அமெரிக்க பொருளாதார தடைகளை நிவர்த்திக்கும் முயற்சியில் ஈரானின் புதிய வியூகங்கள் இவை..


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்  (மூலம்: அல்ஜஸீரா)
ஈரான் மீது அமெரிக்கா
வரையறுக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை சுமத்தியதன் விளைவாக பெற்றோலியம் சாராத தனது ஏனைய உற்பத்திகளுக்கான மாபெரும் சந்தையாக ஈராக்கை இனங்கண்டு வர்த்தகத்தை ஈரான் விஸ்தரிக்கவுள்ளது.


தனது உற்பத்திப் பொருட்களுக்கான மாற்றீட்டு சந்தையாக ஈராக்குடன் வர்த்தக உறவுகளை ஈரான் அதிகரிக்கும் எனும் கருத்து ஏலவே அரசியல் ஆய்வாளர்களினால் எதிர்வுகூறப்பட்டதாகும். பெற்றோலியம் சாராத ஏனைய ஈரானிய உற்பத்திப் பொருட்களுக்கான இறக்குமதி தொடர்பில் ஏலவே 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தத்தை ஈராக் கொண்டுள்ளது.


அதேவேளை ஈராக்கிய அரசின் நகர்வுகள் மீது ஈரான் காத்திரமான செல்வாக்கை கொண்டுள்ளது. அத்துடன் ஈராக்கிய வர்த்தக சந்தையுடன் ஈரானிய ஏற்றுமதியாளர்கள் இலகுவான கொடுக்கல் வாங்கல் முறைமைகளுடன் சுமுகமான தொடர்புகளைக் கொண்டுள்ளனர். ஏனைய பிராந்திய சக்திகளான சவூதி அரேபியா மற்றும் துருக்கியின் அரசியல் நகர்வுகளும் ஈராக்குடனான வர்த்தக உறவுகளை ஈரான் அதிகரித்துக் கொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது எனலாம்.
ஈராக்கிய வர்த்தக சந்தையை கைப்பற்றுதலானது நலிவுற்று வரும் ஈரானிய பொருளாதாரத்திற்கு புத்துயிர்ப்பளிக்கும் அதேவேளை ஈராக்கிய பொருளாதார அபிவிருத்தியை பின்னடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மலிவான உற்பத்திகளைக் கொண்டு ஈராக்கிய வர்த்தக சந்தையை கைப்பற்றும் ஈரான் 

2015ஆம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரானிய ஜனாதிபதி ரூஹானி வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்.


முழுமையான கூட்டு செயல் திட்டம் என்ற பெயரில் அடையாளம் காணப்படும் அந்த ஒப்பந்தம், அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை ஈரான் கைவிடவும், பதிலுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழி வகுத்தது.

ஆனால், ஒபாமா காலத்தில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என கூறி, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாகவும், ஈரான் மீதான பொருளாதார தடைகள் மீண்டும் தொடரும் என்றும் அறிவித்தார்.

அதன்படி ஈரான் மீதான முதல்கட்ட பொருளாதார தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அடுத்தகட்ட பொருளாதார தடை நவம்பர் மாதம் அமுலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் காரணமாக ஈரானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. நாணய மதிப்பும் சரிந்து வருகிறது. இதனால் ஈரானிய ஜனாதிபதி ரூஹானி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.


கடந்த மாதத்தில் ஈரானிய தொழிலாளர் நலன்கள் அமைச்சர் அலி ரபியேய்யும், பொருளாதார அமைச்சர் மசூத் கர்பாசியனும் அடுத்தடுத்து நாடாளுமன்றத்தில் கண்டன பிரேரணை கொண்டுவந்து பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது ஈரானிய ஜனாதிபதி ரூஹானிக்கு அரசியல் ரீதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாட்டின் பொருளாதார அசாதாரண நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். பொருளாதார பன்முகப்படுத்தல் திட்டத்தில் நாட்டின் ஏற்றுமதிகளுக்கான வெளிநாட்டு சந்தையை பெற்றுக் கொள்ளும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கடந்த ஒரு தசாப்த காலமாக மலிவானதும் தரமற்றதுமான ஏற்றுமதிகளைக் கொண்டு ஈராக்கிய சந்தையினைக் கைப்பற்றியுள்ளதாக ஏலவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ள பாரிய பொருளாதார தடைகளை அடுத்து இந்நிலைமை மேலும் விகாரமாகும் என எதிர்வுகூறப்படுகிறது.ஈரானிய ஆதரவு அரசு ஒன்று ஈராக்கில் உருவாகுமாயின் அமெரிக்காவினால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளின் பாதக பின்விளைவுகள் பெரிதும் இழிவளவாக்குவதுடன் ஈரானிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான மிகப் பெரும் வெளிநாட்டு சந்தையாக ஈராக் மாறுவதற்கும் அது வகுக்கும்.
உயர் பொருளாதார கூட்டுறவுகளுக்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நோக்குடன் கடந்த வாரம் ஈராக்கிற்கான ஈரானிய தூதுவர் இராஜ் மஸ்ஜிதி ஈராக்கின் வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்துள்ளார். மேலும் ஈராக்கின் தனியார்துறை முதலீட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.


