துருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதார சதிகள்: மீளவும் துருக்கிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி சாதித்துக் காட்டுவாரா சாதனை நாயகன் அர்துகான்?


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் 
(மூலம்: Middle East Monitor)
அமெரிக்கா இலக்கு
வைத்துள்ள முஸ்லிம் நாடுகளின் பட்டியலில் அண்மையில் துருக்கியும் நேரடியாகவே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நேட்டோவில் உறுப்பு நாடாகவும் அமெரிக்காவின் நேச நாடாகவும் முன்னர் விளங்கி வந்த துருக்கி தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளினால் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 


சிரியா விவகாரம் தொடர்பில் ஒன்றுகொன்று முரணான கொள்கைகளைக் கொண்டிருத்தல், துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்த முயன்ற கூலன் அமைப்பின் தலைவர் பதுல்லாஹ் கூலனுக்கு அமெரிக்கா அடைக்கலம வழங்கியுள்ளமை, ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் இழுத்தடிப்புகள் என பல்வேறுபட்ட காரணங்களால் அண்மைய காலம் தொட்டு அமெரிக்க- துருக்கி உறவுகளில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.  


அத்துடன் துருக்கியில் இடம்பெற்ற தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2016 இல் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையும் கிறிஸ்தவ மதகுருவுமான அன்ட்ரூ புரூன்சனின் விடுவிப்பு விவகாரம் அமெரிக்க, துருக்கி நெருக்கடியில் பாரிய பங்களிப்பு செலுத்துகிறது. 



துருக்கியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த அமெரிக்க மதகுரு விவகாரம் கடந்த சில வாரங்களாக சூடு பிடித்துள்ளது. அவரை விடுவிக்க துருக்கி மறுக்குமானால் பாரியளவில் பொருளாதாரத் தடைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அமெரிக்காவினால் மிரட்டல் விடுக்கப்பட்டு குறிப்பிட்டளவில் பொருளாதார தடைகள் துருக்கி மீது சுமத்தப்பட்டும் உள்ளன.  


ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதில் கோஸ்பல் கிறிஸ்தவ திருச்சபை பின்னணியில் பெரிதும் பங்காற்றியுள்ளது. நவம்பரில் இடைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் கோஸ்பல் கிறிஸ்தவ திருச்சபையின் ஆதரவினை மீண்டும் பலப்படுத்தும் நோக்குடன் ட்ரம்ப் செயற்பட்டு வருகிறார். 


இதன் ஓர் அங்கமாக கோஸ்பல் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்த பாதிரியாராகிய  அன்ட்ரூ புரூன்சனின் விடுவிப்பு விவகாரத்தை ட்ரம்ப் மீளவும் கையிலெடுத்துள்ளார். துருக்கி மீது பாரிய பொருளாதார தடைகளை விதித்து அதன் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தி சரணடையச் செய்யலாம் என்பதே ட்ரம்ப்பின் திட்டம். 


துருக்கி மீதான அமெரிக்காவின் அண்மைய பொருளாதார தடைகள் தீர்வு காணப்பட முடியாத பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளதுடன் துருக்கிய பொருளாதாரத்திற்கும் பாரிய சவாலாக மாறியுள்ளது.   
அமெரிக்காவினால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளினால் துருக்கி நாணயமான லீரா அமெரிக்க டொலருக்கு எதிராக முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பாரிய வீழ்ச்சியை கடந்த வாரம் சந்தித்துள்ளது. 


உள்ளக, வெளியக அழுத்தங்களை தாண்டியும் கடந்த இரு வருடங்களில் துருக்கியின் பொருளாதாரம் சடுதியான முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது. கொள்கை வகுப்பு மாற்றங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதார முதலீடுகள் என்பனவே கடந்த இரண்டு வருட சடுதி முன்னேற்றத்துக்கு காரணங்கள் ஆகும். இருப்பினும், அண்மைய அமெரிக்க அச்சுறுத்தல்களின் காரணமாக துருக்கி பொருளாதாரம் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. 
துருக்கி லீரா நாணய பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 35 சதவீத பெறுமானத்தை இழந்துள்ளது. இது துருக்கியின் வெளிநாட்டு கடன் மற்றும் நிதிச் சந்தைகளில் பாரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். 


