இளம் தலைமுறையினரை காவு கொள்ளும் போதைப் பொருள் பாவனை!


-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
(போதை வஸ்து பாவனை ஒழிப்பு   தொடர்பான – தேசிய ஷூரா சபை அங்கத்துவ அமைப்புகளுடனும்
ஏனைய தேசிய அமைப்புகளுடனும் இணைந்து மேற்கொள்ள உத்தேசித்துள்ள– தேசிய வேலைத் திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்து ஆற்றிய எனது உரை இங்கு சற்று விரிவாக தரப்படுகிறது)

இன்று இலங்கை மக்கள் எதிர் நோக்கியுள்ள மிகப் பெறும் சவாலாக போதைப் பொருள் பாவனை மாறி வருகிறது, தினமும் 45 கோடி ரூபாய்கள் போதைபொருள் பாவனைக்காக செலவிடப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் சுமார் 300,000 (இதன் இரண்டு மடங்கு எனவும் சில தரவுகள் தெரிவிக்கின்றன) பேர் போதை வஸ்துகளிற்கு அடிமையாகியுள்ளதாகவும் வருடாந்தம் சுமார் 2500 பேரளவில் புனர்வாழ்வு மையங்களில் வதிவிட சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப் படுவதாகவும், ஏனையோர் வருகை தந்தும் இரகசியமாகவும் சிகிச்சை பெறுவதாகவும், அதிகமானோர் சிகிச்சை பெறாமலே இரகசியமாக போதை பழக்கத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

போதைப் பொருள் கட்டுப்பட்டு திணைக்கள தரவுகளின் படி 2016 ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பான  குற்றச் செயல்களில் கைதானோர் தொகை சுமார் 80,000 பேர்கள், அவர்களில் 35%  வீதத்தினர் ஹெரோயின் வைத்திருந்தத்தாகவும், 60% (சுமார் 48,000) கஞ்சா தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக மேல் மாகாணத்தில் 60% வீதத்தினரும் கொழும்பில் 43%   வீத்த்தினரும் கைதாகியுள்ளனர், சனத்தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு சுமார் 250 நபர்கள் கைதாகும் நிலையில் அதுபோன்று எத்தனை விகிதத்தினர் கைதாகாமல் தப்பித்துக் கொள்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

1970 களிற்கு முன்னர் இலங்கையில் ஹெரோயின் அறிமுகமாகி இருக்கவில்லை சுற்றுலா பயணிகளின் வருகையோடு அறிமுகமாகி  1980 களில் நகர்ப்புறங்களில் அறிமுகமாகியது, இலங்கையில் இன்று சுமார் 45,000 நபர்கள் ஹெரோயின் போதைப் பொருளிற்கு அடிமையாகியுள்ளதாக மதிப்பிடப் படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக மீன்பிடி படகுகள் மூலம் கடத்தப் படும் ஹெரோயின் வருடாந்தம் சுமார் 1500  கிலோ கிராமளவில் தெருக்களில் விற்பனை செய்யப்படுவதாக மதிப்பிடப் படுகிறது. 2016  ஆண்டு ஹிரோயின் கடத்தலில் ஈடுபட்ட சுமார் 27500 நபர்கள் கைதாகியுள்ளனர்.

ஹெரோயின் ஒரு கிலோவின் விலை சுமார் ஒன்பது தொடக்கம் பத்து மில்லியன் வரையில் இருப்பதாகவும் (60,000 அமெரிக்க டாலர்கள்) ஒருகிலோ இலங்கை கஞ்சாவின் விலை சுமார் 22,000 ரூபாகவும், ஒருகிலோ கேரளா கஞ்சாவின் விலை சுமார் 125,000  ஒரு கிலோ அபினின் விலை 1.500.000 (1000 அமெரிக்க டாலர்கள்) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சட்டவிரோதமாக சுமார் 500  ஹெக்டயார் நிலப்பரப்பில் கிழக்கு வடகிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கஞ்சா பயிரிடப்படுவதாகவும் கேரளாவிலிருந்து கடத்தப்படும் கஞ்சா பிரசித்தமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது,  2016 ஆம் ஆண்டு சுற்றிவளைப்புகளில் சுமார் 5000  கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாதவிடத்து அல்லது அவற்றிற்கு தட்டுப்பாடு நிலவும் பொழுது போதை தரும் மருந்து மாத்திரை வகைகளை துஷ்பிரயோகம் செய்யும் பழக்கம் கடந்த ஓரிரு வருடங்களாக தோற்றம் பெற்று வருவது அவதானிக்கப்பட்டுள்ளது, 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றி வலைப்புகளின் பொழுது “டிரமடோல்” வில்லைகளை வைத்திருந்தோர் கையோது செய்யப்பட்டுள்ளனர், அதே போன்று நாட்டின் பல பாகங்களிலும் அவ்வாறான மருந்து வில்லைகளை சந்தைப் படுத்துவோர் கைதாகியுள்ளனர், கொழும்பு கம்பஹா போன்ற பகுதிகளிலேயே அதிகமானோர் கைதாகியுள்ளனர்.

