ஒரு விடிவெள்ளி அணைந்துவிட்டது....


செப்டம்பர் 16 ஆம் திகதி ஈழத்து இஸ்லாமியர்களின் நெஞ்சங்களை விட்டு நீங்காத வேதனையானதும்,
சோதனையானதுமான சோதனை தினமாகும்.அரசியலில் அநாதையாக இருந்த முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கி தனது உதிரத்தை உரமாக்கி முஸ்லிம் சமூகத்தின் தனித்துவக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த வரலாற்று நாயகன் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் தனது இலட்சியங்களுக்கு உரமாக தன் உயிரையே அர்ப்பணித்து கொண்ட தினமாகும்.

பேரினவாத கட்சிகளின் அங்கத்தவர்களாக இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் என்று தம்மைத்தாமே இனங்காட்டிக் கொண்டவர்களால் தாங்கள் சார்ந்த கட்சிகளின் தலைமைகளை மீறி சுதந்திரமாகச் செயற்பட முடியாமல் வாய்மூடி மௌனிகளாக இருந்ததை எண்ணி மர்ஹும் அஷ்ரப் வேதனைப்பட்டார்.

சிறுபராயம் முதல் அல்லாமா இக்பால் அவர்களின் கருத்துக்களின்பால் கவரப்பட்டு சமூகத்தை ஆழமாக யோசித்த அஷ்ரப் சிறுபராயம் முதலே அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்தார்.அறிஞர் சித்திலெவ்வையின் தனிக்கட்சி சிந்தனை இவரில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.நமக்கென்று தனிக்கட்சி இல்லையென்றால் முஸ்லிம் சமூகத்திற்கு மிஞ்சுவது பெருமூச்சி மட்டுமே என்கின்ற உண்மையை உணர்ந்து அரசியல் அடிமைத் தலைக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களை விடுவித்து அவர்களை சுதந்திர வானில் பறக்கச் செய்வதற்கான பல உத்திகளையும், உபாயங்களையும்  கையாண்டு அதனை வடிவமைத்தார்.ஒரு சிந்தனையாளராக ,திறன்மிக்க எழுத்தாளராக, காத்திரமான பேச்சாளராக, துடிப்புள்ள அரசியல்வாதியாக என்று பல்வேறு வகைப்பட்ட பாத்திரங்களினூடாக தனிக்கட்சி என்ற மகத்தான பணியைச் செய்தார்.

முஸ்லிம் சமூகத்தை அரசியல்மயப்படுத்தும் பணியிலும் ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுவிக்கும் போராட்டத்திலும் அவர் வெற்றிகண்டார்.அவரது சானக்கியமிக்க வழிகாட்டலில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவம் 1981 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியினூடாக தோற்றுவிக்கப்பட்டு முஸ்லிம் அரசியல் மயப்படுத்தப்படுவதற்கு வழிகோழியதோடு S.l.m.c என்ற புகழ் பூத்த பலமிக்க அக்கட்சியின் ஆற்றல் மிகு பெருந்தலைவராக இருந்து செயற்பட்டார்.அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் முகம் கொடுத்த மக்கள் அவரது முயற்சியின் பயனாகவே இன்று முகவரி கொண்டவர்களாக மிளிர்கின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம், பாதுகாப்பு, சுதந்திரம் ,விடுதலை, சாந்தி, சமாதானம், சமத்துவம், பஸ்பரவு, நல்லுறவு, அபிவிருத்தி அத்தனையும் வென்றெடுக்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்தே ஆகவேண்டும் அதற்காக அணிதிரலுங்கள் என்று 1989 ல் தனது கைப்பட எழுதி நாடுபூராகவும் அனுப்பிய கடிதங்கள் அவரது தீர்க்கதரிசனத்திற்கு நல்ல சான்றாகும்.செயலில் வீரம், நடையில் விறுவிறுப்பு, அஞ்சா நெஞ்சம், எதிரியையும் அரவணைக்கு பண்பு, கொண்ட கொள்கை மீது வைத்த அசையாத பற்று, ஆழமான சிந்தனை, மொழித்திறமை, வாதத்திறன் என்ற அத்தனையையும் தன்னகத்தே கொண்டிருந்தார்.

