கிழக்கு மாகாணத்தில் மினி சூறாவளி, மழை, இடி மின்னல்... ஒருவர் உயிரிழப்பு.


கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில்
நேற்று (17) மாலை திடீரென வீசிய மினி சூறாவளி, மழை, இடி மின்னல் ஆகியவற்றால், பகுதியளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளனவென, அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு, மின்னல் தாக்கத்தால், ஒருவர் பலியானார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பாலத்துக்கு அருகாமையிலுள்ள ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, மின்னல் தாக்கம் காரணமாக ஆற்றில் காணாமல்போன மீனவரின் சடலம், இன்று (18) காலை மீட்கப்பட்டது.

கோட்டைக்கல்லாறு 2 கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதையுடைய கந்தசாமி இராஜேந்திரம் எனும் மீனவரே, நேற்று (17) மாலை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கத்துக்குள்ளாகிய நிலையில், ஆற்றில் காணாமல்போயிருந்தார்.

இவரைத் தேடும் பணியில் பிரதேச மீனவர்களும் பொலிஸாரும் ஈடுபட்டிருந்த நிலையில், கோட்டைக்கல்லாறு வாவி பகுதியில் இருந்து நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தை, திடீர் மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பிவைத்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில், பெரியபுல்லுமலை உள்ளிட்ட இன்னும் சில இடங்களில் வீசிய மினி சூறாவளி காரணமாக, சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார், பிரதேச செயலாளர் என். வில்வரெட்ணம் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடுகள் வழங்குதல் தொடர்பில் ஆராய்ந்ததுடன், நிர்க்கதியானவர்களுக்குச் சமைத்த உணவுகளும் உலருணவுகளும் வழங்கப்பட்டன.

மோசமான இந்த வானியால் பாதிக்கப்பட்ட மக்கள், பாடசாலைகளில் தஞ்சமடைந்ததுடன், காற்றின் வேகம் தணிந்த பின்னர், தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, கல்லாறு, கோட்டைகல்லாறு போன்ற பிரதேசங்களிலும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சாய்ந்தமருது பிரதேசத்தில், பொலிவோரியன் வீட்டுத்திட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளனவென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரியப்பர் வித்தியாலயத்தின் வகுப்பறைகளின் கூரைகள் காற்றில் அடித்துச்சொல்லப்பட்டிருந்ததுடன், சுமார் 65 வீடுகளின் கூரைகள், முழுமையாகவும் சில பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த மினி சூறாவளியால், கல்முனை மாநகர பிரதேசங்களில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள், சில பாடசாலைகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சில பகுதிகளை, கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப், இன்று (18) பார்வையிட்டார்.

அத்தோடு, மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்வதற்கு, கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பிற விடயங்கள் குறித்து ஏனைய திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மாநகர மேயர் றகீப் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மினி சூறாவளி, மழை, இடி மின்னல்... ஒருவர் உயிரிழப்பு. கிழக்கு மாகாணத்தில் மினி சூறாவளி, மழை, இடி மின்னல்... ஒருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.