நாளைய எல்லை நிர்ணய மீள்பரிசீலனைக் குழுவில் முஸ்லிம் தலைமைகள் பங்கு பாத்திரம் முக்கியம்!


- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
மாகாண எல்லை நிர்ணய அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டிருந்தது.


அல்லது அன்றைய வாக்கொடுப்பு நேரத்தில் சபையிலிருந்த 139 எம்.பிக்களாலும் தோற்கடிக்கப்பட்டிருந்தது என்றும் கூறலாம்.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவொன்று இது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கு சபாநாயகரால் நிமிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய மீள்பரிசீலனைக் குழு நாளை வியாழக்கிழமை (20) கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

எனவே, முஸ்லிம் அரசியல் தலைமைகள் இங்கு இறுக்கமாகச் செயற்பட வேண்டும். ‘எடுத்தவன் கைப்பிள்ளை கேட்பார் யாருமில்லை’ என்ற நிலையில் செயற்படக் கூடாது. மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு அனைவரும் கைகளை உயர்த்தி விட்டு அது நிறைவேற்றப்பட்ட பின்னர் அதன் பாதகமான நிலைமைகளை அறிந்து ஒருவருக்கு ஒருவர் குற்றம் கூறியது போன்று இனிமேல் நடந்து கொள்ளக் கூடாது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளும் குறித்த விடயத்தில் விட்ட தவறுகளுமே இன்று மாகாண எல்லை நிர்ணய அறிக்கை என்ற பூதத்திடம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் ஈடுவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கூறினார், ஜனாதிபதி மைத்திரி தொலைபேசியில் உரையாடினார், அவர்கள் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டதனாலேயே நாம் வாக்களித்தோம் என்ற கதைகள் இனி இருக்கக் கூடாது.

தனிப்பட்ட அரசியல் நலன்களைப் பேணுவதற்கும் பேரினவாதக் கட்சிகளின் தலைமைகளின் அபிலாஷைகள நிறைவேற்றுவதற்குமான தருணம் இதுவல்ல. மேலும், இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் வளைந்து கொடுக்காமல் இறுக்கமாக நடந்து கொண்டால் மட்டுமே நமது சமூகம் எதிர்காலத்தில் நிமிர்ந்து நடக்க முடியும் என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.

நாளைய கூட்டத்தில் எமது முஸ்லிம் தலைமைகள் இந்த விடயத்தில் சமூக தூரநோக்குடன் செயற்பட வேண்டும். முஸ்லிம் அமைச்சர்களின் இருப்பை விட முழு முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பும் அவர்களது நலன்களும் பாதுகாக்கப்படல் வேண்டும்.

எனவே, முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு மாற்றாருக்கான விட்டுக் கொடுப்புகளுக்கு விடை கொடுக்க வேண்டும். எல்லை நிர்ணயம், தொகுதிகள் தொடர்பில் சமூக நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளும் ஒற்றுமையாகச் செயற்பட்டு சமூகத்தைக் காட்டாறு வெள்ளத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ்  தலைவருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களும் நானும் இன்று காலையில் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடிய போது நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் விட்ட தவறுகளை அக்குவேறு ஆணிவேறாக என்னிடம் விளக்கினார்.


இது இவ்வாறிருக்க, இன்று நான் ஒரு சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் உடன் எனது அழைப்புக்கு பதில் தரவில்லை.


சில மணித்தியாலங்கள் கடந்த பின்னர் அவர் என்னுடன் தொடர்பு கொண்டு என்ன கூறினார் தெரியுமா? ‘சொறி சித்தீக் உங்களது அழைப்புக்கு நான் உடன் பதிலளிக்காமல் போய்விட்டது. நீங்கள் கோல் எடுத்த போது நாங்கள் எல்லை நிர்ணய மீள்பரிசீலனைக் குழுவில் நாளை பேச வேண்டிய விடங்கள் தொடர்பில் பல தமிழ்க் கட்சிகளுடன் பேசிக் கொண்டிருந்தோம்’ என்றார்.


இதேபோன்றே, சற்று நேரத்துக்கு முன்னர் கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்ட போது அவர் கூட ஆமாம் நாளைக்கு எல்லை நிர்ணய மீள்பரிசீலனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளேன் என மன ஆதங்கத்துடன் கூறினார்.


அவர்கள் இன்றே இந்த விடயத்துக்காக ஒன்றுபட்டு விட்டனர். நமது தலைமைகள் நாளையாவது அவ்வாறே ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்கள் ஒன்றுபடாவிட்டாலும் ஒன்றுபட்டதான கருத்துகளைத் தெரிவித்தாலும் போதும்.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்  -
நாளைய எல்லை நிர்ணய மீள்பரிசீலனைக் குழுவில் முஸ்லிம் தலைமைகள் பங்கு பாத்திரம் முக்கியம்! நாளைய எல்லை நிர்ணய மீள்பரிசீலனைக் குழுவில் முஸ்லிம் தலைமைகள் பங்கு பாத்திரம் முக்கியம்! Reviewed by Madawala News on September 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.