போர்ட் சிட்டியை சர்வதேச நிதியியல் நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை2050 ஆம் ஆண்டாகும்போது இலங்கையை முழுமையாக அபிவிருத்தியடைந்த
நாடாக மாற்றியமைப்பதற்குத் தேவையான அடிப்படை மற்றும் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு விட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது மிகவும் சவால் மிகுந்த பணி எனவும், பல்வேறுபட்ட கருத்துக்களையுடைய மக்கள் குழுவினருடன் மிகவும் பொறுமையுடனும், விழிப்புடனும் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர்; சுட்டிக் காட்டினார்.

சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் சிங்கப்பூர் வர்த்தக மன்றம் என்பன ஒன்றிணைந்து இன்று ஏற்பாடு செய்த இலங்கை - சிங்கப்பூர் வர்த்தக சந்திப்பின் வினாவிடை அமர்வில் கலந்துகொண்டபோது விக்கிரமசிங்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அவர்களும் இதன்போது கருத்துக்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஜென் டெங்ளின் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெருமளவான வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தினை மிகவும் சிறப்பாக விளங்கிக் கொண்டுள்ளமையினால், பொருளாதார, நிதி மற்றும் சமூகக் கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது நீண்ட கால இலக்காகக் காணப்படுவதாக பிரதமர் சுட்டிக் காட்டினார்.

புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்ட சமூக ஒழுங்கொன்றை உருவாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இதன்போது பிரதமர் தெரிவித்தார்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் கொள்கையாகும் என சுட்டிக் காட்டிய பிரதமர் , எதிர்காலத்தில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளுடன் காணப்படும் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய ரீதியாக நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் பொருளாதார, கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை வலயங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்திய விக்கிரமசிங்க அவர்கள், கொழும்பு - கண்டி மற்றும் அம்பாந்தோட்டையை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பினைச் சூழ வாழும் 9 மில்லியன் மக்களை இலக்;காகக் கொண்டு மேற்கொள்ள முடியுமான முதலீடுகள் தொடர்பாகவும் சுட்டிக் காட்டினார்.

இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வினாவிடை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் அவற்றுக்குப் பிரதமர் வழங்கிய பதில்கள் கீழ் வருமாறு.


வினா : இலங்கையில் தொழில் முயற்சி அபிவிருத்திக்கெனக் காணப்படும் திட்டங்கள் யாவை?பதில் : முதலில் தொழில் முயற்சி தொடர்பான கலாசாரத்தை நாட்டினுள் விருத்தி செய்ய வேண்டும். நாம் சம்பிரதாய ரீதியாகவே வணிக நாடு என்பதைக் கூற வேண்டும். அந்த சம்பிரதாயத்தை இன்னும் நாட்டினுள் காண முடியும். இளம் தொழில் முயற்சியாளர்கள் பலர் நாட்டில் இருப்பதுடன், நிதி அடிப்படையைத் தேடிக் கொள்வதே அவர்களின் ஒரே பிரச்சினையாகக் காணப்படுகிறது. எமது நாட்டின் வங்கிகள் இன்னும் மிகவும் கவனமாகவும், சம்பிரதாய முறையிலுமே செயற்படுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களுக்கு அரசு எவ்வளவு உதவிகளை வழங்கினாலும் வங்கிகளிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு போதியதாக இல்லை.


அதனால் தற்போது தொழில்களை ஆரம்பித்துள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போன்று மத்திய தரத் தொழில்களுக்கு கடன் வசதிகளை வழங்கும் செயற்பாட்டினையும் துரிதப்படுத்த வேண்டும். இலங்கையில் காணப்படும் வங்கிகள் கருத்திட்ட அடிப்படையிலான நிறுவனங்களாக மாற்றமடைய வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களுக்கு ஏற்றுமதிக் கலாசாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.


வினா : கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்கள் எவ்வாறானவை?பதில் : ஆதன வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் எமது அரசாங்கத்தின் கீழ் அதனை சர்வதேச நிதியியல் நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம். அடுத்த வருடம் அதனை நிரப்பும் பணிகள் முடிவடையவுள்ளதுடன், அதன் பின்பு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே இவ்வாறான பல நிதியியல் நகரங்கள் இந்து சமுத்திரத்தைச் சூழ நிறுவப்பட்டுள்ளன. அதனால் நாம் அதில் புதிதாக ஏற்படுத்த வேண்டிய சேவைகள் எவை என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும். இது பத்து வருடத் திட்டமிடலுடன் கூடிய செயற்றிட்டமாகும்.


சில வாரங்களுக்கு முன்பு நான் இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டபோது நிதியியல் நகரினைச் சூழ இங்கிலாந்துச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாட முடிந்தது. அதற்கு உதவிகளை வழங்க இங்கிலாந்து தயாராக இருப்பதாக அறிவித்தது. அதற்கமைய இலங்கையில் நிர்மாணிக்கப்படும் நிதியியல் நகரம் தொடர்பாக புதிய பல சட்டங்களை அறிமுகப்படுத்த நாம் தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நிதி ஆணைக்குழுவொன்றை நிறுவுவது அதன் ஒரு நடவடிக்கையாகும். அது தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதுடன், துறைமுக நிதியியல் நகரத் திட்டத்தின் நிதி ஆணைக்குழுவினை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களினுள் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.


வினா : எதிர்கால நோக்குடன் இணைந்தவாறு நாட்டின் தரவுச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வுச் செயற்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?பதில் : தற்போது உள்நாட்டில் தரவுச் சேகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்கள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் ஏனைய நாடுகளுடன் இணைந்து தரவுகளைச் சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வுப் பணிகளைச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதன் இறுதி நடவடிக்கை அதுவாகும் என பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இதன்போது தெரிவித்தார்.


இந்த மாநாட்டினை ஆரம்பித்து முக்கிய உரையை ஆற்றிய அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்கள் இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக இலங்கையின் அபிவிருத்தி நோக்கங்கள் தொடர்பாக முழு உலகிற்கும் நல்லதோர் செய்தி கிடைப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்குத் தேவையான உள்ளக மறுசீரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமரவிக்கிரம அவர்கள் சுட்டிக் காட்டினார்.

ஆசிய வழங்கல் வலையமைப்பு தொடர்பாக அதிக கவனஞ் செலுத்தி, அதனுடன் இணைய முடியுமான சூழலைக் கைத்தொழில்கள் ஊடாக உருவாக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், பல நாடுகளுடன் இரு தரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சர் அனோமா கமகே, சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதுவர் நிமல் வீரரத்ன, கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
போர்ட் சிட்டியை சர்வதேச நிதியியல் நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை  போர்ட் சிட்டியை சர்வதேச நிதியியல் நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5