பிறைக் குழப்பமும் முஸ்லிம்களும்.


-வை எல் எஸ் ஹமீட்-
பிறை கண்டு நோன்பு பிடிக்கவும் பிறை கண்டு விடவும் மார்க்கம் கட்டளை இட்டிருக்கின்றது.
இதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. கருத்து வேறுபாடு “ கண்டு” என்ற சொல்லில்தான் இருக்கின்றது.

இந்தக் “ கண்டு” என்பது வெற்றுக்கண்ணால் பார்ப்பதா? அல்லது ( கணிப்பீட்டு முறையில்) அறிவுக்கண்ணால் பார்ப்பதா? அல்லது வானவியல் என்ற விஞ்ஞானக் கண்ணால் பார்ப்பதா? என்ற வாதம் ஒருபுறம்.

வெற்றுக் கண்ணால் பார்ப்பதுதான் என்று எடுத்துக்கொண்டால் அது ‘உள்நாட்டுப் பிறையா? சர்வதேச பிறையா?’ என்ற வாதம்.

உள்நாட்டுப் பிறையென்றால் ‘ கண்ட பிறை ஏற்றுக்கப்படலாமா? ஏற்றுக்கொள்ள முடியாதா? இதனைத் தீர்மானிப்பவர் யார்? என்பதிலுள்ள வாதப்பிரதிவாதங்கள்.

ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடிக்கச் சொன்ன சமூகத்தின் நிலை இது.

இங்கு குர்ஆன், சுன்னா பிரச்சினையா? அல்லது வியாக்கியானப் பிரச்சினையா? அல்லது சரியான தீர்மானம் எடுக்கின்ற பிரச்சினையா? என்றால் நிச்சயமாக குர்ஆன், சுன்னா பிரச்சினை இல்லை. ஏனெனில் “கண்டு பிடி, கண்டு விடு” என்ற சுன்னாவில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. பிரச்சினை ‘ காண்பது’ என்ற சொல்லுக்கான வியாயக்கியானமும் ‘ கண்டுவிட்டால்’ அதை ஏற்றுக்கொள்வதா? இல்லையா என்ற தீர்மானம் ( judgemental) எடுக்கின்ற பிரச்சினையும்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் குர்ஆன், சுன்னா என்ற சொற்கள் பாவிக்கப்பட்டு மக்கள் குழப்படுகிறார்கள்.

உள்நாட்டுப்பிறை
————————
அண்மைக்காலமாக, இந்த வருடம் உட்பட எழுகின்ற பூதாகார பிரச்சினை ‘ கண்ட உள்நாட்டுப்பிறையை ஏற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினை. கடந்த இரண்டொரு வருடங்களுக்குமுன் கிண்ணியாவில் பிறை கண்ட விடயத்திலும் இந்தப் பெருநாளைக்கும் ஏற்பட்ட பிரச்சினை ‘ கண்டபிறை ஏற்றுக்கொள்ளப்படுவது சம்பந்தமானது.’

தற்போதைய பிரச்சினை
——————————-
இஸ்லாமிய முறைப்படி பிறைபார்க்க வேண்டியநாள் பிறை 29 தினமாகும். அதாவது வெள்ளிக்கிழமையாகும். ஆனாலும் வானவியல் ஆதாரங்களின் அடிப்படையில் பிறை 28 இல் அதாவது வியாழக்கிழமை தென்பட வாய்ப்பிருப்பதாக ஒரு கருத்து நிலவியது. இதனடிப்படையில் உலமாசபைத் தலைவர் அவ்வாறு பிறை 28 இல் தென்பட்டால் அடுத்தநாள் ( வெள்ளிக்கிழமை) பெருநாள் கொண்டாடிவிட்டு ஒரு நோன்பை கழா செய்யவேண்டுமென்ற கருத்தைத் தெரிவித்தார். இதில் தவறேதுமில்லை. ஏனெனில் அதுதான் மார்க்க சட்டம்.

