மு.காவின் 28வது பேராளர் மாநாடு...


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28வது பேராளர் மாநாடு கடந்த 05ஆம் திகதி கண்டி – பொல்கொல்லையில் நடைபெற்றது.


முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு என்பது கட்சியின் பதவிகளுக்கு கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவர்களின் பெயர்களுக்கு அங்கீகாரம் பெறுகின்றதொரு நிகழ்வாகவே இருந்து வருகின்றது.

இதனைத் தவிர பேராளர் மாநாட்டில் முஸ்லிம் சமூகம் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், கட்சியை புனரமைப்புச் செய்ய வேண்டுமென்று தீர்மானம் எடுக்கப்பட்டாலும், கட்சியின் தலைவர் ஆக்ரோசமாக கருத்துக்களை முன் வைத்தாலும் அவையாவும் வெறும் தீர்மானமாகவும், பேச்சாகவுமே இருக்கும். நடைமுறையில் எதனையும் காண முடியாது. அத்தகையதொரு வரலாற்றுப் பாதையிலேயே முஸ்லிம் காங்கிரஸின் 28வது பேராளர் மாநாடும் அமைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியை ரவூப் ஹக்கீம் பொறுப்பேற்றுக் கொண்ட காலம் முதல் நடைபெற்ற பேராளர் மாநாடுகளின் எடுக்கப்பட்ட காத்திரமான தீர்மானங்கள் எதனையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டுமென்று எல்லா பேராளர் மாநாடுகளிலும் பேசப்பட்டுள்ளன. அதனைச் செய்வதற்கு ரவூப் ஹக்கீம் வாக்குறுதியும் அளித்து வந்துள்ளார். ஆனால், அது நடைபெறவில்லை. கட்சியின் யாப்பை திருத்தி அமைத்து தலைவர் என்ற பதவிக்குரிய அதிகாரங்களை அதிகரிப்பதற்கு காட்டிய ஆர்வமும், அதற்கு உயர்பீட உறுப்பினர்கள் வழங்கிய ஒத்துழைப்பும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் சார்ந்த விவகாரங்களுக்கு காட்டுவதில்லை.

#பதவிகள்
#####
முஸ்லிம் காங்கிரஸின் பதவிகளை எடுத்துக் கொண்டால் அக்கட்சியின் யாப்பில் 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட திருத்தத்தின் பின்னர் கட்சியின் தலைவருக்கே உச்ச அதிகாரங்கள் உள்ளன. ஏனைய பதவிகள் வெறும் அலங்காரமேயாகும். ஆயினும், கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி சபீக் ரஜாப்தீனுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கிழக்கு மக்களை முழந்தாளிடச் செய்வோம். கிழக்கில் நல்ல தலைமை இருந்தால் ஏன் எங்களைத் தேடி வருகின்றீர்கள் என்று முகநூலில் பதிவொன்றினை மேற்கொண்டதன் மூலமாக சபீக் ரஜாப்தீன் விமர்சனத்திற்கு உள்ளானார். இவரது இக்கருத்தை பிரதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மிகக் கடுமையாக எதிர்த்தார். ஈற்றில் சபீக் ரஜாப்தீன் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது தேசிய அமைப்பாளராக சபீக் ரஜாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு முஸ்லிம்கள்தான் முஸ்லிம் காங்கிரஸின் முள்ளந்தண்டு அவ்வாறு இருக்கின்ற நிலையில் கிழக்கு முஸ்லிம்களை விமர்சனம் செய்தவரை மீண்டும் அப்பதவியில் நியமித்து இருப்பதன் மூலமாக தேசிய அமைப்பாளர் பதவிக்கு கட்சியில் வேறு யாரும் பொருத்தமில்லை என்று தெரிகின்றது. அத்தோடு இந்த நியமனம் சபீக் ரஜாப்தீனின் கருத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றது. தேசிய அமைப்பாளர் பதவிக்கு புத்தளம் பாயிஸின் பெயர் குறிப்பிடப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் பலத்த எதிர்ப்பைக் காட்டியுள்ளார். இதன் பின்னரே சபீக் ரஜாப்தீனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் போது யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதே வேளை, தேசிய அமைப்பாளர் பதவிக்கு சபீக் ரஜாப்தீனின் பெயர் குறிப்பிடப்பட்ட போது பேளரார்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒருவர் ஒரு சமூகத்தின் மீது மோசமான வகையில் கருத்துக்களை முன் வைத்ததன் பின்னர் மன்னிப்பு கேட்பதனால் கருத்துக்கள் அழிந்து போவதில்லை. இதனால்தான் நெருப்பால் சுட்டவடு ஆறிவிடும். நாவினால் சுட்டவடு ஆறாது என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

