இலவசக் கல்வியின் எதிர்காலம்?


-எம்.எம்.ஏ.ஸமட்-
ஒருவர் பெறுகின்ற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும், திறனுக்கும் அடித்தளமாக இருந்து
அவரது ஒவ்வொரு செயற்பாட்டையும் சிறப்புற மேற்கொள்ள வழி வகுக்கும். அந்தவகையில், கல்வி கற்கும் வயதெல்லையைக் கொண்ட ஒவ்வொரு பிள்ளையும் இக்கல்வியை கற்றுக்கொள்வதும் கற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தப்படுவதும் அவசியமாகும்.


அந்த அவசியத்தை இலக்காகக் கொண்டே ஒவ்வொரு பிள்ளையும் கல்வி கற்பதற்கான உரிமை உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பில் கூட கல்விக்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படை உரிமையை பெற்றுக்கொள்ளும் உரிமை இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரித்தானது.
உலகளாவிய ரீதியில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் பல வடிவங்களில் முறைமைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகின்; சில நாடுகளிலேதான் இலவசக் கல்வி முறைமை நடைமுறையில் காணப்படுகிறது. ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பக்கல்விப் பாடசாலை மாணவர்களுக்கு இலசவக் கல்வி முறைமை உள்ளபோதிலும,; இடைநிலைப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவ்வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள்  கொடுப்பனவு செலுத்தியே கல்வி கற்கும் நிலை காணப்படுகிறது.  


இருந்தபோதிலும், ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை இலவசமாக வழங்கும் பிரேசில், மொறிசியஷ் போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய நாடுகளின்; வரிசையில் இலங்கையும் ஒன்றாகும். ஆனால், இலவசக் கல்வி முறைமையை கொண்டுள்ள இலங்கையின் இலவசக் கல்வி எதிர்கலத்தில் என்னவாக அமையும் என்ற கேள்வியை தற்கால பாடசாலக் கல்வி நடவடிக்கைகள் எழுப்பியுள்ளன என்பது அவதானத்திற்குரியதாகும்.

தற்காலமும் பாடசாலைக் கல்வியும்

இலங்கை ஏறக்குறைய 2300 வருடங்களுக்கு முற்பட்ட கல்வி வரலாற்றைக் கொண்டதொரு நாடாகக் காணப்படுகிறது. இந்நாட்டை ஆளுகைக்குட்படுத்தி ஆட்சி செய்த மேற்குலகினர் அவர்களி;ன் கொள்கைகளுக்கும், தேவைளுக்குமேற்ப  கல்வி வாய்ப்பை வழங்கினர்;. இருந்தபோதிலும், அவர்களின் கொள்கைகளுக்கு இசைந்துபோக மறுத்த பலர் கல்வி வாய்ப்பை இழந்தமையை  இலங்கையின் கல்வி வரலாற்றில் காணக் கூடியதாகவுள்ளது.


இருப்பினும், 1836ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கோல்புறூக் ஆணைக்குழுவின் ஊடாக பாடசாலைக் கல்வி முறைமை என்ற நவீன கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட முதலாவது பாடசாலையாக கொழும்பு றோயல் கல்லூரி திகழ்கிறது. இதன் பின்னர் பல பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.


1931ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வி முறைமையானது இலவசக் கல்வி என்ற நிலைக்கு மாற்றப்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த முயற்சியின் பயனாக காலணித்துவ காலத்து இலங்கை நிருவாகப் பேரவையின் முதல் கல்வி அமைச்சரான கிறிஷ்டோபர் வில்லியம் விஜேயகோண் கன்னங்கராவினால் 1940ஆம் ஆண்டு இலவசக் கல்வி முறைமை இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.


அவரினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச் கல்வி வாய்ப்பின் மூலமே இலங்கை மக்கள் எழுத்தறிவு மிக்கவர்களாக உள்ளனர். தென்கிழக்காசி நாடுகளின் சனத்தொகையில் 98.1 வீதம் எழுத்தறிவு கொண்ட மக்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது. அர்ப்பணிப்புள்ள ஆசிரிர்களின் கடமையுணர்வும் கற்பித்தல் உணர்வும் இந்த நிலையை அடையச் செய்திருக்கிறது. பாடசாலைக் கல்வியின் தாக்கம் இலங்கையை ஆசியாவிலேயே  எழுத்தறிவுடையோரை அதிகம் கொண்ட நாடு என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்றால் அதற்குக் காரணமாக அமைவது பாடசாலையின் இலவசக் கல்வி  முறைமை எனக் குறிப்பிட முடியும்.
ஆனால், தற்காலத்தில் பாடசாலை இலவசக் கல்வி முறைமையானது மேலதிக வகுப்பு அல்லது கல்வி முகாம்கள் என்ற பெயர்களில் பணம் தேடலுக்கான வர்த்தக முறைமையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.; பாடசாலைகளினூடாக வழங்கப்படும் இலவசக் கல்வியின் எதிர்காலம் இத்தகைய மேலதிக வகுப்புக்களினால் சீரழிக்கப்படுமா அல்லது ஏழை மாணவர்கள் பாடசாலைகளில் கல்வியைத் தொடர்வதில் தடங்களை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும், அச்சமும் சமூக மட்டத்தில் பரவலாகக் காணப்படுவடுவதுடன் பாடசாலை வகுப்பறைக் கல்வின் மறுபக்கம்  எதிர்காலத்தில் என்னவாக அமையும் என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்திருக்கிறது..

மேலதிக வகுப்புக்களும் வகுப்பறைக் கற்பித்தலும்

1940ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறையினூடாக ஏழை மாணவர்களும் பாடசாலைகளில் அனுமதி பெற்று வகுப்பறைக் கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டனர். மத்திய மகா வித்தியாலயம் என்று ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் பின்னர் தேசிய பாடசாலை, மாகாணப் பாடசாலை என மாற்றப்பட்டது. மாகாணப் பாடசாலைகளும்  1 ஏபி தரப் பாடசாலை, 1 சீ தரப் பாடசாலை, வகை 2, வகை 3 பாடசாலைகள் என வகுக்கப்பட்டன. இவ்வாறு நாடுபூராகவுமுள்ள ஏறக்குறைய 10,012 பாடசாலைகளில் 4,037,857 மாணவர்கள் இலவசக் கல்வியின் பயனைப் பெற்று வருகின்றனர்.


இந்நாட்டுப்பிள்ளைகளின் கல்வி விருத்திக்காக முதலாவது கல்வி அமைச்சர் கன்னங்கரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசப் கல்விப் போதனை மாத்திரமின்றி. இலவச பாடநூல்கள் இலவச  சீருடை அவற்றுடன் மதியவுணவும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தற்போது மாணவர்களுக்கான மருத்துவக்  காப்புறுதி, கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு காலணி மற்றும் ஒரு கிளாhஸ் பால் என மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் பௌதீக தேவைகளை நிறைவேற்றுவதற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவங்கள் பிள்ளைகளின் கற்றலுக்கான பணச் செலவை, பொருளாதாரச் சுமை ஓரளவு பெற்றோர்களுக்குக் குறைத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
நேரடியாக இலவச சீருடை வழங்காமல் அதற்குப் பதிலாக பண பவுச்சர் வழங்கும் நடைமுறை 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவற்றில் நிவர்த்தி செய்யக் கூடிய தவறுகளும் நடைமுறைச் சிக்கல்களும் காணப்பட்டபோதிலும,; நேரடி இலவச சீருடை வழங்கப்படுவதனால் இலாபமடைந்த ஒரு சிலர் அவற்றை  ஏற்றுக்கொள்ளாது எதிர்த்து கோஷம் எழுப்பியதையும் இதில் ஒரு சில கல்வித்துறைசார்புடையோரும் பங்குகொண்டதையும் கடந்த காலங்களில் காண முடிந்தது. இவர்;களும் கல்வியையும் கல்விசார் விடயங்களையும் வியாபாரமாக்க முனைபவர்களாகவே காணப்பட்டனர்.


மாணவர்களுக்கு இலவச மதியவுணவு வழங்குவதிலும் ஆங்கங்கே ஒரு சில முறைகேடுகளும் மோசடிகளும் இடம்பெறுவதையும் அறியக் கூடியதாகவுள்ளது. இவற்றில் ஈடுபடுகின்றவர்களும் கல்வித்துறையில் அங்கம் வகிப்பவர்களேதான். இவர்களும் கல்வி வியாபாரத்தின் பங்குதாரார்களாகச் செயற்படுபவர்களாக உள்ளனர்.