1988ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலே உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டியிட்டு வடகிழக்கு மாகாண சபையில் 17 ஆசனங்களை கைப்பற்றி பிரதான எதிர் கட்சியாக எஸ்.எல்.எம்.சி க்கு புதிய பரிணாமத்தை பெற்றுக் கொத்தார்.இதன்மூலம் முஸ்லிம் சமூகம் அநாதையல்ல அவர்களுக்கென்று தனித்துவமும், சுயமரியாதையும் உண்டு என ஒரு புதிய வரலாற்றை அஷ்ரப் அவர்கள் தோற்றுவித்தார்.

அனைத்து சிறுபாண்மை சிறிய கட்சிகளும் பேரினவாதத்தின் கால்களில் மண்டியிட்டு கிடக்க வேண்டுமென்பது அவர்களது எதிர்பார்ப்பு அதனால் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை அழிக்கும் நோக்கோடு 12.05 வீத வெட்டுப் புள்ளியை அறிமுகப்படுத்தினர்.இதனை தனது அரசியல் சானக்கியம் மூலம் 0.5 வீதமாக மாற்றினார்.இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனை மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்திய நிகழ்வாகும்.

சிறுபான்மை சமூகங்கள் கௌரவமாகவும், சமத்துவமாகவும் அது அரசியல் அமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதையே அவர் ஆரம்பத்திலிருந்து வழியுறுத்தி வந்தார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகின்ற போது அதே மேசையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையே வழியுறுத்தினார்.அதன் அடிப்படையில்தான் 1994 ஆம் ஆண்டு சமாதான தேவதையாக வளம் வந்த சந்திரிக்கா அம்மையாருடன் கூட்டுச் சேர்ந்து 17 வருட காலம் அரசியலில் ஓரம்கட்டப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திர கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றி வைப்பதற்கு இவரது ஆளுமையும், இவர் வகுத்த தேர்தல் வியூகமுமே காரணமென்றால் அது மிகையாகாது.இதன்மூலம் ஆஆட்சியை தீர்மானிக்கின்ற, மாற்றியமைக்கின்ற மாபெரும் சக்தியாக முஸ்லிம்களை மாற்றியமைத்ததோடு முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் புதியதோ அத்திவாரத்தை தோற்றுவித்தார்.இந்த தேர்தலிலே 09 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அரசியல் கட்சியாகவும், இனவாத மேலாதிக்க சக்திகளால் புறக்கணிக்க முடியாத ஒரு ஸ்தாபனமாகவும் எஸ்.எல்.எம்.சி யை உறுதியுடன் நிமிர்ந்து நிற்க அவர் வழி சமைத்தார்.

எமது கல்வித் துறையின் பிற்போக்கையும், கலாசார தனிமையையும் அறிந்து சமூகம் வெற்றிகரமான கல்வியை பெறுவதற்காக கட்டிடங்களே கட்டிடாத பாடசாலைகளுக்கு பல மாடிக் கட்டிடங்களை கட்டிக் கொடுத்தார்.பல மாதிரிக் கிராமங்களை உருவாக்கி அகதிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார். புத்தி சாதுரியமாக ஒலுவில் துறைமுகத்தை அமைத்தார். எதிர்ப்புக்களுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு துறைமுகத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கினார்.இவை எல்லாவற்றையும் விட தென்கிழக்கு பல்கலை கழகம் இவரது மறக்கமுடியாத வரலாற்றுச் சாதனையாகும்.பதவிக்காக அழையும் அரசியல்வாதிகளின் மத்தியில் பணி செய்வதற்காக பதவியை ஏற்றவர்தான் இவர் என்பதை நினைக்கும்போது உள்ளமெல்லாம் பூரிக்கின்றது.