குழப்பம் ஆரம்பம்
———————-
நோன்பு 27 அன்று ( புதன்கிழமை) கொழும்புப் பள்ளவாசல் ஒரு அறிவித்தலை விடுத்தது. அதில், பிறைக்குழு நோன்பு 29 தினமான வெள்ளிக்கிழமை யே கூடும்; என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புத்தான் முதல் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பு தோற்றப்பாட்டில் வெளிப்படுத்திய செய்தி, 28 வது தினமான வியாழக்கிழமை பிறை கண்டாலும் அது கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது; என்பதாகும். இது சுன்னாவுக்கு நேர் முரணாகும். இச்செய்தி ஒரு குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக நான்கூட சற்று காரசாரமான ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். ஏனெனில் இந்த அறிவித்தலின் உள்ளடக்கம்தான் பிறைக்குழுவின் தீர்மானமாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

பின்னர் சில பிறைக்குழு உறுப்பினர்களுடன் கதைத்தபொழுது, கொழும்பு பள்ளிவாசல் விடுத்த அறிவித்தலில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. முறைப்படி 29 இல்தான் பிறை பார்க்க வேண்டுமென்பதனால் 29 இல் பிறைக்குழு கூடத் தீர்மானித்தது உண்மை. ஆனால் 28 இல் சிலவேளை பிறை காணப்படலாம்; என்ற அபிப்பிராயமும் நிலவுவதால் பிறைக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் வியாழக்கிழமையும் கூடுவதாகவும் அவ்வாறு பிறை காணப்பட்ட செய்தி கிடைத்தால் ஏனைய அங்கத்தவர்களையும் அழைத்துத் தீர்மானம் எடுப்பது எனவும்தான் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் கொழும்புப் பள்ளிவாசலின் அறிவித்தலில் வியாழக்கிழமைக்குரிய ஏற்பாடு குறிப்பிடப்படாமல் விடுபட்டுவிட்டதுதான் இந்தக் குழப்பநிலைக்குக் காரணம் எனக் கூறினார்கள்.

அதாவது பிறை 28 இலும் பிறைக்குழு கூடுவதற்கிருந்த ஏற்பாடு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்படாமைதான் இந்தக் குழப்பநிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. எது எவ்வாறிருந்தபோதிலும் கொழும்புப் பெரியபள்ளிவாயலின் அறிவித்தல் பிறைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பாக ஒருவித சந்தேகத்தை சிலரின் மனதில் உருவாக்கி விட்டது; என்பதை இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.

பிறைக்குழு கூடல்
————————-
பிறை 28 வியாழக்கிழமை சம்பிரதாயத்திற்கு மாற்றமாக, சிலவேளை பிறை தென்படலாம் என்ற அபிப்பிராயத்தைக் கருத்தில்கொண்டு பிறைக்குழு கூடியது. இரவு 7.30 வரை பிறைகண்டதாக எதுவித செய்தியும் அவர்களுக்கு கிடைக்காததால் அடுத்தநாள் வழமைபோல் கூடுகின்ற முடிவுடன் அவர்கள் கலைந்து சென்றார்கள்.

இங்கு கவனிக்க வேண்டியது, குர்ஆன், சுன்னா இங்கு மறுக்கப்படவில்லை. பிறை கண்டாலும் கவனத்திற்கொள்ளமாட்டோம்; என்ற நிலைப்பாட்டை பிறைக்குழு எடுக்கவில்லை. மாறாக, வழமையாக பிறை 29 இல் கூடுகின்ற பிறைக்குழு விசேட சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிறைகண்ட செய்தி கிடைத்தால் அதனைப் பரிசீலிப்பதற்கு பிறை 28 இல் கூடியிருக்கின்றது.

