டெங்கு காய்ச்சல்.... 16 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு. வைத்தியசாலையை சாடும் உறவினர்கள்.

மன்னாரில் டெங்கு காய்ச்சல் காரணமாக 16 வயதுடைய மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களாக மன்னார் பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதை மன்னார் மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.என்.கில்றோய் பீரீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த ஜோன்சன் ஜலிஸா என்ற 16 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பில் குறித்த மாணவியின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில்,

குறித்த மாணவி கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக உறவினர்களினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும் பரிசோதனையின் பின் மருந்தினை வழங்கி மூன்று நாட்களுக்கு பின் இரத்த பரிசோதனை செய்ய மீண்டும் வைத்தியசாலைக்கு வருமாறு கோரி திருப்பி அனுப்பியுள்ளனர்.

எனினும் குறித்த மாணவிக்கு மறு நாள் செவ்வாய்க்கிழமை வாயினால் இரத்தம் வெளி வந்த நிலையில் உடனடியாக மீண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின் குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிசோதனைக்காக இரத்தம் எடுக்கப்பட்டு வெளியில் சென்று பரிசோதித்து வருமாறு கோரி எங்களிடம் தந்தார்கள்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னரே இரத்த பரிசோதனை மேற்கொள்ள இரத்த மாதிரி எங்களிடம் தரப்பட்டது.

உடனடியாக குறித்த இரத்த மாதிரியை பரிசோதனைக்காக வெளியில் சென்று கொடுத்த போது இரண்டு நாட்களின் பின்பே சரியான இரத்த பரிசோதனை அறிக்கை தர முடியும் என தெரிவித்தார்கள்.
அவசரம் என்றால் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெக்ஸ் மூலம் எடுத்து தர முடியும் என தெரிவித்தனர். சாதாரண ஒரு இரத்த பரிசோதனைக்கு கூட மன்னார் வைத்தியசாலையில் இருந்து வெளியில் அனுப்புகின்றனர்.

அதி தீவிர சிகிச்சை பிரிவில் அவர்கள் கேட்ட சகல விதமான மருந்துகளும் நாங்கள் வேண்டிக்கொடுத்தோம். இந்த நிலையில் குறித்த மாணவி மன்னார் பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு, மருந்து பொருட்களை வெளியில் கொள்வனவு செய்து தருமாறு வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட துண்டும் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் உறவினர் ஒருவர் மேலும் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல்.... 16 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு. வைத்தியசாலையை சாடும் உறவினர்கள். டெங்கு காய்ச்சல்....  16 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு. வைத்தியசாலையை சாடும் உறவினர்கள். Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5