.இன்று அதிகமான இளைஞர்கள் தமது எதிர்கால இலக்கு என்ன என்பதை மறந்தே வாழ்கின்றனர்.யாரோ ஒருவர் ஆட்டுவித்தால் தாமும் சேர்ந்து ஆடும் பொம்மையாகிவிட்டனர்.யார் யாரோ தம் அரசியல் இலாபம் கருதி செய்த சதிகளில் வழுக்கி விழ முன் சற்று சிந்திக்க வேண்டும்.
அதே சமூக வலைத்தளங்களில் தேவையற்றதும்  வெறுப்புணர்வூட்டும்      பதிவுகளுக்கும் பதிலாக அனைத்தின மக்களின் உணர்வுகளைச் சீண்டாத ஆரோக்கியமானதும் சகவாழ்வின் நெறிமுறைகளையும் ஏன் நம்மில் அதிகமானவர்களால் பதிவிட முடியாமல் போனது?

நமது வரலாற்றுப் பக்கங்களில் பிழைகள் நிகழ்ந்திருக்கலாம்தான்.ஆனால் அவற்றினைக்கொண்டு நம் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு மேலும் நாவல்களையும் தொடர் கதைகளையும் எழுத வாய்ப்பளிக்கக்கூடாது.நம் எதிர்கால சந்ததிகளாவது சமாதானத்தின் தூதுவர்களாகத் துளிர்க்க வேண்டும்.

இன்று துரதிஷ்டவசமாக மற்றவர்களை மன்னிக்க முடியாத அளவு கல்நெஞ்சம் கொண்டு வாழ்கிறோம்.அப்படித்தான் சிலர் சிலரை வழிகாட்டிக்கொண்டும் இருக்கின்றனர்.இவ்வாறான நிலையில்
வாழ் நாள் முழுதும் பகைகொண்டு வாழும் ஐயறிவு மிருகங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.? நாம் ஆறறிவு படைத்தவர்கள் என்பதை, அதிலும் குறிப்பாக பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள் என்று கூற வெட்கப்பட வேண்டும்.

இலங்கை என்பது யாருக்குச் சொந்தம் என்பது அல்ல இங்கு பிரச்சினை.ஒரு சுதந்திர நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த நாட்டில் அனைத்து உரிமைகளும் உண்டுதான்.அதற்கென்று அவன் நினைத்ததை எல்லாம் அரங்கேற்ற முடியும் என்பதல்ல.நினைத்ததை எல்லாம் செய்ய நினைத்தவர்கள் வாழ்வில் வெற்றிபெறுவது கடினம்.எதுவரை எனில் அந்த செயல் மற்றவர்களைப் பாதிக்காதவரை.

இலங்கை என்பது பல நூற்றாண்டுகள் பல்லின மக்கள் பண்பாட்டுடன் வாழும் நாடாகும்.யாரோ சிலர் செய்ததற்காக அந்த இனத்தின் அனைத்து மக்களையும் சாடுவதோ, ஒட்டுமொத்தமாய் வெறுப்பை உமிழ்வதோ ஒரு புத்தியுள்ள பிரஜைக்கு எந்தளவிலும் பொருத்தமானதல்ல.

பிரச்சினைகள் வருவது உண்மைதான்.அதனை மறைக்க முடியாதுதான்.ஆனாலும் அந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுகிறோம் என்பதிலேயே அப் பிரச்சினைக்கான தீர்வும் தங்கியுள்ளது என்பதே நிதர்சனம்.எந்த செயலையும் சிந்தித்து செய்பவர்களைவிட செய்துவிட்டு சிந்திப்பவர்களே அதிகம்.

எமது வரலாறு அழகானது.ஒரு நாடு அந்நாட்டு மக்களினது கலாசாரத்தையும்,இனத்தையும் ஒரு மனிதனின் இருப்புக்கான எடுகோளாகக் கொள்ளாமல் அனைவரையும் ஏற்று அரவணைக்கும் போது அங்கு அழகிய எதிர்காலம் மலர்வது உள்ளங்கை நெல்லிக்கனி.அந்த அழகிய எதிர்காலத்தை இனிவரும் எம் எதிர்கால சந்ததிகளுக்காவது பரிசளிக்க வேண்டாமா? இன்னும் இன்னும் அவர்களின் காதில் முரண்பாடுகள் என்ற காயங்களைத்தான் பதிவிடப்போகிறோமா?

எங்கு உரிமைகள் பேசப்பட விரும்புகிறோமோ அதற்கென உள்ள சில கடமைகளையும் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம்.நமக்கென உள்ள உரிமைகளில் பிறருக்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகளும் உள்ளன என்பதை உரிமை என உரத்துக் கத்தும் நம் தொண்டைகளுக்கும் நாவுகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.நமக்கு உரிமை உள்ளதென மற்ற சகோதரர்களைப் பாதிக்கும் விதத்தில் நம் கருத்துப் பதிவுகள் அமைந்தால் மற்றவர்களின் உரிமையை வழங்க வேண்டிய நமது கடமையில் தவறு ஏற்பட்டுவிடும்.

நாம் இந்த நாட்டில் ஒற்றுமையாக இருக்கும் வரை நம்மை யாராலும் கவிழ்ப்பதற்கு கனவிலும் நினைக்க முடியாது.இதனால் தான்  இலங்கையின்  பல்லின மக்கள் வாழும் நம் நாட்டின் முன்னேற்றத்தைச் சீர்குலைத்துத் தொடர்ந்தும் தம் ஆதிக்கத்தின் கீழ் இருக்கவும் சமூகத்திடையே ஒவ்வொருவரினதும் 'இலங்கையன்' எனும் அடையாளத்தைத் தொலைக்கவும் சில முகமூடி மனிதர்கள் இனமென்றும் மதமென்றும் குழப்பங்களைத் தயார்செய்கின்றனர்.இதனைக்கூட அறிந்துகொள்ள முடியாமல் இனம் எனும் பெயரில் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பபட்டுக் கொதிப்பது மடமைத்தனமாகும்.

நாம் பல இனங்கள் என்பதற்கு அப்பால்
நம்மைப் பிரநிதித்துவப்படுத்தும் ஒரு அடையாளமாக என்று 'இலங்கையன்' என்ற  சிம்மாசனத்தில் அமர்கின்றோமோ அன்றுதான் வெற்றி எனும் மகுடத்தை  சூடுவோம்.

சமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வாறு சகவாழ்வைக் கட்டியெழுப்பலாம் என்பதை இலங்கைத் தாய்நாட்டின் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.பாலில் இருந்து நீரை வேறாகப் பிரித்தறியும் அன்னம் போல சமூக நலன் கருதி சமூக வலைத்தளங்களில் உள்ள நல்லவைகளைப் பயன்படுத்தி நம் இலங்கைச் சமூகத்தின் அடையாளம் காக்க  இளைஞர் யுவதிகளாகிய நாம் பொறுப்புடன் செயற்படுவது இன்றியமையாததாகும்.


பிற்குறிப்பு: நம் உரிமைகள் பறிக்கப்படும் போது வாய்மூடி மௌனம் காக்க வேண்டும் என்ற தவறான புரிதல் இருக்கக்கூடாது.அதனை முறையாக அணுகி நம் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதுதான் அறிவுடைமை.

Binth Fauzar(SEUSL)
Main trainer,
Srilanka Unites.
சமூகவலைத்தளங்களும் இளைஞர்களினூடான சகவாழ்வும். சமூகவலைத்தளங்களும் இளைஞர்களினூடான சகவாழ்வும். Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.