குர்திஸ்தானின் சுயாட்சிக் கோரிக்கையின்போது கடந்த வருடம் ஈரான் அதனுடன் தனது வர்த்தக உறவுகளை தற்காலிகமாக முறித்துக் கொண்டிருந்தது. எனினும், தற்போது குர்திஸ்தானுடன் வர்த்தக உறவுகளை ஈரான் புதுப்பித்துக் கொண்டுள்ளது.


ஈரான் மற்றும் குர்திஸ்தானுக்கு இடையிலான எல்லைக் கடவைகள் மீளவும் திறக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகள், தீர்வைகள் என்பவற்றை பெருமளவில் இரு தரப்பும் குறைத்துக் கொண்டுள்ளது. ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்துவந்த பெற்றோலியம் சாராத ஏனைய உற்பத்திப் பொருட்களில் மூன்று ஒரு பகுதியை குர்திஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதென ஈரான் தீர்மானித்துள்ளது.


துருக்கிய ஏற்றுமதிகளுடன் ஒப்பிடுகையில் குர்திஸ்தானுக்கு ஈரான் ஏற்றுமதி செய்துவரும் உற்பத்திப் பொருட்கள் தரத்தில் குறைந்ததும் மலிவானதுமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இனங்கண்டுள்ள மாற்று வழிகளில் குர்திஸ்தானிய சந்தையும் ஒன்றாக கருதப்படுகிறது.

ஈராக்கின் நீர்வளப் பற்றாக்குறையும் இலாபமீட்டும் ஈரானும்
ஈராக்கின் நீர்வளப் பற்றாக்குறையானது ஈரானிய வர்த்தக உள்ளீர்ப்பு தொடர்பில் மேலும் பங்களிக்கின்றது எனலாம். யூப்ரடிஸ், தைக்கிரிஸ் நதிகளுக்கு குறுக்காக துருக்கியினால் கட்டப்பட்ட அணைகளைக் கொண்டே ஈராக்கின் பெருமளவான நீர்வளத் தேவைப்பாடுகள் நிறைவு செய்யப்படுகின்றன.


காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள ஈராக்கின் நீர்வளப் பற்றாக்குறை காரணமாக விவசாய மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு துருக்கி மற்றும் ஈரானையே அந்நாட்டு சார்ந்துள்ளது.
ஈரானிடமிருந்து வருடாந்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அளவில் விவசாய மற்றும் உணவுப் பொருட்களை ஈராக் இறக்குமதி செய்கின்றது.  


ஈராக்கில் நீர்வளப் பற்றாக்குறை தீவிரமடைந்து வருகின்றமை மற்றும் இறக்குமதிப் பொருட்களுடன் போட்டியிடும் தன்மை ஈராக்கின் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் காணப்படாதமை ஆகிய காரணங்களினால் ஈராக்கின் உள்நாட்டு சந்தையை ஈரான் மற்றும் துருக்கி மிக லாவகமாக கைப்பற்றிக் கொண்டு வருகின்றது.


இதனால் ஈராக்கின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவதுடன் அரசாங்கத்தின் வர்த்தக கொள்கை தொடர்பில் பெரிதும் நம்பிக்கை இழந்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேலெழுந்துள்ளன.  


ஈராக்கிய சந்தையில் பெரும் பங்கை ஆக்கிரமிக்கும் நோக்கில் ஈரான் பல்வேறு வியாபார தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருகின்றது. கோதுமையை இறக்குமதி செய்து பெறுமதி சேர்க்கப்பட மாவாக உற்பத்தி செய்து மீளவும் அதனை ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்யும் பணிகளிலும் ஈரான் இறங்கியுள்ளது.


ஈராக்கிய உள்நாட்டு சந்தையில் துருக்கி கொண்டுள்ள பங்கை விஞ்சுவதற்கே ஈரான் முயற்சித்து வருவதாக துருக்கிய வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானிலும் நீர்வளப்பற்றாக்குறையின் தீவிரத் தன்மை அதிகரித்துக் கொண்டு வருகின்ற நிலையில் தனது விவசாய மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தி தொடர்பில் எவ்வகையான மாற்றீடுகளை ஈரான் கையாளப் போகின்றது என்பது பற்றி பிராந்திய போட்டி நாடுகள் கரிசனை கொண்டுள்ளன.


ஈரானின் வர்த்தக பன்முகப்படுத்தலும் துருக்கியின் பங்கும்
ஈராக்குடன் துருக்கியானது தனது வர்த்தக உறவுகளை அதிகரித்துக் கொண்டுள்ளமையானது ஈரானையும் தூண்டியுள்ளது எனலாம். குர்திஸ்தானின் கூட்டுறவின் மூலமே ஈராக்குடன் துருக்கி வர்த்தக பரிமாற்றங்களில் ஈடுபடக் கூடியதாக உள்ளது.


