திட்டமிட்டு திருடப்படும் முஸ்லிம்களின் காணியும் சுய நல சமூகமும்.



செவிப்பறையைப் பிய்த்து விடுமளவிற்கு அலார மணியடித்தும் சுகமான மெத்தையில் சயனித்திருக்கும்
இந்த சமூகத்திடம் நீதி நியாயங்களை எத்தனை தூரம் எடுத்துச் சொல்வது?

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் 40 கட்டையில் தனக்குச் சொந்தமான காணிக்கு வேலியமைக்கச் சென்ற முஸ்லிம் காணி உரிமையாளரையும் அவரது சகாக்களையும்  சில தமிழ் இனவாதிகள் கடுமையான அடித்து விரட்டியிருக்கிறார்கள்.

காணியைச் சுற்றிப் போடப்பட்ட தகரத்தை பிய்த்தெறிந்து, கட்டைகளால் அடித்து,மோட்டார் வாகனங்களை சேதப்படுத்தி ஒரு களேபரமே நடந்திருக்கின்றது. தாக்கப்பட்டவர்களில் சிலர் கல்முனை வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

காரணம் தமிழர்களின் பிரதேசத்தில் சோனி நீ காணி வாங்குவதா?

அப்பட்டமான கடைந்தெடுத்த இனவாதத்திற்கு இதைவிட வேறு நல்ல உதாரணத்தை கூற முடியாது.

இதற்கு உடந்தையாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளரும் இருந்திருக்கிறார் என நம்பகமான செய்திகள் சொல்கின்றன.

அக்கரைப்பற்றின் நாலா பக்கங்களிலும் தமிழர்களின் பிரதேசங்களில் முஸ்லிம்களின் நிலங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இந்த நிலங்களிலிருந்து முஸ்லீம்களை விரட்டுவதற்கான பிரயத்தனங்கள் தமிழ் இனவாதிகளால் எடுக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.அந்த அடிப்படையில்தான் இந்த சம்பவம் பார்க்கப்படவேண்டும்.முஸ்லீம்களின் காணிகளை அபரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தச் சம்பவம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நடந்தேறியிருக்கிறது.முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் பிரதேசத்தில் கூட இதனைக் கட்டுப்படுத்தும் திராணி எமக்கில்லை என்றால் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பிரதேசங்களில் எமது நிலங்களின் நிலையை சொல்லத் தேவை இல்லை.

இதில் வேதனையும் வெட்கமும் கொள்ள வேண்டிய விடயம் இது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே.

அடித்தவர்கள்,தூண்டியவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு இரண்டு பெண்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள் பொலீசார்.

இதுதான் பொலிஸாரின் தந்திரம்.பெண்களைக் கைது செய்து சமர்ப்பித்தால் பெண்கள் என்ற அடிப்படையில் பிணை கிடைக்கும்.அதன் பிறகு ஆண்களை கொண்டுவந்தால் பெண்களுக்குப் பிணை கிடைத்ததைச் சொல்லி ஆண்களுக்கும் பிணை எடுத்துவிடலாம்.

பிடிபட்டவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது  ,இந்த நிகழ்வை ஒரு இனவாதச் செயற்பாடாகப் பார்க்கவேண்டும் என்று  சட்டத்தரணி றதீப் அஹமட் வாதாடியும்  இப்பிரச்சினை இரண்டு குழுக்களுக்கிடையிலான காணிப்பிரச்சினையே ஒழிய இனவாதப்பிரச்சின அல்ல என்று நீதிபதி கூறி கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பிணை கொடுத்திருக்கிறார்.

இனியென்ன.பிடிபடும் அனைவரும் பிணையில் வெளிவருவார்கள். நூற்றோடு நூற்றி ஒன்றாக இந்த வழக்கும் இனி ஆகிவிடும்.பிணை கிடைக்கும் என்ற தைரியத்தில் இன்னும் பிழைகள் செய்வார்கள் அவர்கள்.