ஆதலால், சபீக் ரஜாப்தீனின் கருத்துக்களை மறக்க முடியாதென்பதே கிழக்கு முஸ்லிம்களின் கருத்துக்களாக உள்ளது. இதே வேளை, கிழக்கு முஸ்லிம்களினால் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கருத்தை சிலர் பிரதேசவாதம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
சபீக் ரஜாப்தீனின் நியமனத்தை நியாயப்படுத்துவதற்கு முற்படுகின்றவர்களே பிரதேசவாதம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தேசிய அமைப்பாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வேறு யாருக்கு வழங்கினாலும் சலசலப்பு ஏற்பட்டிருக்காது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக கண்டியை சேர்ந்த ரவூப் ஹக்கீமை பல விமர்சனங்களுக்கு மத்தியில் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சபீக் ரஜாப்தீனுக்கு தேசிய அமைப்பாளர் பதவியை மீண்டும் வழங்கியுள்ளமை கிழக்கு முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரஸ் அவமானப்படுத்தியுள்ளதென்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால், முன் வைக்கப்படும் விமர்சனங்கள் பிரதேசவாதமல்ல. அவரது அகங்காரத்திற்கும், ஏனையவர்கள் இது போன்று அகங்காரமாக செயற்படக் கூடாதென்பதற்காகவுமே எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதே வேளை, பாயிஸின் பெயருக்கு எதிர்ப்புக் காட்டியவர்கள் சபீக்கின் பெயருக்கு எதிர்ப்புக் காட்டாமல் இருந்தது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸை பொருத்த வரை ரவூப் ஹக்கீம் பேராளர் மாநாட்டிற்கு முன்னதாக நடைபெறவுள்ள கட்டாய உச்சபீடக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு சில முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடுவது வழக்கமாகும். அதில் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள். எனவே, சபீக் ரஜாப்தீனுக்கு தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியமைக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பூரண ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

#ரவூப் ஹக்கீம்
#########
முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி ரவூப் ஹக்கீம் என்பவரின் கைகளுக்குள்ளேயே உள்ளது. அதனால், எதிர்பார்க்கப்பட்டது போல அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் கட்சித் தலைவரின் பேச்சுக்கு அதிக முக்கியம் உள்ளது. வழக்கம் போன்று 28வது பேராளர் மாநாட்டிலும் ரவூப் ஹக்கீம் கட்சி, சமூகம், தேசியப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக் காட்டி உரையாற்றியுள்ளார். கடந்த காலங்களில் வாய்ப் பேச்சில் வீரர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்து வந்துள்ளார்கள். அதில் முதன்மையானர் ரவூப் ஹக்கீம். கட்சியின் பேராளர் மாநாட்டில் மட்டுமல்ல மேடைப் பேச்சுக்களின் போது தன்மை ஒரு விடுதலை வீரனாகச் சித்தரித்துக் காட்டியுள்ளாரே அன்றி வீரராக இருக்கவில்லை.

பறிபோகும் காணிகளை பாதுகாப்போம்
முஸ்லிம்களின் காணிகள் பல பெயர்களில் பறிபோயுள்ளன. யுத்த காலங்களிலும், யுத்தத்திற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் பல ஆயிரக் கணக்கான பூர்வீகக் காணிகளை முஸ்லிம்கள் பறி கொடுத்துள்ளார்கள். இது போலவே தமிழர்களின் காணிகளும் பறிபோயின. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் பறிபோன காணிகளை படிப்படியாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸினால் முஸ்லிம்களின் ஒரு அங்குலக் காணியைக் கூட மீட்டுக் கொடுக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு நல்லவைகள் ஏராளம் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும் தீமைகளே ஏராளமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காணி மீட்பு குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பல தடவைகள் வீரப் பேச்சுக்களை முன் வைத்துள்ளார். அவரது பேச்சுக்கள் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களை திருப்திபடுத்துவதற்காகவே அல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்காக நடவடிக்கைகளை எடுப்பதற்காகவல்ல. முஸ்லிம் காங்கிரஸ் பல தடவைகள் சமூகத்திற்கு எதிரான சட்ட மூலங்களை அரசாங்கத்தை திருப்திபடுத்துவதற்காகவும், வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் ஆதரவு வழங்கியுள்ளமை வெளிப்படையான உண்மையாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் என்று சொல்லிக் கொண்டவர்கள், இன்றைய அரசாங்கம் கலைவதற்கு இன்னும் சுமார் 18 மாதங்களே உள்ள நிலையில் ரவூப் ஹக்கீம் காணிகளை மீட்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

