தேர்தல் கால சந்தர்ப்பவாத கூட்டணிகள் போலன்றி , சமூகத்தின் வெற்றிக்காக உழைக்கக்கூடிய கூட்டணியொன்றினை அமைப்பது காலத்தின் தேவையாகும்”




பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் 
“முஸ்லிம் சமூகத்தில் அரசியல் கூட்டணிகள்
என்பது தேர்தலுக்கான கூட்டணிகளாக மாத்திரமே குறுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் கட்சிகள் தேர்தல் காலத்தின்போது மாத்திரமே கூட்டணிகள் பற்றிப்பேசுகின்றனர். அவை வெறும் சந்தர்ப்பவாத கூட்டணிகளாகவே இருந்துள்ளன. எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளுக்கான  நிரந்தர தீர்வுகளை  காணக்கூடிய வகையிலான அரசியல் கூட்டணியை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் உடனடியாக உருவாக்க வேண்டும்.இந்தக்கூட்டணி தேர்தல் வெற்றிக்கான  சந்தர்ப்பவாத கூட்டணியாக அல்லாமல் சமூகத்தின் வெற்றிக்கான  ஒரு கூட்டணியாக அமைய வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் NFGG பிரதித்தவிசாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்  தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:


“அரசியல் என்பது மக்களுக்கானது. பொது மக்களின் நலனே அரசியலின் அடிப்படையாகவும் இலக்காகவும் இருக்க வேண்டும். ஆனால் இந்த அடிப்படை நோக்கம் ஏறத்தாள தொலைந்து விட்ட நிலையே நம் மத்தியில் காணப்படுகிறது. அதனால்தான் அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் வளர்ந்து செல்லும் நிலையில் மக்களும் நாடும் பின்னோக்கித் தள்ளப்படுகிறார்கள். தேர்தல்களில் கட்சிகளினதும் தனி நபர்களினதும் வெற்றி உத்தரவாதப்படுத்தப்படுகின்றது. ஆனால் மக்களின் வெற்றியோ அல்லது நாட்டின் முன்னேற்றமோ உறுதிப்படுத்தப்படுவதில்லை.

நமது சமூகத்தைப் பொறுத்த வரையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. காணிப் பிரச்சினை, மீள் குடியேற்றம், மொழிப் பிரச்சினை, அரச தொழில் பங்கீடுகள், கல்விப் பிரச்சினை, இனவாத அடக்கு முறைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் , அரசியல் தீர்வில் நியாயமான பங்கு என  பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அது போலவே எமது இருப்பையே கேள்விக்குறியாக்கியிருக்கின்ற சூழ்நிலைகள் அதிகரித்துச் செல்கின்றன. இவை பற்றிப் பேசுவதும் தீர்வுகளைக் காண்பதுமே சமூக அரசியலின் தலையான நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

ஜனநாயக அரசியலில் நாம் பல கட்சிகளாக இருந்தாலும் இந்த சமூக நோக்கங்களுக்காக கூட்டிணைந்து உழைப்பது எல்லோரது பொது நோக்கமாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் அரசியல் ரீதியான ஒரு கூட்டு முயற்சி காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. இதனை இனிமேலும் தாமதப்படுத்த முடியாது.  எமது மக்களின் அரசியல் பலத்தை மேலும் சிதைக்கின்ற சட்ட மூலங்கள் தொடர்ந்தும் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.  

அதனடிப்படையில் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். ஆனால் பாரதூரமான விடயங்களில் கூட நம் மத்தியில் ஒரு பொதுத் தளத்திலான கலந்துரையாடலோ அதனடிப்படையிலான முடிவுகளோ எட்டப்படவில்லை.

சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலித்தாக வேண்டும் என்ற அழுத்தம் கட்சிகளுக்கு கொடுக்கப்படவில்லை. அதன் விளைவு எமது அரசியல் பலத்தை சிதைக்கும் சட்ட மூலங்களுக்கு எமது கட்சிகளே வாக்களித்தன. மாகாண சபை திருத்த சட்ட மூலம் இதற்கு சிறந்த உதாரணமாகும். இது இப்போது பாராளுமன்றத்தில் அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கின்றது.

இது போன்ற தீர்க்கமான சந்தர்ப்பங்களிலவாது  அரசியல் கட்சிகளின் மத்தியில் ஒரு பொது  நிலைப்பாடும்,  அதனை அடியாக கொண்ட அரசியல்  ரீதியான கூட்டு முயற்சிகளும் மிக மிக அவசியமாகும் . ஆனால் அவ்வாறான எந்த நகர்வுகளையும் இது வரை காணமுடியவில்லை. அது போலவே தான் இப்போது 20 ஆவது திருத்த சட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முறைதான் எமக்குப் பாதுகாப்பானது என்று மட்டும் சிந்தித்து முடிவெடுக்க முடியாது.  கடந்த காலங்களில் இந்த ஜனாதிபதி முறை எமக்குப் பெற்றுத் தந்த பாது காப்பு என்ன..? 

