தலைக்கவசமும் (Helmet) இளைஞர்களின் 'சாதனைகளும்'


வீதியோரங்கள் ஆகட்டும் விழிப்புணர்வு மாநாடுகளாகட்டும் அவை வீதி விபத்துக்கள் தொடர்பான
ஒன்றாக இருந்தால் அங்கே தலைக்கவசம் பற்றி பேசப்படாது அந்நிகழ்வு முற்றுப் பெறாது.

வணிக உலகம் அதன் நன்மைையை மட்டும் கருத்தில் கொள்ளாது கண்டுபிடித்த விரல் விட்டு எண்ணக்கூடிய கண்டுபிடிப்புக்களுள் தலைக்கவசமும்  ஒன்று. அவசரமான இந்த உலகில் அவசியமான பயணங்களாக இருக்கட்டும் அநாவசியமான பயணங்களாக இருக்கட்டும் மனிதன் ஏதோ ஒரு வகையில் எங்கோ பயணித்து கொண்டுதான் இருக்கிறான். இந்த பயணங்கள் சற்று பாதுகாப்பானதாக இருந்தால் நல்லது தானே.

Motorbike வீதி விபத்துக்களின் போது நம் காதுகளுக்குள் இரண்டு வகையான வாசகங்கள் ஒலிக்க தவறுவதே இல்லை. ஒன்று அவர் தலைக்கவசம் அணிந்து இருந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார். மற்றொன்று அவர் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் உயிர் பிழைத்தார். இவை இரண்டும் பார்வையாளர்களுக்கு ஏதோ போகின்ற போக்கில் கடந்து செல்லும் வார்த்தைகள்தான் ஆனால் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களுக்கு தொண்டைக்குழியை அடைத்துக் கொள்ளும் வலி.

இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைக்கவசம் அணிவது ஏதோ Traffic Police இன் தேவையாகவும் இவர்களின் பயணங்களுக்கான இடையூறுகளாகவுமே எண்ணிக் கொண்டு உலாவருகின்றனர். தலைக்கவசம் இல்லாது பிரதான பாதைகளில் பயணிப்பவர்கள் ஏதோ வரலாற்றுச் சாதனைகள் புரிகின்றோம் என்ற எண்ணத்துடனேயே உலா வருகின்றனர்.

தலைக்கவசம் அணியாததன் காரணமாக சாதாரண விபத்துக்களில் கூட உயிரிழந்த எத்தனையோ செய்திகளை கேட்டிருக்கின்றோம் அதேவேளை எவ்வளவு ஆபத்தான விபத்துக்களின் போதும் தலைக்கவசம் அணிந்து சென்றதன் மூலம் உயிர்தப்பிய செய்திகளையும் கேட்டிருக்கின்றோம்.

சிறு தூரப் பயணங்களுக்கும் தலைக்கவசம் அணிந்து சென்றால் நண்பர்கள் என்ன சொல்வார்கள் அடுத்தவர் என்ன நினைப்பார் என்பதெல்லாம் தள்ளிவைத்து விட்டு நீங்கள் இல்லாத உங்கள் குடும்ப நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள், தலைக்கவசம் உங்கள் கைகளை விட்டு பிரியாது.  தலைக்கவசத்தினை MotorBike இன் ஒரு பாகமாக உணருங்கள், அதனை பயணத்துக்கான ஒரு அடிப்படை தேவையாக கருதுங்கள்.

விபத்துக்கள் இடம் பெறுவது சாதாரணம் ஆனால் வேண்டுமென்றே தலைக்கவசத்தினை அணியாது சென்று Traffic Police ஐக் கண்டதும் தடுமாறிக்கொண்டு அடுத்தவர் மீது விழுந்து அவர்களையும் காயப்படுத்துவதெல்லாம் சம்பவ இடத்திலேயே தகர்த்தெறியப் படவேண்டிய விடயம்.

சிறந்த சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் சிறியதாகினும் உங்கள் வாழ்க்கையை பாதுகாக்க போதுமானது.

தலைக்கவசம் அணியுங்கள் உங்களையே தலையாக காத்திருக்கும் குடும்பத்திற்கு கை கொடுத்து அவர்களுக்கு துணையாக இருங்கள்.

By : Sameen Mohamed Saheeth
(Nintavur)
தலைக்கவசமும் (Helmet) இளைஞர்களின் 'சாதனைகளும்' தலைக்கவசமும் (Helmet) இளைஞர்களின் 'சாதனைகளும்' Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5