போதை வஸ்துகள் தொடர்பான கைதுகள் குறித்து 2012 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் படி இலங்கை சனத்தொகையில் ஒரு மில்லியன் பேரிற்கு இனரீதியாக  சிங்களவர் 476,  தமிழர் 204, முஸ்லிம்கள்  333,  மலாயர் 270,  பர்கர் 261 கைது செய்யப்பட்டுள்ளனராம். இதில் சோனகர் மலாயர் என அழைக்கப் படும் முஸ்லிம்களின் தொகை சுமார் 600 நபர்கள் என்றால் துரதிட்ட வசமாக குறிப்பாக கொழும்பு கம்பஹா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களை விஞ்சுகின்ற அளவிற்கு மேற்படி குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருக்கின்றமை தெரிய வருகிறது.

போதை வஸ்து பாவனைகளை குற்றச் செயல்களைப் பொறுத்தவரை பெரும்பாலனவர்கள் 5 ஆம்  7 ஆம் வகுப்புடன் பாடசாலைக் கல்வியை இடை நிறுத்தியவர்கள், தாய் அல்லது தந்தை வெளிநாடுகளில் உள்ளவர்கள் அல்லது பெற்றார்கள் விவாக ரத்து செய்து கொண்டவர்கள் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் இடம்பெறுகின்ற பாதாள உலக சட்ட விரோத கடத்தல் வர்த்தகத்தில் ஆயுதக் கடத்தல் ஆட்கடத்தல் என்பவை போன்று போதைவஸ்துகளின் கடத்தலும் பிரதானமான ஒரு வர்த்தகமாக மாறியுள்ளது, குறுகிய காலத்திற்குள் பணம்படைத்த செல்வந்தர்களாக குபேரர்களாக மாறும் இவர்கள் காலவோட்டத்தில் தத்தமது தேசங்களில் செல்வாக்குமிக்க அரசியல் வாதிகளோடும், அதிகாரிகளோடும், பாதுகாப்புத் தரப்பினரோடும் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றமை, மற்றும் தாமாகவே அரசியலில் ஈடுபடுகின்றமை போதைப் பொருள் பாவனை ஒழிப்பினை ஒரு சிரமசாத்தியமான காரியமாகவே மாற்றிவிட்டுள்ளது.

“ஓபியம்” ஹெரோயின் உற்பத்தியில் பிரசித்தமடைந்துள்ள  “தங்கத் திரிகோணம்” என அழைக்கப்படும் மியன்மார் தாய்லாந்து லாவோஸ்   பிராந்தியத்தில் இருந்தும் இன்று உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் உலகின் பல பல பாகங்களிற்கும் கடத்தல் செய்யப்படும் மத்திய நிலையமாக இலங்கை இனம் காணப்பட்டுள்ளது,

எந்தவொரு வியாபாரத்திற்கும் அதற்குரிய சந்தைகள் ஏற்படுத்தப் படுவது கட்டாயமாகும், அதேபோன்று காலவோட்டத்தில் அதில் ஈடுபடுகின்றவர்கள் தொகையும் அதிகரித்துச் செல்கின்றமையும் யதார்த்தமான விடயமாகும், அந்த வகையில் போதை வச்துகளிச் சந்தைப் படுத்துவோர் குறிப்பாக கட்டிளம் பருவத்தில் உள்ள பதின்ம வயதினரையே இலக்கு வைக்கின்றனர்.

ஆரம்ப களங்களில் புகைத்தல் பழக்கம், மது பாவனை,  கஞ்சா, அபின் போன்ற பழக்கங்கள் இவ்வாறுதான் அறிமுகம் செய்யப்பட்டது தீய நண்பர்களூடாக ஏற்படும் பழக்க வழக்கங்களிற்கு அப்பால் தற்பொழுது தம்மை குறி வைத்து போதை பாவனையில் சிக்க வைத்து  நுகர்வோரை வாடிக்கையாளர்களை உருவாக்கிக் கொள்ள வேட்டையாடித் திரியும் இளம் வயதினரும் அப்பாவி பதின்ம வயதினரை காவு கொள்கின்றனர்.