பிறைகண்ட செய்திபரவல்
———————————-
இரவு 9 மணியளவில் பிறைகண்ட செய்தி மெதுமெதுவாக சமூகவலைத்தளங்களில் பரவத்தொடங்கியது. இரவு பத்து மணியாகும்போது அது வைரலாக மாறியது. அதேநேரம் சில எதிர்க்கருத்துக்களும் உலாவந்தன.

குறித்த பிறை ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. அவ்வாறிருந்தும் ஏன் தாமதம்? சவூதியில் பிறைகண்ட செய்தி வெளியானதன்பின் இந்த பிறைகண்ட செய்தி ஏன் வெளிவருகின்றது? பிறைகண்டதாகக் கூறுகின்ற சில சகோதரர்களின் தகவல்களில் சில முரண்பாடுகள் இருக்கின்றன; என்ற எதிர்வாதங்களும் சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

மறுபுறம், பிறைகண்ட சகோதரர் ஒருவர் இறைவன்மீது சத்தியம் செய்து தான் கண்ட செய்தியை முன்வைத்த ஒளிப்பதிவுகளும் உலாவந்தன.

பிறைக்குழு மீண்டும் கூடல்
———————————-
இந்நிலையில் பிறைக்குழு இரவு பத்துமணிக்குப் பின் மீண்டும் கூடியது. பிறைகண்ட செய்திகளைப் பரிசீலித்து அதன் நம்பகத்தன்மைமையை நிரகரித்தது.
இங்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன. ஒன்று குர்ஆன், சுன்னா மறுக்கப்பட்டதா? என்பது. அடுத்து அவர்கள் பிறை கண்ட செய்தியின் நம்பகத்தன்மையை நிராகரித்தது சரியா? பிழையா? என்பது.

இங்கு குர்ஆன், சுன்னா? மறுக்கப்பட்டது; என்பது ஒரு ஏற்புடைய வாதமல்ல. ஏனெனில் பிறைக்குழு பிறைகண்ட செய்தியைப் பரிசீலித்தது. ஏற்றுக்கொள்வது, ஏற்றுக்கொள்ளாதது; என்பது தீர்ப்புக்கூறும் தன்மையுடன் ( judgemental) சம்பந்தப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கூறலும் குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் இருக்கவேண்டும்; என்பது ஏற்புடையது.

இங்கு கேள்வி என்னவென்றால் குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தங்களுக்கு கிடைத்த செய்தியை நிராகரித்தது சரியா? பிழையா? என்பதாகும். இது மீண்டும் judgemental, தீர்ப்புக்கூறல் என்ற கோட்பாட்டிற்குள்ளேயே செல்கின்றது.

இதன் சுருக்கம் என்றவென்றால் பிறைக்குழுவின் தீர்ப்பு/ முடிவு சரியா? பிழையா என்பதாகும். இது ஒவ்வொருவருடைய பார்வையையும் பொறுத்தது. ஒருவருக்கு சரியாகத்தெரியலாம். இன்னொருவருக்கு பிழையாகத் தெரியலாம்.

இன்னும் சொல்லப்போனால் ‘ பிறை கண்டதை பிறைக்குழு நிராகரிக்கவில்லை. நிராகரிக்கவும் முடியாது. அவ்வாறு நிராகரித்தால் அது நிச்சயமாக குர்ஆன், சுன்னாவுக்கு முரணானது. பிறைக்குழுவால் மாத்திரமல்ல. யாராலும் நிராகரிக்க முடியாது.’ பிறைக்குழு நிராகரித்தது ‘ பிறைகண்ட செய்தியின் நம்பகத்தன்மையையாகும்’.

இவை இரண்டிற்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது. Philosophy படித்தவர்களுக்குத் தெரியும், first order question, second order question, என்று கூறுவார்கள். முதலாவதற்கு நேரடி விடை இருக்கும். (Empirical answer). இரண்டாவதற்கு நேரடி விடை இருக்காது.