#நேரான பாதை
########
சமூகத்தை நேரான பாதையில் இட்டுச் செல்லும் தார்மீகப் பெர்றுப்பை முஸ்லிம் காங்கிரஸ் சுமந்துள்ளதென்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு தெளிவான அரசியல் பாதையைக் காட்டுவதற்கே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், மர்ஹும் அஸ்ரப்புக்கு பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் சமூகம் சார்ந்த விவகாரங்களை மூட்டை கட்டி செயற்பட்டுக் கொண்டிருப்பதனையே காண்கின்றோம். அது தேர்தல் காலக் கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு நேரான பாதையைக் காட்டவில்லை என்பதனை கல்முனை மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி றக்கீப் மறை முகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

அங்கு மேயர் றக்கீப் உரையாற்றுகையில், முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலுக்கு மட்டும் மக்கள் முன் செல்லுகின்ற கட்சியாக இருக்கின்றதென்ற குற்றச்சாட்டியிலிருந்து விடுபட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இவரது இக்கருத்திற்கு பேராளர்கள் கரகோசம் செய்து ஆதரித்துள்ளார்கள். ஆகவே இவரது கருத்து முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலை மாத்திரம் மையப்படுத்திச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்தலை மையப்படுத்திச் செயற்படும் அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றிக்காக பல உறுதிமொழிகளை வழங்கும், தேர்தல் முடிந்ததும் உறுதிமொழிகளை மறந்துவிடும். இந்நிலைப்பாட்;டையே முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பாதையில் காண முடிகின்றது. இதிலிருந்து விடுபட வேண்டுமென்று கல்முனை மாநகர சபையின் மேயருக்கு முன்னதாகப் பலர் கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸை பொருத்த வரை கருத்துக்களை முன் வைக்கலாம். தீர்மானங்களும் எடுக்கப்படலாம். ஆனால், நடைமுறைப்படுத்துவதற்கு எக்கொள்கையும் அக்கட்சியில் கிடையாது. தீர்மானங்கள் ஏட்டுச் சுரக்காய் போலவே இருந்து கொண்டிருக்கின்றன.

அரசாங்கம் இனவாத முலாம் பூசியுள்ளது
இந்த அரசாங்கம் இனவாத முலாம் பூசப்பட்டதாக செயற்படுகின்றது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட போது முஸ்லிம்களின் மீதான இனவாத நடவடிக்கைகள் யாவுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனால், இனவாத செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட இனவாத செயற்பாடுகள் எந்த வகையில் இன்றைய ஆட்சியில் குறையவில்லை. இதனால் நல்லாட்சி என்பது பொல்லாத ஆட்சியாகவே முஸ்லிம்களினால் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் இன்றைய அரசாங்கம் இனவாத முலாம் பூசப்பட்டு செயற்படுகின்றது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, இதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் என்ன? அரசாங்கம் இனவாத முலாம் பூசிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துக் கொண்டே அமைச்சர் பதவிகளையும், பிரதி அமைச்சர் பதவிகளையும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளார்கள். அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லை.

முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்றால் சொல்லிக் கொண்டு எதற்காக அரசாங்கத்தில் பங்காளிகள் என்றிருக்க வேண்டும். பெயருக்கு மனைவியாக இருப்பதனை விட வாழா வெட்டியாக இருப்பது மேலாகும். ஆதலால், அரசாங்கத்தின் பங்காளிகள் என்று சொல்லிக் கொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, கூட்டுப் பொறுப்பு என்ற மந்திரக் கோளுக்கு கட்டுப்பட்டு இருப்பதனை விடவும், எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதும், அதற்காக போராடுவதும் மேலாகும். ஆனால், இன்று முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல ஏனைய முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்தினை விட்டு விலகிக் கொள்வதற்கு விருப்பமில்லை. முஸ்லிம் கட்சிகள் சமூகத்திற்காக அரசாங்கத்தில் இருக்கவில்லை. அமைச்சர் பதவிகளுக்கே இருக்கின்றன. அமைச்சர் பதவிக்கும், தேசியப் பட்டியலுக்கும் சண்டையிடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்திற்காக சண்டையிட்டுக் கொள்வதில்லை. ஒரு சிலர் சமூகம் பற்றி பேசினாலும் அவர்களுக்கு அரசியலில் அற்ப ஆயுளே கிடைத்து வருகின்றது.

