நாட்டில் மீண்டும் இனப் பிரச்சினைக்கு இடமில்லை..


1947 முதல் ஆட்சி அமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக
மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்புலத்தை அமைக்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அனைத்து அரசாங்கங்களும் குறைந்த அளவு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இனப் பிரச்சினைக்கு பல விடயங்கள் அடிப்படையாக இருந்த போதிலும் தகுந்த அரசியல் தலைமை அப்பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ´சிறிசர பிவிசும´ அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல செயற்திட்டங்கள் இன்று (20) மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு மாகாணத்தை, அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அம்மாகாணத்தில் குறைந்த பட்சம் ஒரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை பிளவுப்படுத்தாத அதிகார பகிர்வு எனப்படும் எண்ணக் கரு அப்போதே யதார்த்தமாகும் என்றும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள குளங்களை புனரமைப்பு செய்யும் செயற்திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் இவ்வாறான அபிவிருத்தி முயற்சிகளின் நோக்கம் மக்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது என்றும் தெரிவித்தார்.

மன்னர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாவிகளை மையமாகக் கொண்ட நீர்ப்பாசன கலாசாரத்தினால் விவசாய அபிவிருத்தியின் ஊடாக கிராமிய பொருளாதாரம் சுபீட்சம் பெற்றிருந்ததுடன், தற்போதைய அரசாங்கமும் குளங்களின் புனரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று எமக்கான தேசிய பொருளாதார திட்டத்தின் ஊடாக ஆரோக்கியமான இனமாக முன்னோக்கி செல்வதற்கு மேற்குறிப்பிட்ட செயற்திட்டங்களினூடாக பாரிய பங்களிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் அப்போதைய அரசாங்கத்தினால் சரிவர கடமைகளை நிறைவேற்றாததன் காரணமாகவே 2015 ஜனவரி 08 ஆம் திகதி நாட்டின் மக்கள் தன்னை ஜனாதிபதியாக தேர்தெடுத்தார்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த மூன்றரை வருடங்களாக அப்பணிகளை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார். யுத்தம் நிலவிய பிரதேசங்களில் மக்களிடையே நிலவும் அச்சத்தை தீர்க்கும் முகமாக இன, மத ரீதியான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அரசு பாரிய பங்காற்றியுள்ளது என்பதையும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அதனூடாக மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

´சிரிசர பிவிசும´ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோமரங்கடவல பக்மீகம குளத்தை மக்களிடம் கையளித்தல், நீண்ட காலமாக இருந்துவரும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலுக்கு தீர்வை வழங்கும் வகையில் கோமரங்கடவல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் நீளமான யானை வேலியை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இடம்பெறும் ´சிரிசர பிவிசும´ செயற்திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைத்தல், யானை வேலிகளை நிர்மாணித்தல், வீதி புனரமைப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. இவ்வேலைத்திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இடம்பெறுகின்றது.

´சிரிசர பிவிசும´ வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலகத்தால் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நிதியினால் திருகோணமலை மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது.

அச்செயற்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற பக்மீகம குளத்தின் புனரமைப்பிற்காக 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் இனப் பிரச்சினைக்கு இடமில்லை.. நாட்டில் மீண்டும் இனப் பிரச்சினைக்கு இடமில்லை.. Reviewed by Madawala News on September 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.