முன்னுரிமை !


-எம்.எம்.ஏ.ஸமட் -
புனித நோன்பின் விரியாவிடைக்கான மணித்துளிகள் நெருங்கியிருக்கும் நிலையில் இந்நோன்பளித்த
பரிசே ஈத்துல்பித்ர் நோன்புப் பெருநாளாகும். அருளையள்ளித்தந்து அகம் நிறைய ஆனந்த மழை மொழிந்து அகன்று செல்லவுள்ள ரமழான் மாதம் தந்த இப்பெருநாள் தினத்திற்குரிய பிறை பார்ப்பதற்கான நாள் எது என்பதில் தொடர்ச்சியாக சர்ச்சை நிலவி வரும் நிலையில,; இது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இருப்பினும், தெளிவில் புரிதலும், புரிந்துணர்வுவுமின்மையாலும் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்கள், கருத்தாடல்கள், கருத்துமோதல்கள் என சமூகத்தின் மத்தியிலுள்ள சிலரினால், ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் குரல்பதிவுகளாகவும், கருத்துபதிவேற்றங்களாகவும் கடந்த சில நாட்களாக பதிவேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.


கடந்த காலங்களில் உலமா சபையின் தலைமை மற்றும் பிறைக்குழு விட்ட தவறுகள் மீட்டப்படுகின்ற இவ்வேளையில்; சென்ற வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளியில் நடைபற்ற குத்பா பேருரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி றிஸ்வி முப்தியின் ஜும்ஆ பேருரையிலும் சிலர் தெளிவும், புரிதலுமடையவில்லை என்பதையும் மறைச் சிந்தனைகொண்ட விமர்சனங்களைக் கொண்டு புரிய முடிகிறது.


இவ்விமர்சனங்களில் ஒரு சில நியாயங்கள் இருந்தாலும் இந்நியாயங்கள் பல்லினம் வாழும் இந்நாட்டில் ஏட்டிக்குப்போட்டியாக கருத்துக்ளையும், குரல்பதிவுகளையும் பதிவேற்றுவதானது பிற்காலத்தில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு பாதகத்தன்மையை உருவாக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகவுள்ளது.

ஷவ்வால் பிறையின் சர்ச்சை

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை உள்நாட்டில் கண்டு பெருநாள் கொண்டாடுவதா அல்லது சர்வதேச ரீதியில் குறிப்பாக சவூதி அரேபியாவில் காணும் பிறையின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடுவதா என்பதில் பலர் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக பிறை காண்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலுள்ள ஆன்மீக இறை அழைப்பாளர்கள் சிலரிடம் காணப்படும் கொள்கைப் பற்றறை  ஒரு வகையான கொள்கை நோயானக் கருத வேண்டியுள்ளது. இக்கொள்கை நோயானது ஒற்றுமையற்ற சமூகம் என்ற இழிநிலையையும் சுமத்தியிருக்கிறது. ஆன்மீக விடயங்களில் ஒற்றுமைக்கும், சமூக நலன்களுக்கும் முன்னுரிமை வழங்குவதை விடவம் கொள்கைகளுக்க சிலர் முன்னரிமை வழங்கிச் செயற்படுவதை அவதானிக்க முடிகிறத.


கொள்கைக்காக இரத்தம்; சிந்தச் செய்யும் அளவிற்கு கொள்கைவாதிகள் சிலர் தங்களது கொள்கைகளில் ஊரிப்போயிருக்கிறார்கள் என்பதை கடந்த மாதம் வாழைச்சேனையில் ஒரு ஆன்மீக இயக்க நிலையத்தின் மீது மற்றும் சில ஆன்மீக இயக்கைக் கொள்கைவாதிகள் தாக்குதல்கள் நடாத்திய சம்பவமாகும்.


இதில் கவலைக்குரிய விடயமென்னவென்றால் இஸ்லாம் பற்றி வாய்கிழிய இந்நோன்பு காலங்களில் மக்கள் மத்தியில் பேசிய மார்க்க அறியர்கள் பலரும் இத்தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரதேச மொழியில் கூறுவதுபோன்று இத்தகயைவர்கள் தாங்கள் கொண்டுள்ள கொள்கை நோயினால் யானைக்கு மதம் பிடிப்பது போன்று மதம் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.