ஏனெனில், ஈராக்கிற்கான துருக்கியின் ஏற்றுமதிப் பொருட்களில் பெரும்பாலானவை குர்திஸ்தானின் இப்ராஹீம் கலீல் எல்லைக் கடவை ஊடாகவே துருக்கியை சென்றடைந்தன. இவ்வகையில் ஈராக்கிற்கான துருக்கியின் வர்த்த ஏற்றுமதிகள் குர்திஸ்தான் பிராந்தியம் மீது சார்ந்தே இருந்தது.


எனினும், கடந்த ஆண்டு தனது அயல்நாடுகளின் எதிர்ப்பையும் துச்சமாக கருதி குர்திஸ்தான் சுயாட்சி கோரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டமையின் பின்னரே குர்திஸ்தானின் எல்லைக் கடவை மீதான தமது வர்த்தக தங்கியிருப்பின் பாதகங்களை துருக்கி இனங்கண்டு கொண்டது.


குர்திஸ்தானின் இடையீடு இன்றியதாக நேரடியாக வர்த்தக பொருட்களை பரிமாற்றிக் கொள்வதற்காக ஈராக் மற்றும் துருக்கி இடையில் எல்லைக் கடவையொன்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் கடந்த மாதம் துருக்கி ஜனாதிபதி அர்துகான் மற்றும் ஈராக் பிரதமர் ஹைதர் அல்அபாதி இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வகையான பிரத்தியேக கடவையொன்று நிர்மாணிக்கப்படுமானால் அது குர்திஸ்தானின் தலையீட்டை நீக்குவது மாத்திரமன்றி துருக்கியின் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கும் என ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.  


அமெரிக்க பொருளாதார தடைகளினால் எழும் பாதக நிலைமைகளை ஈடுகட்ட ஈரான் சகல வழிகளிலும் முயற்சிக்கும் என்பது நிதர்சனம். இதன் ஒரு வழியாக ஈராக்குடனான வர்த்தக உறவுகளை தனது இயலுமைக்குட்பட்ட வகையில் ஈரான் அதிகரித்து வருகின்றது. இதற்காக ஈராக், ஈரான் எல்லையை அண்மித்த மத ரீதியான சுற்றுலாப் பயணங்களையும் ஈரான் கவர்ச்சிகர திட்டமாக அறிமுகப்படுத்தி வருகின்றது.


ஈராக்கில் பெரும்பான்மை சந்தையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ள ஈரானுக்கு துருக்கிக்கு அடுத்தபடியாக போட்டி நாடாக விளங்குவது சவூதி அரேபியாவாகும். ஈரானைப் போன்று ஈராக்கில் பெரும்பான்மை சந்தையினைக் கைப்பற்ற சவூதியும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. பெற்றோலியம் சாராத பொருளாதாரத்தை நோக்கி பன்முகப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களை முன்வைத்து வரும் சவூதியின் வர்த்தகக் கொள்கைகளின் பிரகாரம் ஈராக்கிய சந்தையும் அதன் மிக முக்கிய குறிக்கோளாகும். எனினும், ஈரான் கடந்த பல தாசாப்த காலமாக ஈராக்குடன் வளர்த்து வந்துள்ள வர்த்தக உறவுகளுடன் ஒப்பிடுகையில் சவூதியினால் போட்டியை ஏற்படுத்துவதென்பது கடினமான விடயம். ஆனால், ஈரான் தவறும் இடங்களில் வர்த்தக வெற்றிடங்களை நிரப்புவதற்கு சவூதி கண்ணுங்கருத்துமாக உள்ளது.


ஈரானிடம் இருந்து ஈராக் பெற்றுக் கொள்ளும் மின்சக்தி அளவை விட மூன்று மடங்கு அதிகமானளவு மின்சக்தியை சவூதி அரேபியா ஒப்பீட்டளவில் குறைவான விலையில் ஈராக்குக்கு வழங்கி வருகிறது. மின்சக்தி துறையில் ஈராக்கின் சந்தையை பெற்றுக் கொண்டுள்ள சவூதி அரேபியா அத்துறையில் ஈரானை நிலைகுலையச் செய்துள்ளது என்றால் மிகையாகாது.


ஜூலை மாதம் முதல் ஈராக்கில் ஆரம்பித்துப் பரவி வருகின்ற மக்கள் போராட்டத்திற்கு, ஈரானின் மலிவான தரமற்ற ஏற்றுமதிப் பொருட்களால் ஈராக்கிய உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்காவினால் ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளின் பாதக விளைவுகளை ஈராக் ஏன் அனுபவிக்க வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் அறச்சீற்றத்துக்கு அடிநாதமாக அமைந்துள்ளது.

- நன்றி நவமனி -
அமெரிக்க பொருளாதார தடைகளை நிவர்த்திக்கும் முயற்சியில் ஈரானின் புதிய வியூகங்கள் இவை.. அமெரிக்க பொருளாதார தடைகளை நிவர்த்திக்கும் முயற்சியில் ஈரானின் புதிய வியூகங்கள் இவை.. Reviewed by Madawala News on September 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.