எழுந்து வா பெருந்தலைவா!


உங்கள் கடிகார முட்களையும் கலண்டர் தாள்களையும் கொஞ்சம் ஒன்றே முக்கால் தசாப்தங்களுங்கு
முன்னே நகர்த்துங்கள்!

ஆம்!

அங்கே இருபதாம் நூற்றாண்டுக்கு முடிவுரை எழுதிக்கொண்டிருக்கும் 2000ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் 16 ம் திகதி!


அங்கே முடிவுரை எழுதப்படுவது ஒரு நூற்றாண்டுக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட சமூதாயமொன்றின் ஓர் ஒப்பற்ற தலைவனுக்கும் சேர்த்துத்தான்!

அஷ்ரஃப் எனும் ஆலவிருட்சம் அடியோடு சாய்ந்த சாவின் ரணங்களை இலங்கை முஸ்லிம்கள் நுகர்வதற்கு விதி வரையப்பட்ட்ட நாள் அந்த 2000த்தின் செப்டெம்பர் பதினாறு!

கண்ணீராறு கரைபுரண்டோட,

கதியற்ற மக்கள் கூட்டம் கதறியழ, சரித்திரமாய் வீற்றிருந்த சத்தியத்தலைவன்

சமாதியாகிப்போகிறான்!

செப்டெம்பர் 16 - ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் அநாதையாக்கப்பட்ட தினம்!

நம் தேசம் பிரித்தானிய வல்லாதிக்க சக்திகளின் கோரப்பிடியில் இருந்து மீண்டு சுதந்திரம் பெற்ற 1948 இன் அதே வருடத்தில் ஒக்டோபர் 23அன்று இப்பாரினிலே உதித்தது அஷ்ரஃப் என்கிற ஆளுமையின் இருப்பிடம்!

பள்ளிக்கல்வி முடித்து இலங்கை சட்டக்கல்லூரி நுழைவு பெற்று சட்டத்தரணியாய் வெளிவந்து, பின்னர் சட்ட முதுமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டார் அஷ்ரஃப்!

பள்ளிக்காலம் தொட்டே சமூக ஆர்வலராக தன்னை புடம்போட்டுக்கொண்ட அஷ்ரஃப்,

எழுத்தாளராகவும், கவிஞராகவும், பேச்சாளராகவும் தன் ஆளுமைகளை தீட்டிக்கொண்டார்.



1976 இல் புத்தளத்தில் அப்பாவி முஸ்லிம்கள் 6 பேர் பொலிஸாரினால் கொல்லப்பட்ட நிலையில் இலங்கை பாராளுமன்றில் முஸ்லிம் எம்.பி க்கள் மௌன விரதம் காத்த போது அஷ்ரஃப் ஒரு சமூக ஆர்வலராக பெரிதும் வருத்தப்பட்டார்.



1977ம் ஆண்டு முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னனி எனும் கட்சி முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்து துவக்கப்பட, தானும் ஒரு பங்காளராக இருந்து அக்கட்சியின் சட்ட ஆலோசகராக பதவியிலிருந்த அஷ்ரஃப் தமிழர் விடுதலை முன்னனியோடு இக்கட்சியையும் கூட்டு சேர்த்து சகோதரத்துவ அரசியலுக்கு அத்திவாரமிட்டார்.



தமிழர் விடுதலை முன்னனியின் 1976 ம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானத்திலும் அஷ்ரஃப் உரையாற்றினார்.



1977 பாரளுமன்ற தேர்தலில் முஸ்லிம் ஐக்கிய முன்னனி தமிழர் விடுதலை முன்னனியோடு சேர்ந்து போட்டியிட்ட போது  தேர்தல் கூட்டமொன்றில் “ஈழத்தை அண்ணன் அமிர்தலிங்கம் பெற்றுத்தராவிடில் தம்பி அஷ்ரஃப் பெற்றுத்தருவான்” என முழங்கினார்.



அத்தேர்தலில் எந்த ஆசனமும் பெறாமல் தோல்விகண்ட பின்னர் முஸ்லிம் விடுதலை முன்னனி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியோடு  சங்கமிப்பதை கண்டு நொந்து வெளியேறினார்.



பின் 1981 செப்டெம்பர் 21 அன்று ஹசனலி உள்ளிட்டோரை அரவணைத்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை காத்தான்குடியில் துவக்கி வைத்து முஸ்லிம் அரசியலில் புதிய பண்பாட்டை பரிணமிக்க செய்தார்.



1986 இல் அகமட் லெப்பை தலைவராக இருந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பதிவு செய்து அஷ்ரஃபை தலைவராக கிரீடம் சூடினார்கள்.



1988ம் ஆண்டின் மாகாண சபைத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட-கிழக்கில் 17 ஆசனங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 29 ஆசனங்களை பெற்று கர்ச்சித்து நின்றது!



‘தலைவர்கள் உருவாகுவதில்லை! தலைவர்கள் பிறக்கிறார்கள்!‘ என்ற மாபெரும் தத்துவத்தின் பேருதாரணமாய் பின்நாளில் அஷ்ரஃப் எனும் அசாத்திய ஆளுமை மக்களால் உணரப்பட்டது.



1988 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற வேண்டுமானால் அஷ்ரஃப் எனும் மகானின் ஒப்புதல் தேவைப்பட்ட சூழலில், ரணசிங்க பிரமதாச அஷ்ரபை நாடினார். அழைத்து பேசினார். அங்குதான் அஷ்ரஃப் தனது அரசியல் ராஜதந்திர விளையாட்டை துவக்கி வைத்தார்.