உதாரணமாக “ நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பது first order question. அதை ஏன் செய்ய வேண்டும்? என்று கேட்பது என்பது second order question. அல்லது 4ம் 3ம் எத்தனை? என்பது first order question. ஒருவர் ஏழு என்றும் ஒருவர் எட்டு என்றும் கூறமுடியாது. ஒரே விடைதான். What is good and bad? என்பது second order question. நல்லது என்றால் இதுதான். கெட்டது என்றால் இதுதான் என்று நேரடி விடைகொடுத்துவிட முடியாது. நல்லது என்றால் இதுதான் என்று ஒரு வரைவிலக்கணத்தை கொடுத்தால் அது ஏன் நல்லதாக இருக்க வேண்டும்? என்ற அடுத்த கேள்வி பிறக்கும்.

அதேபோன்றுதான் ‘பிறை கண்டதை யாரும் மறுக்க முடியாது’. உதாரணமாக வெள்ளிக்கிழமை கண்ட பிறையை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். பலர் பிறையை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். நேரடி அத்தாட்சி உள்ளது. வியாழன் கண்ட பிறை என்பதைவிட, கண்டதாக சொல்லப்பட்ட பிறைக்கு அவ்வாறு அத்தாட்சி இல்லை. கண்டதற்கான ஒரேயொரு அத்தாட்சி கண்டவர்களின் சாட்சியம் மட்டும்தான். எனவே இங்கு கண்டவர்களின் தனிப்பட்ட நம்பகத்தன்மை, கண்டதாக கூறப்படுகின்ற செய்திகளின் நம்பகத்தன்மை என்பனதான் இந்த அத்தாட்சிப் படுத்துதலுக்கு அடிப்படையாகும்.

அந்த நம்பகத்தன்மை ஒருவரின் பார்வையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். இன்னொருவரின் பார்வையில் நிராகரிக்கப்படவேண்டியதாக இருக்கலாம். இதை அத்தாட்சிப்படுத்துவதற்கு ஒவ்வொருவரும் நீதிபதியாக இருக்க முடியாது. ஒரு பொதுவான நீதிபதி தேவை. அந்த நீதிபதிதான் பிறைக்குழுவாகும். அந்த நீதிபதியான பிறைக்குழுவின் தீர்ப்பு சரியா? பிழையா? என்ற கேள்விக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அது சரியாகவும் இருக்கலாம். பிழையாகவும் இருக்கலாம்.

இந்நிலையில் பொதுமக்களாகிய நாம் என்ன நிலைப்பாட்டை எடுப்பது?
————————————————————-
இந்நிலையில் நாம் ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொரு ஜமாஅத்தும் நீதிபதிகளாக மாறி முடிவுகளை எடுத்து பலநாட்கள் பெருநாள் கொண்டாட முடியுமா? அது சரியா?

முஸ்லிம் நாடுகளில் வரலாற்று ரீதியாக இன்றுவரை ஆட்சியாளர்களே பிறையைத் தீர்மானிக்கிறார்கள்.
ஹஜ்ஜு என்பது அறபாவாகும். அறபா தினத்தை ஆட்சியாளர்களே தீர்மானிக்கின்றார்கள். சிலநேரம் அறபா தினம் பிழையாகத் தீர்மானிக்கப்பட்டால் நமது ஹஜ்ஜு கூடுமா? கூடாதா?

நிச்சயமாக கூடும். அவ்வாறு பிழைவிட்டால் அதன் குற்றம் ஆட்சியாளர்களைத்தான் சேரும். இலங்கை போன்ற இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் இந்தப் பிறைதினத்தை யார் தீர்மானிப்பது? பிறையைக் கண்டு, நோன்பை விடுங்கள் என்றுதான் சொல்லப்பட்டிருக்கின்றது; எனது அபிப்பிராயத்தில் பிறைகாணப்பட்டு விட்டது. எனவே நானும் எனது ஜமாஅத்தும் தனியாக பெருநாள் கொண்டாடப்போகிறோம்; என்று கூறமுடியுமா?