சிறிகொத்தாவினதும் றோட்மிட் பிளேசினதும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த சிறுபான்மையின பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.பாராளுமன்றத்திலும் ,அமைச்சரவையிலும் சமூகத்தின் உரிமைகளை பெறுவதற்காகவும், பேணுவதற்காகவும் தனது சிம்மக் குரலால் வானதிரக் கர்ச்சித்து நியாயம் கேட்டார்.குருகிய இனவாத உணர்வுகளுடன் அவர் ஒருபோதும் பணிபுரியவில்லை.இவரது அரசியல் வாழ்வில் இன உணர்வும், தேசிய உணர்வும் மிக சிறந்த இணக்கத்தை கண்டன என்பதை வரலாற்று ஏடுகள் பறைசாற்றி கொண்டிருக்கின்றன.இதனால்தான் அவர் இன்றும் எதிரிகளின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இவரது சொல்லிலும், செயலிலும் வீரமும், தீரமும், விவேகமும் இருந்தது.இனப்பிரச்சினைக்கான தீர்வினை வடகிழக்கு பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகத்தினதும் சம்மததத்துடனும் ஆசிர்விதத்துடனுமே காண முயற்சிக்க வேண்டுமென்பதையே வழியுறுத்தினார்.தான் அமைச்சராக இருந்த அரசாங்கம் முன் வைத்த உத்தேச அரசியல் அமைப்பினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து எதிர் கட்சியினரின் கூச்சலுக்கும், குருக்கீடுகளுக்கும் மத்தியில் எவ்வித சளனமுமின்றி மூன்று மணித்தியாளங்களாக தொடர்ச்சியாக உரையாற்றி சாதனை படைத்தார்.அன்னாரது ஓயாத உழைப்பும் உறுதியான நிலைப்பாடும் , தலைசாயாத துணிவும் ,நுனிப்புல் மேயாத அறிவும், முன்னோக்கிச் செல்லும் ஆண்மையும், கனிவான பேச்சும், மனித நேயமும், அடக்கமான போக்கும், பணிவான பண்பும் அன்னாரின் வெற்றிக்கும் உயர்ச்சிக்கும் ஒத்தாசை புரிந்த பெரும் பொக்கிஷங்களாகும்.

சிறுபான்மை அரசியல்வாதிகளின் வரிசையில் தோன்றிய பலர் கழுவுகின்ற நீரில் நழுவுகின்ற மீனாக செயற்பட்டமை துரஷிட்டவசமாகும்.கொள்கை பிடிப்போடு மனசாட்சிக்கு விரோதமாக நடக்காது சமூகத்தின் தேவைகளை உணர்ந்து அவற்றை தீர்க்கும் இலட்சியங்களோடு செயற்பட்டவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.அந்த வகையில் அஷ்ரப்புக்கு இடமுண்டு என்பதை அவரது கடந்தகால அரசியல் நகர்வு ஒவ்வொன்றும் துலாம்பரமாக காட்டுகின்றன.

முஸ்லிம் சமூகத்தினுடைய ஒட்டு மொத்தமான நலனுக்கு ஆபத்து வருகின்ற பொழுது கட்சி நலனுக்கு அப்பால் நின்று சமூகத்தின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென கூறினார்.உயரிய எண்ணங்களுக்காக சமூகத்தை ஒன்றுபடுத்தவும் சமூகத்தின் பிரச்சினைகளை தெளிவு படுத்தவும் அஷ்ரப் செய்த பங்களிப்புக்களும் ,அர்ப்பணிப்புக்களும் எண்ணிலடங்காதவை.இலட்சக்கணக்கில் கொட்டினாலும் பெறாமுடியாத ஒரு பிரபல்யத்தை மிகச் சுலபமாகப் பெற்றார்.இது கணணியான சாதனையாகும்.அவர் தனது முழு வாழ்வையும் சமூகத்திற்காக அர்ப்பணித்தார்.துன்பங்களையும், சோதனைகளையும் கண்டு பின்வாங்காது கரடுமுரடான பாதைகளையும் கடந்து தயணித்தார்.செல்வத்தை சேமிப்பதற்கான வாய்ப்புக்கள் கடல் போன்று அவரது முன்னிலையில் காணப்பட்டன.அவை எதுவும் அவரை சமூகப் பணியிலிருந்து பராக்காக்கவில்லை.

தான் சார்ந்த சமூகமேம்பாடு ஒன்றினையே இலக்காகக் கொண்டு உளச் சோர்வையும், மனத்தளர்ச்சியையும் ,ஏமாற்றங்களையும் சந்தித்துக் கொண்டு சிரமங்களுக்கும், தியாகங்களுக்கும் மத்தியில் சமூக விடுதலைக்காக போராடி மற்றவர்களையும் போராட வைத்த ஓர் வீர புருஷர்தான் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள்.அவர் அன்று முஸ்லிம் சமூகத்தை தட்டி எழுப்பி இராவிட்டால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்றும் அநாதைகளாகவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் ,கில்லுக் கீரைகளாகவும் இருந்திருப்பர் என்பது திண்ணம். 1989 பாராளுமன்றத்தில் முலங்கத் தொடங்கிய குரல் அவர் மரணிக்கும் வரை முஸ்லிம் சமூகத்தின் விடுதலை முரசாக மூலை முடுக்கெல்லாம் நுழைந்து நம்பிக்கையை வளர்த்தது.அவரது பாராளுமன்ற உரைகள் அரசியல் வரலாற்றை கட்டியம் கூறும் கண்ணாடியாக இன்றும் காணப்படுகின்றது.

