என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை;அனந்தி சசிதரன்



பாறுக் ஷிஹான்
என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற
அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்   தெரிவித்துள்ளார்.  

தமிழ் தேசியம் பேசி இராணுவத்தையும் , அரசாங்கத்தையும் விமர்சித்து வரும்   வடமாகாண பெண் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சிடம் சென்று தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி , தனது பாதுகாப்புக்கு என கைத்துப்பாக்கி ஒன்றினை பெற்றுக்கொண்டு உள்ளார் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் (16) திங்கட்கிழமை வடமாகாண பேரவை செயலகத்தில் நடைபெற்ற வேளை தெரிவித்திருந்தார்.இதனை அடுத்து  ஊடகங்களுக்கு அவர்   அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே தெரிவித்துள்ளதாவது

நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன்.ஆனால் அந்தப் பாதுகாப்பினை நான் முழுமையாக நம்பியிருக்கவில்லை.எனது கைகளும்,எனது உறவுகளும் தான் எனக்கு பாதுகாப்பு என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்

விடுதலைக்கான பயணத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உரமூட்டப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையிலிருந்து மக்கள் சேவைக்காக அரசியலுக்குள் பிரவேசித்த ஒருவராகவே நான் இருக்கின்றேன்.நாங்கள் உயிரை துச்சமென கருதி முடிவெடுத்தவர்கள். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அரசியலுக்கு வரவில்லை.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது செயற்பாடுகளை முடக்குவதற்காக பெண் என்று கூட பாராது சில நபர்கள் எத்தகைய நிலைக்கும் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய அச்சுறுத்தல்களால் தான் நான் பாதுகாப்பினை    அதிகரிக்குமாறு கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அதனைவிடுத்து பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டு வடக்கில் மேன்மைத் தன்மையை காட்ட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அவ்வாறான துப்பாக்கி எதனையும் நான் இதுவரையில் பெற்றுக்கொள்ளவும் இல்லை. நான் துப்பாக்கியை பெற்றுக்கொண்டதாக கூறுபவர்கள் அதனை மக்கள் முன்னிலையில் நிருபித்துக் காட்ட வேண்டும். அதனை விடுத்து புனைகதைகளை கூறி மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற பற்றினை அழித்து விடலாம் எனக் கருதுவது பகற்கனவாகும்.
எமது தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அவ்வாறிருக்கையில் தற்போதைய சூழலில் தன் இன மக்களால்    நிராகரிக்கப்பட்டு, பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்து உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் அi-டயாளமாக மக்கள் ஆணை பெற்ற என்போன்றவர்களை விமர்சித்து தமிழினத்தினை கூறுபோட நினைப்பவர்களை எம் மக்கள் அடையாளம் காணவேண்டும்.

இவர்கள் தமிழ்த் தேசியவாதிகளாக நடித்துக்கொண்டு அநியாய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போல செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களின் போலிப்பிரசாரங்களுக்கு காலம் பதில் அளிக்கும். அத்தகையவர்களின் முகத்திரையை கிழித்து எம் உறவுகள் தக்க பதிலடியை வழங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

எனினும்  மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் குறித்த விடயத்தை  கூறும் போது   அமைச்சரின் பெயரை பாவிக்காது  இங்குள்ள வடமாகாண பெண் அமைச்சர் என்றே விழித்து கூறினார். வடமாகாண அமைச்சர்களில் அனந்தி சசிதரன் மாத்திரமே பெண் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இன்றைய அமர்வில் அனந்தி சசிதரன் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை;அனந்தி சசிதரன் என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை;அனந்தி சசிதரன் Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.