ஒரு தனிநபர் திட்டவட்டமாக பிறைகண்டால் அவர் நோன்பை விடலாம். அவரது பிறை கண்ட செய்தி ஆட்சியாளரால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஏனையவர்கள் நோன்பை விடமுடியாது. பிறைகண்டவர் நோன்பைவிட்டுவிட்டு காத்திருந்து அடுத்தநாள் எல்லோருடனும் சேரந்து பெருநாள் கொண்டாடவேண்டும். இதுதான் இஸ்லாம். ஆட்சியாளன் தவறுவிட்டால் இறைவனிடத்தில் குற்றவாளி அவனே!

முஸ்லிம் ஆட்சியாளன் இல்லாத நாட்டில் இந்தப் பணியை ஒவ்வொருவரும் செய்ய முடியாது? என்பதனால்தான் “ காதி” நியமிக்கப்படுகின்றார். அந்தக் காதிதான் இந்தப் பிறைக்குழுவாகும். அவர்களை யார் நியமித்தார்கள்? யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என்ற கேள்விகள் அர்த்தம் அற்றவை. ஏனெனில் பல தசாப்தங்களாக இந்தக் காதியை இந்நாட்டு முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சரியாக செயற்படவில்லையானால் எதிர்காலத்தில் மாற்றுத் தீர்மானங்களைப்பற்றி யோசிக்கலாம். அது வேறுவிடயம். அதற்காக பெருநாள் இன்றா, நாளையா என்ற நிலையில் ஒவ்வொரு ஜமாஅத்தும் காதிகளாக முடியாது.

தங்களின் பிழையான நிலைப்பாட்டை சந்தைப்படுத்துவதற்காக குர்ஆன், சுன்னா என்று மக்களை ஏமாற்ற முனையக்கூடாது.

பிறைகண்டால் மார்க்கத்தில் நோன்பு பிடிப்பது ஹறாம்தான். அது பிறைகண்டவருக்கு மட்டும் பொருந்தும். அவரின் பிறைகண்ட செய்தியின் நம்பகத்தன்மையை காதி ஏற்றுக்கொள்ளவில்லை; என்றால் மற்றவர்களைப் பொறுத்தவரை பிறை காணப்படவில்லை; என்பதுதான் நிலைப்பாடாகும். காதி பிழை விட்டிருந்தால் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டியவர்கள் அவர்களேதவிர நாம் அல்ல. நாம் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ‘தலைவர்களின் பிழையான உத்தரவுக்கு கட்டுப்படத் தேவையில்லை’ என்ற ஹதீஸ் இந்த சூழ்நிலைக்கானதல்ல. ஏனெனில் காதி பிழைவிட்டார் என்று காதியின் தீர்ப்பை திருத்துகின்ற மேல் நீதிமன்ற காதியாக நாம் நடக்க முடியாது.

தலைப்பிறை சாந்தமாமா
———————————
சிலர் முதல்நாள் பெருநாள் கொண்டாடியதை நியாயப்படுத்த இன்று கண்டது தலைப்பிறையல்ல. இரண்டாம் அல்லது மூன்றாம் பிறையாகும். எனவே நாம் நேற்று பெருநாள் கொண்டாடியது சரியாகும்; என்று ஒரு நியாயத்தை முன்வைக்கிறார்கள்.

இன்று குர்ஆன், சுன்னா என்ற பெயரில் தங்கள் சொந்த வியாக்கியானங்களை விற்பனை செய்பவர்களின் பல வியாபாரத் தந்திர உத்திகளுள் இதுவும் ஒன்று. அறியாத்தனமாக சில அப்பாவிகளும் அள்ளுப்பட்டு விடுகிறார்கள். தலைப் பிறையன்று நோன்பு பிடியுங்கள் அல்லது பெருநாள் கொண்டாடுங்கள் என்று எங்காவது கூறப்பட்டிருக்கின்றதா? அல்லது நாம் மார்க்க முறைப்படி காணுகின்ற பிறைதான் நமக்குத் தலைப்பிறையா?