இவை தவிர, பாடசாலைகளில் மாணவர்களை தரம் ஒன்று முதல் 12 வரை சேர்த்துக்கொள்வதற்கு எவ்வித கட்டணங்களும் பெறக் கூடாது என்று கல்வி அமைச்சினால் சுற்றுநிருபத்தினூடாக அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும,; ஒரு சில தேசிய, மாகாணப் பாடசாலை அதிபர்கள் அவற்றைப் பொறுப்படுத்தாது நேரடியாகவும், மறைமுகமாகவும் பணம் பெறும் கல்வி வியாபாரிகளாகச் செயற்பட முனைவர். இந்த வியாபார நடவடிக்கைக் காலமாக எதிர்வரும் மாதங்களைக் கருதலாம். ஆண்டு ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வில் கெடுபிடிகளையும், குளறுபடிகளையும் ஏற்படுத்தி அதனூடாக ஏமாந்த பெற்றோர்களிடமிருந்து நேரடியாகவும,; மறைமுகமாகவும், தரகர்கள் ஊடாகவும் பணத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை தற்போதிருந்தே கல்வி வியாபாரிகள் முயற்சிப்பார்கள். இது தொடர்பில் தற்போது கல்வி அமைச்சு முறைபாடுகள் வந்தவண்ணமுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


கடந்த வருடங்களில், பிள்ளைகளைப் பாடசாலைகளில் இணைப்பதற்காக பணம் பெற்ற அதிபர்கள் மீதான குற்றங்கள் நிறுபிக்கப்பட்டு இடமாற்றப்பட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனா.; ஒரு சிலர் தொடர் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சிலர் தங்களுள்ள அரசியல் செல்வாக்கினாலும், அவர்களுக்குத் துணைபோகும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களினூடாகவும் இவ்வியாபாரத்தை; எவ்வித அச்சமுமின்றி தொடர்ந்து முன்னெடுத்தும் வருகின்றனர்.

இத்தகையவர்களின் செயற்பாடுகளும் இலவசக் கல்வியின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கல்வி வியாபார முயற்சியாகவே கருதப்பட வேண்டியுள்ளது.


இந்நாட்டின் எதிர்கால சந்ததியினர் இலவசக் கல்வியின் முழுப் பயனையும் அடைந்துகொள்ள வேண்டுமென்பதற்காக வழங்கப்படுகின்ற அனுகூலங்களை முறையாக நிறைவேற்ற ஒரு சில ஆசிரியர்களும், அதிபர்களும் தயங்குவது அல்லது அவற்றைப் புறக்கணித்துச் செயற்படுவது,  அவற்றை வழங்க மறுப்பது அங்கீகரிக்கப்பட முடியாதவை.


இற்றைக்கு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னர் பாடசாலைகளில்  தவணைக் காலத்திற்குள் பாடப்பரப்புக்கள் ஆசிரியர்களினால் நிறைவு செய்யப்பட்டு பரீட்சைககளுக்கும் மாணவர்கள் தோற்றினர். அவ்வாறு தோற்றிய மாணவர்களில் பலர் சித்தியடைந்து வௌ;வேறு துறைகளில் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பட்டப்படிப்புக்களை  நிறைவு செய்து உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் உயர்பதவிகளையும் வகிக்கிறார்கள்.
அக்கால ஆசிரியர்கள் கற்பித்தலை பணம் தேடும் தொழிலாகக் கருதவில்லை.  ஒரு புனித பணியாகவே கருதினர்.  பாடசாலை நேரங்களை மாணவர்களின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான நேரமாகப் பயன்படுத்தினர். அவ்வாறான ஆசிரியர்கள் இன்றும்  கௌரவத்துக்குரியவர்களாகவே நோக்கப்படுகின்றனர்.


ஆனால,; தற்காலத்தில்  சில 'டீயூசன்' வகுப்புக்களை நடாத்துகின்ற அல்லது அவற்றின் முகாமையாளர்களாகச் செயற்படுகின்ற  சில ஆசிரியர்கள,; ஆசிரியர் பணியினை பாடசாலையில் பகுதி நேரத் தொழிலாளகவும் 'டியூசன'; வகுப்புக்களில் முழு நேரத் தொழிலாகவும் கருதிச் செயற்படுவது இலவசக் கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக் குறிக்குள் தள்ளியிருப்பதோடு தங்களுக்களிக்கப்படட பொறுப்புக்களை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கைகளாகவே கருத வேண்டியுள்ளது. பொறுப்புக்களை உதாசீனம் செய்து கல்வி வியாபாரத்தை மேலோங்கச் செய்யும் நடவடிக்கைகளை இலங்கைச் சமூகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கப்பபோகின்றன?.