இந்நிலையில் பல்லின சமூகங்களைக் கொண்ட மக்கள் வாழும் இந்நாட்டில், முஸ்லிம் சமூகத்தைத் தவிர்ந்த ஏனைய எந்தவொரு சமூகமும் தங்களது திருநாட்களைக் கொண்டாடுவதில் முரண்பட்டதான வரலாற்றைக் காண முடியாதுள்ளது. ஆனால், பெருநாள் கொண்டாடுவதிலும் அதற்கான தினத்தை தீர்மானிப்பதிலும் தங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ளும் ஒரு சமூகம் என்றால் அது முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் என்ற வராலாற்றுப் பதிவு முஸ்லிம்கள் தொடர்பில் பதியப்பட்டிருக்கிறது.
கொள்கைப்பற்றும் மறைந்சிந்தனையும்.


நோன்பை நோற்பதிலும் பெருநாட்களைக் கொண்டாடுவதிலும் கடந்த காலங்களில் ஒன்றுபட்ட நிலை காணப்படவில்லை. சமூக ஒற்றுமைக்கு அப்பால் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி அதற்கான ஆதரங்களை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, கொள்கைகளை விட்டுக்கொடுக்காது, நேர்மறைச் சிந்தனைகளை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ளாது எதிர்மறை சிந்தனையுடன் செயற்பட்டு ஒட்டுமொத்த சமூகத்தினதும் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்திய கசப்பான நினைவுகளை இங்கு ஞாபகமூட்டுவது அவசியமாகவுள்ளது.


இச்செயற்பாடுகள் முஸ்லிம்களின் மத்தியில் ஒற்றுமையின்மையை உருவாக்கி பல்வேறு தளங்களிலும்; விமர்சிக்கப்படுவதற்கும் கேள்விக்குட்படுத்தப்படுவதற்கும் காரணங்களாக அமைந்தன. முஸ்லிம்களின் பலவீனத்தைப் தங்களுக்குச் சாதகமாக, தங்களின் பக்கத்தைப்; பலப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் எதிரிகள், முஸ்லிம்களின் துரோகிகள் திட்டமிட்டுச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது சில கொள்கைவாதிகளுக்கு ஒரு பொருட்டாகக் தென்படுவதில்லை.


முஸ்லிம் சமூகத்திலுள்ள காட்டிக்கொடுப்பாளர்களினால் ஒவ்வொரு விடயங்களும் காட்டிக்கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கோர் ஊதாரணமே கடந்த வாரம் உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தென்கிழக்கு பல்கலைக்கழம் குறிது பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை என்பதையும் இங்கு பதிவாக்க வேண்டியுள்ளது. மற்றவர்களைக் காட்டிக்கொடுத்து  சுகபோகங்களை அனுபவிக்கும் சமூகப் புல்லுருவிகள் இச்சமூகத்திற்குள் இருக்கும் வரை இச்சமூகம் மீட்சி பெறாது என்பதைத் இத்தகைய உரைகள் புடம்போடுவதையம் சுட்டிக்காட்ட வேண்டும்.
அரசியல் ரீதியாகவும,; கோட்பாடு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், இயக்கங்கள் ரீதியாகவும் இன்னும் பல்வேறு கோணங்களில் ஒற்றுமை இழந்து கொள்கை நோயினால் பிடிக்கப்பட்டு சிலர் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்கிச்  செயற்படுவது சமூக ஆரோக்கியத்துக்கு எப்போதும் பாதகமாகவே அமையும் என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டியதாகும். சமூகத்தின் கட்டுக்கோப்பை உடைத்து, அதைக் கேவலப்படுத்தி ஏனைய சமூங்களின் பார்வையில் ஒரு  மலினமான எண்ணங்களைத் தோற்றுவித்து தொடர்ந்தும்  சமூகத்தின் நிலை இதுதான் என்பது போன்றதொரு கருத்தியலை சகோதர இன மக்கள் மத்தியில் தோற்றச் செய்திருக்கிறார்கள்.