என்பதனையும் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் ஆழமாக சிந்திக்க வேண்டும். அதனடிப்படையில் எதிர்காலத்தில் எவ்வாறான ஒரு பொறிமுறை நமக்கும் நாட்டுக்கும் பாதுகாப்பானது என விரிவாக சிந்திக்க வேண்டும். நமது அரசியல் கட்சிகள் அத்தனையும் இது போன்ற சமூக நோக்கங்களுக்கான ஒரு அரசியல் கூட்டு முயற்சிக்கு  வருவதன் மூலமே சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும்.

ஆனால் நமது சமூகத்தில் அரசியல் கூட்டணிகள் எனபது தேர்தலுக்கான கூட்டணிகளாக மாத்திரமே குறுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் கட்சிகள் தேர்தல் காலத்தின் போது மாத்திரமே கூட்டணிகள் பற்றிப் பேசுகின்றார்கள். அவை வெறும் சந்தர்ப்பவாத கூட்டணிகளாகவே  இருந்துள்ளன என்பதுவே கசப்பான வரலாற்று உண்மையாகும். உண்மையில் இந்த சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணிகளை எமது சமூகத்தின் புத்தி ஜீவிகளும் சிவில் அமைப்புக்களும் கேள்விக்குட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடை பெறவுமில்லை. நம் சமூகத்தின் அரசியல் முதிர்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு  இதுவும் ஒரு சான்றாகும். 

எனவே இந்த நிலை தொடர்வதனை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இனி வரும் காலம் இலங்கையைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக தீர்க்கமான காலகட்டமாக இருக்கப்போகிறது. புதிய தேர்தல் சட்டங்கள்,  புதிய ஜனாதிபதி முறை,  புதிய யாப்பு,  அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு  என பாரதூரமான பல விடயங்கள் முனனெடுக்கப்படப் போகின்றன. 

இந்த சூழ் நிiயில் நமது மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண வேண்டியுள்ளது. எமது கலாசார தனித்துவங்களுக்கான பாதுகாப்பு,  இருப்பு மற்றும்  அரசியல் முக்கியத்துவம் என்பவற்றை எதிகாலத்தில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. அதே போன்று இந்த நாட்டின் சம உரிமையுள்ள குடிமக்களாக நின்று இந்நாட்டின் முன்னேற்றத்திற்கான பங்களிப்புக்களையும் செய்யவேண்டியுள்ளது. நம் நாட்டிற்கான நமது கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமே எமது உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.


இந்தப் பின்னணியில் ஒரு அரசியல் கூட்டணியை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும்  வகையில் உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தக் கூட்டணி தேர்தல் கால சந்தர்ப்பவாத கூட்டணியாக அல்லாமல் சமூகத்திற்கான ஒரு கூட்டணியாக உருவாக வேண்டும். இதற்கான அழுத்தங்களை சமூகத்தின் புத்தி ஜீவிகளும் சிவில் சமூக தலைவர்களும் உலமாக்களும் வழங்க வேண்டும். அவ்வாறான ஒரு கூட்டணியொன்றை உருவாக்கி ஒரு கூட்டு முயற்சியை செய்வதன் மூலமாகவே எமது நிகழ்கால சவால்களுக்கு முகம் கொடுத்து நாம் முன்னேற முடியும்.

இவ்வாறான ஒரு கூட்டுப் பொறிமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்ற எழுத்து மூலமான ஆலோசனைகளை நாம் ஏற்கனவே சில தரப்புகளிடம் சமர்ப்பித்திருக்கிறோம். அதனடிப்படையிலோ அல்லது அதை விடவும் சிறப்பான வேறு ஆலோசனைகளின் அடிப்படையிலோ இந்த முயற்சி வெற்றிகரமான ஒன்றாக மாற்றுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம்.



பிரச்சினைகளை திரும்ப திரும்ப பேசுவதில் காட்டுகின்ற ஆர்வத்தைக் குறைத்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் அதற்கான உபாயங்களையும் அறிவு பூர்வமாக ஆழமாகப் பேசுகின்ற ஒரு முதிர்ச்சியான அரசியல் போக்கினை ஊக்குவிப்பது காலத்தின் கட்டாயமாகும். இது எமது கைகளிலேயே தங்கியுள்ளது என்பதனை மறந்துவிடக்கூடாது.”

தேர்தல் கால சந்தர்ப்பவாத கூட்டணிகள் போலன்றி , சமூகத்தின் வெற்றிக்காக உழைக்கக்கூடிய கூட்டணியொன்றினை அமைப்பது காலத்தின் தேவையாகும்” தேர்தல் கால சந்தர்ப்பவாத கூட்டணிகள் போலன்றி   , சமூகத்தின் வெற்றிக்காக உழைக்கக்கூடிய  கூட்டணியொன்றினை அமைப்பது காலத்தின் தேவையாகும்”  Reviewed by Madawala News on July 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.