சிறைச்சாலையில் ஞானசார தேரரின் காவியுடை நீக்கம் சட்டத்திற்கு புறம்பானதா?


நீதி என்பதே, நீதி தான் என அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதை நாம் ஆரம்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.


இனவாதத்திற்கு எதிராக நல்லாட்சியை கொண்டு வருவோம் என்று களம் இறங்கிய மைத்திரி - ரனில் கூட்டணி முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளின் வித்தியாசத்தில் ஆட்சியமைத்தது.

எங்களுக்கு எதுவும் வேண்டாம். நிம்மதி மட்டுமே வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் முஸ்லிம்கள் தமது வாக்குகளை இந்த ஆட்சியமைய வழங்கினார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்  துன்பங்களை அனுபவித்ததில் முஸ்லிம்களே முதன்மை சமுதாயமாக இருந்தார்கள்.

சுமார் 22க்கும் மேற்பட்ட பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மஹியங்கனை, மற்றும் கிரான்பாஸ் மோலவத்தை பள்ளி ஆகியவை இழுத்து மூடப்பட்டன.  அளுத்கமை பகுதியில் பெரும் கலவரம் நடைபெற்று கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை முஸ்லிம்கள் இழந்ததுடன் இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

பொது பல சேனாவும் இடை விடாது படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. 

இந்நிலையில் தான் முஸ்லிம்களின் வாக்குகள் எவ்வித பிரச்சாரமோ, தலைவர்களின் பங்களிப்போ இல்லாமல் சுயமாகவே பொது வேட்பாளர் மைத்திரி பக்கம் திரும்பியது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது பல சேனாவினரை நாய்க் கூண்டில் அடைப்போம் என்று சப்பை சவடால் விட்டார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா.

ஆனால், இதுவரை இனவாதம் ஓயவும் இல்லை. நடவடிக்கைகள் எடுக்கப்படவும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடுகள் கொடுக்கப்படவும் இல்லை. 

இதற்கு பதிலாக மஹிந்தவை மிஞ்சும் விதமாக போட்டி போட்டு இனவாதம் வளர்ந்தது. அரசும் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது. 

மஹிந்தவின் ஆட்சியில் அளுத்கமை பகுதியில் கலவரம் வெடித்தது.

இவர்களின் ஆட்சியிலோ..... 

(காலி) ஜின்தொட்டையில் கலவரம்,

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்,

திகன உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் பெரும் பகுதியில் வரலாறு காணாத கலவரம் என தங்களின் நல்லாட்சி (?) யின் பரிசை முஸ்லிம்களுக்கு வழங்கினார்கள்.

மஹிந்தவின் ஆட்சியில் 22க்கும் மேற்பட்ட பள்ளிகள் உடைக்கப்பட்டது. 

நல்லாட்சியில் (?) கண்டி கலவரத்தில் மாத்திரம் சுமார் 25 பள்ளிகள் தாக்கப்பட்டது. 

மஹிந்த காலத்தில் மூடிய பள்ளிகள் இன்றும் மூடப்பட்டுத் தான் கிடக்கிறதே ஒழிய ஒரு கதவு கூட திறக்கப்பட வில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தம்புள்ளை பள்ளிக்கு தீர்வு வரும் என்றார்கள்... இன்னும் அது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.

மூடப்பட்ட மஹியங்கனை, கிரான்பாஸ் பள்ளிகள் இன்றும் மூடப்பட்டே கிடக்கிறது. இந்நிலையில் தான் தொடர்ந்தும் நல்லாட்சிக் (?) கோஷத்தை இவர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிராக பல தாக்குதல் சம்பவங்களில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு இந்த அரசாங்கம் பொறுப்புக்கு வந்து இதுகால வரையில் எவ்விதமான தண்டனைகளும் வழங்கப்பட வில்லை. மாறாக உலமா சபை, முஸ்லிம் கவுன்சில் போன்ற லெட்டர் பேட் இயக்கங்கள் அவருடன் சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் முஸ்லிம் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் பேச்சுவார்த்தைகளிலும் ரகசியமாக கடந்த காலங்களில் ஈடுபட்டு அது வெளிச்சத்திற்கு வந்ததும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் தான் ஞானசார தேரர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அதன் தீர்பும் வழங்கப்பட்டு ஞானசார தேரர் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்த வழக்கிலேயே ஞானசார தேரருக்கு இந்த சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

சட்டம் அனைவருக்கும் சமனானது நாம் யாருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டோம் என்று அடிக்கடி மைக் முன்னால் பேசும் இவ்வரசாங்கத்தின் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஞானசார தேரருக்கான தண்டனை விவகாரத்தில் மாத்திரம் தற்போது பம்ம ஆரம்பித்திருப்பது ஏன்?