குறிப்பாக பதின்ம வயதினர் பாடசாலை பருவத்தில் இருப்பவர்கள் ஆதலால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விதவிதமான வழிவகைகளில் போதைப் பழக்கங்களை அறிமுகப் படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளன, மென்பானங்கள், இனிப்பு வகைகள், டொபி, சாக்கலேட் போன்றவை, ஸ்டிக்கர் வகைகள், சிகரட் வகைகள் மருந்து மாத்திரைகள் என பல்வேறு வடிவங்களில் மாணவர்கள் போதைப் பழக்க வழக்கங்களிற்கு அடிமைகளாக்கப் படுகின்றனர்.

போதையற்ற தேசம் ஜனாதிபதி செயலணி இலங்கையில் பாடசாலைகளில் 2016 மேற்கொண்ட கணிப்பீட்டின் படி சுமார் 13%   வீதமான பாடசாலை மாணவர்கள் ஏதேனுமொரு போதை பாவனையில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு, தேசிய புகையிலை மற்றும் அல்கொஹோல் அதிகாரசபை, மருத்துவ சபை ஆகியவற்றின் தரவுகள் மூலம் அறிய வந்துள்ளதாகவும்  தெரிவித்தது.

இலங்கை பொலிஸ் திணைக்கள போதைவஸ்து ஒழிப்பு பிரிவின் தகவலின் படி போதைவஸ்து பாவனை பல பாரிய குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு காரணமாகிறது, உரிய வேளைக்கு தமது பாவனைக்கு போதை வஸ்துவினை கொள்வனவு செய்ய பணம் இல்லாத பொழுது திருட்டு, கொள்ளையிடல், மிரட்டிப் பணம் பறித்தல் வீட்டில் வன்முறைகளை மேற்கொள்ளுதல், கொலைகளை செய்தல் என பல குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றமை முறைப்பாடுகளில் இருந்து தெரியவந்துள்ளதாம், அதேவேளை பல குடும்பத்தினர் விடயங்கள் வெளிவருவதனை விரும்புவதில்லையாதலால் முறையீடுகளை செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்கின்றனர், அதேபோன்றே போதை வஸ்து பாவனைகளில் உள்ளோர் பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருக்கின்றமை கடந்த காலங்களில் ஊடகங்கள் வாயிலாக அறிய வந்துள்ளது.

இன்று இன்டர்நெட் சமூக வலைதளங்கள் ஊடாக பதின்ம வயதினர் தமக்கு அறிமுகமில்லாத நண்பர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்கின்றார்கள், இலங்கையில் சுற்றுலாத் துறையும் ஊக்குவிக்கப் படுகின்றது இந்த நிலையில் பதின்ம வயதினரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோர் பாதுகாவலரினதும் கடமையாகும்.

பாடசாலை நேரங்களில் மாத்திரமல்லாது பிரத்தியேக வகுப்புகளிற்கு செல்கின்ற மாணவர்கள் விடயத்திலும் அவர்களது நட்பு வட்டங்கள் விடயத்திலும் வீட்டில் அவர்களது நடத்தைகள் குறித்தும் பெற்றார் பாதுகாவலர் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். அவர்களது நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படின் உடனடியாகவே அவர்கள் விடயத்தில் கரிசனை கொள்ளுதல் வேண்டும்.

உதாரணமாக அதிகமாக தனிமையில் இருப்பின், சோர்வடைந்து காணப்படின், வேளாவேளை உணவு உற்கொள்ளாதிருத்தல், அதிக நேரம் குளியலறையில் மலசலகூடங்களில் இருப்பின், உயர்தொணியில் இசை கேட்க ஆர்ம்பித்தல், முன்கோபம் கொள்தல், சீறிப் பாய்தல், மௌனித்துப் போதல், நீண்ட நேரம் நித்திரை கொள்தல், அல்லது இரவு நித்திரையின்றி அவஸ்தைப் படல், நீண்ட நேரம் நீராடுதல் என வழமைக்கு மாற்றமான நடத்தைகள் அவதானிக்கப் படின் உடனடியாகவே உரிய உளவள ஆலோசனைகளைப் பெற்று போதைப் பழக்க வழக்கங்கள் அல்லது மன அழுத்தங்கள் இருக்கின்றனவா என்று கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடரும்….
இளம் தலைமுறையினரை காவு கொள்ளும் போதைப் பொருள் பாவனை! இளம் தலைமுறையினரை காவு கொள்ளும் போதைப் பொருள் பாவனை! Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5