சமூகம்  இழிவுபடுத்தப்பட்டாலும், சமூகத்தின் நிலையைப் பார்த்து சந்தி சிரித்தாலும்;, கொள்கை வெற்றி பெற வேண்டும் என்பதில்  இவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பல சம்பவங்கள் இன்னும் புடம்போட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் இத்தகையவர்கள் கொள்கை  நோயினால் பிடிக்கப்பட்டு கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதாகும்; என்பதில் சந்தேகமில்லை. இவர்கள் மனங்களில் ஏற்றுக்கொள்ளும்,


விட்டுக்கொடுக்கும,; புரிந்து கொள்ளும் மனப்பாங்கு உருவாக வேண்டும். அந்த நேர்மறை மனப்பாங்கை உருவாக்க முயற்சிக்க வேண்டும். சகவாழ்வு மற்றும் சமூக ஒற்றுமைக்காக முழு நோன்பு நாட்களிலும் இப்தார் வைபவம் நடத்தியும் தங்களுக்குள் ஒற்றுமைப்படாது வாழும் நிலை முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. பெயருக்கும், புகழுக்கும,; அரசியல் நலன்களுக்காகவும் இலட்சக்கணக்கான பணத்தைச் செலவழிந்து  இப்தார்களை நடத்தினாலும்; சகவாழ்வோ, நல்லிணக்கமோ ஏற்டாது என்பதை கடந்த காலங்களில் நடாத்தப்பட்;ட இப்தார்களின் பின்னூட்டல்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்


ஆரோக்கியமான தீர்மானம்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டுள்ள சகல இயக்கங்கைளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள பிறைக் குழுவின் பெருநாள் தொடர்பான முடிவுக்கு மாறாக பிளவுபட்டு கடந்த காலங்களில் இரு தினங்கள் பெருநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.


நோன்பும் ஹஜ்ஜும் தவிர்ந்த ஏனைய மாதங்குளுக்கு  பிறைக்குழு பிறை தொடர்பில் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், அது தொடாப்pல் அலட்டிக்கொள்ளாது இருக்க முடியுமென்றால்  இருபெருநாட்கள் தொடர்பிலும்  பிறைக்குழு எடுக்கும் முடிவில் சந்தேகத்தை ஏற்படுத்துவது நியாயமா? மக்களைக் குழப்புவது நீதியா? என்ற கேள்விகள் ஒவ்வொருவரினது உள்ளத்திலிருந்தும் எழுப்பப்பட வேண்டும்.


இவ்விடயத்தில் பிறைக்குழுவாக அல்லது பிறையைத் தீர்மானிப்பதில் அங்கத்துவம் வகின்றவர்களாகச் செயற்படுகின்றவர்கள் உணர்வுகளோடு விளையாடாமலும நடந்து கொள்வது அவசியமாகும். கடந்த காலங்களில் பிறைபார்ப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் முஸ்லிம் சமூகம் குறித்து சந்தி சிரித்தது. இந்நிலை இவ்வாண்டிலும் பெருநாள் தினத்தை அறிவிப்பதில்; ஏற்பட்டுவிடாது ஆரோக்கியமான தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே சமூக ஒற்றுமையை விரும்பும் மக்களின் பிரார்த்தனையாகவுள்ளது.
ஒரு ஊரின் ஒற்றுமையை அல்லது ஒரு சமூகத்தின் ஒற்றுமையை சீர் குழைப்பது கொலை செய்வதற்குச் சமம் என்ற அண்ணல் நபியின் திருவாக்கு சமூக ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் அறிக்கையிடும் ஒரு சிலரின் அறிவுக்கு எட்டவில்லையா? ஒரு சில உலமாக்கள் கற்று வெளியேறிய மத்தரஸாக்களில் போதிக்கப்படவில்லையா என்ற கேள்விகள் கடந்த காலங்களில் எழுப்பப்பட்டன.

கொடுக்கல் வாங்கல்களில் இஸ்லாத்தை சரிவர பேணுவதில்லை,  குடும்ப வாழ்க்கையில் பூரண இஸ்லாம் இல்லை. அவ்வாறான நிலையில், ஒரு பெருநாளைக் கொண்டாடுவதில் இஸ்லாத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்களாகக் காட்டிக்கொண்டு சமூகத்தைச் சந்திசிரிக்க செய்வது நியாயமாகாது. இவை முஸ்லிம் சமூகத்திடையே பிளவைத் தோற்றுவித்து, இஸ்லாத்தைக் கேவப்படுத்தும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தீனி போடுவதாக அமையும் என்பது ஞாபகத்திலிருக்க வேண்டியதொன்றாகும்.
அத்தோடு, பிரிவினைகள், ஏற்றுக்கொள்ளாத, விட்டுகொடுக்காத மனப்பாங்குகள் நம்மை மட்டும் மாத்திரமின்றி நமது எதிர்கால சந்ததிகளையும் பாதிக்கும் என்பதை மனதில் நிறுத்திச் செயற்படுவது காலத்தின் அவசியமாகவுள்ளது.

