முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை நாம் முழுமையாக எதிர்ப்போம். ஆர்பாட்டத்தில் அய்யூப் அஸ்மின்.


யாழ்ப்பாண முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை நாம்
முழுமையாக எதிர்ப்போம், இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அ.அஸ்மின் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் ஜின்னா வீதியில் அமைந்துள்ள ஹலீமா ஒழுங்கையில் குளோபள் டிரேடிங் குரூப் என்னும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்படும் ஹோட்டல் மற்றும் விடுதிக்கான கட்டிட நிர்மானத்திற்கு எதிராக குறித்த பிரதேச மக்கள் இன்றைய தினம் (12-05-2018) சனிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தார்கள். அம்மக்களின் அழைப்பின்பேரில் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்தார்.

அத்தோடு குறித்த விடயத்தினை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளிடமும், யாழ் மாநகரசபை அதிகாரிகளிடமும் எடுத்துறைத்ததோடு மேற்படி நிர்மானப்பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி, இதுகுறித்து முழுமையான சட்டரீதியான விடயங்களை மீளாய்வு செய்வதோடு இப்பிரதேச மக்களின் கருத்துக்களையும் அறிந்து குறித்த அனுமதியினை இரத்து செய்தல் தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கமைவாக உடனடியாக யாழ் மாநகரசபையின் பிரதம பொறியியலாளர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்ததோடு நிலைமைகளை நேரில் கண்டறிதுகொண்டார். சட்டரீதியான ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து துரிதமாக அறிக்கையொன்றினை யாழ் மாநகரசபைக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்படி விடயத்தில் மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கையெடுப்பதாகவும், அதனடிப்படையில் இவ்வனுமதியினை இரத்து செய்தல் தொடர்பில் ஆராய்வதாகவும் உறுதியளித்தனர்.

இதன்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள்; யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இப்பிரதேசத்தில் வேறு எங்கும் காணிகள் கிடையாது, எமது மக்களின் வறுமை நிலைமையினையும், மீள்குடியேறுவதற்கான சாத்தியப்பாடுகளற்ற நிமையினையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஒரு சிலர் முஸ்லிம் மக்களின் காணிகளை அற்ப விலைக்கு வாங்குகின்றார்கள், யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசம் யாழ் நகருக்கு அன்மித்திருக்கின்ற காரணத்தினால் இக்காணிகள் யாவும் மிகவும் பெறுமதிவாய்ந்தவையாகும், அதை எமது அறிந்துகொள்ளவில்லை, தமது காணிகளை அற்பவிலைக்கு விற்று வருகின்றார்கள், அதன் விளைவுதான் இப்போது இவ்வாறு எமக்கு முன்னால் எழுந்து தாண்டவமாடுகின்றது. முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது, அதற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டார்.

குறித்த பகுதிக்கு 13ம் வட்டாரத்தின் யாழ் மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கௌரவ கே.எம்.நிலாம், மற்றும் 10ம் வட்டார யாழ் மாநகரசபையின்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கௌரவ எம்.எம்.எம்.நிபாஹிர் ஆகியோரும், பெருந்திரளான யாழ் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

தகவல் என்.எம்.அப்துல்லாஹ்
முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை நாம் முழுமையாக எதிர்ப்போம். ஆர்பாட்டத்தில் அய்யூப் அஸ்மின். முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை நாம் முழுமையாக எதிர்ப்போம். ஆர்பாட்டத்தில் அய்யூப் அஸ்மின். Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5