உள்ளத்தால்  உயர்ந்தோர்கள் , நல்லோர்கள் , பெரியோர்கள் போன்ற உன்னதமான மனிதர்களை சரித்திர நதியின் அணைக்கட்டுக்கள், அனுபவக் கல்வியின் பேராசிரியர்கள் ,அறிவெனும் நந்தவனத்தின் ஜுவாலைகள் என வர்ணித்த கவிஞர் கண்ணதாசன் அத்தகைய உயர்ந்தோர்களின் ஜனனம் ஒரு பொது விஷேசமாக கருதப்படுவதில்லை என்ற போதிலும் அவர்களின் மரணமோ சரித்திரத்தில் மாகத்தான மணி மண்டபமாக கருதப்படுகின்றதென்றார்.இந்த யதார்த்தத்தை அஷ்ரப் அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் நிதர்சனமாக காணக்கூடியதாய் இருந்தது.

துணிவும் ,நம்பிக்கையும் ,ஆற்றலும் ,ஆளுமையும் கொண்ட தலைவர்களை அழித்துவிடமுடியாது என்பதற்கு எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் வரலாறு சான்றாகவுள்ளது.ஆம் மறைக்கப்பட்டிருந்த உரிமைகளையெல்லாம் தூசிதட்டி முழு உலகிற்கும் கோடிட்டுக் காட்டிய ஒரு அரசியல் ஞானியை மரணம் காவு கொண்டு விட்டது.என்றாலும் இந்த நாட்டில் ஜனநாயக அரசியல் உள்ளவரை அன்னாரது நாமமும், சேவையும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும்.புகழோடு வாழ்ந்து புகழோடு மறைந்த தலைவர்களுள் ஒரு தனிப்பெரும் இடம் எம்.எச்.எம்.அஷ்ரப்புக்கு உண்டு.

நமது அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த பெருமகன் மட்டுமல்ல. தானே ஒரு வரலாறாகி நின்ற ஒரு மாமனிதன்.அவர் வெறுமனே ஒரு தலைவராக மட்டு இருக்கவில்லை.தலைமைத்துவ கோபுரத்தின் மணி விளக்காகவும் ஒளி வீசினார்.இன்று அமைச்சர்களாகவும் ,பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்ற அனைவரையும் உயர்த்தி சமூகத்திற்கு இணங்காட்டிச் சென்ற அந்த உயர்ந்த மனிதனது இலட்சியங்களைப் பற்றியோ அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வது பற்றியோ நாம் படிப்படியாக இழந்து கொண்டிருக்கின்ற நிலம் ,கல்வி, வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு, இருப்பு என்பவைகள் பற்றியோ அவரது அரசியல் பாசறையில் வளர்ந்தவர்கள் பேசாமல் பிரிந்து நின்று வாய்மூடி மௌனிகளாக இருப்பது வேதனைக்குரி விடயமாகும்.

நமது சமூகத்தினுடைய பாதுகாப்பும் இருப்பும் உத்தரவாதமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் அனைவரும் பேதங்களை மறந்து ஒரு கொடியின் கீழ் ஒன்றுபடுகின்ற பொழுது அன்னாரது கனவுகளை இலகுவாக நிறைவேற்ற முடியும்.அதுவே அவருக்குச் செய்கின்ற மகத்தான நன்றிக்கடனாகவும் ,மாபெரிய சமூகப் பணியாகவும் அமையும்.

அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் சேர்த்து வைக்க எல்லோரும் பிரார்த்திப்போமாக!

எம்.எம்.ஏ.அறூஸ்
தவிசாளர்
மூதூர் பிரதேச சபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


ஒரு விடிவெள்ளி அணைந்துவிட்டது.... ஒரு விடிவெள்ளி அணைந்துவிட்டது.... Reviewed by Madawala News on September 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.