 நாம், நமது மனப்பாங்குகளை மாற்றிக்கொள்வதன் மூலம் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் மாற்றிக்கொள்ள முடியும். ஒவ்வொரு தனிநபரும் ஒரு குழுவின,; ஒரு சமூகத்;தின் அங்கத்தவராகிறார். அந்தவகையில், ஓவ்வொரு தனி மனிதனும் தமது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி மாறுகின்றபோது அவர் அங்கம் வகிக்கும் குழுவிலும், இயக்கத்திலும் அவன் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கொள்கை நோயிலிருந்து விடுபட முடியும்.

'ஒரு சமூகம் தங்களை மாற்றிக்கொள்ளாத வரையில் இறைவன் அச்சமூகத்தை மாற்றமாட்டான்' என அல்குர்ஆன் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது. இருபதான் நூற்றாண்டில் வாழ்;ந்த உளவியல் தத்துவ அறிஞர் லியோ டால்ஸ்டாய் கூறுவது போன்று 'ஒவ்வொரு மனிதனும் உலகத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறான். ஆனால் ஒருவர் கூட தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைப்பதில்லை.' இவைதான் இன்றைய முஸ்லிம்களின் நிலையாகவும் உள்ளது.


முஸ்லிம்; இச்சமூகத்தின் ஒற்றுமையை சீர்குழைத்து சின்னாபின்னமாக்கும் ஒரு சிலரின் நிலையும் இவ்வாறுதான் காணப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஒரு பெருநாள் கொண்டாடுவதில் பிளவுபட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் கேவலப்படுத்தும் நிலை இவ்வாண்டிலும் ஏற்பட்டுவிடக் கூடாது. பிறைபார்ப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் சமூக ஒற்றுமைக்கும் சமூக நலன்களுக்கும் முன்னுரிமை வழங்கிச் செயற்படுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் இக்காலத்தின் தார்மீகப் பொறுப்பாகவுள்ளது.


பொறுப்பட்ட செயற்பாடுகளை பொறுப்புள்ள செயற்பாடுகளாக மாற்றி சமூக ஒற்றுமையை வெளிப்படுத்துவது காலத்தின் முக்கிய தேவையாகவுள்ளது. மாறாக, பெருநாள் தினத்தைக் கொண்டாடுவதிலும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதிலும் சமூகம் விமர்சிக்கப்படும் நிலைக்கு இட்டுச் செல்லப்படக் கூடாது. தனித்துவமிக்க கலாசார விழுமியங்களைக் கொண்ட ஒரு இனம் என்ற அடிப்படையில், சமூகத்தின் தெரிவுகள் அமைய வேண்டும். குறிப்பாக பெருநாளுக்கான ஆடைத் தெரிவில்  வரையறைகளை மீறாது இருப்பது தனித்துவத்தைப் பாதுகாப்பதாக அமையும்

கலசார மாற்றம்;


நவீனத்துவத்தின் வழிகாட்டல்களுக்குள் வழுக்கி விழுந்த சிலரினால் இஸ்லாமிய ஆடைக் கலாசாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய ஆடை அணிதல் என்பதிலிருந்து அவர்களை நவீனத்துவம் மாற்றியிருக்கிறது அல்லது இஸ்லாமிய ஆடையணிதல் என்ற வரையறையை மீறச் செய்திருக்கிறது நவீனத்துவத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அத்துடன், பெருநாள் தினத்திற்கான ஆடைத் தெரிவுகள் வணக்க வழிபாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிக முக்கதியத்துவம் மிக்கதாக அமையப்பெற்றிருக்கிறது. புனித மாதத்தின் கடைசிப் பத்து இரவுகளும் பகல்களும்  வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டுமென அறிந்தும,; பலரினால் அந்நேரங்கள்; மொத்த மற்றும் சில்லை விற்பனை நிலையங்களிலும், ஜவுளிக் கடைகளிலும் பால்படுத்தபபட்டுள்ளது.
ஆபாசத்தை ஆடையின் வடிவில் சந்தைப்படுத்துவதற்கு ஆடை வடிவமைப்பாளர்களும், விற்பனையாளர்களும் மேற்கொண்ட விளம்பரங்களின் பின்னூட்டல்களை பெருநாள் தினத்தில் அணியப்படும் ஆடைகளைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும்.