துருக்கிய லீரா நாணய பெறுமதி வீழ்ச்சியை அடுத்து அங்காராவில் இடம்பெற்ற துருக்கிய ஜனாதிபதி அர்துகான் மற்றும் கட்டார் அமீர் துருக்கியில் பாரியளவில் முதலீடுகளை மேற்கொண்டு அதன் பொருளாதார உறுதிப்பாட்டுக்கு பங்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். 

துருக்கி லீராவின் வீழ்ச்சி

கடந்த வார ஆரம்பத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான லீரா பெறுமதி 7.24 ஆக காணப்பட்டது. இதுவே மிக மோசமான வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை கட்டார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை துருக்கிய நிதிச்சந்தை மற்றும் வங்கிகளில் முதலீடு செய்ததையடுத்து அமெரிக்க டொலருக்கு எதிரான லீரா பெறுமானம் 5.80 ஆக மாற்றம் கண்டது.  


இதேவேளை துருக்கியின் பணவீக்கம் 15.6 சதவீதமாக மாறியுள்ளது. இதனால் அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ளது. 

துருக்கி- அமெரிக்கா நெருக்கடியின் பின்புலம் என்ன?
தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் துருக்கியில் 2016 இல் கைதுசெய்யப்பட்ட அமெரிக்காவின் கோஸ்பல் திருச்சபையை சேர்ந்த பாதிரியார் அன்ட்ரூ புரூன்சனை விடுவிக்க கோரி கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ட்விட்டரில் அறிவிப்பை விடுத்தார். விடுவிக்க மறுக்கும் பட்சத்தில் துருக்கியின் உலோக, அலுமினிய வர்த்தக பரிமாற்றம் மீது பாரிய வரிச்சுமைகளை விதிப்பதாக மிரட்டல் விடுத்தார். 


இதற்கு பதிலளிக்கும் முகமாக கடந்த புதன்கிழமை அமெரிக்க இறக்குமதிகளான கார், அற்ககோல், டொபாக்கோ உற்பத்திகள் மீதான வரியை துருக்கி இரட்டிப்பாக்கியது.  இதனையடுத்தே அமெரிக்க, துருக்கி வியாபாரம் பாரிய சரிவைக் கண்டது.    


முன்னரே ஏற்றுக் கொண்ட வர்த்தக உடன்படிக்கைக்கு முரணாக அமெரிக்கா பொருளாதார தடைகளை துருக்கி மீது விதித்தமையே துருக்கி லீராவின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கு காரணம் எனவும், இது துருக்கியை மண்டியிடச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அமெரிக்காவின் திட்டமிட்ட சதி எனவும் துருக்கி ஜனாதிபதி அர்துகான் கண்டனம் தெரிவித்துள்ளார். 


அத்துடன் இவ்வீழ்ச்சியை திட்டமிட்ட வகையில் எதிர்கொண்டு, மாற்று வழிகளை இனங்கண்டு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கவுள்ளதாகவும் வாக்களித்துள்ளார். 


துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு புரூன்சன் விடுவிக்கப்படும் வரை துருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் அதிகரித்த வண்ணமே இருக்கும் என துருக்கிய பொருளியல் நிபுணர் சொனார் எழுதிச் செல்கிறார்.   

லீராவின் வீழ்ச்சி துருக்கியை எவ்வகையில் பாதிக்கின்றது?
லீராவின் வீழ்ச்சியானது குறுகிய காலத்தில் துருக்கியில் பணவீக்கத்தை ஏற்படுத்தும். இது அடித்தட்டு மக்களை பெருமளவில் பாதிப்படையச் செய்யும். 


கடந்த வாரம் பினான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் பாண் உற்பத்திகள் 15 சதவீதத்தால் அதிகரித்துள்ள அதேவேளை ஐபோன் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இறக்குமதி பொருட்களுக்கான விலைகள் முன்னெப்போதுமில்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது. 


தற்போதைய நிலைவரங்களின் பிரகாரம் இவ்வருடம் துருக்கியின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவுதான் முயன்றாலும் இரண்டு அல்லது மூன்று சதவீதத்தை தாண்ட மாட்டாது என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை சனத்தொகை வளர்ச்சி வீதமும் அதிகரித்து வருகின்றது. இவ்வருடம் துருக்கிய வளர்ச்சிப் பாதைக்கு பெரும் சவாலான வருடம் என தெரிவிக்கப்படுகிறது.     


அமெரிக்காவின் பொருளியல் தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்கிறது துருக்கி?