எம்.பி ஆகவோ அமைச்சராகவோ எந்தப்பதவியிலும் இல்லாமல் இருந்து கொண்டே அரசியலமைப்பின் 15 வது திருத்தமாக பாராளுமன்ற உறுப்பினர் பிரவேச வெட்டுப்புள்ளியை 12.5% இலிருந்து 5% ஆக குறைத்து ஒரே இரவில் செய்து முடித்த காரியம் அஷ்ரஃப் மீதான அபிமானத்தையும் அலையையும் மக்களை கொண்டாட வைத்தது எனலாம்.



பின்னர் 1989 ஆம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் தனிமனிதனாய் அஷ்ரஃப் பெருவெற்றி பெற்று பாராளுமன்ற கதவை

உரத்த சப்தத்துடன் திறந்து தன் பாராளுமன்ற ஆசனத்தை முத்தமிட்டுக் கொண்டார்.



உரிமைகள் அனைத்தும் பேரினவாதத்திற்கு

நிரந்தராமய் எழுதிக்கொடுக்கப்பட்ட காலமதில் முஸ்லிம்களின் உரிமைக் குரலாய் ஒலித்தார் அஷ்ரஃப்!



பேரினவாதத்தின் பேயாட்டத்தை கண்டு

பேதலித்து போய் நிற்காமல்

வீறுகொண்டு எழுந்து

கூறு கெட்ட அரசியலுக்கெதிராக குரல்கொடுத்தார்!



இலங்கை பாராளுமன்றம்

ஒருபோதும் மறக்காத ஒற்றை நாமம் - அஷ்ரஃப்!



பயங்கரவாதம் சமராடிய போதும்,

சளைக்காமல் எமக்காக குரல் கொடுத்தார்.



கல் நெஞ்சம் கொண்ட காடையர்களால் தலைவரின்

கல்முனை வீடு எரிக்கப்பட்ட போதும்,



கூலிக்கமர்த்தப்பட்ட கும்பல்களால்

ஆயுத முனையில் தலைவரின்

ஆவி பறிக்க முனைந்த போதும்,



மேடையில் பேசுகையில்

துப்பாக்கி ரவைகள் தலைவரின் நெஞ்சை துளைக்க காத்திருந்த போதும்,



அரசியல் சதுரங்கத்தால்

நம் சமூகத்தை வீழ்த்த

கபடநாடகங்கள் கட்டவிழ்த்தப்பட்டபோதும்,



எம் உம்மத்துக்கள்

சில்லறைக்காய் விலைபேசப்பட்டபோதும்,



கனவுகளை கலைக்காமல்

கொஞ்சம் கூட சளைக்காமல்

கொண்ட இலக்கு மாறிடாமல்

பயணித்தார்!



பல்கலை, துறைமுகம் என

பரந்துபட்ட அபிவிருத்திகளை

மூட்டைகட்டி கொண்டுவந்து

எம் சமூக விடுதலைக்காய்

மூச்சாக பாடுபட்டார்!



அஷ்ரஃப் எனும் மாமனிதன் போராட்டம்

எனும் கைற்றை பற்றி பிடித்து பயணித்துக் கொண்டே இருந்தான்!



காரி உமிழ்ந்த கோமாளிகளுக்கு வெற்றி சூரியனின் வெண்கதிர்களால்

ஒளி பரப்பினார்!



துரோகிகளின் முகத்திரையை

புஷ்வானமாக்கினார்!



1994 இன் உள்ளூராட்சி சபைத்தேர்தலிலே, அம்பாறையின் முஸ்லிம் சபைகளை

மு.கா. கைப்பற்றாவிடின்

என் அமைச்சுப்பதவியை துறப்பேன் என சவால் விட்டார்!

பின் பதவியை தூசென தூக்கியெறிந்தார்!



இறுதியாய் விதி விளையாட துவங்கியது!



உலங்கு வானூர்தியில் அஷ்ரஃப் அம்பாறைக்கு பயணித்துக்கொண்டிருக்கையில் அரநாயக்கவில் வைத்து இறைவன் ஆவிபறித்துக்கொண்டான்!

சர்வமும் அடங்கியது!

ஓயாமல் ஓடிவந்த கட்டற்ற காட்டாறு நிரந்தராமய் வற்றிக்கொண்டது!



அவரின் மரணத்தோடு சமூகத்தின் ஒரு சகாப்தமே நலிவுற்று கேள்விக்குறியானது!



தலைவர் விட்டுச்சென்ற சமூகத்தின் நிரப்ப முடியா தலைமைத்துவ வெற்றிடம் இன்றளவும்  வெறும் நுரை கொட்டி நிரப்பப்பட்டிருக்கிறது!!



அஷ்ரஃப் மரணிக்க முன்னே வரைந்து வைத்த
கவிதை இன்றும் மக்களின் மனங்களில் மறக்காமலிருக்கிறது!



“ஒரு துப்பாக்கியின் ரவைகளினால் உன் தலைவனின் இரைச்சல் அடங்கி விட்டதற்காய் நமது எதிரி வென்றுவிட்டான் என்று நீ குழம்பி விட கூடாது!
என் மையித்தை தூக்கியெடுத்துச்சென்று தொழுதுவிட்டு அடக்குங்கள்!
போராளிகளே புறப்படுங்கள்!”



ஒடுக்கப்பட்ட மக்களின் ஓயாத குரலாய் கலையாத அலைவரிசையில்
கர்ச்சித்துக்கொண்டிருந்த அஷ்ரஃபை வல்ல இறைவன் பொருந்திக்கொள்வானாக!



எப்போதும் எம் நெஞ்சறைக்குள் வாழும் நீ,
உன் கல்லறை தூக்கம் கலைத்து எழுந்து வரமாட்டாயோ பெருந்தலைவா!!


-சல்மான் லாபீர்
எழுந்து வா பெருந்தலைவா! எழுந்து வா பெருந்தலைவா! Reviewed by Madawala News on September 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.