மாணவனின் பாடசாலை வரவில் கவனம் கொள்ளாத 'டியூசன்' ஆசிரியர்கள் அல்லது ஆசிரிய முகாமையாளர்கள் 'டியூசன'; வகுப்புக்கான மாணவனின் வரவில் அக்கறைகொண்டு அம்மாணவனின் பெற்றோரிடம் முறையிடுபவர்களாகவும் காணப்படுகின்றமை அவர்களின் கல்வி வியாபாரத்தில் உள்ள அக்கறையே தெளிவுபடுத்துகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும், பொருளாதார நெருக்கடிகளும் ஒவ்வொரு அரச ஊழியனையும் பாதித்திருக்கிறது என்பது உண்மை, அவற்றிலிருந்து மீள வேண்டிய நிலைக்கு ஒவ்வொரு அரச ஊழியனும் தள்ளப்பட்டிருக்கிறான். நிதியீட்டலில் ஈடுபட வேண்டி தேவை இருக்கிறது.  முறைதவறிய நீதியீட்டலில் ஈடுபடுவது தவறாகம், தங்களுக்குள்ள பொறுப்பை துஷ்பிரயோகம் செய்துவிட்டு நிதியீட்டலில் ஈடுபடுவதற்கான வழிகளை தேடுவது மனச்சாட்சிக்கு விரோதமானது.


இதற்கோர் உதாரணமாக, ஒரு சில ஆசிரியர்களினால் பாடசாலை தவணைத் கால பாடவேளைகளில்  பாடப்பரப்புக்களை நிறைவு செய்வதில் காட்டாத அக்கறை டியூசன் வகுப்புக்களில் நிறைவு செய்வதில் காட்டப்படுவதை குறிப்பிடலாம். கல்விக்கான இணையத்தள விபரங்களின் பிரகாரம,; நாடளாவிய ரீதியில் ஏறக்குறைய 8000 'டியூசன்' நிலையங்கள் உள்ளன. ஆனால் இவ்வெண்ணிக்கையானது இதைவிட அதிகமானதாகவே காணப்படக் கூடும். இந்த  நிலையங்களில் இடம்பெறுக்கின்ற கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எந்தளவுக்கு வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகும். ஒரு சில கல்வி நிலையங்களில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டாலும் பல கல்வி நிலையங்களில் இடம்பெறுகின்ற  கல்வி நடவடிக்கைகள் வருவாய்க்கு முன்னுரிமை வழங்கி முன்னெடுக்கப்படுவதாகவே அறிய முடிகிறது.


ஏனெனில், ஒரு வகுப்பில் மாணவர் எண்ணிக்கையானது 35 என வரையறை செய்யப்பட்டுள்ளபோதிலும,; பல 'டியூசன'; வகுப்புக்களில் 45க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இக்கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எத்தகைய அடைவுகளை ஏற்படுத்தும் என்பதும் சாதாரணமாக ஊகித்துக்கொள்ள முடியும்.


இருப்பினும், எல்லா ஆசிரியர்களையும் இந்த கல்வி வியாபார வட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ள முடியாது. அரசாங்கத்தினால் வழங்கப்டுகின்ற சம்பளத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியினை கௌரவப்படுத்தி கடமைபுரிகின்ற, மாணவர்களினது கல்வி அடைவுகளிலும் பாடசாலையின் விருத்தியிலும் அக்கறை கொண்டு செயற்படுகின்ற ஆசிரியர்களும் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.


கல்வி வியாபாரமும் இலவசக் கல்வியின் எதிர்காலமும்


இலவசக் கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி கல்வி வியாபாரம் கலைகட்டுவதற்கு பெற்றோர்களும் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும். பெரும் போட்டித்தன்மை கொண்ட பரீட்சைகளாகவுள்ள ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர,  உயர்தர தேசிய பரீட்சைகளுக்குத் தோற்றும் தமது பிள்ளைகள் நல்ல பெறுபேற்றைப் பெற வேண்டும் என்பதற்காகப் பெற்றோர்கள் படும்பாடே பெரும்பாடு.