இனவாத அரசாங்கம், முஸ்லிம்களின் காணிகைளை பறித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. இத்தகையதொரு அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு நேரான பாதையைக் காட்டுவதற்குரிய பொறுப்பைச் சுமந்துள்ள கட்சியினால் இருக்க முடியாது. ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் யாவரும் அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு சம்மதிக்க மாட்டார்கள். கட்சி, சமூகம் ஆகியவற்றை விடவும் பதவிகள்தான் தனிநபர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் இனவாத முலாம் பூசி செயற்பட்டுக் கொண்டிருப்பதனைப் போல முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகம் எனும் சாயத்தை பூசிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த சாயம் வெளுத்துக் கொண்டிருக்கின்றது. இது முற்றாக வெளுப்பதற்கு முன்னதாக முஸ்லிம் காங்கிரஸ் தம்மை முஸ்லிம்களின் அரசியல் கட்சி என்று நிரூபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் பழையவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும். ஆதலால் அதற்கு ஏற்ப உண்மையாக செயற்பட வேண்டும். நேர்மையாக செயற்பாடுகளையே அல்லாஹ் விரும்புகின்றான். நேர்மையான செயற்பாடுகளே கட்சியின் கட்டமைப்பை உறுதியாக வைத்துக் கொள்வதற்கு வழி வகுக்கும் என்ற உண்மையை முஸ்லிம் காங்கிரஸ் புரிந்து செயற்பட வேண்டும்.

எங்களின் ஆதரவு அவசியம்
முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் தலைமையும் ஜனாதிபதியாக முடியாது. எமது சமூகத்தின் மீது அக்கறை செலுத்துகின்ற, நிரந்தரத் தீர்வு தருகின்ற ஒரு தலைமைக்கே  நாங்கள் ஆதரவு வழங்குவோம் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ரவூப் ஹக்கீமின் இக்கருத்தை முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம்தான் முஸ்லிம்களின் கட்சியாக இருக்குமாயின் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் பல கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளில் உள்ளவர்கள் ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸில் இருந்தவர்கள். ஆதலால், முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆரம்பித்திலிருந்த ஆதரவு தளம் உடைக்கப்பட்டு எல்லைகள் போடப்பட்டுள்ளன. இதனால்தான் மஹிந்தராஜபக்ஷ இரண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸின் ஆரதரவு இல்லாமல் வெற்றி பெற்றார்.

அதே வேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைவதற்கு முஸ்லிம்களே காரணமாகும். ஆதலால், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இல்லாதவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொள்ள முடியாதென்பது மிகையான கற்பனையாகும். இதனை ரவூப் ஹக்கீமும் அறிவார். அரசியல் என்றால் இப்படித்தான் பேச வேண்டும். இவ்வாறு பேசுவதனையே ஆதரவாளர்களும் விரும்புகின்றார்கள். குறிப்பிடப்படும் விடயம் சாத்தியமா என்று ஆதரவாளர்கள் ஆராய்வதில்லை.

#எங்களை ஏமாற்றுகின்றது
மாகாண சபை திருத்ததச் சட்டம் எங்களுக்கு தெரியாமல் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலமாகும் என்றும் பேராளர் மாநாட்டில் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதுவும் வழக்கமான பதில்தான். ஒரு சட்ட மூலத்தை ஆதரிப்பதும் பின்னர் இதற்காகவே ஆதரித்Nhதம் என்று கூச்சமின்றி சொல்லுவதும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு பழக்கப்பட்ட வழக்கமாகும். திவிநெகும, 18வது திருத்தம் உள்ளிட்ட சட்ட மூலங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளித்தது. பின்னர் கண்களை மூடிக் கொண்டு பாதாளத்தில் விழுந்தோம் என்று சொல்லிக் கொண்டதனை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களும், ஏனையவர்களும் அறிவார்கள.

ஆக, முஸ்லிம் காங்கிரஸின் 28வது பேராளர் மாநாடு ஒரு நிகழ்வாக நடந்து முடிந்துள்ளதே அல்லாமல் முஸ்லிம் சமூகத்தின் எதிர் காலத்திற்காக கூடவில்லை. ஒரு அரசியல் கட்சி தனது 28வது பேராளர் மாநாட்டை நடத்தியுள்ளது. ஆதலால், இது முஸ்லிம்களின் இயக்கம் என்பதனை விடவும், முஸ்லிம் அரசியல் கட்சிகளில் ஒன்று என்று சொல்லுவதே மிகப் பொருத்தமாகும்.

சிகாப்தீன் மீராசாஹிபு  ( ரிபான் ) விடிவெள்ளி 10.08.2018 கட்டுரை

மு.காவின் 28வது பேராளர் மாநாடு... மு.காவின் 28வது பேராளர் மாநாடு...  Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.