அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சிறைத் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார். எனினும் இதற்கு முன்னரும் பௌத்த தேரர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.  சட்டத்தினூடாக வழங்கப்படுகின்ற தீர்ப்பு குறித்து எதுவும் கூற முடியாது.

அத்துடன் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தற்போது சிறைச்சாலைகளில் 15 பௌத்த தேரர்களும் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் 03 பேருமாக மொத்தம் 18 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில்  மிகவும் பாரிய குற்றங்கள் இழைத்து தண்டனை பெற்றுள்ள பௌத்த தேரர்களும் இருக்கின்றனர்.  

அத்துடன் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினால்  சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏனைய பௌத்த தேரர்கள் மற்றும் பிற மத குருமார்களும் பொது மன்னிப்பு வழங்குமாறு  கோரிக்கை விடுக்கும் நிலமை ஏற்படும் என்றார்.