ஒரு பாடத்திற்கு பல 'டியூசன'; வகுப்புக்களுக்கு அனுப்பும் பெற்றோர்களும் செல்லும் பிள்ளைகளும் உள்ளனர். ஏறக்குறைய மாதமொன்றுக்கு 'டியூசன்' வகுப்புக்களுக்காக 20 ஆயிரத்திற்கும் மேலதிமாகச் செலவு செய்யும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்யும் பெற்றோர்களினால் பொருளாதார வசதி குறைந்த  சில பெற்றோர்களும் பிள்ளைகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
'டியூசன'; வகுப்புக்களின் தாக்கம் மத்திய தர வர்க்க குடும்பங்களின் பொருளாதாரத்திலும் பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது.


 ஒரு பாடசாலை வகுப்பில் உள்ள 30 மாணவர்களில் 25 மாணவர்கள் 'டியூசன்' வகுப்புக்களுக்குச் செல்லும்போது எஞ்சிய 5 மாணவர்களினாலும் செல்லாமல் இருக்க முடியாது. அவ்வாறு அம்மாணவர்கள்; செல்லாதிருப்பது அவர்களை ஏனைய மாணவர்களின் நகைப்புக் கண்ணோட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. பெற்றோர்கள் மத்தியிலும் கௌரவப் பிரச்சினையை உருவாக்கி விடுகிறது. இக்கௌரவப் பிரச்சினையானது சில பெற்றோர்களைப் பொருளாதார நெறுக்கடிக்குள்ளும் தள்ளிவிடுவதை  சமூகத்தின் மத்தியில் சாதாரணமாக அவதானிக்க முடிகிறது. ஆனால், இவ்விடயம் கல்வி வியாபாரத்தை ஊக்குவிக்கும் பெற்றோர்களினால் உணரப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.


பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் பெற்றோர் பாடசாலை மட்டத்தில் பிள்ளைக்கான பாட அலகுகள் நிறைவு செய்யப்படுகின்றதா? பாடசாலையில் பிள்ளையின் கல்வி அடைவு எந்த நிலையில் உள்ளது. பிள்ளைக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகிறது என்பதைக் கண்டறிவதில் அல்லது இவை தொடர்பில் வினா எழுப்புவதில்லை. ஆனால், இவ்விடயங்கள் தொடர்பாக ஒவ்வொரு பெற்றோரும் அக்கறைகாட்டுவார்களானால், இலவக் கல்வி வியாபாரமாக மாற்றப்படுவதையும், ஏழைப் பெற்றோர்கள் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக பொருளாதார நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படுதும் தவிர்க்கப்படும் என்பது அனைத்து பெற்றோரினதும் அவதானத்திற்குரியதாகும்.;


பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் மாத்திரம் பெற்றோர்களின் பொறுப்பு முடிந்துவிடுகிறது என்ற மனநிலை மாறி, பாடசாலை சமூகத்தின் ஒரு அங்கமாகச் செயற்படும் பெற்றோர் பாடசாலையினதும் ஆசிரியர்களினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலும் அக்கறை கொள்வது மிக முக்கியமாகும். இந்த முக்கிய பொறுப்பானது பொறுப்பற்ற ஒரு சில ஆசிரியர்களின் கல்வி வியாபாரத்தினால் இலவசக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுக்கும்.


இலவசக் கல்வி பாதுகாக்கப்பட வேண்டுமாயின் 'டியூசன'; வகுப்புக்கள் மட்டுப்படுத்தப்படுவதோடு வரையறை செய்யப்பட வேண்டும்.

எக்காரணங்களினால் கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறித்து ஆராயப்படுவது அவசியமாகும். இதில் கல்வி அதிகாரிகளின் பங்கு அளப்பரியது.  வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனாக்கப்படுவதுடன் அவற்றில் பாதகங்களை உருவாக்கும் காரணிகளும் அடையாளம் காணப்பட வேண்டும். பாடசாலைச் சூழல் ஆரோக்கியமிக்க, கல்வி நடவடிக்கைக்கான தளமாக மாற்றபட்டு மாணவர்களின் சிறப்பான அடைவுகளுக்கு பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளே முக்கிய காரணமென்ற மனப்பதிவுகள் ஏற்படுத்தப்படுகின்றபோது கலைகட்டிக்கொண்டிருக்கும் கல்வி வியாபாரம் மட்டுப்படுத்தப்பட்டு இலவசக் கல்வி பாதுகாக்கப்படும். இல்லையேல் இலவசக் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.
இலவசக் கல்வியின் எதிர்காலம்? இலவசக் கல்வியின்  எதிர்காலம்? Reviewed by Madawala News on October 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.