எவ்வாறான ஆடையை அணிய வேண்டும் எத்தகைய ஆடை அணிவதைத் தவிர்;க்க வேண்டும் என அல்குர்ஆனும் நபி மொழியும் நம்மை எச்சரித்திருக்;கிறது. அந்த எச்சரிக்கையை; புறந்தள்ளி நம்மவர்களில் எத்தனைபேர் இறுக்கமான ஆடையணித்து இத்தினத்தை அசிங்கப்படுத்தவுள்ளனர் என்பதையும் பெருநாள் தினத்தில் கண்டுகொள்ளலாம்;.


ஆடைத் தெரிவு குறித்து இத்தனை நாட்களும் உலமாக்களினால்; வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பள்ளிவாசல்களிலும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும், நாகரீக மோகத்தின் எல்லைதாண்டியவர்களினால்  நாகரீகத்துக்கான முன்னுரிமையுடன் மேற்கொள்ளும் செற்பாடுகள், வாழ்க்கைத் தெரிவுகள் அத்தெரிவுகளை தெரிவு செய்பவர்களை மாத்திரம் பாதிப்பதில்லை என்று உணரப்படுவது அவசியமாகும். இவை மொத்த சமூகத்தையும் பாதிக்கிறது.

தனித்துவத்தையும் இஸ்லாமிய கலாசார விழுமியங்களையும் கேள்விக்குள் தள்ளுகிறது. ஏலனத்திற்குள்ளாக்கியிருக்கிறது. என்பது உணரப்பட வேண்டும்.
பெருநாள் தினமும் சமூக நலனும்;


முஸ்லிம்கள் பல சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வல்ல இறைவன்  சோதிப்பதற்காகவே   சிலரை எல்லா வளமும் கொண்டவர்களாகவும் இன்னும் சிலரை வளமாற்றவர்களாகவும் படைத்துள்ளான்

இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர்களும் சோதிக்கப்ட்டிருக்கிறார்கள். அச்சோதனையில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். நம்பில் பலர் உடல், உள, குடும்ப, பொருளாதார ரீதியில் பல்வேறு சோதனைகளையும் சுமைகளையும் சுமந்தவர்களாக இப்பெருநாளை எதிர்நோக்கியிருக்கிறார்கள்;. அவர்களின்;  இதயப் பரப்மெங்கும் வேதனை அப்பிக்கிடக்கிறது.
இயற்கை மற்றும் செயற்கைப் பாதிப்புக்களால், குடியிருக்க வீடுவாசல் இல்லாமல் வாடகை வீட்டிலும் மாற்றார் தயவிலும்  வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாகவும், உடல் உபாதைகளுக்குள்ளாகி வைத்தியசாலைக்; கட்டில்களின் சொந்தக்காரர்களாகவும், வாழ்க்கையின் நெருக்குவாரங்களால் உள்ளம் உருக்குழைந்து தன்நிலை மறந்த உள நோயாளர்களாகவும்,


 வருமானம் வற்றிக் குடும்பச் சுமையின் அவஸ்தையால் அல்லறுபவர்களாகவும் பொருளாதாரப் பற்றாக்குறைக்காகவும் பெருமை வாழ்க்கைக்காகவும்  கை நீட்டி வாங்கிய கடனைத் திருப்பளிக்க இயலாது அதன் வலியால் சுய கௌரவத்தை காற்றில் வீசிவர்களாகவும் இன்னும பற்பல இன்னல்களோடு நம்மைச் சுற்றிப் பலர் வாழ்கிறார்கள்.
இவர்களின் இதயங்களை சந்தோஷத்தால் நனைப்பவர்கள் யார்? இவர்களும் பெருநாளின் இன்பப் பொழுதை ரம்பியமாகக் கழிக்கக் கூடாதா? என்ற கேள்விகளுக்கு நம்மில் பலரிடம் விடை இருக்கிறது. ஆனால் அக்கேள்விகளுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படும் மனப்பாங்கு பலரிடம் மலரவில்லை.