இந்நெருக்கடி நிலையை கடந்து வருவதற்கு துருக்கிய அரசாங்கம் சாத்தியமான பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளினதும் திரவ நிலையை சமநிலையில் பேணுவதற்கு தேவையான நிதியுதவிகளை வழங்குவதாக மத்திய வங்கி அறிவிப்பு செய்துள்ளது. 


துருக்கிய கைத்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மேலதிக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதித் தொகையை கைத்தொழில் அமைச்சு வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் உற்பத்தி செயன்முறைகள் முடங்காது தொடர்ந்தும் சீரான வேகத்தில் இயங்குவதற்கு இயலுமாகவிருக்கும் என நம்பப்படுகிறது.  
தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து இலகுவில் மீள வேண்டுமெனில், வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நிதிச் சந்தை மூலங்கள் துருக்கிய மத்திய வங்கிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 


எனினும், வட்டி வீதங்களை அதிகரிப்பது துருக்கிக்கு ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது எனவும் அதனைத் தவிர்த்து வேறு மாற்று தீர்வுகளை நோக்கி தாம் கலந்தாலோசிக்க உள்ளதாக அர்துகான் மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் கட்டார் தனது பெரும்பான்மை வெளிநாட்டு முதலீடுகளை துருக்கியில் மேற்கொள்ள வாக்களித்துள்ளது. 
கட்டார் முதலீட்டு ஊக்குவிப்பு துறை இது தொடர்பில் முதலீட்டாளர்களிடம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சு, துருக்கி நாட்டுடனான உறவை மேம்படுத்தும் விதமாக துருக்கி ஜனாதிபதி அர்துகானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 


துருக்கி நாடானது அமெரிக்காவுடனான பொருளாதார கொள்கையில் முரண்பட்டுள்ள இந்நிலையில், ஜேர்மனியின் வெளியுறவுத்துறை உயரதிகாரி, துருக்கி ஜனாதிபதி அர்துகானுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 


இந்த பேச்சுவார்த்தையில், இருநாட்டுக்கும் இடையேயான பொருளாதார, கலாசார உறவுகளை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருநாட்டு தலைவர்களும் ஜேர்மனி-துருக்கி இடையேயான பரஸ்பர உயர்மட்ட வருகை மற்றும் தொடர்புகள் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நிலைபாட்டை முன்னெடுத்தனர். 


துருக்கியின் பொருளாதார வலிமை ஜேர்மனிக்கு முக்கியமானது என ஜேர்மனியின் வேந்தர் ஏஞ்சலோ மெர்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் துருக்கியின் கருவூல, நிதி அமைச்சர் Berat Albayrak மற்றும் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் Peter Altmaier ஆகியோரின் சந்திப்புக்கு ஏஞ்சலா மெர்கலும், அர்துகானும் உடன்பட்டனர்.  இந்நிலையில், அர்துகான் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28, 29ஆம் திகதிகளில் ஜேர்மனிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 


துருக்கியின் பொருளாதாரத்துக்கு எதிரான மிகப் பெரிய தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. எனினும், அதற்கு அஞ்சி அமெரிக்காவிடம் துருக்கி ஒருபோதும் பணியாது.நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருவது, பணவீக்கம் ஆகிய பிரச்சினைகளை துருக்கி சந்தித்து வருவது உண்மைதான். அந்தப் பிரச்சினைகளைக் களைய தீவிரமான பணிகள் நடந்து வருகிறது என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் துருக்கிய பொருளியல் நிபுணர்கள். 
எது எவ்வாறு இருப்பினும், 2001 ஆம் ஆண்டில் துருக்கி இருந்த பின்னடைவான பொருளாதார நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நெருக்கடி ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும். அர்துகான் பிரதமராக பதவியேற்ற அக்காலப் பகுதியில் துருக்கியின் பணவீக்கம் 69 சதவீதமாக உச்ச நிலையில் காணப்பட்டது. 


அக்கடினமான நிலைமையையே தலைகீழாக மாற்றி சாதித்துக் காட்டியவர் அர்துகான். அண்மையில் 15.6 சதவீதமாக உள்ள பணவீக்க நிலைமையை நிவர்த்தி செய்வது ஒன்றும் பெரிதல்ல என அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.   
துருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதார சதிகள்: மீளவும் துருக்கிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி சாதித்துக் காட்டுவாரா சாதனை நாயகன் அர்துகான்? துருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதார சதிகள்:  மீளவும் துருக்கிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி சாதித்துக் காட்டுவாரா சாதனை நாயகன் அர்துகான்? Reviewed by Madawala News on August 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.