முதல் மாத ( சஹ்பான்) 29 அன்று பிறை பாருங்கள். மழை மேகங்கள் மறைத்தால் முப்பதாக்குங்கள்; என்பதுதான் மார்க்கம். அவ்வாறு 30 ஆக்கும்போது அடுத்த மாதத்து ( ரமளான் )நமது தலைப்பிறை இரண்டாம் பிறையாக இருக்கலாம். சிலவேளை அடுத்தமாதமும் ( ரமளான்) மழை முகில் மறைத்து 30 ஆக்கினால் ஷவ்வால் தலைப்பிறை மூன்றாம் பிறையாக இருக்கலாம். இதிலென்ன பிரச்சினை.

மார்க்கம் சொன்னபடி நாம் பிறை காணும்போது சாந்தமாமா இருந்தாலென்ன? சந்தணக்கட்ட இருந்தால் என்ன?

எனவே, அன்புள்ள சகோதரர்களே! வேண்டுமானால் சமூகத்தலைவர்கள் ஒன்று சேர்ந்த்து முஸ்லிம் விவகார அமைச்சினூடாகவோ அல்லது வேறு முறை மூலமாகவோ ஒரு சுயாதீன குழுவை அமைத்து இம்முறை பிறைக்குழு செயற்பட்டது சரியா? பிழையா என ஒரு விசாரணையை நடாத்தி எதிர்காலத்தில் செயல்பட வேண்டிய முறைக்கான சிபாரிசுகளை முன்வைக்கலாம். ஆனால் ஒவ்வொரு பெருநாள் ஓரத்திலும் இவ்வாறு நாங்கள் பிழவுபட்டு அந்நியர்வர்கள் கைகொட்டிச் சிரிக்குமளவு நடந்துகொள்ள வேண்டாம்.

இதனால்தான் நம்மை, அடிப்படை முஸ்லிம் என்றும் சம்பிரதாய முஸ்லிம் என்றும் தீவிரவாத முஸ்லிம் என்றும் இனவாதிகள் கூறுபோட்டு ஊடுருவ முயற்சிக்கின்றார்கள்.

நமது நாட்டில் சில இயக்கவாதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஜம்மிய்யாவுடனோ, பிறைக்குழுவுடனோ ஒருபோதும் ஒத்துப்போவதில்லை. அவர்கள் சமூக பிரதான நீரோட்டத்தில் கலந்துகொள்ளாமல் எப்போதும் தனிவழி செல்பவர்கள். இப்பிரச்சினை வராமல் இருந்திருந்தாலும் அவர்கள் தனிவழிதான் சென்றிருப்பார்கள். ஆனால் இம்முறை இக்குழப்பநிலை அவர்களுக்கு வாசியாகிவிட்டது. சில அப்பாவிகளும் அவர்களுடன் அள்ளுப்பட்டுச் சென்றுவிட்டார்கள். நமது உள்ளூர் பாசையில் சொல்வதாதாக இருந்தால், அந்த இயக்கக்காரர்களுக்கு இம்முறை “ சூடு நல்ல பொலிப்பு”.

எதிர்காலத்திலாவது சமூகத்தின் ஒற்றுமையைப் பேணுவோம். நாம் நோற்ற நோன்பை வல்ல இறைவன் கபூல் செய்வானாக! நமது பாவங்களை மன்னிப்பானாக! இந்த புனித ரமளானில் அவன் நரக விடுதலை வழங்கிய இலட்சோச இலட்சம் மக்களில் நம்மையும் சேர்த்துவைப்பானாக. அடுத்த பெருநாட்களை பிழவு இல்லாமல் கொண்டாடும் பாக்கியத்தைத் தருவானாக.

ஆமீன்.

பிறைக் குழப்பமும் முஸ்லிம்களும். பிறைக் குழப்பமும் முஸ்லிம்களும். Reviewed by Madawala News on June 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.