கணவன் - மனைவி தகராறு... பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கத்திக்குத்து !


-முஹம்மட் ஹாசில்-
அனுராதபுரம் - ஹொரவபொத்தானை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கத்திக்குத்து
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், இதில் பாதிக்கப்பட்ட இருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், ஹொரவபொத்தானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சரத் அமர சூரிய என்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கும், கத்தி குத்தை நடத்தியவரின் மனைவியான மொரகேவ நானமில்லாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நிரோஷா குமாரி என்பவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக, மனைவி பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், கணவரை தேடிச் சென்ற பொலிஸார் அவரை கைது செய்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணவர் தொடர்பாக வாக்குமூலம் வழங்கச் சென்ற மனைவியை கணவர் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸாருக்கும் கத்திக்குத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

கத்தியால் குத்தியவரை பொலிஸார் கைது செய்து கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்,
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் மொரகேவ, நானமில்லாவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நைதாகே ரோஹன விஜயசூரிய எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் - மனைவி தகராறு... பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கத்திக்குத்து ! கணவன் - மனைவி தகராறு... பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கத்திக்குத்து ! Reviewed by Madawala News on September 16, 2018 Rating: 5