இங்குதான் எமது சமூகம் தவறிழைக்கிறது.ஒரு சமுகப் பிரச்சினையை இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த பிரச்சினையாக இதைக் குறுக்கிய குற்றத்தை எமது சமூகமே இழைக்கின்றது.

இவ்வாறான சம்பவங்களின் போது முழு சமூகமும் தனது எதிர்ப்பைக்காட்டவேண்டும்.பிணைவழங்குவது நீதிபதியின் அதிகாரத்திற்குட்பட்ட விடயம்.ஒரு நீதிபதி நடந்தேறிய குற்றம் சம்பந்தமாக ஒரு சமூக அழுத்தம் இல்லாதிருந்தால் இலகுவாக பிணை வழங்கிவிடுவார்.

குற்றவாளிகளை வெளியேவிடுவது ஆபத்து.சமூகம் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது,அவர்களை வெளியே விடுவது பல பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிபதி உணர்ந்தால்தான் பிணையை அவர் மறுப்பார்.

அதனை உணர்த்தும் கடமை சமூகத்திற்குரியது.

அந்த சமூகம் இப்படியான விடயங்களில் கொந்தளிக்காவிட்டால் இது ஒரு வெற்று வளவுச் சண்டையாகப் பொலீசாராலும் நீதிமன்றத்தாலும் பார்க்கப்பட்டுவிடும்.சமுகம் கொந்தளிக்க வேண்டும் என்பது தமிழர்களின் கடைகளைப் போட்டு உடைப்பதோ அவர்களைத் தாக்குவதோ அல்ல.முழுச் சமூகமும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்திற்கும் பொலீசாருக்கும் அழுத்தம் கொடுப்பது.

கைது செய்யப்பட்டவர்களைக் கொண்டு வரும்போது நீதி மன்ற முன்றலில் நடாத்தும் கவனயீர்ப்புப் போராட்டம்,அனைத்து முஸ்லிம் சட்டத்தரணிகளும் இந்த  வழக்கிற்காக எழுவது,நீதமான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது,காடையர்களைக் கைது செய்யும்படி பொலீசாருக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற செயற்பாடுகள் நீதிமன்றத்தை பிணை கொடுப்பதில் இருந்து தடுத்துவிடும்.அக்கரைப்பற்று மாநகர சபை இதில் தலையிட்டு பொலீசாருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.மாநகர சபை உறுப்பினர்கள் வீதிக்கு வந்திருக்க வேண்டும்.இப்படித்தான் ஒரு சமுகப்பிரச்சினையை ஒரு சமூகமாக எதிர்கொள்வது.

ஆனால் எதுவுமே நடக்காததுபோல் இருப்பதும்,இது எனது கட்சிக்காரன் அல்ல ஆகவே எனது பிரச்சினை அல்ல என்பதும்,எனக்கு இப்போது பதவி இல்லை ஆகவே நான் எதுவும் செய்யமாட்டேன் என்பதும்,இது எனது காணியல்ல எனக்கேன் வம்பு என்றிருப்பதும்,எல்லாவற்றிற்கும் பயந்து நடுங்கும் இந்தக் கோழைத்தனங்கள்தான் இனவாதிகள் எம்மீது அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கான காரணங்கள்.

இந்த சுயனலம்தான் எம்மை அழித்துவிடப்போகிறது.

ஒரு சமூகப் பிரச்சினையை சமூகமாக எதிர்கொள்ளுங்கள்.

இனி கைது செய்யப்படப்போபவர்களையாவது பிணை கொடுக்க விடாமல் ஒரு சமூகமாக நின்று ஒற்றுமையாகப் போராடுங்கள்.

ராஸி முகம்மத் ஜாபிர் ( குரல் அமைப்பு)
திட்டமிட்டு திருடப்படும் முஸ்லிம்களின் காணியும் சுய நல சமூகமும். திட்டமிட்டு திருடப்படும் முஸ்லிம்களின் காணியும் சுய நல சமூகமும். Reviewed by nafees on June 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.