எங்கே போனது நீதி மன்ற ஏகாதிபத்தியம்?

எங்கே உங்கள் நீதி? நியாயம்?

எங்கே போனது நல்லாட்சி (?)

ஞானசார தேரருக்கான தண்டனை என்பது முஸ்லிம்கள் பற்றிய வழக்கில் வழங்கப்பட்ட ஒன்றல்ல என்பது அனைவருக்கும் தெரியும். 

இதனால் முஸ்லிம்கள் ஆருதல் அடைவதற்கும் ஒன்றுமில்லை. காரணம் நாங்கள் வேண்டும் நீதி இன்னும் கிடைக்க வில்லை. 

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதற்கு சமானமான நிலையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்கள் பற்றிய வழக்குகளின் விபரங்கள் காணப்படுகின்றன. 

காவி உடை கழையப்பட வேண்டும் என்பது சட்ட விதிக்கமைவானதா?
----------------

நீதி மன்றத்தின் தீர்ப்புத் தான் இறுதியானது என்றால் ஞானசாரருக்கு வழங்கப்பட்ட தீர்பில் அரசாங்கம் ஆதங்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறதே?

சிறை சாலையின் சட்ட விதிகளை தனி ஒருவருக்காக தளர்த்துவதா?

ஞானசாரர் ஒரு தேரர் என்பதினால் அவருக்கு சிறைசாலை ஆடை வழங்கப்படாமல், காவி உடையுடனேயே அவர் சிறையிலிருக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது முன்வைக்கப்படுகிறது. 

இது தனி ஒரு மனிதனுக்காக சட்டத்தினை வலைக்க முற்படும் கோரிக்கையாகும். இதற்கு முன்னால் தண்டனை பெற்ற எத்தனையோ மத குருக்களும் அவர்களின் உடை கழையப்பட்டு சிறைச் சாலை சீறுடை தான் அணிவிக்கப்பட்டார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

முன்னால் பிரதமர் SWRD பண்டாரநாயக்க அவர்கள் 1959 செப்டம்பர் 25ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும் அடக்கம்.

இதில் ஒருவரான தல்துவே சோமாராம தேரருக்கு 1962 – 07ம் மாதம் 06ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவருடன் இணைந்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த களனிய ரஜமஹா விகாரையின் விகாராதிபதியாக இருந்த மாபிட்டிகம புத்தரகித்த தேரர் தண்டனை காலத்திலேயே சிறையில் மரணமடைந்தார். இவர்களும் காவி உடை நீக்கப்பட்டு சிறைச் சாலை சீறுடையிலேயே சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்.

அதே போல் கடந்த மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா அவர்களும் சிறைச் சாலை சீறுடை அணிவிக்கப்பட்டே தண்டனை அனுபவித்து வருகிறார். இப்படி மத குருக்கள் பலரும் சிறைச் சாலை சீறுடை அணிந்து தண்டனை பெரும் நிலையில் ஞானசாரருக்கு மாத்திரம் தனிச் சிறப்புச் சட்டம் வழங்க கோருவது எந்த வகை நியாயம்?

நீதி அமைச்சரின் பாராட்டத்தக்க பதில்.
-----------------

காவி உடை நீக்கப்பட்டு ஞானசாரருக்கு சிறைச்சாலை சீறுடை வழங்கப்பட்டமை நாட்டு சட்டத்திற்குட்பட்டு சரியானது என்று நீதியமைச்சர் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளமை இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நீதி மன்றம் ஊடாக குற்றவாளியாக கருதப்பட்டு தண்டனை விதிக்கப்படும் எவரும் சிறைச்சாலைகள் சட்டத்தின் கீழ் சமமாகவே கருதப்படுவதாகவும், சிறைச்சாலை சட்டத்தின் 106 ஆவது அத்தியாயத்துக்கு அமைய அவர்களுக்கு அங்கு சிறைச்சாலை சீருடையே அணிவிக்கப்படும் எனவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். தேரர் ஒருவரின் காவி உடையை அகற்றும் உரிமை, அத்தேரர் உப சம்பதா பெற்ற சங்க சபைக்கே உரியது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால், அது சாதாரணமாக மத ரீதியிலான அங்கீகாரமே தவிர நாட்டின் சட்டம் அல்ல எனவும், நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-ரஸ்மின் MISc
சிறைச்சாலையில் ஞானசார தேரரின் காவியுடை நீக்கம் சட்டத்திற்கு புறம்பானதா?  சிறைச்சாலையில் ஞானசார தேரரின் காவியுடை நீக்கம் சட்டத்திற்கு புறம்பானதா? Reviewed by Madawala News on June 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.