'அயல் வீட்டார் அன்னியவராக இருந்தாலும் அவர் அயல்வீட்டார் என்பதற்காக அவரிலும் நமக்கு பொறுப்பு உள்ளது' என்ற  நபிகளாரின் திருவசனம் நம்மில் பலரது உள்ளங்களிலிருந்து எடுபட்டுவிட்டது. இதனால்தான்,  அண்டை வீட்டு நம் சகோதரன் குடிசை வீட்டில் பாயில் படுத்துறங்க நம்மில் பலர் மாடா மாடிகைகளில் பஞ்சன மெத்தையில் உறங்கி எழும்புகின்றனர்.
ஒரு வேளை  சோற்றுக்காக நம் சகோதர சகோரிகள் ஏங்கிக் கிடக்க நம்மில் பலர் புரியாணி சாப்பிட்டு மிஞ்சியதை குப்பையில் வீசி விட்டு ஏப்பமிடுகின்றனர். கல்யாண வாழ்க்கைக்காக காந்திருந்து காந்திருந்து காலம் கடந்த பின்  மணவாழ்கை காணது கண்ணீரால் காவியம் வடிக்கும் நமது சமுதாயக் கன்னியரைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாது, நம்மில் பல கொடை வள்ளல்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணத்தை வீண்விரையம் செய்து தங்கள் பெண்மணிகளுக்கு திருமணம் நடத்தி அழகு பார்க்கின்றனர்.

அல்லாஹ்வையும் அண்ணல் நபியையும் அவர்களின் அருமைத் தோழர்களையும் அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் வாய் கிழியப் பேசுவர்கள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைக் கடைபிடிக்காது போலிக் கௌரவத்தை மதித்து ஊருக்குதான் உபதேசம் எனக்கல்ல என்ற நிலையில் வாழ்கின்றனர். சமுதாயத்திலுள்ள வளம் படைத்தோர் தங்கள் வளத்தை முறையாக சமுதாய எழுச்சிக்காக, சமுதாய மேம்பாடுக்காக பயன்படுத்தத் தவறுவதனால் சமுதயாத்திலுள்ள வளம் குன்றியவர்கள், தேவையுள்ளவர்கள் அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வும் ரஸுலும் விரும்பாத வழிகளை நாடுகின்றனர்.


இதனால,; சமுதாயத்தின் மானமும் மரியாதையும் காற்றில் பறக்க அவமானத்தோடும் கவலையோடும் சமுதாயத்திலுள்ள சீதேவிகள்  கண்ணீர் சிந்துகின்றனர். இவற்றுக்கெல்லாம் காரணம், நம்மில் வளம் இருந்தும் அவற்றை சமுதாயத்தின் தேவைக்காக அதன் நலனுக்காக பயன்படுத்தப்படாமல் காணப்படுகின்றமையாகும். இதனால், சமுதாயம் ஒவ்வொரு துறையிலும் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அவை இன்னும் நம்மால் சரியாக அடையாளம் காணப்படவில்லை.
அடையாளம் காண்பதற்கு நமக்குள் ஒற்றுமையில்லை. அரசியல் ரீதியாகவும், கொள்கைகள் ரீதியாகவும், இயக்கங்கள் ரீதியாகவும் நாம் பிரிந்து செயற்படுகின்றோம். எதைச் செய்தாலும் பிரபல்யத்திற்காக செய்யும் மன நிலையே நமது பிரபல்யங்கள் பலரிடத்தில் காணப்படுகிறது. இதனால்தான் சமூகம் இன்றும் பெருளாதரா, கல்வி, அரசியல் என சகல துறைகளிம் பின்னடைவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.


இந்நிலை தொடரப்படுமாயின் எதிர்கால சந்ததியினரும் கேவலப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எத்தகைய விடயங்கள் சமூகத்தை அவமானப்படுத்தி சந்தி சிரிக்கச் செய்கிறதோ அத்தகைய விடயங்களில் விட்டுக்கொடுப்புக்கள் அவசியமாகவுள்ளது. இதன் மூலம் சமூகத்தின் கௌரவமும்; தன்மானமும்; ஒற்றுமையையும் பாதுகாக்கப்படும். சுமூக கௌரவவும், விட்டுக்கொடுப்ப, ஒற்றுமை என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கி;, இப்பெருநாளுக்கான ஷவ்வால் தலைப் பிறை அறிவிப்பும் பெருநாள் தின செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்பதே சமூக நலன் விரும்பிகளின் அவவாகும்.


விடிவெள்ளி – 13.08.2018

முன்னுரிமை ! முன்னுரிமை ! Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5